இயக்குநர் ஆங் லீயுடன் சமஸ் |
கடலில் ஒரு படகு; அதில் ஒரு பையன்; கூடவே ஒரு புலி. இதுதான் 'லைஃப் ஆஃப் பை’ படத்தின் கதை. ஆனால், இதை வெற்றிகரமான ஒரு புத்தகமாக்குவதையோ, சினிமாவாக்குவதையோ யோசித்துப்பாருங்கள். பெரிய சவால்! பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன் பை. மிருகக்காட்சி சாலை நடத்தும் அவனுடைய தந்தை, அரசியல் சூழல் காரணமாக, விலங்குகளை விற்றுவிட்டு வெளிநாட்டில் குடியேற நினைக்கிறார். பையின் குடும்பம் விலங்குகளுடன் ஒரு சரக்குக் கப்பலில் பயணப்படுகிறது. வழியில் பெரும் புயல். இறுதியில், உயிர் தப்பும் படகில் ஐந்து பேர். ஒரு கழுதைப்புலி, ஒராங்குட்டான், வரிக்குதிரை, புலி, பை. முதலில் வரிக்குதிரையையும் ஒராங்குட்டானையும் கழுதைப்புலி கொல்கிறது. அடுத்து கழுதைப்புலியைப் புலி கொல்கிறது. இப்போது மிச்சம் இருப்பது இரண்டே பேர். புலியும் பையும். ஒரு பக்கம் ஆள் அரவமற்ற நடுக்கடல். இன்னொரு பக்கம் இரையாக்கிக்கொள்ளத் துடிக்கும் புலி. 227 நாட்கள். பை எப்படி எதிர்கொள்கிறான்?
இதை எழுத்தாளர் யான் மார்டெல் நாவலாக்கிப் பதிப்பிக்க அணுகியபோது, லண்டனின் முக்கியமான பதிப்பகங்கள் பல நிராகரித்தன 'பெங்குவின் பதிப்பகம்’ உட்பட. ஆனால், 2001-ல் அது புத்தகமாக வந்தபோது விற்பனையின் உச்சத்துக்குச் சென்றது. 2002-ம் ஆண்டுக்கான 'மேன் புக்கர்’ பரிசை வென்றது. உலகெங்கும் 70 லட்சம் பிரதிகள் விற்றன. இப்போது 11 ஆண்டுகள் கழித்து சினிமாவாகி, திரையரங்குகளை அதிரடிக்கிறது. '3டி’ - 'சிஜிஐ’ தொழில்நுட்பத்தில், 'லைஃப் ஆஃப் பை’ படத்தைப் பார்த்தவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். அது விவாதிக்கும் தத்துவ விசாரங்களால், 'இந்தப் படம் ஒரு மறக்க முடியாத அனுபவம்’ என்கிறார்கள். ஆனால், படத்தின் இயக்குநர் ஆங் லீயோ இவை எல்லாமே எதிர்பார்த்ததுதான் என்பதுபோல இருக்கிறார். சர்வதேச அளவில், சம கால இயக்குநர்களில் முக்கியமான ஒருவர் ஆங் லீ. ஆசியப் பின்னணியில் ஆஸ்கர் விருது பெற்ற முதல் இயக்கு நர். கடந்த 10 வருடங்களில் 13 படங் களை இயக்கியிருக்கிறார் ஆங் லீ; எல்லாமே வெவ்வேறு களங்களை அடிப்படையாகக் கொண்டவை. வசூலில் பட்டையைக் கிளப்பியதோடு 'ஆஸ்கர்’, 'பாஃப்டா’, 'கோல்டன் க்ளோப்’ என மதிப்புமிகு விருதுகளையும் அள்ளியவை. ஆங் லீயைச் சந்தித்தபோது அவரிடம் துளி பகட்டு இல்லை. வெளிப்படையாகப் பேசினார். விகடனுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல் இது.
''சின்ன வயதில் இருந்தே சினிமாதான் கனவாக இருந்ததா?''
''என்னுடைய அப்பா ஒரு தலைமை ஆசிரியர். அவர் வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் நான் படித்தேன். நான் பேராசிரியராக வேண்டும் என்பது அப்பாவின் கனவு. இப்படிப்பட்ட சூழலில், சினிமா கனவு எல்லாம் சின்ன வயதில் வருமா என்ன? நான் கலாசாரரீதியாகப் பலமாக இருக்க வேண்டும் என்று அப்பா நினைத்தார். அதனால், சின்ன வயதில் இருந்தே நிறைய வரலாற்று, இலக்கியப் புத்தகங்களைப் படித்துவந்தேன். அவை கலையை நோக்கி என்னை இழுத்தன. படிக்கும் காலத்தில் நாடகங்களில் நடித்தேன். நான் திசைமாறுவதாக அப்பா நினைத்தார். ஆனால், எங்கள் இடையே அன்பைத் தாண்டி அற்புதமான புரிதலும் இருந்தது. அவர் முட்டுக்கட்டையாக இருக்க விரும்பவில்லை. கல்லூரியில் நாடகத்தைப் படித்தேன். பெர்க்மனின் படங்களைப் பார்த்தபோது, எனக்குள் இருந்த சினிமாக்காரன் விழித்துக்கொண்டான்.''
''நீங்கள் படம் பண்ண ஆரம்பிக்கும் முன்னரே திருமணம் செய்துகொண்டீர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். தாய்வான் சமூகச் சூழலில் வேலைக்குப் போகாமல், ஓர் ஆண் வீட்டில் இருப்பது பெரிய சங்கடம் ஆயிற்றே... எப்படிச் சமாளித்தீர்கள்?''
''ஹா... ஹா... ஆமாம். வேலை இல்லாமல் ஆறு ஆண்டுகள் ஹவுஸ் ஹஸ்பண்டாக இருந்தேன். உயிரியலாளரான என் மனைவி ஜேன் லின் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் ஓடியது. சங்கடம்தான். ஆனால், தாய்வான் சூழலில், மனைவிக்கு இது இன்னும் சங்கடம். ஜேன் லின் என் கனவுகளை நம்பினார். ஒரு படைப்பாளிக்கு இந்த மாதிரியான காலகட்டத்தில் குடும்பத்தினர் கொடுக்கும் ஆதரவு, பெரும் ஆன்ம பலம். ஜேன் லினுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.''
''உங்கள் படங்களைப் பார்க்கும்போது கலை, கலாசாரம், தத்துவங்கள் மீது உங்களுக்கு ஆழ்ந்த பிடிப்பு இருப்பது தெரிகிறது. அமெரிக்கா உங்களுக்கு ஒத்து வருகிறதா?''
''அமெரிக்காவில் இருப்பது பெரும் கலாசார இழப்புதான். ஆனால், அடிப்படையிலேயே என்னை எந்த நாட்டின் குடிமகனாகவும் நான் நினைக்கவில்லை. நான் தாய்வானில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெற்றோர் சீனாவில் இருந்து தாய்வான் வந்தவர்கள். அதனால், அங்கு நான் அந்நியனாகத்தான் உணர்ந்தேன். அப்புறம், நாங்கள் அமெரிக்கா போனோம். அங்கும் அந்நியனாகத்தான் உணர்ந்தேன். அப்புறம், சீனா போனோம். அங்கும் அந்நியனாகத்தான் உணர்ந்தேன். இப்போது மீண்டும் அமெரிக்கா. மீண்டும் அந்நிய உணர்வு. ஆனால், தாய்வானிலோ, சீனாவிலோ பரம்பரை பரம்பரையாக இருந்திருந்தாலும்கூட, இந்த இழப்பை உணர்வேன். உலகமயமாக்கச் சூழல் எந்த ஒரு நாட்டின் கலாசாரத்தையுமே காலியாக்கிவிடுகிறது; நம் ஒவ்வொருவரையுமே அந்நியர்கள் ஆக்கிவிடுகிறது, நாம் எல்லோருமே அந்நியர்கள்தான், இல்லையா?''
''பொதுவாக, புத்தகங்களை சினிமாவாக்குவது சவாலான காரியம். நீங்கள் கணிசமான அளவில் சிறுகதை கள், நாவல்களைப் படமாக்கி இருக்கிறீர்கள். உங்களுடைய அனுபவம் எப்படி?''
''ஒரு கதை யாருடையதாக இருந்தாலும் சரி, அது எனக்குள் உருவாக்கும் அனுபவங்களையும் காட்சிகளையும்தான் நான் படம் ஆக்குகிறேன். பொதுவாகவே, ஏதாவது ஒரு விஷயம் சவாலாகத் தோன்றினால், அதைச் சாத்தியமாக்கிப் பார்க்கும்வரை நான் விடுவது இல்லை. அதுவும் சினிமாவில் சாத்தியம் இல்லாத விஷயங்களே இல்லை.''
''உலகின் பல நாடுகளில், விருதுக்காகப் படம் எடுப்பது ஒரு ரகம்; வணிகரீதியாகப் படம் எடுப்பது ஒரு ரகம் என சினிமா இரண்டு பிரிவுகளாகப் பிளவு பட்டு இருக்கிறது. நீங்கள் எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்கிறீர்கள்?''
''நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் எனக்காகப் படம் எடுப்பவன். 'க்ரோச்சிங் டைகர் ஹிடன் டிராகன்’ சீன மொழியில் எடுத்த படம். அது சர்வதேச அளவில் வசூலை அள்ளும் என்பதோ, ஆஸ்கருக்குப் போய் ஹாலிவுட் கவனத்தை ஈர்க்கும் என்பதோ, நான் துளியும் எதிர்பாராதது. ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்தபோது, அதை இயல்பாக ஏற்றுக்கொண்டேன். 'சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி’ செய்தேன். அதேபோல, 'ஹல்க்’ படம் தந்த மிதமான வெற்றி போதாது என்று ஹாலிவுட் நினைத்தபோது, சினிமாவில் இருந்தே ஒதுங்கிவிடவும் தயாராக இருந்தேன். நான் செய்யும் வேலை எனக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும்; கச்சிதமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். நாம் கச்சிதமாக ஒரு வேலையைச் செய்தால், நம்மைத் தாண்டியும் எல்லோராலும் அது விரும்பப்படும் என்பது என் நம்பிக்கை.''
''அப்படி என்றால், சினிமாவைச் சுற்றி இருக்கும் வணிகத்தை நீங்கள் கருத்தில் எடுத்துக்கொள்வது இல்லையா?''
''அப்படிச் சொல்ல முடியாது. என்னுடைய படத்தின் பார்வையாளர்கள் யார் என்பதில் தெளிவாக இருப்பேன். செக்ஸை அடிப்படையாக வைத்து ஒரு படம் எடுக்கிறேன் என்றால், சிறுவர்கள் அந்தப் படத்தின் பார்வையாளர்கள் இல்லை என்பதில் தெளிவாக இருப்பேன். அதற்கேற்பதான் பட்ஜெட் அமையும். எல்லாப் படங்களையும் எல்லோருமே பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேராசை.''
''நீங்கள் 'ப்ரோக்பேக் மவுன்டென்’ எடுத்தபோது 'கலாசாரக் காவலர்கள்’ அதை எதிர்த்தார்கள்...''
''என்னைப் பொறுத்த அளவில், இந்தச் சமூகத்தால் ஒடுக்கப்படும் ஒரு காதல் கதை அது. இரு ஆண்களின் காதல் கதை. ஓரினச்சேர்க்கை, தகாத உறவு... யார் என்ன பெயரில் வேண்டுமானாலும் அழைக்கட்டும், காதல் என்பது காதல்தான்.''
''தொழில்நுட்பத்தால் 'லைஃப் ஆஃப் பை’யில் ஒரு புலியை உருவாக்கி இருக்கிறீர்கள். நாளைக்கு எல்லாப் பாத்திரங்களையும் இப்படி உருவாக்க முடிந்தால், அசலான கலைக்கு அது எதிரியாகிவிடாதா? ஒருகட்டத்தில் தொழில்நுட்பம் கலையை அழித்துவிடாதா?''
''இர்ஃபான் கான், தபு, சூரஜ் சர்மா என்று பல இந்தியக் கலைஞர்களுடன் இந்தப் படத்தில் பணி யாற்றி இருக்கிறீர்கள். இந்தியக் கலைஞர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''
''என்னுடைய அனுபவத்தில், வேலையில் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை இந்தியர்கள் கொடுக்கிறார்கள்.''
''உங்கள் பார்வையில், இந்திய சினிமாவின் பலம் என்ன? பலவீனம் என்ன?''
''நினைத்த எதையும் படமாக்கலாம் என்கிற சூழல், சுதந்திரம் - அதாவது ஹாலிவுட் அளவுக்கு வியாபாரம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தாத சுதந்திரம் - இருப்பது பலம். ஆனால், அந்தச் சுதந்திரம் அசட்டையாகப் பயன்படுத்தப்படுவது பலவீனம்.''
''இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''
''அழகு. இங்குள்ள கலைப் பாரம்பரியமும் கலாசாரமும் என்னை வெகுவாக ஈர்க்கின்றன.''
''நான் அரசியல்ரீதியிலான உங்கள் அபிப்பிராயத்தை எதிர்பார்க்கிறேன்...''
''ஓர் அந்நியன் - அதுவும் சுற்றுலாப் பயணிபோல வந்து செல்பவன் - ஒரு நாட்டின் அரசியல், சமூக நிலையை அத்தனை எளிதாக மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிகிறது. ஏற்றத்தாழ்வு. எல்லா இடங்களிலும் இருக்கிறது என்றாலும், இந்தியாவில் உச்சத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. அது என்னை அறைகிறது.''
''இந்திய - சீன உறவுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?''
''எந்த ஒரு கலைஞனும் அமைதியையும் சமா தானத்தையுமே முன்னெடுத்துச் செல்ல விரும்பு வான். இரண்டு நாடுகளுமே நீண்ட வரலாற்றையும் அற்புதமான கலாசாரத்தையும்கொண்ட நாடுகள்... அனுபவம் மிக்க இரு மூத்தவர்களைப் போல. சேர்ந்து செயல்பட வேண்டும்.''
''ஆசிய நாடுகளில் இருந்து உங்களைப் போன்றவர்கள் செல்வதன் மூலம் ஹாலிவுட்டின் பார்வை மாற வாய்ப்பு இருக்கிறதா? மாற்றங்கள் எதையேனும் செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா?''
''மாற்றும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வதைவிட, மாற்றி ஆக வேண்டும் என்று சொல்வேன். ஹாலிவுட்டை நான் நேசிக்கிறேன். 'லைஃப் ஆஃப் பை’ மாதிரி ஒரு பிரமாண்டமான படத்தை, ஹாலிவுட் நீங்கலாக வேறு எங்கு யோசிக்க முடியும், சொல்லுங்கள் பார்ப்போம். ஆனால், அதன் வியாபாரம் சினிமாவின் கழுத்தை அழுத்திப் பிடித்து இருக்கிறது. அதற்கேற்ப சினிமாவின் பார்வையும் மாறுகிறது. இப்போது உலகம் ரொம்பச் சுருங்கிவிட்டது. நாம் மாற்றுவோம்!''
ஆனந்த விகடன் நவ.2012
சமஸ் அண்ணா உங்களுடைய எழுத்து மிக்க அருமை.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழில் சர்வதேச தரத்தில் ஒரு பேட்டி. வாழ்த்துக்கள் சமஸ்.
பதிலளிநீக்குசமஸ் பேட்டி எடுப்பதையே ஒரு கலையாக மாற்றி இருக்கிறீர்கள். ஆங்லீ என்பவரின் வெற்றிக்கு பின் எத்தனை கதைகள், வலிகள் இருக்கின்றன என்பதை ஆழமாக உணர்த்துகின்றது இந்த உரையாடல். விகடன் வாசகனான நான் உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறேன் சமஸ்.
பதிலளிநீக்குஎன் போன்றோர்கு இது ஒரு நல்ல கட்டுரை வாழ்த்துகள் சமஸ்
பதிலளிநீக்கு"உலகமயமாக்கச் சூழல் எந்த ஒரு நாட்டின் கலாசாரத்தையுமே காலியாக்கிவிடுகிறது; நம் ஒவ்வொருவரையுமே அந்நியர்கள் ஆக்கிவிடுகிறது, நாம் எல்லோருமே அந்நியர்கள்தான்,ஆங் லீ "
பதிலளிநீக்குசத்தியமும் ஜீவனும் உள்ள வார்த்தைகள் !! நன்றி சமஸ் .
//இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதிலளிநீக்கு"ஓர் அந்நியன் - அதுவும் சுற்றுலாப் பயணிபோல வந்து செல்பவன் - ஒரு நாட்டின் அரசியல், சமூக நிலையை அத்தனை எளிதாக மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிகிறது. ஏற்றத்தாழ்வு. எல்லா இடங்களிலும் இருக்கிறது என்றாலும், இந்தியாவில் உச்சத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. அது என்னை அறைகிறது."//
விகடனில் உங்களின் நேர்காணல் மூலம் வெளியான, அந்த மனிதரின் வார்த்தைகள்.. இன்னும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது!
ஆசியப் பின்னணியில் ஆஸ்கர் விருது பெற்ற முதல் இயக்கு நர். என்று செய்தியில் உள்ளது, சத்யஜித்ரே ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். தங்களுடைய மேலான தகவலுக்காக..
பதிலளிநீக்குஆங் லீ யைத் தெரியாது. லைப் ஆப் பை யை பார்த்ததில்லை. ஆனால் தான் செய்யும்வேலையில் அதீத ஈடுபாடு வெற்றியில் அசைக்கமுடியாத நம்பிக்கை இந்தியர்கள் வேலையில் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை கொடுக்கிறார்கள் என்று சொல்வதிலிருந்து அவர் யார் என்பது மட்டும் தெரியவைக்கிறது.
பதிலளிநீக்கு