பாஜக மாதிரி ஆக வேண்டியது இல்லை காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரி பேட்டி


பரபரப்பும் படாடோபமும் கூடிய அரசியல் யுகத்திலிருந்து விலகிய நிதானச் சூழலில் இருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன். தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் தலைவர் ஆகியிருக்கும் கே.எஸ்.அழகிரி அதே நிதானத்தைப் பிரதிபலிக்கிறார். தொண்டர்கள் எளிதாக தலைவர் அலுவலகத்தின் உள்ளே செல்ல முடிகிறது, அவரைச் சந்திக்க முடிகிறது; கோஷ்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோர்க்கும் பொதுவான நிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

ஒரு கிராமத்திலிருந்து ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று படிப்படியாக மேல் நோக்கி வந்தவரான நீங்கள் காங்கிரஸை அதன் பின்னடைவிலிருந்து மீட்டு மேல் நோக்கி உயர்த்த எது சரியான வழி என்று நம்புகிறீர்கள்?

காந்தி காட்டிய வழிமுறைதான்: செயல்பாடு, செயல்பாடு, செயல்பாடு.

இந்த ஓராண்டில் கட்சிக்குள் என்ன முக்கியமான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறீர்கள்?

இரண்டு விஷயங்கள். பெரிய ஒற்றுமையைக் கொண்டுவந்திருக்கிறோம். எனக்கு என்று ஒரு கோஷ்டியை நான் பராமரிக்கவில்லை. முரண்பாடுகளை மதிப்பவன் நான். எல்லா விஷயங்களிலும் கருத்தொற்றுமை என்பது சாத்தியமே இல்லை. அது இயற்கையும் இல்லை. அதனால் நான் என்ன நினைப்பேன் என்றால், ‘இந்த இயக்கம் என்பது எல்லோரும் சேர்ந்ததுதான். நம்முடைய கருத்துகளிலிருந்து மாறுபட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் நமக்கு அந்நியமானவர்கள் அல்ல. எல்லோர் அறிவும் ஆற்றலும் இயக்கத்துக்கு முக்கியம். அதனால் அவரவருக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று நினைப்பேன். விளைவாக எந்த நிகழ்ச்சி என்றாலும், மேடையில் எல்லா முக்கியத் தலைவர்களும் ஒன்றாக அமரும் இணக்கம் உருவாகியிருக்கிறது. அடுத்து, புதிதாக மாநிலக் குழு அமைத்திருப்பதோடு, பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறோம். மாநிலத் துணைத் தலைவர்களாக 32 பேர், பொதுச்செயலர்களாக 43 பேர், செயலர்களாக 103 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் மிகச் சாதாரண குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். மேல்மட்டத்தில் நடந்திருக்கும் இந்த மாற்றங்கள் கீழ்மட்டம் நோக்கிச் செல்கின்றன. அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்திருப்பது செயல்பாடுகளில் வெளிப்படுகிறது. சென்னையில் ஒரு கூட்டம் என்றால், பத்தாயிரம் பேர் திரளுகிறார்கள். முன்பு இது சாத்தியம் இல்லை.

பொறுப்புப் பகிர்வு நல்ல விஷயம். அதிகாரப் பகிர்வாகவும் அது அமைந்திருக்கிறதா?

அடிப்படையில் அரசியல் என்பது சேவைக்கான களம். இங்கே ஒருவருக்குப் பொறுப்பு அளிக்கப்படுவதானது, அவர் களத்தில் உழைப்பதற்கான ஓர் அங்கீகாரம். அதேசமயம், முன்பு 10 பேர் உட்கார்ந்து பேசி முடிவெடுத்து செயலாற்றிய இடத்தை இப்போது 300 பேர் உட்கார்ந்து பேசி செயலாற்றுவதாக மாற்றும்போது அது அதிகாரப் பகிர்வும்தானே!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுபவற்றுள் ஐந்தில் ஒரு பங்கு தொகுதிகள் தலைவர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது பொறுப்புப் பகிர்வா, அதிகாரப் பகிர்வா?

இரண்டுமேதான். குடும்ப/ வாரிசு அரசியலுக்கான பங்கு குறைய வேண்டும்; குறைந்திருக்கிறது. ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே கட்சிக்கு உழைப்பவர்களின் பங்களிப்பை முற்றிலும் நிராகரித்திட முடியாது இல்லையா?

கோஷ்டிப் பூசல் கட்டுக்குள் வந்திருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால், வேறு எந்தக் கட்சியிலும் காண முடியாத அளவுக்கு வேட்பாளர் தேர்வின்போது பெரும் கூச்சலை காங்கிரஸுக்குள் கேட்க முடிந்தது. பொதுவாகவே கட்சிக்குள் பணக்காரர்கள் கை ஓங்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது...

இத்தகு குற்றச்சாட்டுகள் முதிர்ச்சியற்றோரின் வெளிப்பாடு. மனதாரச் சொல்கிறேன், 2019 மக்களவைத் தேர்தலிலும் சரி, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சரி; மிக எளிய பின்னணி கொண்ட பலருக்கு வாய்ப்பு அளித்தது காங்கிரஸ்தான். எல்லாத் தகுதிகளும் இருந்தாலும், வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதும், செலவழிக்கும் திறன் எப்படி இருக்கிறது என்பதுமே இன்று எந்தக் கட்சியும் வேட்பாளர் தேர்வில் முன்னுரிமை தரும் விஷயங்கள். ஏனென்றால், தேர்தல் அவ்வளவு செலவு பிடிக்கும் விஷயம் ஆகிவிட்டது. இன்றைய காங்கிரஸ் இதிலிருந்து விலகி நிற்கிறது. ராகுல் கொண்டுவந்த முக்கியமான மாற்றம் இது. உண்மையில் மக்களவைத் தேர்தலில் நாங்களே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பெரிய அலை இல்லை என்றால், நாங்கள் நிறுத்திய பலர் பண பலம் இல்லாததாலேயே வெற்றி வாய்ப்பை இழந்திருப்பார்கள். ஆனால், தோற்றாலும் பரவாயில்லை; நல்ல செயல்பாட்டாளர்கள் வாய்ப்பைப் பெற வேண்டும் என்று துணிந்தோம். ஆக, வெளியே எதைக் கட்சியின் பெரிய பலமாகப் பேச வேண்டுமோ, அதையே பலவீனமாக்கக் கூடியவர்களை என்னவென்று சொல்வது? ஒரு தொகுதிக்கு நூறு பேர் விண்ணப்பிக்கிறார்கள்; ஆனால், வாய்ப்பு ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும் என்றால், அது எந்தக் கட்சியின் தலைமைக்கும் ஒரு பெரிய நெருக்கடி. என் வாழ்வில் இரண்டு முறை கட்சித் தலைமை கொடுத்த வாக்குறுதியின் பெயரில் தேர்தல் வேலைகளை முன்கூட்டியே தொடங்கி கடைசி நேரத்தில் வாய்ப்பை இழந்திருக்கிறேன். ஒருநாளும் குறையாகக் கருதியது இல்லை. மூப்பனார் சொன்ன படிப்பினையைத்தான் எல்லோரிடமும் இப்போது சொல்கிறேன்.

என்ன படிப்பினை அது?

ஒருசமயம் நானும் ஒரு நண்பரும் மூப்பனாரைச் சந்திக்கச் சென்றோம். நண்பர் புதுச்சேரியில் அமைச்சராகவும், நான் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தோம். நண்பரின் உறவினர் மகனுக்கு மருத்துவக் கல்லூரி சீட் கேட்பதற்காகவே சென்றோம். அந்தக் கல்லூரியின் நிர்வாகி காங்கிரஸ் பின்னணி கொண்டவர். மூப்பனார் சொன்னால் நிச்சயம் சீட் கிடைக்கும். வருஷத்துக்கு இப்படி சில மாணவர்களுக்குப் பரிந்துரைப்பதையும் மூப்பனார் வழக்கமாகக் கொண்டிருந்தார். மூப்பனாரிடம் விஷயத்தைச் சொன்னபோது சிரித்துக்கொண்டே கேட்டார், “ஏன் சார், உங்க ரெண்டு பேருக்கும் எம்எல்ஏ, அமைச்சர் வாய்ப்புகளைக் கட்சி கொடுத்திருக்கு. இப்படி காலேஜ் சீட் வாய்ப்பையெல்லாமும்கூட நீங்களே வாங்கிட்டா கட்சியில கீழ் மட்டத்தில் உழைக்கிற ஒருத்தர், ‘இந்த ஏழை மாணவனுக்கு சீட் வேணும் தலைவரே’ன்னு ஒரு கிராமத்துலேர்ந்து கட்சியை அணுகும்போது அவருக்கு நாம என்ன பதில் சொல்ல முடியும்?” எவ்வளவு பரந்த மனமும், விரிந்த பார்வையும் இதற்கு வேண்டும்? பெரிய படிப்பினை எனக்கு அது. இப்படி மூப்பனார், சிதம்பரம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் இவர்களிடமிருந்து நான் கற்ற படிப்பினைகள் அதிகம். முக்கியமானது, நாம் மட்டுமே கட்சி அல்ல என்பதுதான்!

சரி, கட்சியின் மாநிலத் தலைமைக்கு உரிய அதிகாரம் அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டியே காங்கிரஸிலிருந்து மூப்பனார் வெளியேறினார். இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது? முக்கியமாக, ராகுலை உங்களால் அணுக முடிகிறதா?

எந்த முடிவிலும் கட்சியின் மாநிலத் தலைமைக்கே முன்னுரிமை என்பதே ராகுலின் அணுகுமுறை. மேலிடப் பொறுப்பாளர்களான குண்டுராவ், வேணுகோபாலிடம் பேசுகிறோம்; மிக அவசியமான விஷயம் என்றால், ராகுலையே தொடர்புகொள்கிறேன். ராகுலின் செல்பேசி எண் என்னிடம் மட்டும் அல்ல; தமிழகத்தில் குறைந்தது பத்துத் தலைவர்களிடம் உண்டு. குறுஞ்செய்தி அனுப்புவேன். உடனே பதில் அளிப்பார். சமீபத்திய சுற்றுப்பயணங்களின்போது ஆறு நாட்களும் அவருடன் இருந்தேன். காரில் பேசிக்கொண்டேதான் வருவார். காமராஜர் தொடங்கி ரஜினி, கமல் வரை பல விஷயங்களும் கேட்டுத் தெரிந்துகொள்வார். பொதுவாகவே எல்லோர் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பார். காரில் பயணிக்கும்போது சாப்பிடப் பழங்கள், பருப்புகள், பழரசம் என்று எதையாவது எடுத்துவருவது அவரது வழக்கம். இப்படிக் கொண்டுவரும்போது தனக்கு மட்டும் அல்லாமல், கார் ஓட்டுநர் தொடங்கி அத்தனை பேருக்கும் ஒவ்வொரு முறையும் தன் கையாலேயே பரிமாறிவிட்டுத்தான் சாப்பிடுவார். மதியம் சாப்பிடும்போதும் எங்கள் அனைவரோடும் அமர்ந்தே சாப்பிடுவார். “சோற்றைக் குறைத்துக்கொண்டு மாமிசம், காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது என் வேகத்துக்கு நீங்களும் நடக்கலாம். கட்சியை வளர்க்க உடல் வலுவும் முக்கியம்” என்பார்.

கட்சியை வளர்த்தெடுக்கக் கட்சியை வாக்குச்சாவடி அளவில் பலப்படுத்துங்கள் என்பதே அமித் ஷா கூறும் முக்கியமான ஆலோசனை என்று சொல்கிறார் பாஜக தலைவர் முருகன். அப்படி ராகுல் உங்களுக்குக் கூறும் முக்கியமான ஆலோசனை என்ன?

காந்தி சொன்ன அதே வழிமுறையைத்தான் ராகுலும் குறிப்பிடுவார், ‘தொடர் செயல்பாடு!’ ராகுல் வந்த இடங்களில் எல்லாம் பெரும் கூட்டம் இங்கே கூடியது. கோவைப் பிராந்தியத்தில் மட்டும் ஐந்து லட்சம் பேர் திரண்டிருப்பார்கள். உண்மையில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காசு கொடுத்துத் திரட்டும் ஆற்றல் காங்கிரஸுக்குக் கிடையாது. டெல்லி புறப்படும்போது ராகுல் சொன்னார், “தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு என்று ஒரு இடம் இருக்கிறது; இல்லாவிட்டால் இவ்வளவு கூட்டம் கூடாது. தொடர்ந்து செயல்படுங்கள்!”

பாஜகபோல காங்கிரஸ் வளர்கிறதா?

தமிழ்நாட்டில் பாஜக வளர்வதாக நீங்கள் நம்புகிறீர்களா? அது ஒரு மாயை. சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன் கேளுங்கள், இந்திரா பெரும் செல்வாக்கோடு இருந்த நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் குறையாத ஆட்கள் என் வீட்டுக்கு வருவார்கள். பல நூற்றுக்கணக்கானோர் கட்சியில் சேர்ந்தார்கள். நான் கட்சி பெரிதாக வளர்வதாக நம்பினேன். ஆட்சி அதிகாரத்தைக் கட்சி இழந்தபோது அவர்கள் மொத்தமும் காணாமல்போய்விட்டார்கள். மத்தியில் பகாசுர பலத்தோடு, அதிகாரத்தோடு இருக்கும் ஒரு கட்சி மாநிலத்தில் பிரதான கட்சியாக இல்லாதபோது, அந்தக் கட்சியில் உள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொள்ள பலரும் முனைவார்கள். வேறு எந்தக் கட்சியிலும் பெரிய பதவிகளுக்கு வாய்ப்பில்லாதவர்கள், ஆட்சியின் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள முற்படுபவர்கள்தான் இவர்களில் அதிகம் இருப்பார்கள். அதிகாரம் போனால் ஓடிவிடுவார்கள். ஒரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்போது அடையும் வளர்ச்சியே நீடித்திருக்க வல்லது. தமிழ்நாட்டு மக்களுக்கு என்று பொதுவான சிந்தனைத் தளம் ஒன்று இருக்கிறது. சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது அது. அதற்கு நேர் எதிரானது பாஜக. இங்கு ஒருநாளும் பாஜக எடுபடாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலவீனமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

ஒரு கட்சி மக்கள் மத்தியில் உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்றால், மக்களின் குரலை அது எதிரொலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டோம். பதவி ஆசை, கூட்டணியுறவு இதற்காகவெல்லாம் தயங்கக் கூடாது. சரியோ, தவறோ ஒவ்வொரு விஷயத்திலும் துணிச்சலாகத் தன் கருத்தைக் கட்சி அழுத்தம்திருத்தமாகச் சொல்ல வேண்டும். கருத்தைச் சொல்வதில் பிரச்சினை என்றால், ஒரு பத்தாண்டு காலத்துக்குத் தேர்தல் வெற்றிகளை ஒதுக்கிவிட்டு, தனித்தேகூடச் செயல்படலாம். காந்தியின் வெற்றியே மக்கள் குரலை அவர் உரக்கப் பேசியதுதானே!

பாஜகவின் இந்துத்துவக் கதையாடலுக்கு காங்கிரஸின் பதில் என்ன?

காங்கிரஸ் யாருக்காகவும் தன் கதையாடலை மாற்றிக்கொள்ள வேண்டியது இல்லை. மோடி ஜெயிக்கிறார் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் அவரைப் போல எதேச்சதிகாரமாக மாற வேண்டியதும் இல்லை; கட்டுக்கோப்பான கட்சி என்ற பெயரில் காங்கிரஸ் தன் ஜனநாயகத்தை இழக்க வேண்டியதும் இல்லை. காங்கிரஸ் எல்லா சமூகங்களுக்குமான ஜனநாயக இயக்கம். நல்லிணக்கம்தான் அதன் அடிப்படை. இதை காங்கிரஸ் திரும்ப உரக்கப் பேசினாலே போதும்!

- மார்ச், 2021, ‘இந்து தமிழ்’

1 கருத்து: