சமூகநீதியை அடுத்த கட்டத்துக்கு பாஜக கொண்டுசெல்லும்: எல்.முருகன் பேட்டி

ஓராண்டுக்கு முன் தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டபோது ‘யார் இவர்?’ என்று பலர் ஆச்சரியத்தோடு கேட்டார்கள். சொந்தக் கட்சியிலேயே அதிருப்தியில் சில முன்னணித் தலைவர்கள் பாஜக தலைமை அலுவலகமான ‘கமலாலய’த்துக்கு அன்றாடம் வருவதை நிறுத்திக்கொண்டதைக் கேள்விப்பட முடிந்தது. இன்று நிலைமை தலைகீழ் ஆகியிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் கட்சிக்குள் தன்னை வலுவாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் முருகன்; கட்சிக்கு வெளியிலும் செயல்படும் தலைவராகப் பார்க்கப்படுகிறார். 2021 சட்டமன்றத் தேர்தல் ஒருவகையில் முருகனின் தலைமையைப் பரிசோதிக்கும் களமும் ஆகியிருக்கிறது. 

ஒருகாலத்தில் ‘பிராமண - பனியா கட்சி’ என்று சொல்லப்பட்டுவந்த பாஜகவின் முகம் மோடி - ஷா காலகட்டத்தில் குறைந்தபட்சம் மேல்பூச்சு அளவிலேனும் மாறியிருக்கிறது; கட்சிக்குள் சமூகங்களுக்கு இடையிலான பொறுப்புப் பகிர்வு முன்னர் இல்லாத அளவுக்கு நடந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. கேள்வி என்னவென்றால், உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா? 

முழுச் சுதந்திரமாகவே செயல்படுகிறேன். என்னை எல்லோருமே புரிந்துகொண்டிருக்கிறார்கள். காலையில் ஆறு மணிக்கு எழுந்தால் இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் படுக்கச் செல்கிறேன்; மதியத் தூக்கம்கூடக் கிடையாது. கட்சியினர் என்னுடைய எதிர்பார்ப்பை அறிந்திருக்கிறார்கள். அதனால், எனக்கு இணையாக ஓட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கும் இருக்கிறது. எந்த விஷயத்திலும் சுதந்திரமாகவே முடிவெடுக்கிறேன் என்றாலும், எல்லா விஷயங்களுக்கும் மூத்தவர்களிடம் கலந்தாலோசிக்கிறேன். கீழிருந்து வந்த மோடிஜி மேலே இருப்பது இன்றைய கட்சிக்கு உள்ள பெரிய உத்வேகம். நீங்கள் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், கட்சிக்காக நேர்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலை பாஜகவில் மட்டுமே இருக்கிறது. 

தலைமைப் பொறுப்புக்கு நீங்கள் வந்த ஒரு வருட காலத்திலேயே தேர்தலை எதிர்கொள்கிறீர்கள். எப்படியிருக்கிறது அனுபவம்? 

இந்த ஓராண்டுக்குள் கணிசமான காலகட்டத்தை கரோனா ஊரடங்கு ஆக்கிரமித்துக்கொண்டது பெரிய சங்கடம். ஆனாலும், நிறைய வேலை செய்திருக்கிறோம். முன்பு விழுப்புரத்துக்கோ கடலூருக்கோ சென்றால், எங்களை வரவேற்கக்கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டில் பாஜக கிளை இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். கட்சியின் அறுபது மாவட்ட அமைப்புகளிலும் ஐந்தாயிரம் பேருக்குப் பொறுப்புகள் வழங்கி செயல்தளத்துக்கு வந்திருக்கிறோம். வெறும் ஒரு நாள், இரண்டு நாள் இடைவெளியில் ஒரு கூட்டத்தைத் திட்டமிட்டால்கூட இன்றைக்கு எந்த ஊரிலும் ஐந்தாயிரம் பேர் வரையில் திரளுகிறார்கள். இது எல்லாவற்றையும்விட சித்தாந்தத் தளத்தில் பாஜக பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தன் கைகளில் வேல் பிடித்து நிற்பதும், திமுக தேர்தல் அறிக்கையில் கோயில்கள் மேம்பாடு பேசப்படுவதும் பாஜக கொண்டுவந்திருக்கும் மாற்றம்தான் இல்லையா? 

தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கான முடிவுகள் தமிழ்நாட்டுத் தலைவர்களால் எடுக்கப்பட வேண்டும் என்று கருதுபவர்கள். தேசியக் கட்சிகள் இங்கு எடுபடாமல் போக டெல்லியிலிருந்தே அவை ஆட்டுவிக்கப்படும் நிலை ஒரு முக்கியமான காரணம். இன்றைய பாஜகவில் மாநில அமைப்புகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் எந்த அளவுக்கு இருக்கிறது? 

எங்களுடைய பணிக் கலாச்சாரத்தை ‘அணிச் செயல்பாடு’ என்று சொல்லலாம். கோர் கமிட்டி இருக்கிறது. அதில் 14 பேர் இருக்கிறோம். இந்தக் குழு எடுக்கும் முடிவை மேலிடம் பெரும்பாலும் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. சில சமயங்களில் சில ஆலோசனைகள் கொடுப்பார்கள். அது எங்கள் முடிவுகளை மேம்படுத்துவதாகவே இருக்கும். 

தமிழ்நாட்டு பாஜக தலைவர்களால் பிரதமரையோ, கட்சியின் தேசியத் தலைவர்களையோ எளிதாக அணுக முடிகிறதா? மோடி, ஷா, நட்டாவுடன் எத்தனை முறை உங்களால் இந்த ஓராண்டில் கலந்து பேச முடிந்திருக்கிறது?

மோடிஜி பிரதமர். அவரிடம் கட்சி விஷயங்களை எடுத்துச்செல்வது இல்லை. அது எங்கள் மரபும் அல்ல. அப்படியும் தமிழ்நாட்டுக்கு இரண்டு முறை வந்திருந்தபோதும் மோடிஜியுடன் ஐந்து நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அமித் ஷாஜி இங்கு இரண்டு நாட்கள் தங்கி எங்கள் நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்தினார். அப்போதெல்லாம் மாநிலத் தலைவருடன், எங்களுடைய கோர் கமிட்டியுடன், மாநிலச் செயலாளர்களுடன் என்று ஒவ்வொருவருடனும் தனித்தனியாக உட்கார்ந்து பேசினார். நிறைய யோசனைகள் சொன்னார். நட்டாஜி மதுரைக்கு வந்திருந்தபோது ஒரு நாள் முழுக்க எங்களுடன் இருந்தார். அவருடனும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் குழுவாகவும் தனித் தனியாகவும் உரையாடினோம். கட்சிக்குள் பேசுவதற்கு எல்லோருக்குமே இடம் இருப்பதுதான் பாஜகவின் சிறப்பம்சம். தலைவர்கள் ஒரு வார்த்தை பேசுவதற்கு முன் நாம் சொல்லும் எல்லா விஷயங்களையும் உள்வாங்குவார்கள்.

அமித் ஷாவுடன் கணிசமான நேரம் செலவிட்டிருக்கிறீர்கள்; அவர் சொன்ன எந்த ஆலோசனை முக்கியமானது என்று கருதுகிறீர்கள்? 

இரண்டு விஷயங்கள் வெகுவாக ஈர்த்தன. ஒன்று, பொறுமையுடன் கூடிய உழைப்பு. முதல் நாள் காலை 11 மணிக்கு சென்னை வந்தவர் நள்ளிரவு 3 மணி வரை எங்களுடன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார்; மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம்கூட எங்களோடு நிகழ்ச்சிக்குத் தயாராகிவிட்டார்; எல்லோரையும் பேசவிட்டு கவனமாகக் கேட்டார். இரண்டாவது, சின்ன விஷயங்களில் அவர் கவனம் செலுத்துவது. அகில இந்தியத் தலைவர்; அதனால் பெரிய பேரணி, பெரிய கூட்டம் என்றெல்லாம் மாஸாக ஆலோசனை சொல்வார் என்று எதிர்பார்த்தால், மைக்ரோ லெவலில் கட்சியைப் பலப்படுத்துவதையே பிரதானமாகப் பேசுவார். ‘ஃபர்ஸ்ட் வீ ஹேவ் டு ஸ்ட்ரென்த் தி பூத்’ என்பதே அவர் திரும்பத் திரும்பச் சொல்லும் மந்திரம். 

நீங்கள் எந்த அளவுக்கு வாக்குச்சாவடிக் குழு அமைப்பில் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள்?

ஒரு பூத் கமிட்டி என்பது 25-30 பேரைக் கொண்டது. நான் தலைமைப் பதவி ஏற்கும்போது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 42 ஆயிரம் பூத் கமிட்டிகள் இருந்தன; இப்போது 60 ஆயிரமாக உயர்த்தியிருக்கிறோம். 

வெளியே தேசியம், இந்துத்துவம் பேசினாலும், மோடி – ஷா இருவருமே ஒருபோதும் குஜராத்தை விட்டுக்கொடுக்காதவர்கள்; குஜராத்தி அடையாளத்தையும் பெருமிதத்தையும் குஜராத்தி லாபியையும் தங்கள் வெற்றிக்கான கச்சாப்பொருளாகக் கொண்டவர்கள். கடைசியாக நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில்கூட ‘குஜராத்தி அரசியல்’ மோடியின் பிரச்சார ஆயுதங்களில் பிரதானமானதாக இருந்தது. இந்துத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக பாஜக, தமிழ் அரசியலுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறதா? 

நிச்சயமாக. தமிழ், தமிழர், தமிழ்நாடு சார்ந்த எந்த விஷயத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். கந்த சஷ்டி கவசம் விவகாரமே இதற்கு ஒரு சான்று; அதைத் தமிழ் மக்களுடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே நாங்கள் பார்த்தோம்... 

நான் தேசிய அளவிலான விவகாரங்களில் நம்முடைய மாநிலத்தின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் பற்றிக் கேட்கிறேன்... நீட், எய்ம்ஸ் போன்ற விஷயங்களில் உங்களுடைய அணுகுமுறை இனி எப்படி இருக்கும்? 

நான் தலைமைப் பொறுப்பேற்பதற்கு முன்பே நீட் விவகாரம் முடிந்துவிட்டது. நட்டாஜி சென்னை வந்திருந்தபோது எய்ம்ஸ் தொடர்பில் பேசினேன். அவர் டெல்லி சென்ற கையோடு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. சீக்கிரம் நல்ல செய்தி வரும். நிச்சயம் நம் மாநில உரிமைகளைப் பாதுகாப்போம். 

அரசியல் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, திராவிட இயக்கம் இந்த நூறாண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு சமூகநீதிப் பாதையை உருவாக்கியிருப்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொண்டே செயலாற்ற வேண்டும்; அப்படியென்றால், இந்த விஷயத்தில் பாஜகவின் செயல்திட்டம் என்ன? 

நீங்கள் சொல்வதுபோல, நூறு வருஷங்களில் சமூகநீதிப் பாதையில் இங்கே நிறைய நடந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அது ஓரிடத்தில் கெட்டிதட்டி நிற்கிறது. முக்கியமாக அடித்தட்டு மக்கள் இருக்குமிடம் வரை அது செல்லவில்லை. திமுகவில் கட்சித் தலைவராக ஒரு தலித் உட்கார முடியுமா? உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒரு தலித் உட்கார்ந்ததையே ‘அது நாங்கள் போட்ட பிச்சை’ என்றுதானே பேசுகிறார்கள்? இப்படிக் கெட்டிதட்டி நிற்கும் சமூகநீதியை அடுத்த கட்டத்துக்கு அடித்தட்டு மக்களை நோக்கிக் கொண்டுசெல்வோம். அதுதான் பாஜகவின் செயல்திட்டமாக இருக்கும். 

வாக்குச்சாவடி அளவில் அமைப்புகளைக் கட்டியெழுப்புவது தொடங்கி அடித்தட்டு மக்களை அதிகாரப்படுத்துவது வரை நீங்கள் ஆக்கபூர்வமாகப் பேசும் விஷயங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஆனால், கட்சியை வளர்க்கிறேன் என்ற பெயரில் ரௌடிகளைக் கட்சியில் இணைப்பது தொடங்கி பிற கட்சிகளிலிருந்து ஆட்களைத் தூக்குவது வரையிலான உங்களுடைய நடவடிக்கைகளை எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணிக் கட்சிகளின் கைகளை முறுக்குகிறீர்கள் என்ற பேச்சு வெளிப்படையாகக் கேட்கிறது. தேர்தலுக்குப் பின் கட்சிகளை உடைத்து ஆட்சிக்கு வர பாஜக முனையும் என்ற எண்ணம் திமுக – அதிமுக இரு கட்சியினரிடமுமே இருக்கிறது... 

நான் தலைவராகப் பதவியேற்ற அன்று, பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்ன விஷயத்தையே இன்றைக்கு உங்களிடமும் சொல்கிறேன். என்னுடைய அரசியல் நேர்மறையானதாக இருக்கும். நெகடிவ் பாலிடிக்ஸ் கூடாது என்று நினைப்பவன் நான். பெரியாரை வைத்து சர்ச்சைகள் போய்க்கொண்டிருந்தபோது, ‘சமூகநீதிக்காகப் போராடியவர் பெரியார்; அவரை வாழ்த்துவதில் தயக்கம் இல்லை’ என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இறந்தபோது அவருடைய வீட்டுக்கே சென்று இரங்கல் தெரிவித்தேன். அண்ணன் ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, செல்பேசியில் அழைத்து உடல்நலம் விசாரித்தேன். ஏனைய கட்சிகளைத் தொந்தரவுக்குள்ளாக்குவதிலோ, மற்றவர்களை அழித்தொழிப்பதிலோ துளியும் எனக்கு விருப்பம் கிடையாது. அரசியலில் கூட்டணி – ஆட்சிப் பொறுப்பு இவையெல்லாம் அந்தந்தக் காலச்சூழல், தேவைகள் அறிந்து மேலே இருப்பவர்கள் எடுக்கக் கூடிய முடிவுகள். ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் கட்சி உறுப்பினர் ஆகிவிடலாம் என்கிற முறை பாஜகவில் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் அனுகூலத்துடனேயே சங்கடங்களையும் கூட்டிக்கொண்டு வரும்போது இப்படி நடந்துவிடுகிறது. ரௌடியிஸத்தை நாங்கள் ஒருபோதும் வளர்க்க மாட்டோம்; ரௌடிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கு எந்தப் பதவியும் அளிக்க மாட்டோம். 

ஒவ்வொரு தலைவருக்கும் தன்னுடைய சமூகம் சார்ந்து ஒரு கனவு இருக்கும். தமிழ்நாடு தொடர்பான உங்களுடைய கனவு என்ன?

எல்லாவற்றிலும் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும்; எப்படி சுயசார்பு பாரதம் எனும் கனவைப் பேசுகிறோமோ அப்படி சுயசார்பு தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன். 

- மார்ச், 2021, ‘இந்து தமிழ்’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக