மாநிலங்களிலிருந்து ஒரு தேசியத் தலைவன்!


மேலே மஞ்சள், கீழே சிவப்பு, நடுவில் வெள்ளை; நடுவே மாநில அரசின் சின்னம். கர்நாடகக் கொடி அதன் எல்லைகளைக் கடந்து முழு இந்தியாவுக்கும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. இந்திய வரலாற்றில் மாநிலங்களால் என்றைக்கும் மறக்க முடியாத தலைவராகிவிட்டார் சித்தராமையா.


கூட்டாட்சி முறையால் பிணைக்கப்பட்ட குடியரசு இந்தியா என்றாலும், அது உருவான நாளிலிருந்தே ‘இந்நாடு மாநிலங்களால் உருவானது’ எனும் பேருண்மையை மறக்குமாறே பழக்கப்படுத்தப்பட்டுவந்திருக்கிறது. கூட்டாட்சியை வலுப்படுத்த சுதந்திர இந்தியா இம்மியளவும் முன்னகரவில்லை. காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும்போது அந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகார ஏற்பாடு ஒரு அரும்வாய்ப்பை டெல்லிக்காரர்களுக்கு வழங்கியது. நாடாளுமன்றச் சடங்குகளில் எப்போதாவது நம்முடைய தலைவர்கள் பெருமைக்காக உச்சரிக்கும் ‘கூட்டாட்சி’, ‘அதிகாரப் பரவலாக்கம்’, ‘மாநிலங்களுக்கான அதிகாரம்’ போன்ற சொல்லாடல்களுக்கு இந்திய அரசியல் அகராதியில் ஏதாவது அர்த்தம் தேட முடியும் என்றால், அது காஷ்மீருக்கு டெல்லி அதன் தொடக்க நாட்களில் கொடுத்த அதிகாரங்களாகவே இருக்க முடியும்.

ஏனைய மாநிலங்களுக்கும் காஷ்மீருக்குரிய சிறப்பதி காரங்களை நீட்டித்திருந்தால் இந்தியா ஒரு குடியரசாக மேம்பட்டிருக்கும். எதிர்வழியில் ஏனைய மாநிலங்களைப் போல காஷ்மீரையும் முடக்கியது டெல்லி. இந்தியாவில் மாநிலங்கள் உரிமை என்பது, வரலாற்றால் நெடிய பாரம்பரியமிக்க இனங்களின் கலாச்சார உரிமைகளோடும் சமூகநீதியோடும் பிணைக்கப்பட்டது. இந்த நாட்டில் தன்னை தேசியக் கட்சி என்று பிரகடனப்படுத்திக்கொள்ளும் எந்தக் கட்சியும் இதை உணரவில்லை.

நம்முடைய பெரிய துரதிர்ஷ்டம், ‘ஒரே தேசம், ஒரே மொழி’ எனும் ரகசிய இலக்கைக் கொண்டவர்களுக்கும், ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம்’ எனும் பகிரங்க இலக்கைக் கொண்டவர்களுக்கும் இடையில் நாம் சிக்கிக்கொண்டோம். ஒற்றையரச கலாச்சாரத்தை நோக்கி இன்று பாஜக நடைபோடும் ராஜபாதை பெருமளவில் காங்கிரஸின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டது என்பதை நாம் மறக்கவே முடியாது.

நிலத்திலிருந்து பீறிட்டெழும் மின்னல்போல, ஓரதிகாரத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் சீறி எழுந்தது. ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற முழக்கத்துக்கு வித்திட்ட திமுகவின் நிறுவனர் அண்ணா, இந்த இந்திய நாட்டுக்கு இன்னொரு பாதையைத் திறந்து காட்டினார். அவரது அகால மரணம் மாநிலங்களின் தேசியப் பின்னடைவானது.

