பால் தாக்கரே முதன்முதலில் எனக்கு அறிமுகமானது கையில்
நுரை ததும்பும் பீர் கோப்பையுடன் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு
புகைப்படத்தில். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு
பொதுக்கூட்டத்தில், மேடையில் அனாயசமாக பைப்பில் புகைபிடிப்பார்.
இந்தியாவின் நவீனக் கலாசார நுழைவாயிலான மும்பையில் இருப்பவர்களை பால்
தாக்கரேவின் இந்தத் தோற்றம் ஈர்த்தது இயல்பானது.
தாக்கரேவின் ஆரம்ப கால நண்பர்கள் இளவயதில் இருந்தே அவர் நவீன அடையாளத்துடன் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், மெட்ரோபாலிடன் கலாசாரத்துக்கு முன்மாதிரியாகச் சொல்லப்படும் மும்பை, வேற்று மாநிலத்தவர்களை ஓட ஓடத் துரத்தும் கலாசாரத்துக்கும் முன்மாதிரியானது தாக்கரேவால்தான். "இது சுதந்திர நாடு; நான் சுதந்திரமானவன்; யாருக்கு நான் பயப்பட வேண்டும்?"என்று கேட்பவர் தாக்கரே.பேச்சு - பாவனையில் மட்டும் அல்ல; அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் சுதந்திரத்தின் உச்சத்தை அவர் அனுபவித்தார். அதேசமயம், அவருடைய சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான மக்களின் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. தென்னிந்தியாவில் இருந்து செல்லும் ரயில்களை 'சுருக்கெழுத்தாளர்களின் ரயில்கள்' என்று அழைத்ததில் தொடங்கி, கடைசிக் காலத்தில் "ஒரு பீகாரி நூறு நோய்களுக்குச் சமம்" என்பது வரை அவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும் உயிர்களை விலையாகக் கேட்டன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, "கரசேவையில் பங்கேற்றதற்காக கர்வம் கொள்கிறேன்" என்றார். மும்பையில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களின்போது அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன. எதையும் பெற மறுத்த போலீஸார் ஊடகங்களின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, வெறும் ஏழு புகார்களை மட்டும் பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தார்கள்.பின்னாளில் பா.ஜ.க.- சிவசேனா ஆட்சிக்கு வந்தபோது அவையும் காணாமல் அடிக்கப்பட்டன. மும்பை கலவரங்களில் சிவசேனையின் கொலைக்கரங்களை கிருஷ்ணா ஆணையம் அம்பலப்படுத்தியது. ஆனால், தாக்கரேவுக்கு எதிராக அரசால் கண்ணை அசைக்கக்கூட முடியவில்லை.
பல முறை அவருடைய சர்ச்சைக்குரிய எழுத்துகள், பேச்சுகள் சார்ந்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனைகூட விதித்தது.ஆனால், மேல் முறையீடுகள்,அரசியல் தலையீடுகள் காரணமாக அனைத்திலிருந்தும் அவர் தப்பினார். பால் தாக்கரே மாதிரி வேறு யாராவது நடந்துகொண்டிருந்தால், அவர் தன் வாழ்வின் பெரும் பகுதியைச் சிறையில் செலவிட வேண்டி இருந்திருக்கும்.ஆனால், சட்டத்தால் அவரை நெருங்கவே முடியவில்லை. 1950-களில் அவருடைய அரசியல் எழுச்சிக்குக் காரணமாக இருந்த ‘ஒன்றுபட்ட மகாராஷ்டிரம் இயக்கம்’ உச்சத்துக்குப் போனபோது, 105 பேர் உயிரிழந்தனர். அரசாங்கம் தாக்கரேவைக் கைது செய்து புனே எரவாடா சிறையில் அடைத்தபோது,மும்பை வீதிகள் தீப்பற்றி எரிந்தன. ஒருகட்டத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தாக்கரே கோரிக்கை விடும்படி அரசாங்கம் சிறையில் இருந்த தாக்கரேவிடம் கெஞ்சியது.அரசாங்கத்திடம் அன்றைக்கு ஏற்படுத்திய பயத்தை,தான் சாகும் வரை அப்படியே இருக்குமாறு பார்த்துக்கொண்டார் தாக்கரே.
அடிப்படையில் பால் தாக்கரே ஒரு தீவிரமான தேசியவாதி.ஆரம்ப நாட்களில் அவர் எந்த அளவுக்கு தேசியவாதியாக இருந்தாரோ,பின்னாளில் அதே அளவுக்கு இனவாதியாகவும் மாறினார்.ஒரு தேசியவாதியை இனவெறியை நோக்கித் தள்ளியது எது? இந்தக் கேள்விக்கான பதில்தான் பால் தாக்கரேவிடம் இருந்து இந்திய ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை.
பால் தாக்கரேவுக்கு ஹிட்லரை ரொம்பப் பிடிக்கும்."ஹிட்லரின் எல்லா நடவடிக்கைகளையும் நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அவர் ஓர் அற்புதமான ஆளுமை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயுமே ஒரு ஹிட்லர் இருக்கிறார்.எனக்கும் ஹிட்லருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்" என்று சொல்வார் தாக்கரே.
உண்மைதான்.ஒவ்வொருவருக்குள்ளும் ஹிட்லர் மட்டும் இல்லை.இங்கே தாக்கரேவும்கூட இருக்கிறார். தெலங்கானா,ஹரித்பிரதேசம்,பந்தல்கண்ட், பூர்வாஞ்சல், மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்காலாந்து, கட்ச், விதர்பா என்று இன்றைக்கு இந்தியாவில் தனி மாநிலக் கோரிக்கைகளோடு நிற்கும் ஒவ்வொருவரின் அரசியலிலும் தாக்கரேவின் அரசியல் இருக்கிறது. தமிழ்நாடு வரை ஊடுருவிவிட்ட மண்ணின் மைந்தன் அரசியலில் தாக்கரே இருக்கிறார்.அவர் வெற்றி பெற்று காட்டிய இனவாத அரசியல் சம கால இந்திய அரசியல் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்கிறது.மறுக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளில் இருந்தும் உணர்வுகளில் இருந்தும் தாக்கரேக்கள் உத்வேகம் பெறுகிறார்கள். பழக்கதோஷத்தின் காரணமாக, ‘இவருடைய மரணம் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது’ என்று பால் தாக்கரேவுக்கும் பலர் இரங்கல் உரை எழுதலாம். ஆனால், ஒரு பால் தாக்கரே ஓராயிரம் பால் தாக்கரேக்களை உருவாக்கிவிட்டுப் போய் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இந்தியாவின் பிரச்னையும் அதுதான்!
விகடன்.காம் நவ.2012

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக