ரூ. 1,23,462,00,00,000. -இந்தியப் பொதுத்துறை வங்கிகள் கொடுத்துத் திரும்பாத வாராக் கடன்களின் மொத்த மதிப்பு இது. உண்மையான அதிர்ச்சி, இந்தத் தொகை அல்ல. இந்தியாவில் இன்றைக்கு யாருடைய கவனத்தையும் இந்தத் தொகை ஈர்க்கவில்லை என்பதுதான்!
வங்கித் தொழிலில் கரை கண்டவர்கள், 'வாராக் கடன் கணக்கு இல்லாமல் வங்கித் தொழில் செய்ய முடியாது’ என்று சொல்வார்கள். அதுவும் இந்திய வங்கிகள் இப்போது சம்பாதிக்கும் லாபத்துக்கு முன் இந்தத் தொகை எல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லாமல் இருக்கலாம். ஆனால், கடன்சுமை காரணமாக அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயியின் உயிர் போகும் ஒரு நாட்டில், இந்த 1.23 லட்சம் கோடி ரூபாய் எப்படி உருவாகிறது என்பதும் இந்த வாராக் கடன்களை அனுபவிப்பவர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதும் இங்கே முக்கியம்!
ஓர் ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்ய ஒரு விவசாயிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் செலவு ஆகிறது. இந்தத் தொகையில் 60 சதவிகிதம் கூலிச் செலவுதான். நாட்டுக்கு உணவு கிடைப்பதோடு, 60 விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால், நம் விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது இல்லை. அப்படியே நிலத்தையோ, நகைகளையோ அடமானம்வைத்து, கடன் வாங்கிவிட்டாலும், ஒரு தவணை கட்டத் தவறினாலும், வங்கி வாசலில் 'நாணயம் தவறியவர்கள்’ பட்டியலில் வீட்டு முகவரியோடு தொங்குகிறது விவசாயியின் முகம். நல்லது. நாணயம் தவறியவர்களுக்கு இந்தத் தண்டனை தேவைதான். பெரும்பாலும் ஆயிரங்களிலும் அபூர்வமாக லட்சங்களிலும் கடன் வாங்கி நாணயம் தவறியவர்களுக்கே இந்தத் தண்டனை என்றால், கோடிக்கணக்கில் கடன் வாங்கி, திட்டமிட்டு ஏமாற்றியவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனையைக் கொடுக்க வேண்டும்?
நிறுவனத்தைத் தொடங்கிய நாளில் இருந்தே நஷ்டக் கணக்கு காட்டியது 'கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம்’. கடந்த ஆண்டு நவம்பரில், 'எங்களுடைய மூன்று மாத நஷ்டம் 469 கோடி ரூபாய்’ என்று அந்த நிறுவனம் அறிவித்தபோதே, நிச்சயம் அது ஒரு நாள் மூழ்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தது. ஆனால், அதற்குப் பின்னர்தான் மகாராஷ்டிர அரசுசார் நிறுவனமான 'சிகாம்’, கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு 400 கோடி ரூபாய் கடன் வழங்கியது. வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு பல்லக்குத் தூக்கின. இப்போது வங்கிகளுக்கு மட்டும் 7,524 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது கிங்ஃபிஷர் நிறுவனம். பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் 1,400 கோடி ரூபாய்க்கு மேல் தர வேண்டும் என்கிறார்கள். இதில் 5,904 கோடி ரூபாய் கடனுக்கு நேரடி உத்தரவாதம் அளித்தார் விஜய் மல்லையா. இதற்காக அவருக்கு 51 கோடி ரூபாய் வரை கமிஷன் வேறு கொடுத்தன வங்கிகள். காலம் போன கடைசியில், தங்கள் பணத்தை மீட்கும் வழி தேடிக் கூட்டங்களை வங்கிகள் நடத்தின. விஜய் மல்லையாவோ, தன் நிறுவனத்தைச் சேர்ந்த சாதாரண அதிகாரிகளை அனுப்பி அந்தக் கூட்டங்களையே பரிகசித்தார். இத்தகைய சூழலிலும், கிங்ஃபிஷர் நிறுவனத்தைக் காக்கும் கடைசி மறைமுக முயற்சியாக விமான நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு. விஜய் மல்லையா மீது அத்தனை பாசம்!
சரி, இப்போது விஜய் மல்லையா எங்கே? ஊர் ஊராக கார் பந்தயம் பார்க்கச் சுற்றிக்கொண்டிருக்கிறார். மல்லையாவின் மகன் சித்தார்த் லண்டனில் இருக்கிறார். தங்கள் மதுபான நிறுவனத்தின் 2013-ம் வருட காலண்டருக்கு எந்த அழகியின் படத்தைப் போடுவது என்ற முஸ்தீபில். 'லண்டன் பருவநிலை சூப்பர். சொர்க்கம்போல் இருக்கிறது லண்டன். எப்படியும் வரவிருக்கும் ஆண்டு காலண்டருக்கு பேரழகிகளைத் தேர்ந்து எடுத்துவிடுவேன்’ என்கிறார். விஜய் மல்லையாவின் படத்தை வங்கி வாசலில் சுவரொட்டியாக ஒட்டும் துப்பு இந்திய வங்கிகளுக்கு உண்டா?
ஜூனியர் விகடன் அக்.2012
Amazing Article
பதிலளிநீக்குவிஜய் மல்லையாவின் படத்தை மட்டுமல்ல கடனை திருப்பி செலுத்தாதவர்களின் படத்தை வாங்கி சுவரொட்டியாக ஒட்டுங்கள் என்று சொல்லும் அதிகாரம் இருப்பதாய் நாம் நினைத்து கொண்டிருக்கும் நபரோ விஜய் மல்லையா எதாவது துப்பினால் பொறிக்கிக் கொள்ளலாம் என்று பசி-யோடு காத்திருக்கிறார் தெரியுமா உங்களுக்கு?
பதிலளிநீக்கு