கிரெம்ளின் அரண்மனையின் ஆந்திரயேவ் அரங்கில் விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளம் பழைய சிவப்புக் கொடியைச் சிலருக்கேனும் ஞாபகப்படுத்தியிருக்கலாம். மீண்டும் ரஷ்ய அதிபராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார் விளாடிமிர் புடின். வழக்கமாக ஜெர்மனி தயாரிப்பான ‘மெர்ஸிடிஸ்’ காரில் வலம்வருபவர், இந்த விழாவுக்கு உள்நாட்டுத் தயாரிப்பான ‘நமி - சொல்லர்ஸ்’ லிமோஸில் வந்தது அவர் திட்டமிட்ட விளைவை உண்டாக்கியது. “தேசத்தின் சுயாதீன வளர்ச்சியையும் தேசபக்தியையும் ஒருசேர வெளிப்படுத்தியிருக்கிறார் புடின்” என்று பெரும்பான்மை ஊடகங்கள் எழுதின. கார் ஒரு தேசியவாதக் குறியீடானது.
ஆசியா – ஐரோப்பா இரு கண்டங்களுக்கும் இடையே ஒரு தனி கண்டம் அளவுக்கு விரிந்து பரந்திருக்கும் ரஷ்யாவை சமகால அரசியல் சூழல் சார்ந்து ஆசியாவோடு பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். பரப்பளவில் உலகிலேயே பெரிய நாடான ரஷ்யாவையும், மக்கள்தொகையில் உலகிலேயே பெரிய நாடான சீனாவையும் இணைத்துப் பார்ப்பதன் மூலம் ஆசியாவில் ஜனநாயகத்தின் போக்கை யூகிக்க சில சாத்தியங்கள் தென்படுகின்றன.
ரஷ்யாவில் ஸ்டாலினுக்குப் பிறகு விளாடிமிர் புடினும், சீனாவில் மாவோவுக்குப் பிறகு ஜி ஜின்பிங்கும் அதிகமான அதிகாரம், செல்வாக்கு கொண்ட தலைவர்கள் ஆகியிருக்கிறார்கள். இரு மாதங்களுக்கு முன் மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார் ஜி. கடந்த வாரத்தில் நான்காவது முறையாக அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார் புடின்.
இரு நாட்டு அரசியலமைப்புகளும் அதிபராக ஒருவர் காலத்துக்கும் நீடிப்பதற்குத் தடையைக் கொண்டிருந்தன. ஒருவர் இரு முறைக்கு மேல் தொடர்ந்து அதிபராக நீடிக்க ரஷ்ய அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை. இரு முறை அதிபராக இருந்த பின் புடின், அதுவரை பிரதமர் பதவியில் இருந்த மெத்வதேவை இடையில் ஒரு முறை அதிபர் பதவிக்குக் கொண்டுவந்துவிட்டு, பிரதமர் பதவிக்கு தன்னை மாற்றிக்கொண்டார். அந்தப் பதவிக் காலம் முடிந்ததும் மீண்டும் மெத்வதேவை பிரதமர் ஆக்கிவிட்டு அதிபர் பதவியில் அமர்ந்தார் புடின். சீன அரசியலமைப்போ, இரு முறையோடு ஒருவரின் அதிபர் பதவிக்கு முடிவு கட்டிவிடுகிறது. டெங் சியோபிங் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த வரையறையையே அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து முற்றிலுமாக நீக்கிவிட்டார் ஜி.
அதிபராக ஜி பதவியேற்ற நாட்களில் தலைநகர் பெய்ஜிங் உச்சபட்சக் கண்காணிப்பில் இருந்தது. ஒரு எதிர்க்குரல்கூட வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. பெய்ஜிங் நோக்கி வந்த வெளியூர்க்கார்கள் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு, கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டனர். எவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்திவிடக் கூடாது என்பதற்காக சாங்கன் அவென்யுவில் பொது இடங்களில் லைட்டர்கள், தீப்பெட்டிகள் பயன்பாடுகூட கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வலைதளங்களில், சங்கேத மொழியில் மறைமுகமாக அதிபரை யாரும் விமர்சித்துவிடுவார்களோ என்று அஞ்சி, அப்படி சாத்தியமுள்ள - ‘அனிமல் ஃபார்ம்’, ‘1984’ போன்ற நாவல் தலைப்புகள் உள்பட - 800 வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாதபடி தணிக்கை மேற்கொள்ளப்பட்டது இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் உச்சம்.
ரஷ்ய உளவுத் துறையான ‘கேஜிபி’யில் ஓர் உளவாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய புடினும் எதிர்க்குரல்களை ஒடுக்குவதில் சளைத்தவர் அல்ல. தன்னளவிலேயே கூடுமானவரை இணையப் பயன்பாட்டைத் தவிர்ப்பவர். ‘ஸ்மார்ட் போன் வைத்துக்கொள்வதில்லை’ என்பதைப் பகிரங்கமாக அறிவித்தவர் புடின். நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸீ நவால்னீக்கு இந்தத் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. புடின் பதவியேற்ற நாளில் அவருக்கு எதிராகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக அலெக்ஸீ நவால்னீயும் அவரது ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
சீனா, ரஷ்யா இரு நாடுகளிலுமே எதிர்க்கட்சிகளுக்கான இடம் வெவ்வேறு வகைகளில் தீய்க்கப்பட்டிருக்கிறது. ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டிருக்கிறது. கூடவே ஆளுங்கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் கழுத்து நெறிக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளுக்குப் பஞ்சமே இல்லை. அதிபருக்கு எதிரான எதுவும் கட்சிக்கும் ஆட்சிக்கும் நாட்டுக்கும் எதிரானது!
இவ்வளவையும் தாண்டி மக்களிடத்தில் இருவருக்கும் செல்வாக்கும் இருக்கிறது.
ஜி இந்த நூற்றாண்டை சீன நூற்றாண்டாக்குவோம் என்கிறார். உலகில் அமெரிக்காவுக்கு அடுத்த பொருளாதாரம், இணையான ராணுவத்தைக் கையில் வைத்திருக்கும் சீனாவை உலகின் பல்வேறு மூலைகளுக்கும் விரிக்கும் ஜியின் ‘பட்டுப்பாதைச் செயல்திட்டம்’ மாபெரும் சீனக் கனவின் புத்துயிர்ப்பாக சீனர்கள் மத்தியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் ரயில்வே, துறைமுகம், மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட அடித்தளக் கட்டுமானப் பணிகளில் இன்று சீனா செய்யும் முதலீடானது உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்காவுடன்கூட ஒப்பிட முடியாதது. டிஜிபூட்டியில் ராணுவத் தளத்தை அமைத்ததன் மூலம் முதல் முறையாக அந்நிய மண்ணிலும் சீனா கால் ஊன்றியதை அமெரிக்காவுடனான ஒப்பீட்டுப் பிரச்சாரத்துக்கு சீன அரசால் பயன்படுத்த முடிகிறது.
புடின் பழைய செல்வாக்கான ரஷ்யாவை மீட்டெடுப்போம் என்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்குப் பின் ரஷ்யாவின் கை இருப்பதாக வெளியான தகவல் உள்நாட்டில் புடினின் செல்வாக்கின் எல்லையைப் பல மடங்கு விரித்தது. சோவியத் சிதைவுக்குப் பிந்தைய நாடுகளை ஒன்றிணைத்து ரஷ்யாவை மையப்படுத்தி புடின் முன்னெடுத்துவரும் ‘யுரேஷிய ஒன்றியம்’ செயல்திட்டமும் ஐரோப்பாவில் ரஷ்ய நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் முதலீடுகளும் ரஷ்யர்களின் அகங்காரத்தைத் திருப்திப்படுத்துகிறது. ராணுவ நடவடிக்கை மூலம் உக்ரைனிலிருந்து க்ரிமியாவைப் பிரித்து ரஷ்யாவுடன் சேர்த்துக்கொண்டது, சிரியப் போருக்கு ரஷ்யப் படைகளை அனுப்பிவைத்தது இரண்டின் மூலம் மீண்டும் ரஷ்யா சர்வதேச ஆட்டத்தில் இறங்கியிருக்கிறது என்ற பிரச்சாரத்தில் வெற்றி பெற்றிருக்கிறது ரஷ்ய அரசு.
மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் புடின். தேவாலயங்களுக்குத் தொடர்ந்து செல்கிறார். மதச் சடங்குகள் - நம்பிக்கைகளுக்கு நெருக்கமானவராகக் காட்டிக்கொள்கிறார். ஊழல் எதிர்ப்பு பிம்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் ஜி ஜின்பிங். தனிமனித வழிபாட்டை இருவருமே திட்டமிட்டு வளர்க்கின்றனர். இருவரும் தொடர்ந்து உச்சரிக்கும் வார்த்தை வளர்ச்சி. இருவரும் பயன்படுத்தும் முக்கியமான ஆயுதம் தேசியவாதம். இரு நாடுகளிலுமே பொருளாதாரம் நிலைத்திருக்கிறது. ஏழை – பணக்காரர் இடையே பாரதூரமான வளர்ச்சி என்றாலும், பொதுவில் சாமானிய மக்களின் பொருளாதாரச் சூழல் மேம்பட்டிருக்கிறது. கேள்வி என்னவென்றால், சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பறிகொடுத்துதான் வளர்ச்சியைப் பெற முடியுமா?
வளர்ச்சியும் ஜனநாயகமும் எதிரெதிர் துருவங்கள் அல்ல. ஆசியாவோ அப்படிக் கற்பிதம் செய்துகொள்ளவே விரும்புவதாகத் தெரிகிறது. ஜனநாயக மதிப்பீடுகளில் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்காவுக்குக் கீழே இன்று சென்றுகொண்டிருக்கிறது ஆசியா. ஏற்கெனவே இங்குள்ள எந்தவொரு நாடும் முழு ஜனநாயக நாடு இல்லை. ஆசியாவின் மேம்பட்ட ஜனநாயகங்கள் என்று சொல்லப்படும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, தாய்வான் நான்குமே குறைபட்ட ஜனநாயகங்கள்தான் – பெருமளவில் தேர்தல் ஜனநாயகங்கள்.
ஆசிய நாடுகளிலுள்ள மேல்தட்டு வர்க்கத்தின் பெரும்பான்மையினர் ஜனநாயகத்தின் ஆதரவாளர்கள் அல்ல. சொல்லப்போனால் ஒற்றையாட்சிக்கும் யதேச்சதிகாரத்துக்குமான நியாயங்களைக் கற்பிக்கும் சுவிசேஷகர்கள் அவர்கள். தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய காலகட்டமானது மேலும் ஒரு புதிய போக்கை தோற்றுவித்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்துடன் எழும் கல்வி, பொருளாதார, நகர்மய வளர்ச்சியானது கூடவே அஜனநாயக சூழலையும் வளர்த்தெடுக்கிறது. அமைப்புக்கேற்ப கை – கால்களை அசமடக்கி வளரும் பயிற்சி மேலும் மேம்படுத்தப்பட்ட கல்வியாக்கப்பட்டு, பொருளாதார மேம்பாட்டுக்காக விழுமியங்களைத் தாரைவார்ப்பது இயல்பாகிவருகிறது. இலங்கையுடன் சிங்கப்பூரின் வளர்ச்சியும் ஜப்பானுடன் சீனாவின் வளர்ச்சியும் ஒப்பிடப்படுகையில் யதேச்சதிகாரத்தின் தலை மேலும் விரிகிறது.
இந்திய நிலத்தில் இன்று படரும் அரசியல் ரேகைகளில் நெளியும் ரஷ்ய, சீனக் கலவையின் துகள்கள் நம் பார்வைக்கு அப்பாற்பட்டவை இல்லை. பாரம்பரிய இந்திய உடலின் மரபணுக்களிலேயே அஜனநாயக நோய்க்கிருமி உட்கார்ந்திருக்கிறது. தற்செயலாக நிகழ்ந்துவிட்ட ஜனநாயக வரலாற்றில் தனக்கான தருணத்தை அது எப்போதும் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. எந்த நாட்டுக்கும் ஜனநாயகம் சாஸ்வதமாக எழுதித்தரப்படவில்லை!
- மே, 2019, ‘தி இந்து’
ஆழ்ந்த , அருமையான கட்டுரை சார் ! //இருவரும் தொடர்ந்து உச்சரிக்கும் வார்த்தை வளர்ச்சி. இருவரும் பயன்படுத்தும் முக்கியமான ஆயுதம் தேசியவாதம்// இந்த வரிகள் ஹிட்லர் மற்றும் முசோலினியை தான் நினைவூட்டுகின்றன. இவர்கள் மூலம் மூன்றாம் உலகப்போர் ஏற்படாமல் இருந்தால் சரி.
பதிலளிநீக்குNice sir.... Always focussing ur articles...
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை
பதிலளிநீக்கு