தபுவுடன் சமஸ் |
''ஹைதராபாத்தில் இருந்து 32 வருஷங்களுக்கு முன் 11 வயது சிறுமியாக நடிக்கச் சென்ற தபஸம் ஆஸ்மியின் கனவுகள் இன்றைக்குக் கொஞ்சமேனும் நிறைவேறி இருக்கின்றனவா?''
''தபஸம் ஆஸ்மி... ரொம்ப நாளைக்கு அப்புறம் வெளியில் என்னுடைய பழைய பெயரைக் கேள்விப்படுகிறேன். தபஸம் ஆஸ்மி... அவளுடைய கனவுகளை இன்றைக்கு உள்ள தபுவின் வாழ்வோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடியுமா? தெரியவில்லை. நிச்சயமாக அவளுடைய சாக்லேட் - ஐஸ்க்ரீம் கனவுகளில்... இரண்டு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ இவற்றுக்கு எல்லாம் கொஞ்சம்கூட இடம் இருந்திருக்காது. நிறையவே நல்லது நடந்திருக்கிறது. பிரச்னை என்னவென்றால், நம்மை மாதிரியே நம்முடைய கனவுகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன!''
''நடிக்க வந்த புதிதில் இருந்த தபு வேறு. ஆனால், பின்னாளில் உங்களுக்கு என்று ஓர் அடையாளம் வந்தது. சம காலத்தின் சிறந்த நடிகை என்று எல்லோரும் கொண்டாடினார்கள். நீங்களோ, ஒரு வரையறையே இல்லாமல் படு சீரியஸான படங்களில் நடித்துக்கொண்டே படு மசாலாப் படங்களிலும் நடித்தீர்கள். ஏன்?''
''உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஏதோ ஒரு பெரிய வாய்ப்பு வரும் என்று வீட்டில் யாருமே சும்மா உட்கார்ந்து இருக்க முடியாதே. அதுதான் காரணம். அதே சமயம், நீங்கள் நினைக்கிற மாதிரி சீரியஸான படங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பது மாதிரியான எண்ணம் எல்லாம் எனக்கு இருந்தது இல்லை. ஒரு நடிகை இந்தப் பாத்திரங்களுக்குத்தான் லாயக்கு என்று தீர்மானிக்கப்படுவது எந்த விதத்திலும் நல்லது இல்லை. சொல்லப்போனால், தெலுங்கு மசாலா படங்களில் நடிப்பது எனக்குக் கூடுதல் சந்தோஷம். அது நான் புறப்பட்ட இடம் என்பதால். ஒரு படத்தில் ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கு மட்டும்தான் ஆடப்போகிறேன் என்றால், இன்னும் சந்தோஷம். ஏனென்றால், எனக்கு என்று எந்தப் பொறுப்பும் அந்தப் படத்தில் இருக்கப்போவது இல்லை; ஒரு விருந்தாளி மாதிரி வந்து போகலாம். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், திட்டமிட்டு வாழ்வது என்பதே என்னுடைய இயல்புக்குச் சரிவராத விஷயம்.''
''ஒரு படத்தை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?''
''சொன்னால், ஆச்சர்யப்படுவீர்கள். அந்தப் படத்தில் பணியாற்றுபவர்கள் எனக்குச் சௌகரியமானவர்களாக இருப்பார்களா என்பதுதான் என்னுடைய முதல் அளவுகோலாக இருக்கும். இந்தியப் படங்களில் நடிகைகளுக்கான வாய்ப்பு என்பது பெரும்பாலும் பாத்திரத்தின் உடல் கட்டமைப்பு சார்ந்தது என்பதால், என் உடல்வாகுக்கு அந்தப் பாத்திரம் சரிப்படுமா என்றும் கொஞ்சம் பார்ப்பேன். கதை என்பது மூன்றாம்பட்சம்தான்.''
''ஒரு நடிகையாக இருப்பதன் பெரிய சவால் என்ன?''
''படம் இருக்கிறதோ, இல்லையோ... நடிகையாகவே இருக்க வேண்டி இருப்பது. முக்கியமாக உணவுக் கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி. உடலை அப்படியே பராமரிக்க வேண்டும். பொழுது போகும்; ஆனால், சுவாரஸ்யமே இல்லாத விஷயங்கள் இவை.''
''ஒரு நடிகை எல்லாக் காலகட்டங்களிலும் அழகுப் பதுமையாகவேதான் இருக்க வேண்டுமா? அப்படியான நிர்பந்தத்தை உங்களுக்கு யார் உருவாக்குகிறார்கள்?''
