இந்திய அரசும் இந்த நாட்டின் மாநில அரசுகளும் மிக அலட்சியமாகக் கையாளும் ஒரு பிரச்னை, இப்போது சர்வதேச மருத்துவச் சமூகமும் உலக சுகாதார நிறுவனமும் மிகத் தீவிரமாக விவாதிக்கும் பொருளாகி இருக்கிறது. சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் அனுமானமும் கணிப்புகளும் உறுதியானால், இந்தியா அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். இந்தக் கணிப்புகள் சொல்லும் அதிரவைக்கும் செய்தி... டெங்கு ஒரு கொள்ளைநோயாக உருவெடுக்கிறது!
சமீபத்தில், பருவநிலை மாறுபாடுகள் தொடர்பாக விவாதித்த உலக சுகாதார நிறுவனம், டெங்கு தொடர்பாக ஓர் அஞ்சவைக்கும் எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது. உலகெங்கும் பருவநிலை மாறுபாட்டால், கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டி இருக்கும் அது, மலேரியா மற்றும் டெங்குவின் தாக்குதல் இனி விஸ்வரூபம் எடுக்கும் என்று சொல்கிறது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கும் சூழலில், எதிர்காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து கோடிப் பேர் டெங்கு வால் பாதிக்கப்படலாம் என்றும் அவர்களில் 15 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம் என்றும் சொல்கிறது. இந்தியாவுக்கு இது மிகப் பெரிய கெட்ட செய்தி. ஏனென்றால், உலகில் டெங்குவின் மையமே இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், டெங்குவால் 2009-ல் 15,535 பேர் பாதிக்கப்பட்டு, 96 பேர் உயிரிழந்திருக்கின்றனர்; 2012-ல் இதுவரை மட்டுமே 35,000 பேர் பாதிக்கப்பட்டு, 216 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது அரசுடைய கணக்கு. இந்த போலிக் கணக்கின்படி பார்த்தாலே, டெங்கு பாதிப்பு 100 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. ஆனால், உண்மையான கணக்கு இந்திய மக்களால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று சொல்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள். ''டெங்கு தொடர்பாக இந்திய அரசு சொல்லும் கணக்குகள் கேலிக்கூத்தானவை'' என்கிறார் சர்வ தேச அளவில் குறிப்பிடத்தக்க ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான அட்லாண்டா நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் டெங்கு பிரிவுத் தலைவரான ஹெரால்டு எஸ்.மார்கோலீஸ். ''எப்படியும் ஆண்டுக்கு 3.7 கோடிப் பேர் இந்தியாவில் டெங்குவால் பாதிக்கப்படலாம்'' என்கிறார் டெங்கு ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஹால்ஸ்டெட்.
இந்த எண்ணிக்கை நமக்கு மலைப்பை உருவாக்கலாம். ஆனால், உள்ளூர் கள நிலவரங்கள் நம்பச் சொல்கின்றன. இந்திய அரசின் கடந்த அக்டோபர் வரையிலான கணக்கு, நாட்டிலேயே தமிழகத்தில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது (5,376 பேர்). தமிழகத்திலேயே அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஒன்றான மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில், இதுவரை 15 பேர் இறந்திருப்பதாக தமிழக அரசு சொல்கிறது. ஆனால், மேலூரின் கள நிலவரமோ அதிரவைக்கிறது.
மேலூர், சுக்காம்பட்டியைச் சேர்ந்த செந்திலின் மனைவி சங்கீதா, மகள்கள் சோபியா, ரூபியா மூவருமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் டெங்கு இவ்வளவு தீவிரம் அடையாதபோது சங்கீதாவுக்கும் சோபியாவுக்கும் டெங்கு தாக்குதலை உறுதிசெய்து பரிசோதனை முடிவுகளை வழங்கிய மருத்துவத் துறை, ரூபியாவுக்கு அப்படி வழங்க மறுத்து வைரஸ் காய்ச்சல் என்று வழங்கியதாகச் செந்தில் சொல்கிறார். இதன் விளைவு... சிறுமி ரூபியா மரணம் அடைந் தார். அப்போதும்கூட வைரஸ் காய்ச்சலால் மரணம் என்றே சான்றிதழ் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார் செந்தில். இந்த ஊரைச் சேர்ந்த பலர், ''அதிகாரிகள் 'டெங்கு மரணம்’ என்று சான்றிதழ் வழங்க முடியாது என்று மறுத்ததோடு, உழவர் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங் களில் பயன் கிடைக்காது'' என்று மிரட்டியதாகவும் கூறுகிறார்கள். மேலூர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசு சொல்வதைப்போல், குறைந்தது 25 மடங்கு இருக்கும் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த விஷயத்தை மறைப்பதில் அரசு எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பதற்கும் உண்மை நிலவரம் என்னவாக இருக்கிறது என்பதற்கும் இன்னோர் உதாரணம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில், டெங்குவால் கடந்த மாதம் கிட்டத்தட்ட மூன்று நாளைக்கு ஒரு பிணம் விழ... மக்கள் உறைந்துபோய் இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளோ, வைரஸ் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் என்று உண்மையை மறைப்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக, நாளிதழ்களில் அன்றாடம் வரும் டெங்கு மரணச் செய்திகளை மறுக்கும் வகையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பே இல்லை'' என்று பேட்டி கொடுத்திருக்கிறார், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநரான கரு.ராமநாதன். இதனால் கொதித்தெழுந்த மக்கள், ஆங்காங்கே அவருடைய உருவ பொம்மையை எரித்துப் போராட்டத்தில் இறங்க, அடுத்த சில நாட்களில் சுகாதாரத் துறைத் திட்ட இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் புதுக்கோட்டை வந்து 'டெங்கு பாதிப்பு இருக்கிறது’ என்று உண்மையை ஓரளவுக்கு ஒப்புக்கொள் ளும் சூழல் உருவாகி இருக்கிறது.
வெளிப்படையாகவே மருத்துவர்களும் பரிசோதனைக்கூட நிர்வாகிகளும் பொய் சொல்கிறார்கள் என்கிறார்கள் மக்கள். பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் எஸ்.இளங்கோவின் அனுபவம், இந்தப் பிரச்னையின் தீவிரத்தை முழுமையாக அம்பலப்படுத்துகிறது. '' ஊரிலுள்ள என் மகள் டெங்குவால் பாதிக்கப்பட்டார். என்னென்ன வகையான காய்ச்சலையோ சொல்லிக் குழப்பி இருக்கிறார்கள். ஒருகட்டத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னைக்கு அவளை அழைத்து வந்து தனியார் மருத்துவ மனையில் வைத்து, அவள் உயிரைக் காப்பாற்றி னேன். கிட்டத்தட்ட 85 ஆயிரம் ரூபாய் செல வானது. நான் ஒரு மருத்துவன். உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு, மாநில அரசுப் பணி களில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவன். எனக்கே இந்த நிலை என்றால், சாமானியர்கள் என்ன செய்வார்கள்?'' என்கிறார் இளங்கோ. 2007-ல் தமிழகம் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டபோது, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் இளங்கோ.
டெங்குவில் நான்கு வகைகள் இருக்கின்றன. அதேபோல, நோயின் தாக்குதலிலும் பல கட்டங்கள் இருக்கின்றன. பெரிய தொந்தரவுகள் கொடுக்காமல் ஒரு வாரத்தில் கடந்துவிடுவதில் இருந்து, மரணத்தைத் தருவது வரை. டெங்குவால் பாதிக் கப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்வதற்குள் ளாகவே பலரையும் அது கடந்துவிடும். கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் மட்டுமே உயிரிழக்கிறார்கள். உண்மைகளை மறைக்க இந்த அம்சத்தைத்தான் அரசு பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால், டெங்குவால் ஒரு வாரக் காய்ச்சலில் அடிபட்டவர்களும்கூடப் பல மாதங்களுக்கு அதன் பாதிப்புகளை உடல் அளவிலும் மனதள விலும் சுமக்க வேண்டும். மேலும், அடுத்தடுத்த முறை டெங்குவின் பாதிப்புக்கு உள்ளானால், மரணத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். டெங்குவுக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை. நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் அதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கின்றன. பிரெஞ்சு மருந்து நிறுவனமான 'சனோஃபி பாஸ்டர்’ இதில் முன்னணி வகிக்கிறது. கடந்த வாரம் டெங்கு நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் முக்கிய கட்டத்தை எட்டி இருப்பதாக அறிவித்த இந்த நிறுவனம், ''எல்லாம் நல்லபடியாக முடிந்தால், 2015 இறுதிக்குள் சந்தைக்கு இந்த மருந்து வரலாம்'' என்கிறது. ''ஆனால், அப்படி வந்தாலும், டெங்குவில் இப்போது இருக்கும் மூன்று வகைகளுக்குத்தான் அது பலன் அளிக்கும். மீதி ஒரு வகைக்கு மருந்து கண்டறியப்பட வேண்டும். டெங்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சி என்பது பெரும் சவால், முழுமையான தடுப்பு மருந்து இன்னும் 10 ஆண்டுகளில் கண்டறியப்படலாம், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்!'' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இத்தகைய சூழலில், ஐரோப்பாவிலும் இப்போது டெங்கு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 1,357 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்தியாவோடு ஒப்பிடுகையில், இது பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், இதற்கே ஐரோப்பிய நாடுகள் பதற்றம் அடைந்திருக்கின்றன. முன் எப்போதையும் விட டெங்குவின் தாக்குதல் இப்போது தான் மோசமாக இருக்கிறது என்று சொல்கிறது ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம். சுற்றுலாப் பயணிகள் மற்றும் இந்தியா வில் இருந்து டெங்கு பாதிப்போடு வந்தவர்கள் மூலமாகவே உலகெங்கும் டெங்கு பரவுகிறது; இந்திய அரசின் அலட்சியமும் தில்லுமுல்லுமே உலகம் முழுவதும் டெங்கு பரவ முக்கியமான காரணம் என்று ஐரோப்பியர்கள் சந்தேகிக்கின்றனர். பிரச்னையை இந்திய அரசு மூடி மறைப்பதால், மக்கள் இடையே விழிப்பு உணர்வு இல்லாமல் போகிறது; மருந்தைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் அது முட்டுக்கட்டையாகிறது என்று அவர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்திய அரசோ, 'இந்தப் பிரச்னையில் உண்மையைப் பேசினால், டெங்குவைக் கொள்ளை நோயாக அறிவிக்க வேண்டி இருக்கும். அப்படி அறிவித்தால், டெங்குவுக்கான சிகிச்சைக்கு முழுமையாகப் பொறுப்பு ஏற்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவும் வேண்டி இருக்கும். கொசுக்கள் மீது மக்களுக்கு ஏற்படும் அச்சம், மின்சாரத்தை முழுமையாகக் கொடுக்க முடியாத அரசின் மீதான கோபமாக உருவெடுக்கும். சர்வதேச அளவில் சுற்றுலா மற்றும் வியாபாரம் சார்ந்து இந்தியாவுக்கு அடி விழும். எல்லாவற்றுக்கும் மேல் விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலில் ஆட்சிக் கனவுகளுக்கு டெங்கு உலைவைக்கும்’ என்று நினைக்கிறது.
இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் மட்டும் தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 34 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டு உள்ளது. அரசின் துரோகத்தால், தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன. டெங்குவுக்கு ஒரு வார சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் மருத்துவமனைகள், வெறும் 300 ரூபாய்க்குச் செய்யக்கூடிய டெங்கு ரத்தப் பரிசோதனைக்கு 5,000 ரூபாய் வரை வசூலிக்கின்றன. அரசு சிறப்பு ரத்த தான முகாம்கள் நடத்தினால், ஏராளமாக ரத்தம் திரட்ட முடியும் என்கிற சூழலில், அப்படிச் செய்யாததால், டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு ரத்தத்தட்டுகள் பெற கூடுதல் விலை கொடுத்து மக்கள் அலைகிறார்கள். ஒருபுறம் நோயும் இன்னொருபுறம் சுயநல வெறி பிடித்த அரசும் மருத்துவத் துறையுமாக நோயாளிகளைக் கொல்கின்றன. ஒரு கொள்ளைநோய்த் தாக்குதலின்போது, மக்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் மக்களைக் காக்கவும் முடியாத அரசு, குறைந்தபட்சம் மக்கள் அவர்களை அவர்களே காத்துக்கொள்ளக்கூட அனுமதிக்காமல் தடையாக இருக்கிறது. காலம் இதை ஒருபோதும் மன்னிக்காது!
ஆனந்த விகடன் நவ.2012
மனிதர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மன்னிக்கும் போது காலமும் தன்னை மாற்றிக் கொள்கின்றது.
பதிலளிநீக்குஇறந்தவனுக்கு பால் ஊற்றும் அரசு நம் தமிழகஅரசு. இதை டெங்குவால் இறந்தவர்களுக்கு மட்டுமல்ல விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும்தான்.
பதிலளிநீக்கு