இந்தியாவுக்குத் தேவை அதிகாரப்பரவலாக்கல் சிகிச்சை



அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

ஒரு பேரிடரை எதிர்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் பெரிய படிப்பினை, ‘உண்மையில் நாம் யாராக, என்னவாக இருக்கிறோம்?’ என்பதை நாமே புரிந்துகொள்வதுதான். நம்முடைய எல்லா பலங்கள், பலவீனங்களையும் ஒரு பேரிடர் அம்பலமாக்கிவிடுகிறது. கரோனா கிருமிக்காக ஒட்டுமொத்த நாடும் போராடிவரும் இந்நாட்களில், சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்த நாட்டைப் பீடித்திருக்கும் மிக மோசமான ஒரு கிருமி நம் கவனத்தைக் கோருகிறது - அதிகாரக்குவிப்பு; இனியேனும் அதற்கு எதிரான சிகிச்சையை நாம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.

உலகம் முழுக்க கரோனா பரவியிருப்பதாலேயே உலகத்தின் ஒவ்வொரு நாடும் அதை எப்படி எதிர்கொள்கின்றன என்கிற அணுகுமுறை வேறுபாட்டைக்  காணும் அசாதாரணமான சந்தர்ப்பம் இன்று நமக்கு வாய்த்திருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை ஒரு உத்தியாகக் கையில் எடுத்தன. ஆயினும், ஒவ்வொரு நாட்டிலும் ஊரடங்கும்கூட அந்தந்த நாட்டின் இயல்புக்கேற்ற பண்பையே வெளிப்படுத்துகிறது. சீனா மிகக் கடுமையான கண்காணிப்பு வளையத்தைத் தன் நாட்டு ஊரடங்குக்கு அணிவித்தது; முற்றிலுமாக மக்களின் எல்லா வெளிச் செயல்பாடுகளையும் முடக்கியது. மக்கள் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்லிவிட்டு அவர்களுடைய பெரும்பாலான செயல்பாடுகளை அனுமதித்தது ஸ்வீடன். நாம் எதையெல்லாம் அத்தியாவசியமாகக் கருதுகிறோம்? நாட்டுக்கு நாடு இதுவும் வேறுபட்டது. இத்தாலியில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க அனுமதிக்கப்பட்ட கடைகளின் பட்டியலில் புத்தகக் கடைகளும் இருந்தன; இத்தாலியர்களுக்குப் புத்தகங்களும் அத்தியாவசியம். அமெரிக்காவில், ‘ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்’ என்று இந்த ஊரடங்குக் காலத்திலும் போராட்டம் நடத்த முடிகிறது. அமெரிக்கர்களுக்குப் போராட்ட உரிமையும் அத்தியாவசியம். நாம் நிறைய உள்நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.

நம்முடைய மீளாய்வை இந்த ஊரடங்கிலிருந்தே தொடங்குவோம். இன்றைக்கு நாட்டிலேயே அதிகமாக கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது மஹாராஷ்டிர மாநிலம். தலைநகர் மும்பையில் மட்டுமே ஒரு நாளைக்கு ஐந்நூறுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. இது நாட்டின் மேற்கு எல்லையின் நிலவரம். வட கிழக்கு எல்லையின் நிலவரம் என்ன? எட்டு மாநிலங்களுக்கும் சேர்த்தும் எண்ணிக்கை நூறைத் தாண்டவில்லை. அதில் நான்கு மாநிலங்களில் எண்ணிக்கை ஒற்றை இலக்கில் இருக்கிறது. சிக்கிம், நாகாலாந்து இரு மாநிலங்களிலும் ஒருவருக்குக்கூட தொற்று இல்லை. எவ்வளவு பாரதூரமான வேறுபாடு? ஆனாலும், நாடு தழுவிய ஊரடங்கை இவர்களும் அனுபவிக்கிறார்கள். தேவை என்ன?

டெல்லியிலும் மும்பையிலும் கிருமித் தொற்று பரவுகிறது; அங்கே மக்கள் ஊரடங்கில் இருக்கிறார்கள், இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது, பட்டினிகூட கிடக்கிறார்கள். கேங்டாக்கும் ஏன் அதையே செய்ய வேண்டும்; அதுவும் ஒரு மாதத்துக்கு மேலாக? உங்களுக்குக் காய்ச்சல் வரும்போது நீங்கள் பத்தியத்துக்காகக் கஞ்சி குடிக்கலாம்; பக்கத்துத் தெருக்காரர் காய்ச்சலுக்கும் நீங்கள் ஏன் கஞ்சி குடிக்க வேண்டும்? நாளை சிக்கிம் மோசமாகத் தொற்றுக்கு ஆளாகும் நாட்களும் வரலாம்; அப்போது அங்கு ஊரடங்கு தேவைப்படலாம்; பொருளாதார இழப்பைச் சந்திக்கலாம்; இந்த விலைகளையெல்லாம் ஏன் இப்போதே சிக்கிம் கொடுக்க வேண்டும்; ஒரே நாடாக இருப்பதாலா?

வங்கத்தில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் 903 பேர் வசிக்கிறார்கள்; அருணாசல பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 13. மஹாராஷ்டிரத் தலைநகரம் மும்பையின் மொத்த மக்கள்தொகை 1.43 கோடி; அருணாசல பிரதேசத்தின் ஹ கிராமத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 289.

இந்தியாவின் சில மாவட்டங்கள் ஒரு கோடி மக்கள்தொகையைத் தொடுபவை. உத்தர பிரதேசம், பிஹார், வங்கம், மஹாராஷ்டிரத்தின் பல மாவட்டங்கள் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டவை.  சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையே ஆறரை லட்சம்தான்.

இமாசல பிரதேசத்தில் மலைகளும் வனங்களும் சூழ்ந்த மாவட்டம் லஹால் ஸ்பிட்டி. பல வருஷங்களுக்கு முன் அது லஹால், ஸ்பிட்டி என்று இரண்டு மாவட்டங்களாக இருந்தது; அப்புறம் இணைத்து ஒன்றாக்கினார்கள். 13,833 சதுர கி.மீ.  பரப்புக்கு மாவட்டம் விரிந்தது. அப்படியும் மக்கள்தொகை 31 ஆயிரத்துக்குச் சொச்சம்தான். ஒரு சதுர கி.மீ. பரப்புக்கே இரண்டு பேர்தான் வசிக்கிறார்கள்.

ஒரே இந்தியா, ஒரே முடிவு, ஒரே ஊரடங்கு… எவ்வளவு அபத்தம்?

அடிப்படையில் இந்தியா என்னவாக இருக்கிறது என்பது முன்னெப்போதையும்விட இப்போது துலக்கமாகத் தெரிகிறது; அதிகாரம் யார் கைகளில் இருக்க வேண்டும் என்பதையும் இந்தியாவின் இயல்பான ஆட்சியாளர்கள் யார் என்பதையும் இந்நாட்கள் சொல்கின்றன; இந்தியா, மாநிலங்களில்தான் இருக்கிறது. ஊர்களில்தான் அது வாழ்கிறது. இந்த நாட்டில் திடீரென்று எப்படி மாநிலங்களின் எல்லைகள் இவ்வளவு தடித்துப்போயின? ஒவ்வொரு ஊரின் எல்லைகளும் எப்படி இவ்வளவு வேகமாக உயிர் பெற்றன? கடைசியில், குடிமக்கள் மத்தியில் ‘சமூகம்’ என்ற சொல்லுக்கான வரையறை எந்த எல்லைக்குள் நிலைபெறுகிறது? பெரும் அதிகாரப்பரவலாக்கல் இந்நாட்டுக்குத் தேவைப்படுகிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கையோடு அடுத்தடுத்த மாதங்களுக்கான தானியங்களையும் ரூ.1,000 செலவுத் தொகையையும் அறிவித்தது தமிழ்நாடு அரசு. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முகாம்களில் முடங்கிக் கிடக்கும் தன் மாநிலத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்குப் போக்குவரத்து வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் ஜார்கண்ட் முதல்வர். ஏன் ஒன்றிய அரசால் உடனடியாக அப்படி யோசிக்க முடியவில்லை என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். குடிமக்களின் வயிற்றுக்கு நாம்தான் பொறுப்பாளி என்று மாநிலங்கள் உணர்ந்திருக்கின்றன;  குடிமக்களின் தாயாக மாநிலங்கள் இருக்கின்றன. இந்தியாவின் அதிகாரப்பரவலாக்கல் மாநிலங்களின் சுயாட்சியிலிருந்தே உயிர் பெற வேண்டும்; அங்கு தொடங்கி ஒரு குக்கிராமம் வரை அதிகாரங்கள் விரிய வேண்டும். நம்முடைய ‘இஸ்ரோ’, ‘அமுல்’ எப்படி சாதனை அமைப்புகளாக இன்று மிளிர்கின்றன?  சுயாட்சி அதிகாரம்! அது  பள்ளிக்கூடங்களிலிருந்து கூட்டுறவு அமைப்புகள் வரை பரவ வேண்டும்.

அரசமைப்பு ஒரு வெற்றுச் சட்டகம் அல்ல; உயிருள்ள நிறுவனம். தேசம் நிலையானதாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும் என்றால், அதன் கட்டமைப்பில் உள்ள தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும்; ஏற்றத்தாழ்வுகள் சீரமைக்கப்பட வேண்டும். அதற்கான ஒரே வழிமுறை நம்முடைய சுதந்திரம், ஜனநாயகம்,  ஒற்றுமையை வளர்த்தெடுக்கும் வகையில், இந்தியக் குடியரசின் அதிகாரத்தைப் பரவலாக்குவதே ஆகும்.

அதிகாரத்தைத் தேசியத்தின் பெயரால்தான் கடந்த காலங்களில் எல்லா நாடுகளும் குவித்தன. ஆனால், இன்றைக்கு தேசியத்தின் உள்ளடக்கம் என்னவென்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ‘உங்கள் ஊர் எவ்வளவு தற்சார்புடையது?’ என்ற ஒரு கேள்வி எல்லா வெற்று முழக்கங்களையும் உடைத்து நொறுக்கிவிட்டது. இனியேனும் நாட்டை மேலிருந்து கீழ் நோக்கி யோசிப்பதற்கு மாற்றாக கீழிருந்து மேல் நோக்கி நாம் சிந்திக்கத்தான் வேண்டும். நம்முடைய முன்னுரிமைகளின் வரிசையைத் தலைகீழாக்கத்தான் வேண்டும். இனியேனும் உள்ளூர்களின் குரல் மாநில அரசிலும், ஒன்றிய அரசிலும் எதிரொலிக்கட்டும். ஒவ்வொரு ஊரும் சுதந்திரக் காற்றையும் சுயாட்சியையும் அனுபவிக்கட்டும். நம்முடைய தேசப் பிதா எதிர்பார்த்ததும் இதைத்தானே!

-  ஏப். 2020, ‘இந்து தமிழ்’


முந்தைய ‘என்ன பேச வேண்டும் என் பிரதமர்: ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவோம்!’ கட்டுரையை  வாசிக்க இந்த இணைப்பைச் சொடுக்குங்கள்: http://writersamas.blogspot.com/2020/04/blog-post_27.html

4 கருத்துகள்:

  1. அண்ணா இந்த நாள்களில் என்னை அதிகமாக நான் யோசிக்கிற விஷயங்களில் ஒன்று ரோகிங்கா மக்களின் நிலை. அவர்களை குறித்தோ இல்லை மற்ற புலம் பெயர்ந்த மக்களின் நிலை பற்றி எந்த தகவலுமே இல்லை. சொல்ல போனால் எந்த அரசும் அவர்களை குறித்து யோசிக்கும் நிலையிலும் இல்லை. உங்களுக்கு அதனை குறித்து ஏதேனும் தகவல் தெரியுமா ?

    பதிலளிநீக்கு
  2. மாறுபட்டக்கருத்தில்லை. குறிப்பாக நிகழல்காலத்தேவை. மிகச்சரியான தேவையான பதிவு. பிரியங்கள்!

    பதிலளிநீக்கு