''ரசிகர்கள். அவர்களுக்காகத்தானே படம் எடுக்கிறார்கள்? சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்புதான். நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர் களோ, அதுவே எங்களுக்கான நிர்பந்தம் ஆகிறது.''
''உங்களுடன் நடிக்க வந்தவர்கள் எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?''
''எல்லோருக்கும் திருமணமாகி எல்லோரும் சந்தோஷமாக இருப்பது சந்தோஷமான விஷயம். நான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது வேண்டாம் என்று நினைக் கிறேன்.''
''ஆண்கள், காதல், திருமண அமைப்பு... இவை சார்ந்து ஏதேனும் அதிருப்தி உண்டா? அதுதான் அதற்குக் காரணமா?''
''காதல் ரொம்ப அற்புதமான விஷயம். வாழ்க்கையில் எல்லோர்க்குமே அது வாய்க்கும் அதிர்ஷ்டம் வேண்டும். ஆண்களும் அப்படித்தான். ஆண்களைப் பற்றிய மிகச் சிறந்த மதிப்பீடு எனக்கு உண்டு. ஓர் ஆணுக்குப் பெண் இல்லாத வாழ்க்கையோ, ஒரு பெண்ணுக்கு ஆண் இல்லாத வாழ்க்கையோ கற்பனை செய்ய முடியாதது. இவ்வளவு நீண்ட காலம் நீடிக்கும் திருமணம் என்கிற அமைப்பும்கூட நல்லதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், என் திருமணத்தோடு இந்த விஷயங்கள் எதையும் முடிச்சுப் போட முடியாது.''
''ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய அனுபவத்தோடு ஒப்பிட்டுச் சொல்லுங்கள்... நாம் அவர்களிடம் இருந்து என்னவெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது?''
''நாடுகள் வேறு, கலாசாரம் வேறு என்றாலும், கலைஞர்களைப் பொறுத்த அளவில் வேலை ஒன்றுதான். இங்கு செய்வதைத்தான் அங்கும் செய்கிறோம். ஆனால், அவர்களுடைய தொழில் கலாசாரம் நாம் கவனிக்க வேண்டியது. ஒவ்வொருவர் வேலையும் அங்கு வரையறுக்கப்பட்டது. ஆனால், அந்த வரையறுக்கப்பட்ட பகுதியில் முழுச் சுதந்திரம் இருக்கும். யாருடைய வேலையிலும் யாரும் குறுக்கிட மாட்டார்கள். இது முக்கியம் என்று நினைக்கிறேன்.''
''சரி, மும்பையோ, ஹைதராபாத்தோ... தபு என்றாலே, திமிர் பிடித்தவர் என்று சொல்கிறார்களே... ஏன்?''
''ஹா... ஹா... நம்மூரில் ஒருவரைத் திமிர் பிடித்தவர் என்று சொல்கிறார்கள் என்றால், அவர் கொஞ்சூண்டு துணிச்சலாக இருப்பார் என்று அர்த்தம் என்று நினைக்கிறேன். சரியா?''
''முற்போக்கான ஒரு முஸ்லிம் பெண்ணாகச் சொல்லுங்கள்... இந்தியாவில் முஸ்லிம்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு செய்ய வேண்டியது என்ன? முஸ்லிம் சமூகம் செய்துகொள்ள வேண்டியது என்ன?''
''ரொம்ப சர்ச்சைக்குரிய விஷயத்தை நோக்கி நீங்கள் என்னைத் தள்ளுகிறீர்கள் என்று நினைக்கிறேன். வேண்டாமே?'' (நீண்ட யோசனைக்குப் பிறகு...) ''ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. பெண்களுக்குக் கல்வி ரொம்ப முக்கியம். முஸ்லிம் சமூகத்துக்கு மட்டும் இல்லை; எல்லாச் சமூகங் களுக்கும் இது பொருந்தும். அதேபோல, எல்லாப் பெண்களுமே ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும்; தவிர, ஏதாவது ஒரு சமூகச் செயல்பாட்டிலும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். கல்வி, தன்னம்பிக்கையைக் கொடுக்கும். பணம், சுதந்திரத்தைக் கொடுக்கும். இரண்டும் சேர்ந்து அதிகாரத்தைக் கொடுக்கும். முன்னேற்றம்... அது தானாக வரும்!''
ஆனந்த விகடன் நவ.2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக