திருச்சியின் பழைமையான நத்ஹர்சா பள்ளிவாசலின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறார் குல்சும் பீபி. வயது 116. நாட்டிலேயே அதிக வயதுடைய பெண்ணாகக் கருதப்படும் இவர், சுதந்திரப் போராட்டக் களத்தின் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்றவர் அல்லர். காந்தி, நேரு, சுபாஷ் என தேசத்தின் எந்த முன்னோடிகளையும் பார்த்தவரும் அல்லர். ஆனால், இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு நூற்றாண்டின் அத்தனை மாற்றங்களிலும் மௌன சாட்சியாக - சக பயணியாக பங்கேற்ற அனுபவம் அவருக்குள் உறைந்துக் கிடக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் சுதந்திரம் என்ற சொல் ஏற்படுத்திய கனவுகள், தலைவர்கள் உருவாக்கிய பிரமாண்ட உருவகங்கள், பின்னர் நிகழ்ந்த தடுமாற்றங்கள் மற்றும் ஏமாற்றங்களை அப்படியே பிரதிபலிப்பதால் குல்சும் பீபியுடனான இந்த நேர்காணல் முக்கியமானதாகிறது.
கூன் விழுந்த சரீரம், பார்வையிலும் தடுமாற்றம், மிகவும் சிரமப்பட்டே
பேசுகிறார்; வார்த்தைகளால் தன் கடந்த காலத்துக்குள் நுழையும் அவர், பல
தருணங்களில் தாங்க முடியாதத் துயரத்தில் அழுதுவிடுகிறார். அவருடனான
உரையாடலிலிருந்து...
இந்த ஒரு நூற்றாண்டு வாழ்க்கை...
பெரிய சாபம். 13 வயதிலேயே திருமணம். கணவர் தினக்கூலி. திருமணமான சில ஆண்டுகளிலேயே அவர் இறந்துவிட்டார். நான் பிறந்த இடமோ புகுந்த இடமோ செல்வாக்கான இடங்களில்லை. பிள்ளைகள் இருவரையும் வீட்டு வேலை செய்துதான் வளர்த்தேன். ஆனால், ஆளானதும் அவர்களால் அவரவர் பிரச்னைகளிலிருந்தே மீள முடியவில்லை. இந்தப் பள்ளிவாசலுக்கு காலையில் வந்துவிடுவேன். இங்கு வந்து போவோர் தருவதைக் கொண்டுதான் அன்றாடம் வயிற்றைக் கழுவி வருகிறேன்.
ஆங்கிலேயர் ஆட்சி எப்படி இருந்தது? அன்றைய சாதாரண மக்களிடம் சுதந்திரப் போராட்டம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது?
எந்த அரசாங்கம் மக்கள் போராடுவதை விரும்பியிருக்கிறது? போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். அவர்களுடைய குடும்பத்தினர் சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். காந்தி ஆள்கள் நிலைமையாவது பரவாயில்லை. எந்த சிறையில் இருக்கிறார்கள், எத்தனை ஆண்டுகள் தண்டனை என்ற விவரமாவது அவர்கள் குடும்பத்தினருக்குத் தெரியும். துப்பாக்கி தூக்கியவர்கள் இன்னும் பாவம். அவர்களுடன் தெரியாத்தனமாக சகவாசம் வைத்திருந்தவர்கள்கூட திடீரென காணாமல் போனார்கள். ஒவ்வொரு தெருவிலும் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள்; என்னவானார்கள் எனத் தெரியாத இளைஞர்களின் கதை இருந்தது. பத்தாயத்துக்குள் ஒளிந்துகொண்டே வாழ்ந்தவர்கள் எல்லாம் உண்டு.
இப்போது மாதிரியல்ல. தலைவர்கள் உண்மையாகவே போராடினார்கள். விழுகின்ற
முதல் அடி அவர்கள் மீதுதான் விழுந்தது. ஆகையால், அவர்களுடைய பேச்சுக்கும்
பெரிய மரியாதை இருந்தது. சாதாரண ஆளாக இருப்பார்கள். ஒரே
பொதுக்கூட்டம்தான்; எல்லாம் மாறிவிடும். ஒவ்வொருவரும்
போராளியாகிவிடுவார்கள். போராட்டத்துக்குப் போனால் வெள்ளைக்காரன் அந்தமான்
கொண்டு போய்விடுவான் என்று தெரிந்தே போராட போனார்கள். மக்களுக்கு அவர்கள்
மேல் பரிதாபம் இருந்தது; மரியாதையும் இருந்தது. ஆனாலும், சாதாரண மக்களுக்கு வெள்ளைக்காரர்களால் பெரிய தொந்தரவுகள்
இல்லை. இப்போது மாதிரியேதான் அப்போதும். வெள்ளைக்காரர்கள் நிறைய கொடுமைகள்
செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் நல்ல காரியங்களையும் செய்தார்கள். எந்தக்
காரியத்தையும் முழுமையாகச் செய்தார்கள். எல்லோரும் படிக்க
வாய்பளித்தார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் என்னைப் போன்ற ஏழை முஸ்லிம்
பெண்ணுக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது வெள்ளைக்காரர்களால்தான் என
நினைக்கிறேன்.
சுதந்திரத்தை எப்படி உணர்ந்தீர்கள்?
தலைவர்கள் எல்லோருமே சுதந்திரமே எல்லாவற்றுக்கும் தீர்வு எனச் சொன்னார்கள். சுதந்திரம் கிடைத்தால் எல்லாம் மாறிவிடும் என்றே நாங்கள் நம்பினோம். சுதந்திரம் கிடைக்கப்போகிறது எனத் தெரிந்த நாள்களிலிருந்தே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை எப்படிச் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்ற உணர்வு எல்லோரிடமும் இருந்தது.
தலைவர்கள் எல்லோருமே சுதந்திரமே எல்லாவற்றுக்கும் தீர்வு எனச் சொன்னார்கள். சுதந்திரம் கிடைத்தால் எல்லாம் மாறிவிடும் என்றே நாங்கள் நம்பினோம். சுதந்திரம் கிடைக்கப்போகிறது எனத் தெரிந்த நாள்களிலிருந்தே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை எப்படிச் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்ற உணர்வு எல்லோரிடமும் இருந்தது.
சுதந்திரம் கிடைத்த அன்று ஊரெல்லாம் கொண்டாட்டம். உள்ளபடியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் வெற்றி கிடைத்ததால் அனுபவித்துக் கொண்டாடினார்கள். ஆனால், மற்றவர்களாலும் சும்மாயிருக்க முடியவில்லை. நான் என் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் வைத்தேன். தெருவிலுள்ள பிள்ளைகளெல்லாம் சேர்ந்து பூந்தி வாங்கி விநியோகித்தனர். ஆனால், மறுநாளே ஏமாற்றமாக இருந்தது. நாளாக நாளாக மாற்றம் வரும் என்றார்கள். இன்றும் அப்படியேத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
தேசப் பிரிவினை சரிதானா?
வெள்ளைக்காரர்கள் செய்த சூது; பெரிய கொடுமை அது. பாவம், எத்தனைப் பேர் சொத்து சுகங்களெல்லாம் இழந்து நாடோடிகளாகப் போனார்கள்! கராச்சியிலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்தது. அவர்கள் நல்ல செல்வாக்காக இருந்தவர்களாம். அவர்களுடைய ஒரே மகள் - சிறுமி; வரும் வழியிலேயே அவளைச் சூறையாடிவிட்டார்கள் சண்டாளர்கள். அந்தப் பெண்ணுக்குப் புத்தி பேதலித்துவிட்டது. இங்கு வந்து அவர்களால் எந்தத் தொழிலும் செய்ய முடியவில்லை. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டார்கள்.
வெள்ளைக்காரர்கள் செய்த சூது; பெரிய கொடுமை அது. பாவம், எத்தனைப் பேர் சொத்து சுகங்களெல்லாம் இழந்து நாடோடிகளாகப் போனார்கள்! கராச்சியிலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்தது. அவர்கள் நல்ல செல்வாக்காக இருந்தவர்களாம். அவர்களுடைய ஒரே மகள் - சிறுமி; வரும் வழியிலேயே அவளைச் சூறையாடிவிட்டார்கள் சண்டாளர்கள். அந்தப் பெண்ணுக்குப் புத்தி பேதலித்துவிட்டது. இங்கு வந்து அவர்களால் எந்தத் தொழிலும் செய்ய முடியவில்லை. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டார்கள்.
இங்கெல்லாமும்
அந்தந்த ஜமாஅத்களில் கூட்டம் போட்டார்கள். பாகிஸ்தான் போய்விடலாமா என ஒரு
சிலருக்கு யோசனை இருந்தபோதும் போகும் வழியிலிலேயே மாண்டு போவோமோ என்ற பயயம்
எல்லோருக்குமே இருந்தது. என்ன நேர்ந்தாலும் வாழ்ந்த இடத்திலேயே நேரட்டும்
என்று இருந்துவிட்டோம். அன்றைய இரவுகளெல்லாம் தூக்கமே இல்லை; குழந்தைகளை
இறுக அணைத்துக்கொண்டு படுத்திருப்போம். பகலிலும் வெளியே போக
துணிவிருக்காது. கடவுளின் பெயரால் காலத்தைக் கடந்தோம்.
சுதந்திரம் மாற்றங்களை உருவாக்கி இருக்கிறதா?
எனக்குத் தெரியவில்லை. எனக்கு இந்தப் பள்ளிவாசல்தான் உலகம்.
இங்கிருந்தே உலகத்தை நான் பார்க்கிறேன். இந்தப் பள்ளிவாசலைச் சுற்றி
நடக்கும் மாற்றங்கள் வாயிலாகவே உலகின் மாற்றத்தை உணர்கிறேன். இந்தப்
பகுதியில் அப்போதும் குடிசைகள் இருந்தன; கஷ்டப்படுகிறவர்கள் இருந்தார்கள்.
இப்போதும் குடிசைகள் இருக்கின்றன; கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். ஒரே
வித்தியாசம் - அன்று இருபது குடிசைகளில் இருநூறு பேர் இருந்தார்கள். இன்று
அதே இடத்தில் இருநூறு குடிசைகளில் இரண்டாயிரம் பேர் இருக்கிறார்கள்.
நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
நீங்கள் எல்லா தேர்தல்களிலும் வாக்களித்திருப்பதாக அறிகிறேன். வாக்களிப்பது மாற்றத்தை உருவாக்கும் என முழுமையாக நம்புகிறீர்களா?
ஆம். நான் இதுவரை எல்லா தேர்தல்களிலும் வாக்களித்திருக்கிறேன்.
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் என் வயது கருதி கடந்த தேர்தலின்போது நேரில்
வந்து வாக்காளர் அடையாள அட்டையை எனக்கு அளித்தார். தேர்தலில் வாக்களிப்பது
அரசியல்வாதிகளுக்காக அல்ல. எனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக.
என்றேனும் ஒரு நல்ல மனிதன் இந்த மக்களுக்கு நன்மையைச் செய்யக்கூடும். எனவே,
நான் உயிரோடு இருக்கும் வரை எனது கடமையைச் செய்துகொண்டே இருப்பேன்.
2007 'தினமணி கதிர்'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக