தற்கொலை இந்தியா!

                
                       அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்ற செய்தி வெளியான அதே நாளில் வெளியான செய்தி இது. இந்தியாவில் கடந்த ஆண்டு 1,34,599 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கின்றனர்! தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் அளித்திருக்கும் இந்தக் கணக்கின்படி பார்த்தால், நம் நாட்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 368 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதாவது, ஒரு மணி நேரத்துக்கு 15 பேர்!

               இந்தக் கணக்கில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. தற்கொலை செய்துகொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது, நாட்டில் பொருளா தார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவாகி இருக்கும் முதல் இரு இடங்கள் நாட்டின் மென்பொருள் தலைநகரங்களான பெங்களூரு மற்றும் சென்னை. இதேபோல, நாட்டின் ஆயத்தஆடைக் கேந்திரமான திருப்பூரிலும் தற்கொலைகள் அதிகம் பதிவாகி இருக்கின்றன. தற்கொலை செய்துகொண்டவர்களில் 41 சதவிகிதத்தினர் சுயதொழிலில் இருந்தவர்கள். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், மாணவர்கள் தற்கொலை விகிதம் பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 26 சதவிகிதம்!

               இது அரசு சொல்லும் கணக்கு. அரசு ஏற்க மறுக்கும் இன்னொரு கணக்கும் உண்டு. இந்தியாவில் அரை மணி நேரத் துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார். கடந்த 16 ஆண்டுகளில் வரலாற்றிலேயே அதிகமான தற்கொலைகள் பதிவான இடமாக உருவெடுத்திருக்கிறது மகாராஷ்டிரத்தின் விதர்பா. இங்கு தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் விவசாயிகள்.

               பெங்களூரு பொறியாளர்கள், திருப்பூர் தொழிலாளிகள், விதர்பா விவசாயிகள், டெல்லி மாணவர்கள்... இந்தத் தற்கொலைகள் அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் பார்க்க முடியுமா? அடுத்த வேளைக்கே வழி தெரியாத விதர்பா விவசாயத் தொழிலாளி யின் தற்கொலையும் உச்சபட்ச ஊதிய விகிதத்தை அனுபவிக்கும் பெங்களூரு பொறியாளனின் தற்கொலையும் உணர்த்தும் செய்தி என்ன?

               காலை 5 மணிக்கு எழும் ஒரு விவசாயி மாலை 6 மணிக்கு வயல் வேலை முடித்து இரவு 10 மணிக்குப் படுக்கைக்குச் செல்கிறார். காலை 6 மணிக்கு எழும் ஒரு தொழிலாளி ஆலை வேலை முடித்து படுக்கைக்குச் செல்ல இரவு 11 மணி ஆகிறது. காலை 7 மணிக்கு எழும் ஒரு பொறியாளன் இரவு வீட்டிலும் தன் கணினி முன் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நேரம் இரவு 12 மணியைக் கடக்கிறது. மாணவர்கள் யார்? இவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கும் இவர்களுடைய பிள்ளைகள்.

               இந்தியர்களுக்கு இப்போது எல்லாம் தூங்கவே நேரம் இல்லை. மனிதத்தன்மைஅற்ற இந்தியப் பொருளாதாரத்தை இதற்குக் காரணமாக நீங்கள் சொல்லலாம். உண்மைதான். ஆனால், அதைத் தாண்டி இன்னொரு காரணமும் உண்டு. இந்தியர்களுக்கு வாழ்க்கை என்பது பிழைப்பாக மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. பண அடிப்படையிலான, பொருளாதார அடிப்படையிலான வளர்ச்சி மட்டுமே இங்கு ஆரோக்கியமான வாழ்க்கையின் குறியீடாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு நல்ல உணவைச் சாப்பிடுவது, நல்ல இசையைக் கேட்பது, நல்ல புத்தகத்தை வாசிப்பது, நல்ல திரைப்படத்தைப் பார்ப்பது, விருப்பமான இடங்களுக்கு விருப்பமானவர்களுடன் செல்வது... எல்லாமே இந்தியர்களுக்கு அந்நியமாகிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், ஒருபுறம் ஒரு நாளில் தங்கள் சுய சந்தோஷத்துக்கு எனச் சில நிமிஷங்களை ஒதுக்கிக்கொள்ள முடியாத இந்தியர்கள், மறுபுறம் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் நிஜ உலகுக்கு அப்பாற்பட்ட மெய்நிகர் (Virtual World) உலகில் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியும் செல்பேசியும்  இணையமும் அந்த உலகத்தில் வசிக்க அவர்களுக்குப் போதுமானவையாக இருக்கின்றன. நுகர்வுக் கலாசாரம் அந்த வாழ்க்கையை மேலும் இனிமையானதாக்குகிறது.

               தன் தந்தையுடன் 10 நிமிஷம் அமர்ந்து பேச முடியாதவர்களுக்கு ஃபேஸ்புக்கில் முகம் தெரியாதவர்களுடன் மணிக்கணக் கில் சம்பாஷணையில் ஈடுபடுவது எப்படிச் சாத்தியமாகிறது? தன் மனைவியுடன் உறவுகொள்வதைத் தவிர்ப்பவர்களை இணையத்தில் வரும் நீலப்படங்கள் எப்படி திருப்திப்படுத்துகின்றன? தான் பங்கேற்காமல், தனக்குப் பங்களிக் கும் உறவுகள் நிரம்பிய ஓர் உலகத்தை  இந்தியர்கள் எதிர்பார்க்கிறார்கள். பணமும் தொழில்நுட்பமும் அந்த மாய உலகத்தை அவர்களுக்குச் சாத்தியமாக்குகின்றன. திடீரென ஒரு நாள் நிஜ உலகம் தன் தாக்குதலைத் தொடுக்கும்போது அதை எதிர்கொள்ள முடியாதவர்களாகிவிடு கிறார்கள். அறநெறிகள், இயற்கை, கடவுள்... எல்லாவற்றாலும் கைவிடப்பட்டவர்களாகி விடுகிறார்கள். தனிமையும் பகிர்ந்துகொள்ள முடியாத சோகமும் தற்கொலையை நோக்கி அவர்களைத் தள்ளுகின்றன.

               புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்படமான 'ஃபயர் வித் இன்’னின்  இறுதிக் காட்சியில் அதன் கதாநாயகன் ஆலேன் லெர்வா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட பின்னர், அவன் சொல்வதுபோல திரையில் தோன்றும் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன: ''நீங்கள் என்னை நேசிக்காததால், நான் உங்களை நேசிக்காததால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். நம்முடைய உறவுகள் கோழைத்தனமாக இருந்ததால், நம் உறவுகளைப் பிணைப்பதற்காக நான் தற்கொலை செய்துகொள்கிறேன். உங்கள் மீது அழிக்க முடியாத கறையை நான் விட்டுச் செல்வேன்!''

              ஆமாம்... அந்தக் கறையுடன்தான் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கிறீர்கள்!

ஆனந்த விகடன் 2011

2 கருத்துகள்: