வடிவேலுவுடன் சமஸ் |
திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்!
‘‘நலமா?’’
‘‘நல்லா இருக்கேண்ணே... நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா... ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).’’
‘‘ரஜினியே படம் செய்தால்கூட, ‘வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?’’
‘‘ஒரு உண்மையைச் சொல்லட்டுங்களா? யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. யாரும் போன்கூடப் பண்றது இல்லை. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படலை. மௌனமா கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வருவோம்னு இருக்கேன்.’’
‘‘உங்களைவைத்துப் படம் பண்ணப் பயப்படுகிறார்களா?’’
‘‘தெரியலண்ணே... தெரியல.’’
‘‘முதல்வருக்கு உங்கள் மீது கோபம் ஏதும் இருப்பதாக நினைக்கிறீர்களா?’’
‘‘ம்ஹூம்... சும்மா சொல்லக் கூடாது. அவங்க பாட்டுக்கு அரசாங்க வேலையில கவனத்தைக் காட்டுறாங்க. அவங்களுக்கு இருக்குற வேலைக்கு முன்னால நாம எல்லாம் ஒரு பொருட்டா? அப்புறம், அவங்க என் மேல கோவப்படற மாதிரி நான் நடந்துக்கவும் இல்லையே? அவங்க இன்னைக்குச் சொல்றதைத்தானே நான் அன்னைக்கே சொன்னேன்? இது வேற கதை. நம்ம கூடவே திரிஞ்சுக்கிட்டு எப்படா நாம கீழே விழுவோம்னு பார்த்துக்கிட்டு இருப்பாய்ங்க இல்ல... அப்படி ஒரு கூட்டம் இதுக்குப் பின்னாடி இருக்கு.’’
‘‘தொழில் போட்டியைச் சொல்கிறீர்களா?’’
‘‘இருக்கும். நீங்க கண்ணாலகூட ஒருத்தரைப் பார்த்து இருக்க மாட்டீங்க. ஆனா, அவரு உங்களை எதிரியா நெனைச்சுக்கிட்டு இருப்பாரு. ஒருத்தரை நேசிக்க எப்படி நியாயம் வேணாமோ, அதேபோல வெறுக்கவும் நியாயம் வேணாம். பச்சப்புள்ளகூட என்னையப் பார்த்தா, ‘வடிவேலு... வடிவேலு’னு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும். எவ்வளவு பெரிய வரம் இது? ஒருத்தருக்குக்கூட உறுத்தாமலா இருக்கும்?’’
‘‘கருணாநிதியையோ, அழகிரியையோ சந்தித்தீர்களா? தேர்தலில் தி.மு.க. உங்களை வைத்து ஆதாயம் அடைந்தது. ஆனால், ஸ்டாலின் மகனும் அழகிரி மகனும் எடுக்கும் படங்களில்கூட உங்களுக்கு நடிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. இதுபற்றி எல்லாம் எதுவும் பேசினீர்களா?’’
‘‘பொதுவா ஒண்ணு சொல்றேண்ணே... இப்போ வீட்டைவிட்டு நான் எங்கேயும் போறது இல்லை. ஒண்ணு சென்னை; இல்லைன்னா அன்னை. எங்க அம்மாவைப் பார்க்க மதுரைக்குப் போவேன். அவ்வளவுதான். எல்லாரும் என்னைய ஒதுக்கிட்டதா நீங்க நெனைக்கலாம். ஆனா, இப்படி ஒரு காலமும் வேணும்னு நான் நெனைக்கிறேன். 1991-ல ‘என் ராசாவின் மனசிலே’ வந்துச்சு. 20 வருஷம்... ஓடு ஓடுனு ஓடினேன். நிக்கக்கூட நேரம் இல்லை. கடுமையான உழைப்பு. ஒரு நகைச்சுவை நடிகன்கிறவன் வெறும் நடிகன் மட்டும் இல்லை; படத்துல அவன் வர்ற ஒவ்வொரு காட்சியிலயும் அவனுக்கு நேரடிப் பொறுப்பு இருக்கு. ஒரு பக்கம் நடிப்பு; இன்னொரு பக்கம் யோசனை. ‘அய்யய்யோ வந்துட்டான்’னு பேசணும். ‘ஆஹா! வந்துட்டான்யா... வந்துட்டான்’பேன். இன்னைக்குத் தமிழ்நாட்டுல இந்த வசனத்தைப் பேசாத ஆளுங்க யாரையாவது அடையாளம் காட்டுங்க பார்ப்போம். சட்டுனு ஒரு நிமிஷத்துல வர யோசனை இல்லண்ணே இதெல்லாம். உழைப்பு... கடினமான உழைப்பு. மனசாலயும் உடம்பாலயும் ஓடுற பொழப்பு. மூச்சு அடைக்குற அளவுக்கு மூச்சிரைக்க ஓடின உங்களுக்கு ஒரு மரத்தடியில உட்கார நாற்காலி போட்டுக்கொடுத்தா எவ்வளவு இதமா இருக்கும்? எனக்கு இப்போ அப்படித்தான் இருக்கு. ரொம்பக் காலத்துக்குப் பின்னால வீட்டுல அம்மா, சம்சாரம், புள்ளைங்ககூட நிறைய நேரம் இருக்கேன். வாழ்க்கையில எதுக்காக ஓடுறோம், புள்ளகுட்டி சந்தோஷத்துக்குத்தானே? இப்ப நான் ஒவ்வொரு நிமிஷமும் அவங்களைச் சந்தோஷப்படுத்திக்கிட்டு இருக்கேன். அதனால, யார் மேலயும் எனக்கு எந்தக் குறையும் இல்ல.’’
‘‘ஆனாலும், இது பெரிய இடைவெளி இல்லையா?’’
‘‘இல்லே, ஒவ்வொரு படைப்பாளிக்கும் இது மாதிரி ஒரு இடைவெளி வேணும். எனக்கு அந்த இடைவெளி எப்படி ஏற்பட்டுச்சுங்கிறது வேற விஷயம். அதைத் தனியா வெச்சுக்குவோம். ஆனா, இந்த மாதிரி ஒரு ஓய்வை நம்மளாவாவது உருவாக்கிக்கணும். வேலையில நாம இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கோம், எங்கே எல்லாம் தப்பு பண்ணி இருக்கோம், எதை எல்லாம் சரி செஞ்சுக்கணும்னு யோசிக்க இந்த ஓய்வு முக்கியம். இப்போ காலையில ஒரு ஆறு ஆறரைக்கு எழுந்திரிக்கிறேன். மெள்ள மாடியிலயே ஒரு லாந்து. அப்புறம் சாப்பிட்டுட்டு உட்கார்ந்தன்னா யோசனை ஓடிக்கிட்டே இருக்கும். பக்கத்துல ஒரு பேனாவும் டைரியும் மட்டும் வெச்சுக்குறது. எதெல்லாம் தோணுதோ, அப்பப்ப குறிச்சுவெச்சுக்குறது. ஆயிரக்கணக்குல குறிச்சுவெச்சு இருக்கேண்ணே. நேரம் வரும்போது... உருட்டித் திரட்டி எடுத்துவிடுவேன்.’’
‘‘வடிவேலுவுக்கு உள்ளே ஓர் எழுத்தாளரும் இருக்கிறாரா?’’
‘‘அய்யய்யே... எழுத்தாளன் மட்டும் இல்ல... பாடகன், இசை அமைப்பாளன், இயக்குநரு... எல்லாம் இருக்காய்ங்க. ஆனா, அதெல்லாம் நமக்கே நமக்கு. வெளியே விடுறது இல்ல. நம்ம ஜோலி என்ன? நடிக்கிறது, சிரிக்கவைக்கிறது. அதை மட்டும்தான் வெளியே விடுவோம்.’’
‘‘அரசியலில் கால்வைத்தது தவறு என்று உணர்கிறீர்களா?’’
‘‘நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும்... நான் யாரு? எங்கே இருந்து வந்தேன்? மதுரைச் சந்தையில திரிஞ்சுக்கிட்டு இருந்தவண்ணே நானு. இன்னைக்குத் தமிழ்நாட்டுல என்னைய அடையாளம் தெரியாத ஆளே கிடையாது. எது இந்த எடத்துக்குக் கொண்டுவந்து உட்காரவெச்சுருக்கு? காலம். அதோட வெளையாட்டுல இந்த அரசியல் ஆட்டமும் ஒண்ணு. அரசியல் லாப - நஷ்டக் கணக்கை விடுங்க. லட்சோப லட்ச மக்களை நேருக்கு நேரா பார்க்குற வாய்ப்பு அப்ப கிடைச்சுது. அந்தக் கூட்டத்தை நீங்க பார்க்கணுமே... அப்பாடி வெறும் தலையா தெரிஞ்சுச்சுண்ணே... தலையா தெரிஞ்சுது. இந்தச் சாதாரண மனுஷன் மேல இம்புட்டுப் பாசமானு கெறங்கிப்போனேன்.’’
‘‘ஆனால், கூட்டம் ஓட்டாகவில்லையே? விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராக உருவெடுத்தாரே?’’
‘‘நான் அந்த ஆட்டைக்குள்ள போக வேணாம்னு நெனைக்கிறேன். ஆனா, ஒண்ணு சொல்றேன்... ஒரு காமெடியனா நான் அவருகிட்ட தோத்துட்டேன். என்னா காமெடி, என்னா காமெடி... பெரிய காமெடியர்னே அவரு. நான் அன்னைக்குச் சொன்னப்ப யாரும் நம்பலை; ஆனா, இன்னைக்கு எல்லாரும் கண்ணாற பார்க்குறீங்க. நம்ம அடிச்ச கோடங்கி பலிக்குது இல்லே? ஒரு படத்துல புரட்சித் தலைவர் சொல்வாரு... ‘எனக்கு எதிரியா இருந்தாக்கூட அதுக்குத் தகுதியா இருந்தாத்தான் நான் ஏத்துக்கிடுவேன்’னு. அதைத் தமிழக முதலமைச்சர் நிறைவேத்திட்டாங்க. ஒரு முதலமைச்சரு, சட்டசபையில எழுந்திருச்சு, ‘உங்களோட கூட்டணி வெச்சுக்கிட்டதுக்காக வெட்கப்படுறேன்... வேதனைப்படுறேன்... அசிங்கமா இருக்கு’னு சொல்றாங்கன்னா, அதுக்கு மேல நானெல்லாம் சொல்ல என்ன இருக்கு?’’
‘‘தேர்தலுக்குப் பின் தே.மு.தி.க-வினரிடம் இருந்து மிரட்டல்கள் ஏதும் வந்ததா?’’
‘‘ம்... அதெல்லாம் வந்துக்கிட்டுதான் இருக்கு. நான் எதையும் கண்டுகிறது இல்ல.’’
‘‘இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமாவில் நடக்கும் மாற்றங்களைக் கவனிக்கிறீர்களா?’’
‘‘என்ன, இப்படிக் கேட்டுட்டீங்க? நம்ம உசுரு உறைஞ்சுக்கிடக்குற இடம்ணே அது. படம் பார்க்குறதோட மட்டும் இல்ல. எல்லாம் எப்படி இருக்காங்கன்னுகூட விசாரிச்சுக்கிட்டுதான் இருக்கேன். சமீபத்துலகூட கவுண்டமணி அண்ணனோட அம்மா தவறிப்போனதைப் பத்தி ஒரு நண்பர்கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.’’
‘‘தமிழக நகைச்சுவை நடிகர்கள் சாதி சார்ந்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
‘‘மத்தவங்களைவிடுங்க. என் சாதி நகைச்சுவைச் சாதி. நாட்டுல இருக்குற ஏகப்பட்ட சாதிகள் மத்தியில இந்த சாதிக்கு ஒரு இடம் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும். நாட்டுல வெட்டுக்குத்து இருக்காது; எல்லோரும் சந்தோஷமா வாழலாம். இப்பவே பாருங்க. நம்மளோட பஞ்ச் டயலாக் ஒவ்வொண்ணும் நாட்டுல மாற்றத்தை உண்டாக்கி இருக்கா, இல்லையா? ஒருத்தன் ரொம்ப நேரமா பஸ்ஸுக்காக நிக்கிறான். வர்ற கதியா இல்ல. இந்த நேரத்துல அவசர அவசரமா வர்ற இன்னொருத்தன் பொறுமை இல்லாம இவன்கிட்ட கேக்குறான். ‘ஏங்க, பஸ்ஸு எப்போ வரும்?’ இதைக் கேட்டு இம்புட்டு நேரமா நிக்கிறவனுக்கு எவ்வளவு வெறி வரும்? அங்க போடுறான் பாருங்க நம்ம பஞ்சு டயலாக்கை. ‘வரும்... ஆனா, வர்றாது’. சண்டைக்காரய்ங்க எல்லாரையும் சுமுகமாக்கிவிடுதுல்ல இந்த நகைச்சுவை?’’
‘‘ஆனால், இப்படியே எல்லாவற்றையும் நகைச்சுவையாகப் பார்க்க, பேச ஆரம்பித்து, மக்களிடம் கொஞ்சம்கூட சொரணையே இல்லாமல் போய்விடும்போல் இருக்கிறதே? ஒருவகையில் நீங்கள் நடித்த காட்சிகளைத் தினமும் டி.வி&யில் போட்டுப்போட்டு முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் வேலை நடக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
‘‘நீங்க பயங்கரமா யோசிக்கிறீங்க (சிரிக்கிறார்). நான் அவ்வளவுக்கு யோசிக்கலை. ஆனா, மக்களை நேர்ல பார்க்கும்போது அவங்க மன அழுத்தத்துக்கு நாம ஒரு மருந்தா இருக்கோம்கிறது தெரியுது!’’
‘‘சரி, இந்த உடல்மொழியையும் மொழிநடையையும் எங்கே பிடித்தீர்கள்?’’
‘‘ஒண்ணும் இல்லை. எல்லாத்தையும் கவனிக்குறது. தமிழுக்கே ஒரு ராகம் இருக்கு. கவனிச்சுங்கன்னா தெரியும்... ஊருக்கு ஊர் அந்த ராகம் மாறும். மதுரைப் பேச்சுலயே ஒரு நாலஞ்சு பிரிவு இருக்கே? நான் அப்படியே கவனிப்பேன். எல்லாத்தையுமே கவனிப்பேன். எல்லாப் பேரையுமே நடிகனாத்தான் பார்ப்பேன் நானு. கைப்புள்ள, வண்டு முருகன், நாய் சேகர், படித்துறை பாண்டி, அலார்ட் ஆறுமுகம், ஸ்னேக் பாபு... இப்படி நான் நடிச்ச ஒட்டுமொத்த கேரக்டரும் நான் கவனிச்ச ஆளுங்கதான். அப்புறம் நான் பொறந்த சூழல். மதுரையே ஒரு நாடக நகரம்ணே. ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், நாடகம்னு அது ஒரு அருமையான ஊர். எங்க வூட்டுல எங்க அப்பா நடராஜரு என்னைவிடப் பெரிய நடிகரு. ஆனா, வீட்டுக்குள்ளேதான் அவரு நடிப்பு ஓடும். சின்ன வயசுலயே அப்பனைப் பார்த்து நான் ஆளாயிட்டேன். வீட்டுல கடைசித் தம்பி அழுவான். எங்க அம்மா, ‘லேய் வடிவேலு... அவனைக் கொஞ்சம் அமர்த்துரா’ங்கும். அப்பாவோட வேட்டியை எடுத்துக் கட்டுவேன். ரெண்டாவது தம்பியைக் கூட்டிக்குவேன். அழுகுற தம்பியை உட்கார வெச்சுட்டு இந்தத் தப்பக்குச்சி இருக்கு பாருங்க, அதை ஆளுக்கொண்ணு வெச்சிக்கிட்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆர். - நம்பியார் மாதிரி கத்திச்சண்டை போடுவோம் ‘ஹ்ஹா... ஹ்ஹா... ஹ்ஹா’னு. அப்புறம் பாட்டு. ‘தம்பிக்கு ஒரு பாட்டு...’ (பாடுகிறார்). இதெல்லாம் அரிக்கேன் லைட்டு வெளிச்சத்துல பார்த்தீங்கன்னா சினிமா மாதிரியே இருக்கும். இப்படித்தான் வளர்ந்தேன். வேலை பார்க்குற இடத்துலகூட நடிப்புதான். கூச்சநாச்சம் பார்க்குறது இல்ல. அப்புறம் நாடக வாய்ப்புகள் வந்துச்சு. நூத்துக்கணக்கான நாடகங்கள்ல நடிச்சுருக்கேன். என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன்... இப்படி நம்மளோட முன்னோடிகள் பலரை உள்வாங்கிக்கிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் மேல ஒரு வாத்தியார் இருக்கார். என் தலைவன் எம்.ஜி.ஆர். யப்பா... அவர் நடிச்ச ஒவ்வொண்ணும் படம் இல்லண்ணே... பாடம், பாடம். இப்படி எல்லாத்தையும் உருட்டி முழுங்கி வெச்சுருக்கேன். யாருக்கு எது தேவையோ அதைக் கொடுக்குறேன்.’’
‘‘எல்லாரும் கவலையை மறக்க உங்கள் படம் பார்க்கிறார்கள். நீங்கள் கவலையை மறக்க என்ன செய்வீர்கள்? உலக சினிமாக்கள் எல்லாம் பார்ப்பீர்களா?’’
‘‘கிடையாதுண்ணே... பொழுதுபோக்குன்னா நண்பர்கள்கூட பேசிக்கிட்டு இருப்பேன். டி.வி-ல பழைய பாட்டு பார்ப்பேன். ஆறுதல்னா தலைவர் பாட்டு கேட்குறதுதான். ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’... (பாடுகிறார்).’’
‘‘சரி, எப்போது திரும்ப வரப்போகிறீர்கள்?’’
‘‘ஒரு இடைவெளி விழுந்துடுச்சு. இனி திரும்ப வரும்போது சாதாரணமா வரக் கூடாது. அதிரடிக்கணும்ல? நல்ல காமெடி ஹீரோ சப்ஜெக்ட். பேசிக்கிட்டு இருக்கேன். நாலு அயிட்டம் கையில இருக்கு. மொதல்ல, சிம்புதேவனோட ‘புலிகேசி - பார்ட் 2’. பேரு இன்னும் வைக்கலை. கூடிய சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடுவோம். அடுத்தடுத்து, ரவிக்குமார் சாரோட ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’, யுவராஜோட ‘தெனாலிராமன்’, அப்புறம், 25 கேரக்டருல 3-டில பாவோவோட ‘உலகம்’. எழுதிக்குங்க... வடிவேலு திரும்பி வந்துட்டான்யா... வந்துட்டான்!’’
ஆனந்த விகடன் நவ.2012
வரட்டும்..வடிவேலு ...மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தட்டும்..
பதிலளிநீக்குvery nice......its a good news that he is coming back
பதிலளிநீக்குசூப்பர் சார்......
பதிலளிநீக்குpolitics played... in his career!! he is one of the best comedian we ever had!! It is good to know that he is coming back with many movies.... we r waiting for it.
பதிலளிநீக்கு"வல்லியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெல்ல வந்து உறுத்தும் என்பது முதுமொழி".
பதிலளிநீக்குஅந்த வகையில் வடிவேலு அவர்களுக்கு காலம் இந்த இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.அவரின் இதயக்குரலை உங்கள் விரல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
ஆனால் சிற்றெறும்பைப்போல் சுற்றிச் சுழன்ற காலத்தின் கலைஞனின் உதடுகள் வேண்டுமானால் இதை ஓய்வு என்று உச்சரிக்கலாம்.... உள்ளத்தின் பள்ளத்தில் ஒதுங்கிக் கிடக்கும் சோகத்தை கூட்டி அள்ள கோடி கூடைகள் இருந்தாலும் போதாது.
மிக சரி, உள்ளத்தின் பள்ளத்தில் ஒதுங்கிக் கிடக்கும் சோகத்தை கூட்டி அள்ள கோடி கூடைகள் இருந்தாலும் போதாது.
நீக்குஆனைக்கும் அடி சருக்கும் என்பது எத்தனை நிதர்சனமான உன்மை. வாழ்த்துக்கல் வடிவேலு sir, we are waiting.
பதிலளிநீக்குகா. ஜெயசீலன்
சென்னை.
"வல்லியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெல்ல வந்து உறுத்தும் என்பது முதுமொழி".
பதிலளிநீக்குஅந்த வகையில் வடிவேலு அவர்களுக்கு காலம் இந்த இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.அவரின் இதயக்குரலை உங்கள் விரல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
"வல்லியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெல்ல வந்து உறுத்தும் என்பது முதுமொழி".
பதிலளிநீக்குஅந்த வகையில் வடிவேலு அவர்களுக்கு காலம் இந்த இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.அவரின் இதயக்குரலை உங்கள் விரல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
"வல்லியர் தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை மெல்ல வந்து உறுத்தும் என்பது முதுமொழி".
பதிலளிநீக்குஅந்த வகையில் வடிவேலு அவர்களுக்கு காலம் இந்த இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.அவரின் இதயக்குரலை உங்கள் விரல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
இந்த பேட்டியை நீங்க எடுத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. இன்னும் வடிவேலுவின் ஒரு படமும் வரவில்லை. கொஞ்சம் விசாரிங்க. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பதிலளிநீக்குவிரைவில் வருவான் வடிவேலன் .அதுவரை T .V நிகழ்சிகளில் தினம் பார்த்து ரசிக்கிரத்தில் சலிப்பே கிடையாதே ?
பதிலளிநீக்குActor Vadivel should strike back. He will have wonderful time again. We all missed
பதிலளிநீக்குit is good news that he is come back to silver screen. Awaiting for his arrival.
A.S.IYER.
நான் ஏற்கணவே ஆனந்த விகடனில் நீங்கள் எழுதிய இந்த கட்டுரையை ரசித்து படித்தவை. மிகவும் அருமை.
பதிலளிநீக்குஓய்.ஆண்டனி செல்வராஜ், திண்டுக்கல்.
நாம் சில நேரங்களில் தொங்குவதுபோல நடிகர்கள் ஓர்நாளில் தொங்குபாலத்தில் நடக்கவேண்டியுள்ளது. கவனம் நாம் கொண்டாலும் நடாத்துவது அவனே.எது நடந்ததோ அது நண்பனாலே நடந்தது! எதுநடக்கவேண்டுமோ அதுவும் நண்பனாலேயே நடக்கும்!
பதிலளிநீக்கு