சரியான முடிவா முழு ஊரடங்கு?


பலதரப்பு மனிதர்கள் கருத்துச் சொல்லும் காணொளி ஒன்றைப் பார்த்தேன். திமுக ஆட்சி அமைந்த ஒரு வாரத்தில் எடுக்கப்பட்டது அது. எதிர்பார்த்ததைவிடவும் மேலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக அதில் பலரும் சொல்கிறார்கள். ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அரசியலர்கள் வட்டாரத்திலேயே கட்சி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு அப்படி ஒரு பேச்சு இருப்பதைக் கேட்கிறேன். வெகுமக்கள் மனம் கவரும் அறிவிப்புகள் மட்டுமே இதற்குக் காரணம் என்று நான் நம்பவில்லை. முன்னதாக தமிழக மக்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாத ஒரு ஆட்சி இங்கே  இருந்தது; அரசியல் தலைமை என்பதே காணாமல்போயிருந்தது; நான் முன்பே பல முறை சுட்டியிருக்கிறபடி கே.பழனிசாமி ஆட்சியின் ஆகப் பெரிய வீழ்ச்சி அதுதான்.

நல்லதோ, கெட்டதோ; பெரும்பான்மை முடிவுகளை மாநிலத்தில் அரசு அதிகாரிகளே எடுத்தனர். நாடு தழுவிய பிரச்சினைகளில் பாஜகவின் முடிவுகளுக்கேற்ப பழனிசாமியின் அரசு ஒத்திசைந்து செயல்பட்டது. கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இது மேலும் வெளிப்பட்டது. உலகெங்கும் கரோனா பரவியது. தொற்றுக்குள்ளானோரின் வீடுகள் தகரத் தட்டிகளால் அடைத்துத் தடுக்கப்பட்டதையும், வீதிகள் இரும்புக் கம்பிகளால் மறிக்கப்பட்டதையும் இங்கேதான் கண்டோம். ஊரடங்கின்போது தவறி வெளியே சென்றவர்கள் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இவ்வளவையும் பொருட்படுத்தாதவராக பழனிசாமி இருந்தார். தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்து, மக்கள் செத்துக்கொண்டிருந்த சமயத்திலேயே “நானும் உங்களைப் போல டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன்” என்று சொன்ன வரலாறு அவருக்கு இருந்ததால் மக்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார்கள்.

மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நடந்த முதல் நல்ல விஷயம், வெகுமக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு செவிசாய்க்கும் என்ற சமிக்ஞை வெளியானது; அதுதான் மக்களின் வரவேற்புக்கு முக்கியமான காரணம். ஊரடங்கின் கேடுகளை எதிர்க்கட்சித் தலைவராக நன்கு உணர்ந்திருந்தவர் என்பதால், மிகுந்த தயக்கத்துடனேயே ஊரடங்கு அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். நாட்டிலேயே அதிகமான பரவல் எனும் இடத்தை நோக்கி தொற்று பரவிவந்தது; மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன; ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அலைக்கழிந்தனர்; மருத்துவர்கள் பெரும் பணி நெருக்கடிக்கு ஆளாயினர்; அனைத்துக் கட்சிகளிடத்திலிருந்தும் ஊரடங்குக்கான அழுத்தம் பெருகிவந்தது; ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இவ்வளவு நெருக்கடியானச் சூழல்கள் ஸ்டாலினுக்கு முந்தையவர்கள் எவரும் எதிர்கொண்டிராதது; ஆக, ஊரடங்கு முடிவு நோக்கி அவர் நகர்ந்த நியாயம் புரிந்துகொள்ளக்கூடியது.

சரி, இந்த ஊரடங்கை எப்படி அமலாக்குவது? இதில்தான் நமக்குப் பெரிய தெளிவு தேவைப்படுகிறது. உலக நாடுகள் பெரும்பான்மையும் ஊரடங்கை அமல்படுத்தினாலும், மோசமான முன்னுதாரணம் பிரதமர் மோடி 2020 மார்ச் 24-ல் அறிவித்தது என்பதை வரலாறு சொல்லும். போதிய அவகாசம் கொடுக்காமல், மக்களை அல்லோலகல்லோலப்படுத்தி அலைக்கழித்து வதைத்த ஊரடங்கு அது. ஊரடங்கு எப்படி அமலாக்கப்படக் கூடாது என்பதை அதிலிருந்தும், எப்படி அமலாக்கப்பட வேண்டும் என்பதை உலகளாவிய அனுபவங்களிலிருந்தும் இந்த ஓராண்டில் இந்திய மாநிலங்கள் கற்றிருக்கின்றன.

பிரிட்டனில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த காலகட்டத்திலேயேகூட அத்தியாவசியப் பொருள்களுக்கான அங்காடிகள், கடைகள் முழுமையாக மூடப்படவில்லை. லண்டன் மெட்ரோ உட்பட பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயங்கியது. ஆயினும், அங்கேயே பொதுமுடக்கத்தைக் கையாண்ட விதம் தொடர்பில் தீவிரமான விவாதங்கள் இன்று நடக்கின்றன. இந்த விவகாரத்தைத் தொடக்கத்திலிருந்தே மாறுபட்ட கவனத்துடன் ஸ்வீடன் அணுகிவருகிறது. சாத்தியப்பட்ட அனைவரும் வீட்டிலிருந்தபடி பணியாற்றுவதை அது உத்வேகப்படுத்தியது; திரளான கூடுகைகளுக்கு அது தடை விதித்திருந்தது; மக்கள் விழிப்புணர்வுடன் அணுகத் தொடர்ந்து அது வலியுறுத்திவந்தது; அதேசமயம், அன்றாடச் செயல்பாடுகளை ஸ்வீடன் முடக்கவில்லை. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை விகிதம் பிரிட்டனைக் காட்டிலும் ஸ்வீடனில் அதிகமாக இருந்தபோதிலும், தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை விகிதம் ஸ்வீடனில் குறைவாகவே இருந்தது. மேலும், பொருளாதாரத்தில் ஸ்வீடன் 3% வீழ்ச்சியை எதிர்கொள்ள பிரிட்டன் 10% வீழ்ச்சியை எதிர்கொண்டது. தீவிரமாக ஊரடங்கை அமலாக்குவது மொத்தமாக மக்களுடைய வாழ்க்கைத்தரத்திலும், மரணங்களிலும், நெடுங்காலத்துக்குப் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் விளைவுகளோடு ஒப்பிடப்பட்டு இன்று அங்கு விவாதங்கள் நடக்கின்றன.

இந்தியா போன்ற பாரதூர ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் பொதுமுடக்கம் உண்டாக்கும் விளைவுகளை முன்னேறிய நாடுகளைப் போல எண்களில் அளவிட்டுவிட முடியாது. வலுவான ஒரு நிறுவனத்தில் ஏற்படும் இழப்பு அதன் ஆண்டு நட்டக் கணக்கோடு முடிந்துவிடும். பலகீனமான ஒரு நிறுவனத்தில் ஏற்படும் இழப்பு அதன் இயக்கத்தையே நிறுத்திவிடும்.

சென்னைக்கு நான் வந்த புதிதில் எனக்கு அறிமுகமான உணவகங்களில் ஒன்று கௌரி நிவாஸ். உடுப்பிக்காரர்கள் பாரம்பரியத்தில் வந்த உணவகம். சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலுக்குச் சென்றால், திரும்பும்போது கௌரி நிவாஸ் சென்று மசாலா தோசை சாப்பிட்டு வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகியிருந்தது. சென்னை பெருவெள்ளம் சைதாப்பேட்டையைச் சூழ்ந்திருந்தபோது, சீக்கிரமே சுதாகரித்துக்கொண்டு சேவையை மறுபடி ஆரம்பித்தார்கள். ‘மக்கள் அவதிப்படும்போது கடைகளைத் திறப்பது காசுக்காக அல்ல, அது ஒரு கடமை’ என்று அதன் மேலாளர் சொன்னார். இன்று ‘கௌரி நிவாஸ்’ கிடையாது. கரோனா ஊரடங்கோடு மூடப்பட்டது; அதன் பின்னர் திறக்கப்படவே இல்லை. பத்துப் பேர் அதில் வேலை பார்த்தார்கள். சென்னையில் மட்டும் 1,500 உணவகங்கள் இப்படி மூடப்பட்டுவிட்டன என்று ஒரு செய்தி படித்தேன். சென்ற ஆண்டில் கரோனாவை ஒட்டி வெளியேறியவர்களில் கணிசமானோர் திரும்பவில்லை. நகரத்தில் எந்த வீதிக்குச் சென்றாலும், நான்கு வீடுகளேனும் ‘வாடகைக்கு’ எனும் அறிவிப்புப் பலகையுடன் பூட்டிக் கிடக்கின்றன. இதைத்தான் சிஎம்ஐஇ போன்ற ஆய்வு நிறுவனங்கள் ‘இந்தியாவில் ஒரு மாதத்தில் 73.2 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன’ என்றும், ‘சென்ற ஆண்டில் பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்ட இரண்டு மாதங்கள் கழித்தும் மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் பொதுமுடக்கத்துக்கு முந்தைய காலத்தைவிடக் குறைவாகவே சாப்பிட்டார்கள்; ஆரோக்கியமான உணவை உண்பது குறைந்துவிட்டது’ என்று சமூக ஆய்வு அமைப்புகளும் அவர்களுக்கே உரிய மொழியில் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஸ்டாலின் அரசு வெளியிட்ட முதல் ஊரடங்கு உத்தரவான ‘நண்பகல் 12 மணி வரையிலான இயக்கம்’ மேம்பட்ட ஒரு முடிவு. அடித்தட்டு மக்கள் மீதான கரிசனம் அதில் வெளிப்பட்டது. போலீஸார் முற்றாகவே விதிமீறல்களில் ஈடுபடுவோரைக் கண்டும் காணாமலும் விட்டதே அந்த ஏற்பாடு எதிர்பார்த்த விளைவை உண்டாக்காததற்குக் காரணம். நிறையப் பேர் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றியது அப்போது கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது. நேர் எதிர் நடவடிக்கையாகப் பாலகங்கள், உணவுக் கடைகள், மருந்தகங்கள் தவிர எல்லாவற்றையும் மூடி மக்களை முழுமையாக வீட்டுக்குள் அடக்கும் இப்போதைய ஊரடங்கு சரியான முறைமை அல்ல.

எல்லோர்க்கும் அவரவர் உயிர் மீது அக்கறை உண்டு. விதிகளை மீறுவோர் விதிவிலக்குகள், அவர்களுடைய எண்ணிக்கை குறைவு; அவர்களின் பொருட்டு நடைமுறைகளை வகுக்க முடியாது. சென்னையில் நான் வசிக்கும் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். சற்றேறத்தாழ 25 ஆயிரம் குடும்பங்கள். அரசாங்கம் குறிப்பிட்ட நேரத்துக்குள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று கூறினால், வீட்டுக்கு ஒருவராவது வெளியே வந்தால்தான் முடியும். ஒரு சின்ன வட்டாரத்தின் ஐந்தாறு கடைவீதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆயிரம் பேர் வந்து சென்றால் அது எப்படிக் காட்சி அளிக்கும்? பெரிய கூடுகைபோலத்தான் காட்சி அளிக்கும்; அப்போதும்கூட இதற்குக் காரணம் யார், மக்களா?

அச்சம் அல்ல; விழிப்புணர்வே நோய்களுக்கு முடிவு கட்டும். துரதிர்ஷ்டவசமாக, நாம் ஆரம்பம் தொட்டே கரோனாவை அச்சத்தின் வழியிலேயே அணுகிவருகிறோம். இந்த அச்சம்தான் மக்களை வீட்டுச் சிறைக்குள் வைக்கும் அளவுக்குத் தீவிரமான கட்டுப்பாடுகளுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும்போது முற்றிலுமாக உடைத்துக்கொண்டு கும்பமேளா கொண்டாடும் அளவுக்குத் தீவிரமான தான்தோன்றித்தனத்துக்கும் வழிவகுக்கிறது. அரசும், அரசியல் கட்சிகளும் அச்சத்தில் உறையும்போது மக்களையும் அது பீடிப்பது சகஜம். தொலைக்காட்சிகளிலும், சமூகவலைதளங்களிலும் ‘மக்கள் சுற்றுகிறார்கள், சுற்றுகிறார்கள்’ என்று கூக்குரலிடுபவர்களின் பதற்றத்தில் வெளிப்படும் அச்சத்தை அடையாளம் காண அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாட்டுக்குள் செல்ல வேண்டும்.

அரசின் மருத்துவத் துறை, தொழில் துறை, நிர்வாகத் துறை ஒவ்வொன்றின் அதிகாரிகளும் தத்தமது கவலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமக்கேற்ற முடிவுகளை ஆட்சியாளரிடமிருந்து பெற முயற்சிப்பது ஒரு அரசாங்கத்தில் அன்றாட ஆட்டம். இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் ஒரு நல்ல சமநிலையைக் கண்டறிவதிலேயே அரசியல் தலைமையின் சாதுரியம் இருக்கிறது. அந்தச் சமநிலைக்கான சரியான அளவுகோல் எளிய மக்களின் வாழ்வைத் தவிர வேறு இல்லை.

சென்னையில் சாலை நடைபாதையில் முடங்கிக்கிடக்கும் பெரியவர்களில் ஒருசிலரை நேற்று சந்தித்தேன். “பொழப்புப் போச்சு. கையேந்துறோம். நாலு இட்டிலி கெடச்சாக்கூட ஒரு நாள் ஓடிரும். இன்னைக்குக் கையில ரெண்டு வாழப்பழத்துக்குத்தான் காசு இருக்கு. ஆனா, வாழப்பழத்துக்கு வழியில்லை. தள்ளுவண்டி என்ன பாவம் பண்ணிச்சு?”

- மே, 2021, ‘இந்து தமிழ்’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக