தூத்துக்குடி குரல்களின் அர்த்தம் என்ன?


குறைந்தது ஈராயிரம் ஆண்டுகள் வாணிப நகரம் தூத்துக்குடி. தமிழர்கள் நினைவு சார்ந்து தூத்துக்குடியின் வரலாற்றை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது காலகட்டத்தில், அது பண்டைத் தமிழ்நாட்டின் முத்து நகரமாக இருந்தது. நம் ஞாபகங்களின் நினைவடுக்குகளில் ஒரு தொன்மமாகப் பதிந்திருக்கும் அந்த முத்து நகரமானது, அரேபியர்கள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என்று உலகளாவிய ஒரு பெரும் வாணிப பட்டாளத்துடனான உறவில் திளைத்திருந்தது. தூத்துக்குடிக்கு அந்தப் பக்கத்திலுள்ள காயல்பட்டினம் போன்ற பாரசீகக் கலாச்சாரத்தின் மிச்சங்கள் தங்கிய ஊரும், ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் எச்சங்கள் நிறைந்த ஊரும் பண்டை தூத்துக்குடியின் வாணிப மரபின் எல்லை கடந்த வேர்களுக்கான அத்தாட்சிகள்.

இரண்டாவது காலகட்டத்தில், அது இந்திய சுதந்திரப் போராட்டக் குரல்களை எதிரொலிக்கும் எழுச்சி மிக்க சுதேசி நகரமாக உருமாற முனைந்தது. இங்கிருந்து இலங்கைக்குக் கப்பல்களை இயக்கியது ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’. பிரிட்டிஷாரின் வியாபார ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சிதம்பரனாரின் ‘சுதேசி நாவாய் சங்கம்’ இங்குதான் பிறந்தது. அவருடைய ‘எஸ் எஸ் காலியோ’, ‘எஸ் எஸ் லாவோ’ கப்பல்கள் இங்கிருந்தே கொழும்புக்குப் புறப்பட்டன. தொழிற்சங்கம் எனும் சொல் சாமானியர்களின் புழக்கத்தில் வந்திராத நாட்டில் 1908-ல் பிரிட்டிஷாரின் ‘கோரல் நூற்பாலை’க்கு எதிராக ஊரே திரண்டு தொடர் வேலைநிறுத்தம் நடத்தி, தொழிலாளர் உரிமையை நிலைநாட்டிய நகரமும் இது. அந்தக் காலகட்டத்திய தூத்துக்குடியின் வாணிபச் செல்வாக்கை சொல்லும் சின்னங்கள் நகரின் பழைய துறைமுகம் பகுதியில் இந்தோ சார்சனிக் கட்டிடங்களாக நிற்கின்றன. கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் செழுமையை தூத்துக்குடிக்கு இந்தப் பக்கத்திலுள்ள மணப்பாடு கிராமத்துக்குச் சென்றால், தேவாலயங்கள், மாளிகை வீடுகள், ஸ்தூபிகளில் பார்க்கலாம்.

மூன்றாவது காலகட்டத்தில், இன்று அது பின்காலனிய யுகத்தின் தொழில் நிறுவனங்களுடைய வேட்டை நகரமாகி சிதைவை எதிர்கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய ஆட்சியாளர்கள் முன்னெடுத்த தொழில் கொள்கைக்கான பரிசோதனைக் களங்களில் ஒன்றாக தூத்துக்குடியையும் சொல்லலாம். அனல் மின் நிலையங்கள், தொழிற்பேட்டைகள், தனியார் – அரசு கூட்டுறவில் உருவாக்கப்பட்ட முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்பிக்’, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கான முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸ்டெர்லைட்’, உள்ளூரிலிருந்து சர்வதேசம் நோக்கி விரியும் ‘விவி மினரல்ஸ்’ என்று இந்திய அரசுக்கு சாத்தியப்பட்ட எல்லாத் தொழில் கற்பனை வகைமையிலும் தொழிற்சாலைகளை உள்வாங்கி அது நிற்கிறது.

இங்கு ஒரு கேள்வி. இன்று நாம் பார்க்கும் தூத்துக்குடிதான் ஒரு வாணிப நகரம் என்றால், முந்தைய இரு காலகட்டத்திய தூத்துக்குடியை என்ன பெயரிட்டு அழைப்பது?



தூத்துக்குடி மக்களின் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிரான 100 நாள் போராட்டம், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, 13 உயிர் பலி, கலவரம், நூற்றுக்கும் மேற்பட்டோரின் காயம், அங்கு நிலவிய கொந்தளிப்பான சூழல் இவ்வளவையும் வரலாற்றுப் பின்னணியில் பார்ப்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். வரலாறு நெடுகிலும் தொழில் வளர்ச்சியோடு இயல்பாகத் தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கும் நகரமாக அது இருந்திருக்கிறது. பல இனங்கள், கலாச்சாரங்களுடன் ஊடாடும் நகரமாக அது இருந்திருக்கிறது. அதேசமயம், சுரண்டல், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டபடியும் நிற்கிறது.

எவர் ஒருவரும் கற்காலத்துக்குத் திரும்ப கனவு காண்பதில்லை. தூத்துக்குடி மக்கள் இன்று ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிராக எழுப்பும் குரல் உண்மையில் ஒரு ஆலைக்கு எதிரானது அல்ல. அது தொழில் சூழலுக்கு எதிரானதும் அல்ல. ஒரு ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் எப்படி லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள்? எல்லா அச்சுறுத்தல்களையும் தாண்டி எது மக்களை வீதியில் கொண்டுவந்து நிறுத்துகிறது?

தூத்துக்குடியின் பல நூற்றாண்டு அடையாளமாக இருந்த முத்துக்குளியல் இன்று தூத்துக்குடியில் கிடையாது. தூத்துக்குடி - ராமேஸ்வரம் கடல் பகுதியை ‘இந்தியக் கடல் உயிர்க்கோளக் காப்பகப் பகுதி’ என்று வரையறுக்கிறது அரசு. இந்திய அளவில் மட்டும் அல்லாது, சர்வதேச அளவிலும் உயிரோட்டமான பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் மண்டலம் இது. சுரப்புன்னைக்காடுகள், காயல்கள், கடல் கோரைப்படுகைகள், பவளப்பாறைகள், எங்குமில்லாக் கடல் தாவரங்கள் எனப் பல்லுயிர்ச்சூழல் நிறைந்த இந்தப் பகுதி இன்று பெரும் சீரழிவைச் சந்தித்திருக்கிறது. தூத்துக்குடி முத்தில்லா நகரமாக மாறியிருப்பது அதன் வெளிப்பாடுகளில் ஒன்று. முத்துச்சிப்பிகள், கடல் வெள்ளரிகள், சங்குப்பூக்கள் யாவும் அருகிவிட்டன. கடல் சூழல் சிதைவிலிருந்து நிலச் சூழல் சிதைவை யூகித்துக்கொள்ளலாம். நிலமும் நீரும் காற்றும் நஞ்சாகிவிட்ட நிலையிலேயே வீதியில் இறங்குகிறார்கள் மக்கள்.

நம்முடைய அரசானது ‘வளர்ச்சி’யின் பெயரால், கடந்த காலங்களில் அங்கு நூற்றுக்கணக்கான தொழிலகங்களைக் கொண்டுவந்தது. அவை உருவாக்கிய தொழில் கலாச்சாரம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறதா என்றால், மேம்படுத்தியிருக்கிறது; ஆனால், சூழலை அதற்கான விலையாகச் சுரண்டியிருக்கிறது. தங்களுடைய வாழ்வாதாரம் நாசப்படுத்தப்பட்டிருப்பதை இன்று மக்கள் உணர்கிறார்கள். விளைவாகவே இதுநாள்வரை டாம்பீகமாக உச்சரிக்கப்பட்ட ‘வளர்ச்சி’யை அவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறார்கள்.

இது மரபார்ந்த தொழில் கொள்கைக்கும் நவீன தொழில் கொள்கைக்கும் இடையிலான முரண்களின் வெடிப்பு மட்டும் அல்ல. மரபையும் நவீனத்தையும் சேர்த்து அனுசரிக்க வேண்டிய தேவைக்கான நிர்ப்பந்தம். நவீனத்தைக் கடக்கும் பார்வை நமக்குத் தேவைப்படுகிறது. இன்று தூத்துக்குடியில் நிர்வகிக்கப்படும் எந்தத் தொழிற்சாலையையேனும் சூழலை நாசப்படுத்தும் இதே கட்டமைப்புடன், பிரிட்டனிலோ, ஜெர்மனியிலோ நடத்த முடியுமா என்று ‘நவீன வளர்ச்சிக்கான வழக்கறிஞர்கள்’ தங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஒரு ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூடுவதால் மட்டுமே இந்தப் பிரச்சினையை நாம் முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது. உற்பத்திப் பெருக்கத்துக்கும் நுகர்வுப் பெருக்கத்துக்கும் ‘வளர்ச்சி’ என்று பெயரிட்டு அதுதான் முன்னேற்றம் என நம்பும் மூடத்தனத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டியிருக்கிறது. மாற்று வளர்ச்சிக்கான பார்வை அல்ல; வளர்ச்சிக்கான மாற்றுப் பார்வை நமக்கு தேவைப்படுகிறது. இயற்கையைச் சுரண்டாத, மரபார்ந்த சமூகங்களின் பன்மைக் கலாச்சாரத்தை சிதைக்காத புதிய தொழில் கலாச்சாரத்தின் அவசியத்தை நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. கூடங்குளம் அதையே வெளிப்படுத்தியது. நெடுவாசல் அதையே வெளிப்படுத்தியது. தூத்துக்குடியும் அதையே வெளிப்படுத்துகிறது. தூத்துக்குடிக்காரர்களின் குரல் தூத்துக்குடிக்கானது மட்டும் அல்ல!


3 கருத்துகள்: