புனிதங்கள் பொசுங்கட்டும்!


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கடுமையான விமர்சகன் நான். அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்துக்கு வழிவகுத்த மாநிலத்தில் பிறந்த மரபும் ஒரு காரணமாக இருக்கலாம். டெல்லியை மையப்படுத்தியிருக்கும் அதிகாரங்கள் சமூகநீதிக்கும் ராஜியநீதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உடைத்துப் பரவலாக்கப்பட வேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டம் சீர்திருத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துபவன். ஆனால், சமத்துவத்துக்கான இந்த உணர்வானது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு அந்நியமானது அல்ல. சமத்துவத்துக்கான இந்தத் தேட்டமே அதன் ஆன்மா. பாரபட்சத்துக்கு எதிரான என்னுடைய பேச்சுக்கு அது சக்தி தருகிறது. ஆன்மாவுக்கேற்ப அதன் உடல் உறுப்புகளும் அமைய வேண்டும் என்று பேசுகையில், நான் கோரும் அற விழுமியங்களில் அரசியலமைப்புணர்வுக்கும் ஒரு பங்கிருப்பதை உணர்கிறேன்.

சட்டங்களுக்கு வெகுதூரத்தில் மக்கள் கூட்டத்தில் நிற்கும் எனக்கு, இந்நாட்களில் ஒரு சந்தேகம் எழுகிறது. சட்டத்தோடு ஒவ்வொரு நாளும் புழங்கக்கூடிய, நிபுணத்துவம் பெற்ற சட்ட வடிவமைப்பாளர்களான ஆட்சியாளர்களும், சட்டக் கண்காணிப்பாளர்களான நீதிபதிகளும் உண்மையிலேயே நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் தரும் இந்த அரசியலமைப்புணர்வைப் பெற்றிருக்கிறார்களா? அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் எழுத்துகளாக உள்ள அதன் ஆன்மா இந்த எழுபதாண்டுகளில் எங்கேனும் இவர்கள் உடலுக்குள் புகுந்து ஒரு கலாச்சாரமாக ஆகியிருக்கிறதா அல்லது அவை தத்தமது தேவைக்கும் சௌகரியத்துக்கும் ஏற்ப அணிந்துகொண்டு தூக்கிப்போடும் உடைகள்போல வெறும் எழுத்துகளாகவே நிற்கின்றனவா? ஏனென்றால், விழுமியங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும்போதுதான் அவை தார்மிகத்தின் ஒரு அங்கமாகவும் வெளிப்படுகின்றன. அரசியலமைப்புணர்வானது சட்டப் புத்தகங்களில் உள்ள எழுத்துகளாலேயே வந்துவிடுவதில்லை. ஒரு சமூகம் தன் நடத்தையின் மூலம் அந்த எழுத்துகளுக்குக் கொடுக்கும் அர்த்தமே அதன் ஆதாரம்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பதவிநீக்க நடவடிக்கை கோரும் எதிர்க்கட்சிகளின் முன்மொழிவை நம்முடைய அமைப்பு எதிர்கொள்ளும் முறை நிலைக்குலைய வைக்கிறது. ஆட்சிமன்றமோ, நீதிமன்றமோ; எந்த ஒரு ஜனநாயக அமைப்பின் உயிரும் மக்களுக்கு அதன் மீதிருக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. அதுவும் ஒரு சாமானியனின் நம்பிக்கையைக் காட்டிலும் நீதித் துறை இழக்கப்போகும் சொத்து எதுவுமில்லை.



இந்திய வரலாற்றில் முன்னுதாரணமற்ற நிகழ்வாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் நால்வரும் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து, ‘உச்ச நீதிமன்றத்தின் ஜனநாயகம் கேள்விக்குறியாகியிருக்கிறது’ என்று எப்போது பேட்டி அளித்தார்களோ அப்போதே உச்ச நீதிமன்றம் மட்டும் அல்ல; இந்த அரசும் தனது தார்மிக பலத்தை இழந்துவிட்டது. ஏனென்றால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது இன்று பொதுவெளியில் படர்ந்திருக்கும் சந்தேகத்தின் நிழலானது அவரோடு முடியவில்லை; ஆட்சியாளர்களோடும் பிணைந்திருக்கிறது.

நெருக்கடிநிலைக் காலகட்டத்துக்குப் பிறகு, ஒரு பெரிய நம்பகத்தன்மை நெருக்கடியில் இன்று உச்ச நீதிமன்றம் சிக்கியிருக்கிறது. “நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் நீதித் துறையை ஆட்சியாளர்கள் ஆட்டிப் படைத்தார்கள். மீண்டும் இப்போது கருமேகம் திரள்கிறது” என்று நாடெங்கிலும் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், தலைமை நீதிபதியோ, பிரதமரோ மக்களை நோக்கி இறங்கி வந்திருக்க வேண்டும். சட்டரீதியாக இதற்கான நிர்ப்பந்தம் இல்லை என்பது வேறு விஷயம். தார்மிகரீதியாகப் பொறுப்பு இருக்கிறதா, இல்லையா? ‘உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பதவிநீக்க நடவடிக்கை முன்மொழிவு முன்னுதாரணமற்றது; இது நீதித் துறையின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும்’ என்று கூறினால், நடந்துகொண்டிருக்கும் ஏனைய பிரச்சினைகள் எல்லாம் முன்னுதாரணம் உள்ளவையா? முன்னுதாரணமற்ற பிரச்சினைகளை முன்னுதாரணமற்ற வகைகளில் எதிர்கொள்வதுதானே புதிய உதாரணங்கள் உருவாக வழிவகுக்க முடியும்?

எந்தச் சூழலில் நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் நால்வரும் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்கள்? அதற்குச் சில வாரங்கள் முன்புதான் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுக்லா விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான அதிர்வலைகளை உண்டாக்கியிருந்தது. உச்ச நீதிமன்றத் தடையையும் மீறி, லக்னௌவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்குகிறார் நீதிபதி சுக்லா. தனது நண்பர் மூலம் இந்த அனுமதியை வாங்கித்தருவதாகச் சொல்லி சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் பேரம் பேசி, அதற்கான பேரத் தொகையாக ரூ.2 கோடியை வாங்கும்போது சிபிஐயிடம் சிக்குகிறார் குத்தூஸ். யார் இந்த குத்தூஸ்? அவர் ஒடிஸா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.

குத்தூஸ் கைதைத் தொடர்ந்து, சுக்லாவையும் கைதுசெய்ய அனுமதி கேட்டபோது அதற்கான அனுமதியை வழங்க வேண்டிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அனுமதி கொடுக்கவில்லை. “இந்த விவகாரத்தில் தீபக் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருக்கிறது; அவரையும் விசாரிக்க வேண்டும்” என்று பொதுநல வழக்கை தொடுக்கின்றனர் வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷணும், காமினி ஜெயிஸ்வாலும். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி செலமேஸ்வர், “வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தவிர்த்த மூத்த நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்’’ என்கிறார். உடனடியாக இந்த வழக்கை தன்னுடைய கையில் எடுத்த தீபக் மிஸ்ரா, செலமேஸ்வரின் உத்தரவைக் கையோடு ரத்துசெய்ததோடு வழக்கை மூன்று இளம் நீதிபதிகள் கொண்டவேறொரு அமர்வுக்கு அனுப்பினார். அந்த அமர்வானது வழக்கை தள்ளுபடிசெய்ததுடன்,வழக்கைத் தொடுத்த வழக்கறிஞர்களுக்கு ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தது.

ஆளுங்கட்சியான பாஜகவின் தலைவர் அமித் ஷா சம்பந்தப்பட்ட ‘ஷொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர்’ வழக்கை விசாரித்துவந்த நீதிபதி லோயாவின் சந்தேகத்துக்குரிய மரணம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் கையாண்ட வகையிலும் மாறுபட்ட கருத்துகள் நிலவின.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சட்ட அமர்வின் வசம்தான் மத்திய அரசு சிக்கலை எதிர்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. மிக முக்கியமானது ஆதார் வழக்கு. அடுத்து அரசியல் சட்டம் தொடர்பான ஒன்பது வழக்குகள். குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு உள்ளான மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம் செய்யப்படலாமா என்ற வழக்கு அதில் ஒன்று; நிலம் கையகப்படுத்தல் தொடர்பான வழக்கு இன்னொன்று; இந்த வழக்குகள் தொடர்பாக நீதிபதிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்பதுடன், ஒவ்வொரு வழக்கின் தீர்ப்பும் நாட்டின் எதிர்காலத்துடன் பிணைந்தவை.

தங்களுடைய மனக்குமுறல்களைக் கடிதமாக்கி தலைமை நீதிபதிக்கே அனுப்பினர் மூத்த நீதிபதிகள் நால்வரும். எந்தப் பலனும் இல்லாத சூழலில்தான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நாட்டு மக்களிடம் பிரச்சினையைக் கொண்டுவந்தனர். பேட்டியில் புதைந்திருந்த மிக முக்கியமான அம்சம், ‘முறைமை கடந்து ஒரு தலைமை நீதிபதி தனக்கு வேண்டிய குறிப்பிட்ட அமர்வுக்கு ஒரு வழக்கை அனுப்புகையில், அந்த வழக்கின் முடிவை அவரால் நிர்ணயிக்க முடியும்’. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வந்த தீர்ப்பானது காலம் தாழ்ந்து, அவரது மரணத்துக்குப் பின்னர் வந்ததை நீதிபதி செலமேஸ்வர் – செய்தியாளர் கரன் தாப்பர் இடையேயான கலந்துரையாடலில் கேட்க நேரும்போது, நமக்கு உணர்த்தப்படுவது என்ன? விவகாரம் ஒரு தனிப்பட்ட தீபக் மிஸ்ரா தொடர்பானது மட்டும் அல்ல.

காலனியக் கலாச்சாரத்தின் நீட்சியாக வானளாவிய அதிகாரத்தைத் தன்னகத்தே குவித்துக்கொண்டிருக்கும் இந்திய நீதித் துறையானது தன்னைச் சுற்றி கோட்டையை எழுப்பி மக்களின் பார்வையிலிருந்தும் விமர்சனங்களிலிருந்தும் மூடிக்கொண்டும் இருக்கிறது. அதன் பின்விளைவான எல்லா அசிங்கங்களையும் இன்று சுமக்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நாளிலிருந்து பின்னோக்க தொடங்கினால், இரு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஊழலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின்பேரில் சிபிஐ வழக்கைச் சந்திக்கின்றனர். ஒரு நீதிபதியாக உரிய வகையில் நடந்துகொள்ளவில்லை என்று நீதித் துறையின் அகக் குழுவே விசாரணை அறிக்கை அளித்ததால், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி பணி எதுவும் ஒதுக்கப்படாமல் தண்டிக்கப்பட்டிருக்கிறார். பதவிக்குரிய ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கத் தவறியதாக இரு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதித் துறையின் அக நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலும் எவ்வளவு காலத்துக்குப் புனிதப் பசுவாக நீதித் துறையைப் பொத்திவைத்திருக்கப் போகிறோம்?

உலகில் எந்த நாட்டிலும் நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக்கொள்ளும் நடைமுறை கிடையாது. எல்லோருக்கும் மேலான இடத்தில் தங்களை இருத்திக்கொள்வது சுயநியமனத்தில் தொடங்குகிறது. உச்ச நீதிபதிப் பதவிகளுக்கான தேர்வு இந்தியாவின் பன்மைத்துவத்துக்கேற்ப பிராந்திய, பாலினப் பிரதிநிதித்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பது பல்லாண்டுகளாகத் தொடரும் குற்றச்சாட்டு. நீதிபதிகள் நியமனத்தில் சொந்தபந்தங்களும் சிஷ்யப்பிள்ளைகளும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைப் பேசாத சீர்திருத்தவாதிகள் இல்லை. நீதிமன்ற அவமதிப்புச் சட்ட அதிகாரம் நீதிபதிகள் கையிலுள்ள பெரிய ஆயுதம் - நீதிமன்றத்தில் வழக்காடிகள் கால் மேல் கால் போட்டு உட்கார்வது நீதிமன்ற அவமதிப்பு என்று ஒருமுறை சொன்னது சென்னை நீதிமன்றம்; ஸ்கர்ட் அணிவதையே வழக்கமாக கொண்ட ஒரு ஆங்கிலோ இந்திய பெண் எப்படி அமர முடியும் என்று தெரியவில்லை - நீதிபதிகள் தங்களை அமர்த்திக்கொண்டிருக்கும் உயரத்துக்கான உதாரணம் இது. அரசியலமைப்பு தரும் அதிகாரமான நீதி பரிபாலனம், வெளிப்படையான ஜனநாயகச் செயல்பாடு என்ற தங்களுடைய வரையறைகளைத் தாண்டி மக்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பது வரை வரையறுக்கும் அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது என்பது அதன் உச்சம்தான்.

ஊழல் வழக்கில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கும் ஒடிசா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குத்தூஸுக்கு எதிரான ஊழல் வழக்கில், விசாரணை நடைமுறைகளை ஊடகங்கள் அச்சிலோ, காட்சியிலோ வெளியிடக் கூடாது என்று இரு நாட்களுக்கு முன் தடை விதித்திருக்கிறது டெல்லி நீதிமன்றம். இந்த விசாரணை விவரங்கள், தீர்ப்பு வருவதற்கு முன்னால் தெரிவது தன்னுடைய கௌரவத்துக்குக் களங்கம் விளைவிக்கும் என்று குத்தூஸ் தாக்கல் செய்த மனு மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை இது. இன்னும் எதையெல்லாம் இந்நாட்டின் மக்கள் பார்க்க வேண்டும்?

நீதித் துறைப் பிரச்சினைகள் அவர்களுக்குள்ளேயே விவாதித்து முடிவெடுக்கப்பட வேண்டியவை, வெளியில் அவற்றைப் பேசக் கூடாது, நீதித் துறையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பன எல்லாமே பழைய காலனிய சிந்தனையின் தொடர்ச்சி. புனிதம் என்று எதுவும் இல்லை. ஜனநாயகத்தில் மக்களுக்குத் தெரியக்கூடாத களங்கங்கள் என்றோ, மக்களுக்கு மேலான பதவிகள் என்றோ எதுவுமே இல்லை. புனித பிம்பத்தை உடைப்பதன் வழியாகவே இந்திய நீதித் துறையின் விடுதலை சாத்தியம்!

ஏப்ரல், 2018,  'தி இந்து'

2 கருத்துகள்:

  1. "புனிதம் என்று எதுவும் இல்லை" இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இதற்கு நீதித்துறைக்கு தற்போது முற்றிலும் பொருந்திவருகிறது.

    பதிலளிநீக்கு
  2. நீதிபதிகளின் பதவி உயர்வும் ,இடமாறுதலும் மறைமுக காரணிகளால் முடிவு செய்யபடுகின்றன. உச்சநீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதி நியமனம் செய்யப்பட வேண்டுமெனில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற வேண்டியது கட்டாயம் என்பது எழுதப்படாத விதியாக இன்னும் இருக்கிறது. இவ்வாறு இருக்க தென்னிந்தியர்கள் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக வேண்டுமெனில் தன் இருப்பிடத்தை டெல்லிக்கா மாற்ற முடியும்?

    பதிலளிநீக்கு