அவர் வழிவந்த கருணாநிதி,1970-களில் தமிழ்நாட்டின் சட்ட மன்றத்தில் கொண்டுவந்த மாநில சுயாட்சித் தீர்மானம், தமிழ்நாட்டுக்கு என்று அவர் கோரிய தனிக்கொடி எல்லாமும் பெரிய முன்னெடுப்புகள் என்றாலும், தொடங்கிய இடத்தோடு அவை யாவும் முடங்கியது தமிழ்நாட்டின் சோகம். மாநிலக் கட்சிகளும்கூட தங்களுடைய தோற்றுவாயின் மூலத்தையே மறந்து, பொதுப்போக்கில் கரைந்துவிட்ட காலகட்டத்தில்தான் சித்தராமையா தேசியத்துக்கான மாற்றுக் கதையாடலை மீட்டெடுக்கிறார். இதை அவர் ஒரு தேசியக் கட்சியில் இருந்தபடி செய்கிறார் என்பது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கர்நாடகம் உதயமான நாளைக் கொண்டாடும் ‘ராஜ்யோத்சவ’த்தில் சித்தராமையா ஆற்றிய உரையே அற்புதம். கர்நாடகத்திலுள்ள எல்லாப் பள்ளிகளிலும் கன்னடம் கட்டாயமாக்கப்படும் அறிவிப்பை அந்த நிகழ்வில்தான் அவர் வெளியிட்டார். “கர்நாடகத்தில் வாழ்பவர்கள் எவரானாலும் அவர்கள் கன்னடம் கற்க வேண்டும்” என்றவர் “கர்நாடகத்தில் வாழும் ஒவ்வொருவரும் கன்னடரே” என்றது ஒரு அபாரமான அறுவை சிகிச்சை. மொழி அடையாள அரசியலைப் பிறப்பின் அடிப்படையில் சுருக்கிடும் குறுகிய நோய்க்கூறிலிருந்து பிரித்தெடுக்கும் அறுவை இது. ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தனிக் கொடியை அறிமுகப்படுத்தி, மத்திய அரசிடம் அதற்கான சட்ட அங்கீகாரமும் கேட்டதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன் சித்தராமையா வெளியிட்டிருக்கும் அறிக்கை மாநிலங்களின் உரிமைப் போராட்டத்தில் ஒரு முக்கியமான சாசனம்.

“மாநிலங்களின் அபிலாஷைகள் எந்த வகையில் இந்தியா என்கிற தேசத்துக்குச் சவால் ஆகிவிடும்?” என்று அழுத்தந் திருத்தமாகக் கேட்கும் சித்தராமையா, மாநிலங்களின் ஒன்றியம் என்கிற நிலையிலிருந்து மாநிலங்களின் கூட்டரசு என்கிற நிலை நோக்கி நாம் நகர்வதற்கான தேவைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். சுயாட்சிக்கான அதிகாரம் பொருளாதார சுதந்திரத்தோடு பிணைந்தது என்ற இடமறிந்து முடிவெடுக்கும் இடங்களில் பிரதிநிதித்துவம் கேட்டிருக்கிறார்.

“இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல மொழிகளும் கலாச்சாரங்களும் இந்திய அடையாளத்தைவிட மிகவும் மூத்தவை. ஆனாலும், ஒரு பொது வரலாற்றின் அடிப்படையில், பொது நாகரிகத்தின் அடிப்படையில், பொது விதியின் அடிப்படையில் இந்தியர்களாகிய நாம் கட்டுண்டிருக்கிறோம். பெருமைமிகு கன்னடன் என்கிற என்னுடைய அடையாளம் பெருமைமிகு இந்தியன் என்கிற என்னுடைய அடையாளத்தோடு முரண்பட்டதல்ல.”

“1947-ல் இந்தியா ஒரு இளம் தேசமாக இருந்தது. எந்தப் பிளவுவாதமும் நம்மை அண்டிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு நாம் இருக்க வேண்டி இருந்தது. இன்று 70 ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில், ஒரு தேசமாக நாம் போற்றத்தக்க வகையில் செயல்பட்டிருக்கிறோம்… அதே சமயம், நாம் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிராக உருவான கொந்தளிப்புகளிலிருந்தும் பஞ்சாப், அசாம் போன்ற மாநிலங்களில் எழுந்த தன்னாட்சிக்கான கோரிக்கைகளிலிருந்தும் சில பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். மாநிலங்களின் ஒன்றியம் என்பதிலிருந்து மாநிலங்களின் கூட்டரசு என்பதாக நாம் உருவாகிக்கொண்டிருக்கிறோம்.”

“வரலாற்றுரீதியாகவே, தெற்குதான் வடக்குக்கு மானியம் அளித்துவருகிறது. விந்தியத்துக்குத் தெற்கேயுள்ள ஆறு மாநிலங்களும் அதிக வரிகளைச் செலுத்திக் குறைவான நிதியைத் திரும்பப் பெறுகின்றன. ஓர் உதாரணத்துக்கு, உத்தர பிரதேசம் மத்திய வரித்தொகுப்புக்கு ரூ.1 செலுத்தி ரூ. 1.79 திரும்பப் பெறுகிறது என்றால், கர்நாடகம் அதே மத்திய வரித்தொகுப்புக்கு ரூ.1 செலுத்தி வெறும் 0.47 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது. இங்கே வளர்ச்சிக்கு வெகுமதி எங்கே இருக்கிறது? நாம் இன்னும் எவ்வளவு காலம் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு மானியம் அளிக்கப்போகிறோம்?”

“உலகின் பிற நாடுகளோடு பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் இடத்தில் மாநிலங்களுக்கு இன்று இடமே இல்லை. நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை உறுதிசெய்யக்கூடிய புதிய பொறிமுறையை உடனடியாக உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.”

சித்தராமையாவின் வார்த்தைகளைப் படிக்கையில் எனக்கு அண்ணாவைத் திரும்பப் படிப்பதுபோல இருந்தது. ஆச்சரியமூட்டும் வகையில், அண்ணாவைப் போலவே இந்தியாவில் சமத்துவம் என்பது சமூக நீதியையும் ராஜ்ய நீதியையும் பாதையாகக் கொண்டது என்று நம்புபவர் சித்தராமையா. சமகாலத்தில் எந்த ஒரு மாநிலத்தைக் காட்டிலும் தலித்துகள் மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து காரியமாற்றிவருவது அவருடைய அரசு. காங்கிரஸின் மீட்சிக்கும் வழிவகுப்பவராகவே சித்தராமையாவைப் பார்க்கிறேன்.

இந்திய சுதந்திரத்தைக் கனவென விதைத்து, அதன் அறுவடைப் பலன்களிலேயே ஒரு நூற்றாண்டு சுகவாசப் பயணம் நடத்தி, இன்று புதிய கனவுகள், புதிய இலக்குகள் ஏதும் இல்லாமல் கற்பனைகள் வறண்டு, முடங்கிக் கிடக்கும் காங்கிரஸுக்கு ஒரு புதிய இலக்கை சித்தராமையா நிர்ணயிக்கிறார். இனியும் டெல்லியிலிருந்து இந்தியாவைப் பார்க்கும் ‘மென்போக்கு பாஜக’வாக காங்கிரஸ் காலம் தள்ள முடியாது. காங்கிரஸ் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பாஜக தன்மைக்கு நேர்மாறான தன்மையை அது பெற வேண்டும். சித்தராமையா காட்டும் வழி அதற்குச் சாலப் பொருத்தமானது.

கவிஞர் சித்தலிங்கைய்யாவைப் போல பல கன்னட ஆளுமைகள், “தமிழகத்திடமிருந்துதான் நாங்கள் இந்தி ஆதிக்க எதிர்ப்புணர்வைக் கற்றோம். மாநில சுயாட்சி உணர்வைப் பெற்றோம்” என்று சொல்வதுண்டு. காலம் மாறுகிறது. கன்னட சகோதரர்களிடமிருந்தும் நாம் பாடம் படிக்க வேண்டும். நாம் என்றால், தமிழ்நாடு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவும்தான்!

மார்ச், 2018, ‘தி இந்து’

4 கருத்துகள்:

  1. தங்களின் இந்த கட்டுரை தற்போது நிலவும் தமிழக அரசியல் சூழலுக்கு மிகவும் அவசியமானதாக அமையும். தமிழக மக்களிடையே தற்போது பரவலாக காணப்படும் அரசு சார்பான கருத்தோட்டங்களுக்கு இந்த கட்டுரையானது ஒரு பரந்துபட்ட பார்வையை நிச்சயம் முன்னிருத்தும். மாநிலத்தின் செயல்பாடுகள், அதிகாரங்கள், திட்ட வரைவுகள் அதன் திணிப்புகள் என நமது சுயாதிகாரம் சார்ந்த விஷயங்களும் இன்று மேலே இருப்பவர்களின் கையில் சிக்கிய குடுமியாகி கட்டுப்பட்டு கிடக்கும் தமிழகமாக மக்களின் சிந்தையில் பெருத்த மனவேதனையையும், ஆற்றாமை மையும் அதன்வழி எழும் கோபத்தையும் சற்றே தணித்து நம்பிக்கையை விதைக்க செய்கிறது. எனினும் தற்போது தமிழ்நாடு முழுவதும் நிறைந்துள்ள அசாதாரண சூழலுக்கும் தமக்கான நியாயமான பகிர்வை பெறமுடியாமல் வஞ்சிக்கப்படுவதற்கும் காரணமாக விளங்கும் கர்நாடகாவின் முதல்வர் கூறுவதாலேயே அவை பெரிதளவில் சென்று சேராமல் போக வாய்ப்பிருக்கிறது. அதற்கான காரணங்களாக அவர் காவிரி நதி நீர் விவகாரத்தில் கொண்ட நிலைப்பாடோ, அல்லது இங்கே உள்ள சமூக ஊடகங்களோ காரணமாக அமையலாம். இப்படிப்பட்ட தருணத்தில் இந்த கட்டுரை மக்களுக்கு தெளிவான செய்தியை கொண்டு சேர்க்க செய்தமைக்கு நன்றி.
    மேலும் என்னிடத்தில் ஒரு கேள்வி எழுகிறது விளக்கமளித்து தீர்க்கப்பெற்றால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
    இந்திய அரசமைப்பின்படி மாநிலங்கள் அனைத்தும் இந்திய ஒன்றியம் என்பதற்குள்ளாக அமைந்து கூட்டாட்சி கொள்கையின்வழி இத்தனை பதிற்றாண்டுகளாக செயல்பட்டு அதில் குறையப்பெரும் மாநில உரிமைகளை மீட்பதற்காக அவ்வப்போது போராடுவது நியாயம் உரிமை.
    ஆனால் அவ்வாறு போராடும் நிலையில் அந்த மாநிலம் இந்திய ஒன்றியத்திலிருந்தே விலகுவோம் தனி நாடாக உருவெடுப்போம் என முழங்குவது ஏற்புடையதா? அறிவார்ந்தமானதா?
    அது அரசமைப்புச் சட்டத்தின் உன்னத குறிக்கோளுக்கு தீங்காகாதா?
    வஞ்சிக்கும் நிலையற்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செயலாற்றும் ஆளுங்கட்சிக்கு எதிர்த்து என்றென்றும் நிலைக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பாகவும் இறையாண்மை ஒருமைப்பாடு ஆகிய உயர்ந்த இலட்சியங்களுக்கு எதிராகவும் அமைவது சரியாகுமா?
    அது மக்கள் நாட்டுக்கும் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வீரர்களுக்கும் அரசமைப்பைத் தொகுத்த அறிஞர்களுக்கும் இழைக்கும் தவறாகாதா?
    இந்த ஐயத்தை போக்கி விளக்கம் அளிக்கப்பெற்றால் தங்களால் புதிய தெளிவு பெறுவேன்.
    ஏதேனும் தவறிருப்பின் பொருத்தருளவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சித்தலிங்கையாவின் உத்தி எந்த அளவிற்கு உதவுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  3. மாநிலங்கள் இல்லையென்றால் மய்ய அரசு சுழியம் என ஆந்திர மாநில முதல்வராக இருந்த என் டி ராமாராவ் கூற்று நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. மாநிலங்கள் இல்லையென்றால் மய்ய அரசு சுழியம் என ஆந்திர மாநில முதல்வராக இருந்த என் டி ராமாராவ் கூற்று நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு