விவசாயிகளை இந்த நாடு ஏன் இவ்வளவு அலைக்கழிக்கிறது?


பள்ளி இறுதி நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பன் கார்த்திகேயன். மன்னார்குடி பக்கத்திலுள்ள மகாதேவப்பட்டினம் கிராமம். பெரிய விவசாயக் குடும்பம். கவிஞன். நல்ல வாசகன். அன்றைக்கு எழுதிக்கொண்டிருந்த எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவனே முதன்மையானவன். எங்கள் குழுவில் எல்லோருமே ஆங்கில இலக்கியம் படிக்க ஆசைப்பட்டோம். அவனும் அப்படி படித்திருக்க வேண்டும். சம்பா சாகுபடி வரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. அந்த வருஷம் தண்ணீர் இல்லாமல் போக, முதல் அடி சம்பாவுக்கும் அடுத்த அடி கார்த்திகேயனுக்கும் விழுந்தது. இலக்கியம் படித்திருக்க வேண்டியவன் பன்தொழில்நுட்பக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டான். கொஞ்ச நாட்களில் கார்த்திகேயனின் அப்பா ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குப் போனார். கார்த்திகேயன் இப்போது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கிறான். அப்பா உயிரோடு இல்லை.

ராதாநரசிம்மபுரத்தில் ஆசைத்தம்பி என்று ஒரு நண்பர் உண்டு. சிறு விவசாயி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். வசதியில்லாததால் படிக்க முடியாமல்போய்விட்ட ஏக்கம் அவருக்கு நிறைய உண்டு. இரண்டு பிள்ளைகளையும் எப்படியாவது நல்ல படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும். அதுவே லட்சியம். விவசாயம் பொய்த்தபோது உள்ளூரிலேயே கூலி வேலைக்குச் சென்றார். அப்புறம் கடலை விற்றார். சென்னைக்கு கட்டிட வேலைக்குச் சென்றார். ஒன்றும் எடுபடாதபோது யாரோ சொன்னார்கள் என்று கடன் வாங்கி வளைகுடா நாடு ஒன்றில் பனை வெட்டச் சென்றார். கொத்தடிமை வாழ்க்கை. பதினாறு மணி நேர வேலைச் சூடு தாங்காமல் நோய்வாய்ப்பட்டு சில மாதங்களிலேயே ஊர் திரும்பியபோது கண் பார்வை மங்கிவிட்டிருந்தது. அந்த வருஷம்தான் அவருடைய மகள் பிளஸ் டு எழுதியிருந்தாள். பொறியியல் கனவைச் சுமந்தவள். நன்கு படித்தவள். ஏற்கெனவே உள்ள சுமைகளோடு அப்பாவின் கடனும் முடக்கமும் சேர, வீட்டு கஷ்டத்தைச் சுமக்க படிப்பை நிறுத்திவிட்டு வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். மகன் லாரி கிளீனர் ஆனான்.

ஒரு பருவம் ஆற்றில் தண்ணீர் வரவில்லை அல்லது வழக்கமான மழை இல்லை என்றால், நம் கிராமங்களில் அது ஏற்படுத்தும் தெறிப்புகள் சாமானியவை அல்ல. ஒரு குடும்பத்தின் பல்லாண்டு கால கனவுகள் அத்தனையையும் கணத்தில் பொசுக்கிவிடக் கூடியது ஒரு பருவத்தின் வெள்ளாமைப் பொய்ப்பு. ‘விவசாயிகள் தற்கொலை’ என்ற தலைப்பில் வெளியாகும் செய்திகள் கிராமங்களில் நடக்கும் உடல்ரீதியிலான மரணங்களை மட்டுமே பேசுகின்றன. கொடிய வலி மண்டலங்களான விவசாயக் குடும்பங்களிலிருந்து பார்த்தால்தான் இந்நாட்டின் அதிகார வர்க்கம் வருஷக்கணக்கில் விவசாயப் பிரச்சினைகளை இழுத்தடிப்பதும் விவசாயிகளை அலைக்கழிப்பதும் எவ்வளவு தீவிரமான சமூகக் குற்றம் என்பதை உணர முடியும். அதுவும் நதிநீர் விவகாரத்தை சாவதானமாக ஓர் அமைப்பு அணுகுவது, ரத்தம் ஆவியாகிக்கொண்டிருக்க மூச்சிரைப்போடு சிகிச்சைக்கு வந்திருப்பவனைப் பார்த்து, “போய் வரிசையில் நில்!” என்று சொல்லும் அதிகாரத்தடித்தனமே அன்றி வேறில்லை.


காவிரி நதிநீர் பகிர்வு விவகாரத்தில் கால் நூற்றாண்டு இழுத்தடிப்புக்குப் பின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச தண்ணீரும் கேள்விக்குள்ளாகியிருப்பதும், இந்த விஷயத்தில் மத்திய அரசு கேட்கும் மேலதிக அவகாசமும், அதற்கேற்ற உச்ச நீதிமன்றத்தின் இசைவும் எனக்கு மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைத்தான் உணர்த்துகின்றன. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மேட்டிமை நிறைந்த மலினப் பார்வையைத் தனதாக்கிக்கொண்ட இந்திய ஆட்சி மன்றத்தின் இன்றைய ஆன்மா எந்த வகையிலும் கிராமங்களோடு தொடர்புகொள்ளும் நிலையில் இல்லை. கிராமங்களைப் பற்றிய கற்பனையையே இந்த நாடு இழந்துகொண்டிருக்கிறது. நகர மனிதனின் வேலையற்ற ஒரு மாதத்தை இவர்களால் உணர முடியும். கிராம மனிதனின் வேலையற்ற ஒரு மாதத்தை இவர்களால் சிந்திக்கவே முடியாது. கிராமங்கள் முற்றிலுமாக இந்த நாட்டின் உணர்வு எல்லைக்கு வெளியே சென்றுகொண்டிருக்கின்றன. நீதிமன்றங்கள், அரசு இயந்திரம் மட்டும் அல்ல - ஊடகங்கள், அவை உண்டாக்கியிருக்கும் பொதுப்புத்தி எல்லாவற்றையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.

நடிகர் ரஜினிகாந்த், “பெரிய விவசாயிகளுக்காகப் போராடவில்லை; சிறு விவசாயிகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம்” என்று சொல்லியிருப்பதை இன்றைய இந்தியாவின் பொதுப்புத்திக்கான ஓர் உதாரணமாகச் சொல்லலாம். ஏற்கெனவே விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு முன்னெடுத்த போராட்டங்களின்போதும்கூட இதே போன்ற விமர்சனங்கள் வந்ததை இங்கு நினைவுகூரலாம். “அய்யாக்கண்ணு கார் வைத்திருக்கிறார். அவர் ஏன் போராடுகிறார்?”

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று நடந்துகொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியமான அம்சமே சிறு, குறு, நடுத்தர விவசாயிகளைத் தாண்டி முதல் முறையாக வசதியான விவசாயிகளையும் இன்றைய சூழல் வீதிக்குத் தள்ளியிருக்கிறது; அந்த அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது என்பதுதான். இதே தொழில் துறை போராட்டமாக இருந்தால் இந்த வாய்கள் எப்படிப் பேசும்? “டாடா, அம்பானியே வீதியில் இறங்குகிறார்கள் என்றால், ஒரு சாதாரண தொழில்முனையர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார்?” விவசாயிகள் என்றால் ஏன் பேச்சு தலைகீழாகிறது? ஏனென்றால், கிராமங்களில் இன்று என்ன நடக்கிறது என்பதே இவர்களுக்குத் தெரியாது.

சமீபத்தில் ஒரு காணொலியைப் பார்த்தேன். “நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் விவசாயத்தின் பங்களிப்பு ஏழில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்ட நிலையிலும், விவசாயத்தைப் பெரிய துறையாகக் கருதி பேசுவதும் விவசாயத்தைவிட்டு விவசாயிகள் வெளியேறுவதை ஒரு துயரமாகக் கட்டமைப்பதும் மோசடி” என்று ஒரு அறிவுஜீவி பேசிக்கொண்டிருந்தார். மேற்கின் வார்த்தைகளை அப்படியே சுவீகரித்துக்கொள்வதன் விளைவு இது.

நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மையின் பங்களிப்பு வெறும் 14% ஆக இன்று குறைந்திருக்கலாம். ஆனால், இந்த நிலையிலும் மக்கள்தொகையில் 55% பேருக்கு வேலை அளிக்கும் களம் அது. மாறாக, பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் சேவைத் துறையும் தொழில் துறையும் எத்தனை சதவீதத்தினருக்கு வேலை அளிக்க முடிகிறது? இந்தியாவில் இன்று ஒவ்வொரு நாளும் 30,000 பேர் புதிதாக வேலை தேடி வீதியில் கால் எடுத்து வைக்கிறார்கள். அவர்களில் வெறும் 450 பேருக்கு மட்டுமே அமைப்புசார் துறைகளால் வேலைகளை உருவாக்க முடிகிறது என்கிற உண்மையின் பின்னணியில் ஒப்பிட்டால் வேளாண் துறை எவ்வளவு பெரிய தாங்குசக்தி!

இந்தியாவில் விவசாயத்தின் மிக முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவது, கிராமங்களைத் தக்க வைக்க இங்கு மிச்சமுள்ள ஒரே காரணி அது. நகரங்கள் நகரங்களாக இருக்க வேண்டும் என்றால், கிராமங்கள் கிராமங்களாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் தாங்கும் சக்தி இந்திய நகரங்களுக்கு இருக்கிறதா? விவசாயம் இல்லாத கிராமங்கள் என்னவாக இருக்கும்? மரங்கள் இல்லாத காடுகளைக் கற்பனை செய்ய முடியுமா?

கடந்த நான்காண்டுகளில் பெரும் சரிவை இந்திய விவசாயம் சந்தித்துவருகிறது. அரசு நியமித்த அசோக் தளவாய் குழு தரும் விவரங்களின் அடிப்படையிலேயே, இந்த 2017-18 நிதியாண்டில் விவசாயத் துறையின் வளர்ச்சி 2.1% ஆக மட்டுமே இருக்கும் என்ற முடிவுக்கு வர முடிகிறது. வழக்கமான பருவநிலை நிலவும் ஒரு காலகட்டத்தில் வளர்ச்சி இவ்வளவு குறைவது மோசமான அறிகுறி.

மோடி தலைமையிலான அரசு தன்னுடைய ஆட்சியைத் தொடங்கிய காலகட்டம் விவசாயத்தைப் பொருத்தவரை ஒரு நல்ல சூழல் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், 2004-2014 காலகட்டமானது இந்திய வேளாண் துறை வரலாற்றிலேயே உற்பத்தி உச்சம் தொட்டிருந்த காலகட்டம். 1994-2004 காலகட்டத்தில் 2.6% ஆக இருந்த வேளாண் துறையின் வளர்ச்சி அடுத்த பத்தாண்டுகளில் 4% ஆக உயர்ந்திருந்தது. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகான இந்த நான்காண்டுகளில் அது மீண்டும் 2% ஆகக் குறைந்திருக்கிறது. மேலும் கடந்த 35 ஆண்டுகளில் ஒருபோதும் வளர்ச்சியில் இறக்கம் காணாத கால்நடை துறையும் இந்த ஆட்சியில் நிலவும் ‘பசு அரசியல்’ பின்விளைவாக சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. வேளாண்சார் ஏற்றுமதியும் இறங்குமுகம் கண்டிருக்கிறது. 2004-2014 காலகட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.2,6 லட்சம் கோடியாக வளர்ந்த ஏற்றுமதி 2015-2016-ல் 2.10 லட்சம் கோடியாக விழுந்திருக்கிறது. எதிர்ப்புறத்தில் வெளிநாட்டு இறக்குமதி ரூ.90 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

இவை எதுவுமே நல்ல செய்திகள் அல்ல. நாட்டின் 55% மக்கள் நேரடியாகப் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு துறையில் இவ்வளவு பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பது தேசிய இழப்பு. எத்தனை ஊடகங்கள் இதை ஒரு தேசியப் பிரச்சினையாக அணுகியிருக்கின்றன? நம்முடைய ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் எத்தனை மணி நேரம் இதுகுறித்து விவாதித்திருக்கின்றன? ஏன் இந்தச் செய்திகள் யாரையும் அதிரவைக்கவில்லை?

ஒட்டுமொத்த உலகோடு ஒப்பிடுகையில், வெறும் 2.4% நிலப்பரப்பில் 18% மக்கள்தொகையைச் சுமக்கும் ஒரு நாடு தண்ணீர் விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? அதுவும் இந்தியாவில் புதுப்பபிக்கத்தக்க நீராதாரத்தின் அளவு வெறும் 4% எனும்போது நதிநீராதாரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? ஆனால், ஏற்கெனவே 121 ஆக இருந்த மாசுப்படுத்தப்பட்ட ஆறுகளின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 275 ஆக உயர்ந்திருக்கிறது என்று இந்திய மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிக்கையே சொல்கிறது என்றால், இன்றைய ஆட்சியாளர்களின் அக்கறையை எப்படிப் புரிந்துகொள்வது? உலகிலேயே மாசான நகரம் என்று தலைநகர் டெல்லியை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்ததே, யமுனையை மீட்க இந்த அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன?

உண்மையில் ஆறுகள் இந்த நாட்டை இணைக்கின்றன. கூட்டாட்சிக்கான உயிரோட்டமான நரம்புகளாகவும் அவற்றைக் கருதலாம். இன்றைக்கு நாடு முழுவதும் மாநிலங்கள் இடையே பாயும் 20 ஆற்றுப் படுகைகளில் நதிநீர்ப் பகிர்வு பெரும் பிரச்சினையாகி இருக்கிறது. ஒவ்வொன்றும் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பஞ்சாப், ஹரியாணா சம்பந்தப்பட்ட ரவி - பியாஸ் விவகாரம் 31 வருஷங்களாக இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட காவிரி நதிநீர் விவகாரம் 27 வருஷங்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது. மஹாராஷ்டிரம், ஆந்திரம், மத்திய பிரதேசம், ஒடிஷா சம்பந்தப்பட்ட கோதாவரி விவகாரம் 11 வருஷங்களாக இழுத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இழுத்தடிப்பும் கோடிக்கணக்கான விவசாயிகளை, குடும்பங்களைக் கொடுந்துயரத்தில் முக்கி எடுக்கிறது.

கிராமங்களையோ, விவசாயிகளையோ உணர்ந்தவர்களால் இப்படி இழுத்தடிக்கவும் அலைக்கழிக்கவும் முடியுமா? இப்படி அலைக்கழிப்பவர்களை ‘மக்களுக்காக நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பவர்கள்’ என்றுதான் சொல்ல முடியுமா? அவர்கள் தொடர்ந்து நாற்காலிகளில் அமர்ந்திருக்கத்தான் நாம் அனுமதிக்கலாமா?

ஏப்ரல் 2018, ‘தி இந்து’

3 கருத்துகள்:

  1. சமீபத்திய தங்களின் கட்டுரைகள் தமிழக உள்ளிட்ட இந்திய மக்களின் பிரச்சினைக்களை விழிப்புணர்வோடும் எழுச்சியோடும் ஆழமாக பேசுகிறது வாழ்த்துகள்

    இப்பணி தொய்வில்லாமல் தொடர வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு