ரஜினி அரசியலின் பேராபத்து


அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களைப் பற்றி அதில் ஒரு குறிப்பு இருந்தது. அவர்கள் ஏன் கைதுசெய்யப்பட்டார்கள்; எதற்காக இந்தக் கைதுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன என்ற விவரணை அதில் இல்லை. என்ன காரணமாக இருக்கும் என்று இணையத்தில் துழாவியபோது கிடைத்த செய்திகள் ஆச்சர்யமூட்டின.

ஃபிலெடெல்பியா நகரிலுள்ள ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடைக்கு 21 வயதான ராஷன் நெல்சன், டாண்டே ராபின்சன் இருவரும் செல்கின்றனர். இருவரும் கறுப்பர்கள். அங்கே அவர்களுடைய இன்னொரு நண்பர் ஆண்ட்ரூவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த இளைஞர்களில் ஒருவர் கழிப்பறைக்குச் செல்ல முனையும்போது அனுமதி மறுக்கிறார் கடையின் மேலாளர் - வெள்ளையர். சாப்பிடுவதாக இருந்தால் அவர்கள் அங்கே இருக்கலாம் அல்லது உடனே வெளியேற வேண்டும் என்கிறார். பேச்சு போய்க்கொண்டிருக்கும்போதே போலீஸாரை அழைக்கிறார். போலீஸார் அங்கு வந்த வேகத்தில் இரு இளைஞர்களையும் கைதுசெய்து விலங்கு மாட்டுகிறார்கள். இதற்குள் அவர்கள் சந்திக்கவிருந்த நண்பர் – அவர் வெள்ளையர் - வந்து சேர்கிறார். இவையெல்லாமும் சில நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து நிகழ்ந்துவிடுகின்றன.

அமெரிக்காவின் பெரும் சங்கிலி உணவகங்களில் ஒன்றும், உலகெங்கும் 27,500-க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்ட ‘ஸ்டார்பக்ஸ்’ விதிகளின்படி, சாப்பிட வருபவர்கள்தான் அதன் காபி கடைகளுக்கு வர வேண்டும் என்பதில்லை. சும்மா கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டிருந்தும் செல்லலாம். இந்த இளைஞர்கள் இருவரும் ஒரு வியாபாரப் பேச்சின் நிமித்தம் அங்கு வந்திருந்திருக்கிறார்கள். பேசிவிட்டுக் கலையலாம் என்றிருந்தார்களா அல்லது நண்பர் வந்ததும் சாப்பிடலாம் என்றிருந்தார்களா என்பது தெரியாது. அங்கு வழக்கமாகச் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் என்பது பின்பு தெரியவந்திருக்கிறது. போலீஸார் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வந்த வேகத்தில் அவர்கள் இளைஞர்களுக்கு விலங்கிட்டதை மெலிசா டிபினோ என்ற வெள்ளைப் பெண்மணி படம் எடுக்கிறார். தார்மிக உணர்வோடு அதைப் பகிர்கிறார்.

சமூக வலைதளங்களில் இந்தக் காணொலி பரவுகிறது. பார்ப்பவர்கள் கொந்தளிக்கிறார்கள். கறுப்பர் – வெள்ளையர் வரையறைகளைத் தாண்டி ‘ஸ்டார்பக்ஸ்’ கடைகளில் கூடி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். விளைவாக ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் ஜான்சன் மன்னிப்பு கேட்கிறார். “இனி கடைக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் கழிப்பறையைப் பயன் படுத்திக்கொள்ளலாம்” என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கிறார். கூடவே, வரும் மே 29 அன்று அமெரிக்கா முழுவதுமுள்ள கடைகள் மூடப்பட்டு, நிறபேதம் உட்பட எந்தப் பாரபட்சத்தையும் தங்களை அறியாமலும்கூட வாடிக்கையாளர்களிடம் வெளிப்படுத்தி விடாமல் இருக்க ‘ஸ்டார்பக்ஸ்’ ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கிறார். காவல் துறை தனியே விளக்கம் அளித்திருக்கிறது.

இந்தியாவின் சாதி பேதத்துடன் அமெரிக்காவின் நிற பேதத்தை ஒப்பிடலாம் என்றாலும், பாகுபாட்டுக்கு எதிரான குடிமைச் சமூகத்தின் இப்படியான எதிர்வினைகளையெல்லாம் இங்கே எப்போது பார்க்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. ஜனநாயகம் என்பது இதெல்லாமும்தான். ஆனால், வெறும் தேர்தலை மட்டும், அதிலும் தனிப் பெரும்பான்மையினரின் முடிவுகளை மட்டும் ஜனநாயகமாக நம்முடைய ஜனநாயகத்தைச் சுருக்கிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகளின் வழியாகவே அரசியல் மாற்றங்கள் நடந்தேற வேண்டும் என்றாலும், வெளியே அதற்கான உத்வேகம் குடிமைச் சமூகத்திலிருந்தும் வர வேண்டும். குடிமைச் சமூகம் குரல் எழுப்பு வதற்கான துணிச்சலை அரசியல் கட்சிகளின் செயல் பாடுகள் தர வேண்டும்.

குடிமைச் சமூகமானது அரசியலமைப்பு கொடுத்த சட்டகத்துக்குள் செயல்படுவது. அரசியல் கட்சிகளோ அந்தச் சட்ட எல்லையைப் பொருட்படுத்தாமல் வெகுமக்களின் நலன்களுக்கேற்ப அந்த எல்லையை உடைக்கவோ மீறவோ விஸ்தரிக்கவோ கூடியன. சட்டத்தை உருவாக்கும் / மாற்றும் அதிகாரம் அவற்றிடமே இருக்கிறது. ஒரு நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்றால், இந்த இரு தரப்புகள் இடையிலான பரிவர்த்தனையும் ஊடாட்டமும் தொடர்ந்து சரிவர நடக்க வேண்டும்.

இந்தியாவில் அரசியல் சமூகத்திடம் இன்று ஒரு பண்பு மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகளே முக்கியம் என்றாகிவிட்ட கட்சிகள் தன்னை அரசியல் கட்சிகளின் பண்பிலிருந்து குடிமைச் சமூகத்தின் பண்பு நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றன. அதாவது, அமைப்பை விஸ்தரிப்பதற்குப் பதிலாக, அமைப்புக்குள் நின்று யோசிக்க அவை பழகுகின்றன. விளைவாகவே சாமானிய மக்களின் நம்பிக்கையை அவை இழக்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் நடந்த முக்கியமான போராட்டங்களை எடுத்துக்கொள்வோம். மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டம், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம், காவிரிப் படுகையில் எரிவாயுத் திட்டங்கள் கொண்டுவரப்படுவதற்கு எதிரான போராட்டம். இவை மூன்றையுமே மக்கள் தன்னெழுச்சியாக நடத்தினார்கள். பெண்கள் முன்னின்றார்கள். தமிழ்நாட்டில் அரசே மதுக்கடைகளை நடத்தும் நிலையில் மதுவிலக்குக்கானப் போராட்டத்தைக் கடுமையான முகத்துடன் காவல் துறை எதிர்கொண்டது. தடியடித் தாக்குதல் எதையும் பொருட்படுத்தாமல் பல பெண்கள் மதுக் கடைகளுக்குச் சென்று மது பாட்டில்களை உடைத்துப்போடுவதையும் கடைகளுக்குப் பூட்டுப்போடுவதையும் பல இடங்களில் நானே பார்த்திருக்கிறேன்.

இந்தப் போராட்டங்கள் மூன்றிலுமே மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எதிர்க்கட்சிகள் எடுத்தன. ஆனால், போராட்டத்தைத் தங்களுடையதாக்கிக்கொள்ள அவர்களால் முடியவில்லை. ஏன்? பல கட்சித் தலைவர் களுக்கே இந்தக் கேள்வி இருக்கிறது. போராட்டத்தில் ஆதரவு தெரிவித்தாலும் மக்கள் ஏன் அரசியல்வாதிகளோடு கைகோக்க மறுக்கிறார்கள்?

கூடங்குளம் போராட்ட சமயம் மீனவர் ஒருவர் சொன்ன விஷயம் இங்கே பொருத்திப்பார்க்கக் கூடியது. “அதிமுக அரசாங்கம் மிருகத்தனமா எங்களைத் தாக்குது. பதிலுக்கு எங்களுக்கு திமுக ஆதரவு கொடுக்க வருது. இந்த ஆதரவு அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாடா, அணுசக்திக்கு எதிரான நிலைப்பாடா? இந்தச் சந்தேகம் எங்களுக்கு இருக்கு. நாளைக்கு திமுக ஆட்சிக்கு வந்தா அப்போ என்ன நிலைப்பாட்டை அது எடுக்கும்? இந்தச் சந்தேகம் எங்களுக்கு இருக்கு!”

உண்மைதான். அரசும் ஆளுங்கட்சியும் எந்தச் சட்டகத்துக்கு உட்பட்டு இன்று ஒரு திட்டத்தை முன்னெடுக்கின்றனவோ அதே சட்டகத்துக்கு உட்பட்டுதான் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தை முன்னெடுக்கின்றன. உதாரணமாக, மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே என்ன கொள்கை வேறுபாடு? நியூட்ரினோ திட்டத்தை அரசுத் திட்டம் என்கிற வகையில் மார்க்ஸிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. இதே திட்டத்தை டாடா முன்னெடுத்தால் இதே மார்க்ஸிஸ்ட் கட்சி அப்போது என்ன முடிவெடுக்கும்?

மக்களின் எதிர்ப்பு அது அரசுத் திட்டமா, தனியார் திட்டமா என்ற வியாக்கியானத்தில் இல்லை. தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாவதால் அவர்கள் எதிர்ப்புக் கொடி பிடிக்கிறார்கள். அவர்களுக்கு அரசும் சரி, டாடாவும் சரி; வெவ்வேறு வகைமை என்றாலும் இரண்டுமே நிறுவனங்கள். கத்தி எந்தப் பெயரில் இருந்தாலும் கத்தி என்றே அவர்கள் பார்க்கிறார்கள்.

இன்று மக்கள் எதிர்கொள்ளும் பல போராட்டங்களில் அரசியல் கட்சிகள் தங்களை இணைத்துக்கொண்டாலும், அந்த இணைப்பானது அவர்களுடைய உண்மையான ஈடுபாட்டின் அடிப்படையிலானது அல்ல என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது. அரசியல் கட்சிகளின் அடையாள நிமித்த ஆதரவு அல்லது எதிர்ப்பானது வெறும் தேர்தல் அனுகூலங்களுக்கானது என்பதை மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள்.

அது, மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டமோ, ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரான போராட்டமோ, சட்டம் என்ன சொல்கிறது என்பதை மக்கள் பொருட்படுத்தவில்லை. “சட்டம் என்னவாக இருந்தாலும், மக்கள் நலனுக்கேற்ப அது மாற்றப்பட வேண்டும்” என்கிறார்கள். நியாயமாக அரசியல் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு இது. நேர் எதிராக சட்ட வரையறைக்கு உட்பட்ட நியாயத்தையும் எதிர்ப்பையுமே அரசியல் கட்சிகள் பேசிக்கொண்டிருக்கின்றன. பிளவு நடக்கும் இடம் இது.

தேர்தல் வெற்றியையே பிரதானமாகக் கருதும் கட்சிகள் மக்களிடமிருந்து பிளவுபட்டுவிடுவதால், அரசியல் இன்னும் கூடுதலாகப் பணமயமாகிறது. மக்கள் யாரையெல்லாம் எதிர்க்கிறார்களோ அந்தந்த சக்திகளோடுதான் பணத்துக்காக கட்சிகள் கைகோக்க வேண்டியிருக்கிறது. ஆக, ‘மக்கள் பிரச்சினையா? அறிக்கைகள் விடு! ரொம்பப் பிரச்சினையா? ஒரு ஆர்ப்பாட்டம் நடத்து! தேர்தல் நெருங்கையில் மட்டும் களத்தில் இறங்கிக்கொள்ளலாம். முடிந்தது ஜனநாயகம்!’ என்பதாக ஜனநாயகம் மேலும் சுருங்குகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா இந்தப் போக்கை நன்கு வளர்த்தெடுத்தார். அவருக்குச் சாத்தியப்பட்ட ‘பிம்ப அரசியல்’ இதற்குப் பெரும் உதவியாக இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவருடைய இடத்தில் ரஜினி தொடங்குகிறார். ‘மக்கள் பிரச்சினைகளுக்காக நீங்கள் அடையாள நிமித்தப் போராட்டங்கள், பேரணிகள், கூட்டங்கள்கூட நடத்த வேண்டாம். அன்றாட அறிக்கைகள், பேட்டிகள்கூட தர வேண்டாம். நேரடியாக தேர்தல். அப்புறம் ஆட்சி’ என்ற வழிமுறையை உருவாக்க முனைகிறார் ரஜினி.

தன்னுடைய படங்களை ஓட்டுவதற்கான உத்திகளில் ஒன்றாக, ‘அரசியலுக்கு வருகிறேன், இதோ.. அதோ...’ என்று பூச்சாண்டி காட்டுவதைக் கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் செய்துவரும் ரஜினி, ஐந்து மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். “விரைவில் அரசியல் கட்சியை அறிவிப்பேன்” என்றவர் கட்சிக்கான முன்னோட்டமாக ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற பெயரில் இன்று நடத்திக்கொண்டிருப்பவை யாவும் மக்களைக் கொச்சைப்படுத்துபவை. பிம்ப அரசியலின் வழி எதேச்சாதிகாரத்துக்கு அழைத்துச் செல்பவை.

முதலாவது, யார் எதிர்த்தரப்பு என்பதையே சொல்லாமல் காற்றில் வாள் சுழற்றுவது. இது ஒரு ஆபாசம். மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு பறித்துவருவதே தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய அரசியல் பிரச்சினை. பிரச்சினைகளின் சூத்திரதாரி பாஜக - பிரதமர் மோடி. அடுத்து அதிமுக - முதல்வர் பழனிசாமி. இந்த இருவரையும் விமர்சித்து, இதுவரை அவர்களுடைய பெயர்களைக்கூட உச்சரிக்கவில்லை ரஜினி. பின் யாரை எதிர்த்து தமிழ்நாட்டைக் காக்கப்போகிறேன் என்று கூட்டத்துக்குக் கூட்டம் சவடால் விடுகிறார்? கலைஞர்கள் துணிச்சல்காரர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கோழைகள் அரசியலுக்கு வரக் கூடாது.

இரண்டாவது, போராட்டங்களை சமூக விரோதமாகச் சித்தரிக்கும் ஒரு தொனி ரஜினியிடம் தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது. மனித குலம் இதுவரை அடைந்திருக்கும் சமத்துவ உரிமைகள் அனைத்துமே போராட்டங்களின் விளைவுதான் – யார் யாரோ செய்திருக்கும் தியாகம்தான். மக்களுக்கு எதிரான அரசவாதியாகவே (statist) ரஜினி வெளிப்படுகிறார்.

காவிரிப் போராட்டங்கள் சமயத்தில் ரஜினி தெரிவித்த கருத்து நம் கவனத்துக்குரியது. இந்தப் போராட்டங்களின்போது, போராட்டக்காரர் ஒருவர் போலீஸ்காரரைத் தாக்கினார். அந்தத் தாக்குதல் கடுமையான கண்டனத்துக்குரியது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அது ஒன்றையே காரணமாக்கி, “உள்ளதிலேயே பெரிய வன்முறை சீருடையில் இருக்கும் ஒரு காவலரைத் தாக்குவதுதான்!” என்ற ரஜினியின் கருத்து சாமானிய மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வன்முறையைச் சிறுமைப்படுத்துவது. ஆபத்தானது. சொல்லப்போனால், போராட்ட நாளன்று கிரிக்கெட் போட்டிக்குச் சென்ற ரசிகர்களை ஆர்பாட்டக்காரர்கள் சிலர் தாக்கினார்கள். அது வன்முறை இல்லையா?

இந்தச் சம்பவங்களுக்கெல்லாம் ஒரு மாதம் முன்புகூட அடுத்தடுத்து பொது ஜனங்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டதற்காகக் கடுமையான கண்டனங்களைச் சந்தித்தது தமிழகக் காவல் துறை. வாகனச் சோதனையின்போது நிறுத்தாமல் சென்றார் என்பதற்காக சாலையில் சென்ற மோட்டார் சைக்கிளை ஒரு காவலர் உதைத்தபோது தடுமாறி விழுந்த அந்தப் பெண் இறந்தார். இந்த வன்முறை மோசம் இல்லையா? அப்போதெல்லாம் ரஜினி என்ன செய்துகொண்டிருந்தார்?

வன்முறையை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுவது அபத்தம் என்றாலும் அரச வன்முறைக்கு ஈடாக எதையும் கூறிட முடியாது. “அரசு என்பதே ஆன்மாவற்ற இயந்திரம். வன்முறையை விட்டுவிட்டு அரசால் இயங்கவே முடியாது. ஏனெனில், அதன் இருப்புக்கு ஆதாரமே வன்முறைதான்” என்ற காந்தியின் கூற்றை இங்கே நினைவுக்குக் கொண்டுவந்தால், அரசுக்கு எதிரான வன்முறைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்பதை உணர்ந்துவிடலாம். நீதிமன்றக் காவலிலேயே வருஷத்துக்கு 900 பேர் இறக்கும் ஒரு நாட்டில் உட்கார்ந்துகொண்டு யாருடைய நியாயத்தைப் பேச ரஜினி அரசியலுக்கு வருகிறார்?

மூன்றாவது, இது ஒன்றும் ரகசியம் இல்லை. ரஜினியின் அரசியல் முன்மாதிரி லீ குவான் யூ. வளர்ச்சியின் பெயரால் எதேச்சாதிகாரத்தை உருவாக்குவதற்கான சர்வதேச முன்மாதிரி. ஜனநாயகம் நீக்கப்பட்ட சிங்கப்பூரின் தந்தை. திரைத்துறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது, ‘‘வேலைநிறுத்தம் எனக்குப் பிடிக்காத வார்த்தை’’ என்று சொன்னவர்தான் ரஜினி. தன்னுடைய அமைப்பில், ‘எவரும் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது, பொதுவெளியில் பேசக் கூடாது’ என்று அறிவித்திருப்பதன் மூலம் தன்னை நம்பி வருபவர்களிடம் ஏற்கெனவே இருக்கும் சொந்தக் குரலையும் பறிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ரஜினி.

ஒரு குடிமகருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துரிமைக்கு எதிரானது இது. எந்த ஒரு அரசியல் அல்லது பொது அமைப்பும் அதன் தலைமைக்கு மட்டுமல்ல; தொண்டர்களுக்குமானது. கட்சிப் பெயரை அறிவிப்பதற்கு முன்பே தொண்டர்களின் குரலை முடக்கிவிட்டு, இப்போதே வாக்குச்சாவடிகள்தோறும் உறுப்பினர்கள் சேர்ப்பு, உறுப்பினர்கள் சேர்ப்புக்கேற்ப குழு அமைப்பு என்று அவர்களை வேலை வாங்க ஆரம்பித்திருப்பதன் மூலம் ஒரு மக்கள் தலைவராக அல்ல; கணக்கார்த்த ஓட்டு வியாபாரியாகவே ரஜினி வெளிப்படுகிறார்.

அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் வரவேற்புக்குரியவர்கள். அதிலும் நட்சத்திரங்கள் அரசியலுக்கு வரும்போது கூடவே ஒரு புதுப் பட்டாளத்தையும் அரசியலரங்குக்குக் கூட்டிக்கொண்டு வருகிறார்கள் என்பதால் கூடுதல் வரவேற்புக்குரியவர்கள் ஆகிறார்கள். அதுவரை எந்தக் கட்சியும் சாராத மக்களின் ஒரு பகுதியினர் அரசியல்மயப்படவும், ஜனநாயகத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்பதே இந்த வரவேற்புக்கான அடிப்படை. மேடைக்கு மேடை “உங்கள் குடும்பத்தைப் பாருங்கள்” என்று சமூகத்துக்கு உபதேசிப்பதன் மூலம் அந்த வரவேற்புக்கும் பொருத்தமானவர் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் ரஜினி.

நவீன வாழ்க்கையானது ஏற்கெனவே அவரவர் குடும்பங்களைத் தாண்டி சிந்திக்க முடியாத சுயநலச் சிறையிலேயே சமூகத்தின் பெரும்பான்மையினரை அடைத்துவைத்திருக்கிறது. அரசியல்மயப்படுத்தலில் மிக அடிப்படையான பணி மனிதனை இப்படியான சுயநலச் சிறையிலிருந்து விடுவிப்பதும், சமூகத்தை நோக்கி அவனுடைய அக்கறைகளைத் திருப்புவதும்தான். வீட்டிலிருந்து வீதியில் இறங்கும் ஒருவனை மீண்டும் மீண்டும் ‘வீட்டைக் கவனி’ என்று திருப்புவதில் என்ன பொது நலன் இருக்கிறது?

யாவும் அரசியலற்றதன்மையின் வெளிப்பாடுகள். எதேச்சாதிகாரத்துக்கான தீர்க்கமான அறைக்கூவல்கள். ஏற்கெனவே தேர்தலுக்கு மட்டுமானதாகச் சுருங்கி, மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்தின் கழுத்தில் மேலும் ஒரு விரலாகவே ரஜினியின் கை பதியும் என்று தோன்றுகிறது!

- மே 2018, ‘தி இந்து’

14 கருத்துகள்:

  1. "ரஜினி அரசியலின் பேராபத்து" எனும் தலைப்பு தீரமிக்கதாக மக்களை எச்சரிப்பதாக அமைந்துள்ளது வரவேற்க்கக்கூடியது, பாராட்டுக்குரியது! ரஜினியை மட்டுமல்ல, இவ்வாறு கமல் அரசியலின் பேராபத்தையும், எல்லா மக்கள் விரோத கட்சிகளையும் மக்களுக்கு இனம் காட்டுவதுடன், முக்கியமாக, ஜனநாயகத்தை, மக்களாட்சியைக் காப்பாற்றுவதன் அவசர அவசியத்தையும் வெகுமக்களுக்கு எடுத்துச் சொல்வீர்கள் எனில் அது பெரும் சேவையாக அமையும். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தத்துவமோ,சித்தாந்தமோ இன்றி பிரபலம் என்ற ஒற்றை ஆபத்தின் துணைகொண்டு களமாட நினைப்பது தற்கொலைகுச் சமம். ரஜினியை தூக்கி பிடிக்கும் சக்திகளை பார்க்கும் போது உள்ளூர் பயமும் ஜனநாயகத்தின் மீதான கவலையும் தொற்றிக் கொள்கிறது........

    பதிலளிநீக்கு
  3. சரி கிரிக்கெட் ரசிகர்களையும், காவலரை அடித்த கட்சியினர் பற்றி எத்தனை பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்தன ? எத்தனை பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தார்கள் ? ஒருவருமே இல்லை. இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் ரஜினி ஒருவராவுது மக்களுக்காக குரல்கொடுத்தாரே என்று சந்தோசப்படுகிறோம்.

    ரோடு போட்டால் கொலை செய்வேன் என்பது சமஸ் போன்றவர்களுக்கு போராட்டமாக தெரியலாம் ஆனால் சாதாரண மக்களுக்கு அது ஒரு வன்முறையாளனின் பேச்சாகவே தெரிகிறது.

    தற்போது தமிழகத்தின் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்டது. அவர்கள் விடுதலை புலிகளிடம் பணம் வாங்கி கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு எதிராக பேசாமல் இருக்கிறார்களோ என்று சந்தேகம் வலுவாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. பத்திரிகையாளர்களின் இந்த மௌனம் கண்டிப்பாக நாளை தமிழகத்தை பெரும் அழிவில் தள்ள போகிறது... தமிழகத்தில் இன்னொரு காஷ்மீர் அல்லது ஈழம் உருவாக்க அனைத்து தேசவிரோத சக்திகளும் போராட்டம் என்ற பெயரில் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றன அதன் ஒரு வெளிப்பாடு தான் காவலரை அடித்ததும், காவலர் ரோந்து வாகனத்தின் மீது கல்லெறிந்ததும்.

    நாளை தமிழகத்தில் தீவிரவாதம் வளர்ந்தால் எப்படி சீமான் போன்ற அரசியல்வாதிகள் காரணமோ அதற்கு சற்றும் குறையாமல் பத்திரிகையாளர்களும் காரணமாக இருப்பார்கள்.

    இலங்கையில் நடந்த அழிவை பார்த்தும் இனவெறியை பத்திரிகையாளர்கள் ஆதரித்து கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் ஏன் தமிழர்களை அதே அழிவு இனவெறி பாதையில் அழைத்து செல்ல பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினியும் மத்திய அரசு தமிழகத்தில் திணிக்கும் அழிவுத்திட்டங்களுக்கு துணை போகும் வகையிலேயே கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்.

      நீக்கு
  5. எல்லா விஷயத்திலும் எல்லோருக்கும் இந்த கட்டுரை ஆசிரியரின் கருத்தே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. தமிழ் இந்துவில் பல முக்கியமான விஷயங்க்கள் கண்டும் காணாமல் போவது இவருடைய அணுகுமுறையானால் ரஜினியின் அணுகுமுறையை அவர் மேற்கொள்ள முழு சுதந்திரம் உண்டு. இது சித்தாந்தத்தை தாண்டி தனிப்பட்ட கழ்ப்புடன் எழுதப்பட்ட கட்டுரையாகவே தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  6. என்ன என்ன பேராபத்தா?!! என்னப்பா ஒளறீக் கொட்டுறீங்க?

    That guy who beat up the police is alive because he lives in India. He would have been killed (shot dead) by the cops if he beat up a police in USA. Self defense, the cop will kill and defend his act. It is as simple as that.

    You should not beat up police. He was caught red-handed by the video camera. There is nothing wrong in condemning such a brutal act! Only idiots can not understand this. That cop, Kamaraj has been charged for his misbehavior right??. First of all, if a police asked you to STOP, you should stop. Driving away is WRONG. He victimized his pregnant wife and now blaming others??!!. Because of his irresponsible act that poor woman got killed. Kamaraj certainly should be brought under law. When a cop asked your to stop, stop!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. As per the law a minor can rape and kill a innocent girl and will be a free bird after 18.. As per the law a guy who is holding mental disorder certificate can kill anyone then join mental hospital for 6 months and get released..

      உங்க சட்டத்த தூக்கி குப்பைல போடுங்க சார்

      நீக்கு
  7. முட்டாள்கலுக்கு எதிர் ஆன தங்கள் போர்க்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. சமஸ் உங்கள் மீது மதிப்பு இருந்தது ஆனால், இவ்வளோ கேவலமான கட்டுரையை எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

    ஒரு வெகுஜன ஊடகத்தை உங்களின் தனிப்பட்ட சுய வெறுப்புக்கு பயன்படுத்தி இருக்கிறீர்கள் அல்லது தமிழ் இந்து நெருக்கடிக்கு இணங்கி இருக்கிறீர்கள்.

    இக்கட்டுரை ரஜினியை எதிர்ப்பவர்களுக்கு இனிப்பாக இருக்கும், உங்களின் தனிப்பட்ட வன்மத்தை இதன் மூலம் தீர்த்துக்கொள்ள உதவி இருக்கும் ஆனால், பொதுமக்களை கவர்ந்து இருக்கும் என்று நான் கருதவில்லை.

    ரஜினி விமர்சிக்கப்படக்கூடாதவர் அல்ல ஆனால், விமர்சனத்தில் நேர்மையுடன் இருங்கள்.

    ஆனால், உங்களை போன்ற பொய் பிரச்சாரங்களை மக்களிடையே திணிப்பவர்கள் கேவலப்படுவதற்காகவது ரஜினி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    நல்ல சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள். இக்கட்டுரை எழுதியதற்காக என்றாவது ஒருநாள் வருத்தப்படுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. திராவிட சித்தாந்த அரசியல் வியாதிகள் ரஜினியை கண்டு அச்சமுற்று இருக்கின்றனர் என்பது , அவர்களது (மறைமுக) ஆதரவாளர் சமஸ் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. ரஜினி என்ன சொன்னார், முதல் உன் குடும்பம் , உன் தாய் தந்தையை கவனி என்றார். இது சமஸ்சுக்கு ஏன் அச்சத்தை தர வேண்டும்? இன்று களத்தில் தினம் ஒரு போராட்டம் நடக்கிறது. வேலை இருப்பவர் எவரும் எப்படி தினமும் இவற்றில் பங்கு பெற முடியும்? தனது மகன் குடும்பத்தை கவனிக்காமல் இருப்பதை எந்த தந்தை ஏற்பார்? இதை கண்டிக்கும் சமஸ், தனது இந்து நாளிதழ் வேலையை விட்டு விட்டு எதனை போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றார் ? இவரது கவலை எல்லாம், திராவிட கட்சிகளுக்கு மாறாக, வலது சாரி சிந்தனையுடன் ஒரு ஆட்சி வந்த விடக்கூடாது என்பது தான்? ஆனால் அது நடந்தே தீரும். நடைபெறும் காண்பீர் உலகீர், இது நான் சொல்லும் வார்த்தை என்று எண்ணிடல் வேண்டா...

    பதிலளிநீக்கு
  10. ரஜினியின் வார்த்தைகளால் ஒரு முக்கிய விஷயம் expose ஆகி இருக்கிறது, தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வந்த பிரிவினைவாத, இனவெறி, வன்முறையை தூண்டும் பிரச்சாரங்களை அனைத்து பத்திரிகைகளும் ஊடகங்களும் கண்டுகொள்ளாமல் இருந்தன (இதன் ஆபத்தை பத்திரிகையாளர்கள் மூடி மறைக்கவே பார்த்தார்கள்). இப்படியே எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று தமிழகம் சென்றால் தீவிரவாதம் வளர்ந்து கடைசியில் அழிவு பாதையில் தான் போகும் என்ற யதார்த்தத்தை ஊடகங்கள் மறைத்து விட்டு அனைத்து போராட்டங்களையும் ஆதரித்து வந்தன. மெரினாவில் வன்முறை நடந்தால் காவல்துறை மீது பழிபோட்டு, தூத்துக்குடியில் வன்முறை நடந்தால் காவல்துறை மீது பழிபோடு, நெடுவாசலில் வன்முறை நடந்தால் காவல்துறை மீது பழியை போடு என்ற நேர்மையற்ற சிந்தனை தான் அனைத்து மட்டத்திலும் இருந்தது, ரஜினியின் வார்த்தைகளால் இவை அனைத்தும் இப்போது expose ஆகியிருக்கிறது. தமிழக பத்திரிகையாளர்கள் மக்களின் நலனை மறந்து விட்டு, இனவாத பாதையில் செல்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது... ஜனநாயகத்தின் நான்கவுது தூண் ஊடகங்கள் அவர்கள் தங்கள் கடமையை நேர்மையாக செய்தால், தமிழகத்திற்கு இது போன்ற ஒரு நிலை வந்து இருக்காது.

    பதிலளிநீக்கு
  11. திரு.சமஸ் அவர்களுக்கு,

    தங்கள் கட்டுரையை ஒருபோதும் நான் குறை கூற போவதில்லை, இது தங்களது பார்வை அதை வெளிபடுத்துவது உங்கள் சுதந்திரம் சிலர் குறிப்பிடுவது போல் சட்டத்தை குப்பையில் எறிந்திட முடியாது. ஏனெனில் அந்த சட்டங்களே நமது குடிமக்களுக்கு குறிப்பாக சுதந்திரத்தை பாதுகாத்து வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றும்மாக சில கொடுமைகள் நடந்தாலும் அதற்க்கு காரணம் அரசியல் சாசனமோ சட்டங்களோ இல்லை. தனிமனிதனின் அதிகார திமிரும் பணபலமும் , சுயநலமும் தான்.ஞாயமான போராட்ட முன்னெடுப்புகள் தடம்மாற நிறைய வாய்ப்புகள் உள்ளன. நான் இதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட போது உணர்ந்தேன். தாங்களும் அதை அறிவீர்கள் என அறிவேன். பத்ரிக்கைகளின் Corporate) சுயலாப நோக்கத்தை நான் அறிவேன் எனக்கே தனிப்பட்ட அனுபவம் உள்ளது. இந்த கொடுமையான துப்பாக்கிசூடு நடந்ததால் இந்த போராட்டத்தை தலைப்பு பக்கத்தில் தமிழ் பத்ரிக்கைகள் இந்தியா முழுவதும் வெளியிட்டன இல்லையேல் கடைசி பக்கம் போயிருக்கும்.

    பதிலளிநீக்கு