வெப்பத்தின் அரசியல்


        
             ரம்பமாகிவிட்டது அடுத்த சூதாட்டம். 'உலகைக் காக்கக் கடைசி வாய்ப்பு' என்ற கோஷத்துடன் டிசம்பரில் கோபன்ஹேகன் நகரில் கூடவுள்ள சர்வதேச பருவநிலை மாநாட்டுக்கான முஸ்தீபுகள் தலைநகர் தில்லியில் தொடங்கிவிட்டன. ஒருபுறம், "வளரும் நாடுகளின் வளர்ச்சியை பலி கொடுக்கமாட்டோம்'' என்று கூறிக்கொண்டே மறுபுறம், "வளர்ந்த நாடுகளுடன் நாம் சேர்ந்துகொள்ள வேண்டும்'' என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். பிரதமர் மன்மோகன் சிங்கோ, "இந்தியாவின் முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை'' என்று கூறிக்கொண்டே, "செம்மையான தொழில்நுட்பத்துக்கு மாறுவது காலத்தின் கட்டாயம்'' என்கிறார். பொருளாதார தாராளமயமாக்கம், அணுசக்தித் துறை ஒப்பந்தங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசு தேசத்தின் இறையாண்மையை முன்வைத்து ஆடப்போகும் அடுத்தகட்ட ஆட்டம் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

             கடந்த மாத இறுதியில் ஐ.நா.சபையில் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இதையொட்டி, இந்தியாவில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் ஜெய்ராம் ரமேஷ். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இந்தியா கட்டுப்படுத்த வேண்டிய வாயுக்களின் அளவை இந்தச் சட்டம் நிர்ணயிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்கும் இலக்குகளுக்கான வரையறைகளையும் இந்தச் சட்டம் வகுக்கும்.

             இந்த அறிவிப்புக்காக கருத்தரங்கில் ஜெய்ராம் ரமேஷை ஐ.நா.சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் பாராட்டினார். ஆனால், இந்திய எதிர்க்கட்சிகளிடையே இந்த அறிவிப்பு கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது. காரணம், கட்டாய பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டுக் குறைப்பை எந்த வகையிலும் ஏற்கமாட்டோம் என்ற இந்திய அரசின் இதுவரையிலான நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நடவடிக்கை இது. ஆனால், இந்த விஷயத்திலும் மேற்கத்திய நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு இந்தியா இப்போது அடிபணிந்துவிட்டது.

             நம் அரசியல்வாதிகளின் நோக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் புவி வெப்பமாதல் பிரச்னையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, புவி வெப்பமாதல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வளரும் நாடுகளின் எதிர்காலத்துடனும் பல லட்சம் கோடி ரூபாய்களுடனும் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


             புவியின் சாராசரி வெப்பத்தின் அளவு அதிகரித்துவருகிறது. வளி மண்டலத்திலுள்ள கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிப்பதுதான் இதற்கான முக்கிய காரணம் என்பதே புவி வெப்பமாதல் கருதுகோளின் அடிப்படை. ஆகையால், பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தியை - குறிப்பாக, கரியமில வாயு அடர்த்தியைக் குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதே இப்பிரச்னைக்கான முடிவாகக் கருதப்படுகிறது. கரியமில வாயு அதிகரிப்புக்கு மிக முக்கியமான பெட்ரோலியப் பொருள்கள் பயன்பாட்டை வெகுவாகக் குறைப்பதும் அதிக மாசற்ற செம்மையான இயந்திரவியல் கொள்கைக்கு மாறுவதும் புவி வெப்பத்தைத் தணிக்க முக்கியத் தீர்வுகளாக முன்வைக்கப்படுகின்றன. வில்லங்கம் எங்கே தொடங்குகிறது என்றால், இங்கேதான்.

             செம்மையான இயந்திரவியல் என்பதை விரிவான பொருளில் சொல்வதென்றால், இப்போதுள்ள பழைய தொழில்நுட்பத்தை அப்படியே கடாசிவிடுவது என்பதேயாகும். விறகு அடுப்புக்குப் பதில் சூரிய சக்தி அடுப்பு என்பதில் தொடங்கி ஹைட்ரஜனில் இயங்கும் மொபெட்டுகள், ஹைபிரிட் கார்கள் வரை எல்லாமே புதியவையாகும். 'கார்பன் கிரெடிட்ஸ்' வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் (ஏற்கெனவே, தூய்மையான முன்னேற்றத் தொழில்நுட்பத் திட்டங்களில் [சிடிஎம்] 32 சதத் திட்டங்களில் இந்தியா பங்கேற்றுள்ளது).

             இன்றைய தேதியில் உலகிலுள்ள பெரும் தொழிற்சாலைகளை மட்டும் செம்மையான இயந்திரவியலின் கீழ் கொண்டுவர மட்டுமே ரூ. 16 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது, 2030}ல் உலக மாசு அளவை 2007 அளவுக்கு கொண்டுவர ரூ. 20 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார்கள்.

             இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் - இத்தகைய தொழில்நுட்பத்தை விற்பவர்களாக வளர்ந்த நாடுகளே இருக்கிறார்கள் என்பதாகும். அதாவது, மாசற்ற உலகுக்கான இந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகளை ஈட்டித் தரும். தவிர, இந்தியாவின் கரியமில வாயு வெளியீட்டில் சரி பாதி அளவு இந்தியத் தொழிற்சாலைகளால் வெளியிடப்படுவதாக வளர்ந்த நாடுகள் குற்றஞ்சாட்டும் நிலையில், செம்மையான இயந்திரவியலுக்கு மாற இந்தியத் தொழிற்துறை எத்தனை லட்சம் கோடிகளைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதும் சர்வதேசத் தொழிற்போட்டியில் இந்தியாவுக்கு இந்தச் செலவு எத்தகைய பின்னடைவுகளை உருவாக்கும் என்பதையும் விவரிக்க வேண்டியதில்லை. "கரியமில வாயு வெளியீட்டைக் கட்டுப்படுத்த சரியான வழி, வெளியீட்டிற்கேற்ப அதற்கு வரி விதிப்பதுதான்''  என்கிறார் அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும் புவி வெப்பமாதல் விழிப்புணர்வுக்காக நோபல் பரிசு பெற்றவருமான அல்கோர். இதன் மறைமுகப் பொருள் செம்மையான இயந்திரவியலுக்கு மாறாதவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பதுதானே?

             உண்மையில், கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க முதலில் தலைப்பட வேண்டிய நாடு அமெரிக்காதான். தனி நபர் கரியமில வாயு உமிழ்வு அமெரிக்காவில் 19.70 மெட்ரிக் டன்களாக இருக்கிறது. இந்த உமிழ்வு ரஷ்யாவில் 11 மெட்ரிக் டன்களாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 9.17 மெட்ரிக் டன்களாகவும் இந்தியாவில் 1.31 மெட்ரிக் டன்களாகவும் இருக்கிறது. 2030-ல்கூட இந்தியாவில் தனிநபர் ஆண்டு கரியமில வாயு உஉமிழ்வு உலக சராசரியான 4.22 டன்னை தாண்ட வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மாசின் உச்சத்திலிருக்கும் அமெரிக்கா இன்னமும் கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க சர்வதேச ஒப்பந்தங்கள் எதிலும் கையொப்பமிடாத நிலையில், இந்தியாவையும் சீனாவையும் நிர்ப்பந்தித்துக்கொண்டிருக்கிறது. ஏனைய வளர்ந்த நாடுளும் அமெரிக்காவுக்கு ஒத்தூதுகின்றன. கியோட்டா பிரகடனமும் ஒப்பந்தமும் வெறும் பிரசங்கங்களாகவே மாறியது வளர்ந்த நாடுகளால்தான். இப்போது கோபன்ஹேகன் மாநாட்டுக்கான முன்வரைவும்கூட ஏறத்தாழ கியோட்டாவின் இரண்டாவது பதிப்பாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்திய அரசியல்வாதிகளோ அமெரிக்கக் கட்டளைக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள்.

             இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், புவி வெப்பமாதல்பற்றி முதல் பேச்சு எழுந்த காலத்திலிருந்தே இந்தக் கருதுகோளே தவறு என்ற வாதமும் வலுவாகத் தொடர்கிறது என்பதாகும். புவி வெப்பமாதலும் குளிர்தலும் தொடர்ந்து சங்கிலித் தொடராக நிகழ்ந்துகொண்டிருப்பவை; இயற்கைச் சீர்கேடுகளுக்கும் இந்தக் கருதுகோளுக்கும் தொடர்பில்லை என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். "புவி வெப்பமாதல் மிகப் பெரிய விஞ்ஞான தில்லுமுல்லு'' என்கிறார் ரஷ்ய விஞ்ஞானி ஆந்த்ரே காப்டிசா. இது தொடர்பாக அண்டார்டிகாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ள அவர், 1970-களில் பெரிதாக இப்படி கிளப்பிவிடப்பட்ட புவி குளிர்மயமாதல் இப்போது புஸ்வாணமாகிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். வளரும் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளும் ஓர் உத்தியே புவி வெப்பமாதல் கருதுகோள் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரமாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

             இது ஒருபுறமிருக்க, "மாசடைந்துவரும் சூழல் - அருகிவரும் இயற்கை வளங்கள் - மாறிவரும் தட்பவெப்பம் ஆகியவை புவிச் சூழலில் மிகப் பாதகமான அம்சங்களே. ஆனால், பூமி ஓர் உயிருள்ள செல். தன்னைதானே தகவமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை புவிக்கு இருக்கிறது'' என்ற கருதுகோளும் காலங்காலமாக விஞ்ஞானிகளிடையே இருந்துவருகிறது.

             ஆக,  புவிவெப்பமாதலின் நம்பகத்தன்மையே இப்படிக் கேள்விக்குறியாக இருக்கும்போது அதன் பெயரால் முன்வைக்கப்படும் தீர்வுகள் எந்தளவுக்கு நம்பகமானவை? அவற்றைக் குருட்டுத்தனமாக அப்படியே உள்வாங்கிக்கொள்ள இந்திய அரசு துடிப்பது ஏன் என்பதே நாம் முன்வைக்கும் கேள்வியாகும்.ஏனெனில், புவி வெப்பமாதலுக்கு முன்வைக்கப்படும் தீர்வுகளை - நிர்ப்பந்தங்களை ஏற்றுக்கொண்டால், அதனால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நாடாக இந்தியாவே இருக்கும். தொழிற்துறை சார்ந்து மட்டுமல்ல; இன்னமும் மின்சாரத்தைப் பார்க்காத கோடிக்கணக்கான இந்திய கிராமவாசிகளையும்கூட அது பாதிக்கும்.

             அனல் மின்சாரத்துக்கு மாற்றாக நீர் மின்சாரம், காற்று மின்சாரம், சூரிய சக்தி என்று அவர்கள் வெளியே பிரசங்கித்தாலும், அவர்களுடைய உள் நோக்கம் அணு மின்சாரத்தை விற்பதாகவே இருக்கிறது. பெட்ரோலியப் பொருள்களுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை முன்வைக்கிறார்கள். இதனால், ஏற்படும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டுக்கு மாற்றாக மரபிணி மாற்றப் பயிர்களை முன்வைக்கிறார்கள். உண்மையில் இவையெல்லாம் இப்போதுள்ள சூழலியல் அபாயங்களைவிடவும் பேரபாயங்களையே தோற்றுவிக்கும்.

             உள்ளபடியே இந்தியா செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால், முன்னெப்போதும் இல்லாத வகையில், புவி வெப்பமாதல் என்ற கருதுகோள் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் பீதியையும் ஆக்கபூர்வமான காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதுதான்.சுதந்திரம் அடைந்து ஆறு தசாம்ச ஆண்டுகள் கழித்த பின்னரும்கூட, இந்தியாவில் அடிப்படை சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டமைப்பு மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது. கட்டாய மர வளர்ப்பு; வன விரிவாக்கச் செயல் திட்டங்கள்; ஊர்கள்தோறும் பழைய நீர்நிலைகளை மீட்டுருவாக்குதல்; தேவைக்கேற்ப புதிய நீர்நிலைகளைக் கட்டமைத்தல்; கச்சிதமான திட - திரவக் கழிவு மேலாண்மைத் திட்டங்கள்; பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், வாகனப் பெருக்கத்துக்குக் கட்டுப்பாடு; பிளாஸ்டிக் பொருள்களுக்குத் கட்டுப்பாடு; சூழலுடன் இயைந்த தொழில் வளர்ச்சித் திட்டங்கள்; கட்டுக்கோப்பான தொழிற்சாலைக் கழிவு சுத்திகரிப்புத் திட்டங்கள்; நீர்நிலைகள் - காற்று மாசுத் தடுப்பு நடவடிக்கைகள்... இப்படி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியா மேற்கொள்ள வேண்டிய அடிப்படை - அத்தியாவசிய நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கில் செயலற்றுக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் அரசு தீவிரமாக செயல்படுத்தலாம். சுற்றுச்சூழல் துறையை சுய அதிகாரமிக்க - தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் - நாடு தழுவிய அமைப்பாக விரிவாக்கலாம். சுயக் கட்டுப்பாடு நோக்கோடு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரலாம். மாறாக, புவி வெப்பமாதலை முன்வைத்து நடத்தப்படும் அரசியலில் பங்கெடுத்து, வளர்ந்த நாடுகளுடன் கைகோர்க்க முற்பட்டால், அது மன்மோகன் சிங் மேற்கொள்ளும் மற்றுமொரு வரலாற்றுத் தவறாகவே அமையும்!

2009 தினமணி

1 கருத்து:

  1. நவீன சித்தன்5 ஜூன், 2013 அன்று 9:59 AM

    ///அனல் மின்சாரத்துக்கு மாற்றாக நீர் மின்சாரம், காற்று மின்சாரம், சூரிய சக்தி என்று அவர்கள் வெளியே பிரசங்கித்தாலும், அவர்களுடைய உள் நோக்கம் அணு மின்சாரத்தை விற்பதாகவே இருக்கிறது. பெட்ரோலியப் பொருள்களுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை முன்வைக்கிறார்கள்./// சமஸ், நீங்கள் இந்தக் கட்டுரையை, எழுதிய 2009 ல், அணு உலையை விற்பதற்கான சதியாக மட்டும் தெரிந்திருக்கலாம்.ஆனால் இன்று மான்சாண்டோவும் , வால் மார்ட்டும் சூரியஒளி ,காற்றாலை மின் உற்பத்தி, பயோ டீசல் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.இதில் பில் கேட்சும், ராக்ஃபெல்லரும் கூட முதலீடு செய்துள்ளனர்.அதே போல பில்கேட்ஸ் புதிய அணு உலை உற்பத்தி நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார். அதே போல ஜெர்மனியில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட உலகளாவிய சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கின்றன.இன்று சூரிய ஒளி மின் திட்டம் என்பது எந்த வகையிலும், அணு மின்சாரத்தை விட மலிவானதாக இருக்கப்போவதில்லை.
    மட்டுமல்ல,அணுமின்சாரத்தை விட விலை மிக்கதாகவும் இருக்கிறது, அதே போல அணுக்கதிர்வீச்சைப் பற்றி மட்டுமே இங்கு பீதி கிளப்பப்படுகிறது, சூரிய ஒளி மின் தகடுகளில் உள்ள ”காட்மியம் டெலுரைட்” கூட கொடிய நஞ்சு தான். அதிக வெப்பத்தில் நிலையற்ற தன்மையுடைய,தனிமம் மட்டுமல்ல , புற்று நோயையும் உண்டாக்கும் தன்மையுடையது. இன்று நாட்டிலேயே, சூரிய ஒளி மின் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதாக சொல்லப்படும் குஜராத்தில், மின் கட்டணம் தமிழ்நாட்டை விட மூன்று மடங்கு அதிகமென உங்கள் கட்டுரையேக் கூறுகிறது.வெறும் 230 மெகாவாட் மின்சாரத்திற்கு ,ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.என்றால் இன்று தமிழகத்தின் தேவையான பல்லாயிரம் மெகாவாட்(பற்றாக்குறை 4000 மெகாவாட், ஒருவேளை நமது உதயகுமார் போன்ற என்.ஜி.ஓ.க்களீன் கோரிக்கையை ஏற்று , கூடங்குளம்,கல்பாக்கம் அணுமின்நிலையங்களும்,மேட்டுர்,தூத்துக்குடி அனல் மின் நிலையங்களும் மூடப்பட்டு )எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம் கையக்ப்படுத்த வேண்டும்? அப்போது சுற்றுசூழல் பாதிக்கப்படாதா?அது மட்டுமல்ல இப்போது வகுக்கப்பட்டிருக்கும் தேசிய சூரிய ஒளி மின் திட்டத்தில், அதை செயல்படுத்துவதற்கான கடனை பெற வேண்டுமென்றால் அமெரிக்க சோலார் கம்பெனிகளின் உபகரணங்களை வாங்க வேண்டுமென நிர்பந்தம் செய்யப்படுகிறது.இன்று நடக்கும் கூடங்குளப் போராட்டம் என்பது, மலிவான, அரசியல் அடிமைத்தனமற்ற அணு உலைக் கொள்முதலை முடக்கி, அமெரிக்கா, ஜெர்மனியின் சூரிய ஒளி , காற்றாலை மற்றும் அணு உலைகளை வாங்க இந்திய அரசை நிர்பந்திக்கும் தரகு வேலையே.இதனால் தான் இதில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதியபத்திய நாடுகளிடம் நிதி பெறும் என்.ஜி.ஓ.க்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.இதில் அணுக் கதிர் வீச்சு என்ற பீதியும், மீனவ மக்களும் பயன்படுத்திக்கொள்லப்பட்டனர்.அத்துடன் இந்தியாவின் சுயேட்சையான மூன்றக்கட்ட அணு மின் திட்டத்தையும் முடக்கும் முயற்சியும் கூட...நீர்மின் திட்டமும் இப்போதெல்லாம் அவ்வளாக எங்கும் புதியதாகசெயல்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் அதுவும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிக இலாபம் தருவதாயில்லை. அணு உலைக்கு உதயகுமார்& கோ , நீர் மிந்திட்டத்திற்கு மேதா பட்கர், நிலக்கரிக்கு கிரீன்பீஸ்( அணு உலைக்கும் தான்).அப்படியென்றால் நாம் ஆளும் வர்க்க அரசின் செயல்பாடுகளை ஆதரிக்கிரோமா? இல்லை , ஆனால் ஆளும் வர்க்கத்தை இன்னும் கூடுதலாக ஏகாதியபத்தியங்களுக்கு பணிந்து போக செய்யும் முயற்சியை எதிர்க்கிறோம். என்றால் தீர்வு தான் என்ன? ஒரே வழி தான் உள்ளது.நாட்டை ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து விடுவிப்பது , சுயசார்பான பொருளாதரக் கட்ட்மைப்புடன் , அனல், புனல்,அணு,சூரிய ஒளி ,காற்றாலை என அனைத்தும் தழுவிய சுய சார்பான மிந்திட்டங்களுக்கு போராடுவது ஒன்று தான் வழி.மற்ற படி உங்கள் கட்டுரையில் குறிப்ப்ட்ட விஷயங்கள் அனைத்தும் உண்மையே..

    பதிலளிநீக்கு