இந்தியாவின் வண்ணங்கள்



ஒரு மாபெரும் தேசத்தை எப்படிப் புரிந்துகொள்வது?
பிராயணம்தான் சிறந்த வழி என்கிறார் காந்தி. பிராயணங்கள் மூலமாகத்தான் சுதந்திர இந்தியாவின் வரைபடத்தை அவர் உருவாக்கினார்.

உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்கு இன்னொரு முறை தயாராகிக்கொண்டிருக்கிறது தேசம்.  அதைப் புரிந்துகொள்ளும் ஒரு பயணத்துக்கு இதைவிடவும் பொருத்தமான தருணம் இருக்க முடியுமா?

இந்தியாவில் ஏன் கலவரங்கள் தொடர்கின்றன?



மனசாட்சியைத் தட்டி எழுப்பும் கேள்விகள் யாரிடம் இருந்து வேண்டு​மானாலும் வரலாம். ''ஒருமாதமாக அஸ்ஸாம் பற்றி எரிகிறது. கிராமங்கள் எல்லாம் சுடுகாடு ஆக்கப்பட்டு, நான்கு லட்சம் மக்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏன் உங்கள் யாருக்கும் உறைக்கவில்லை'' என்று கேட்கிறார் வீரேந்தர். அஸ்ஸாம் கலவரத்தின் தொடர்ச்சியாக,வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பரவிய வதந்தியால் அலறி அடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு ரயில் பிடித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர் வீரேந்தர். அஸ்ஸாமின் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியுமான பக்ருதீன் அஜ்மல் சொல்வதுபோல, ''அஸ்ஸாமில் என்ன நடக்கிறது என்றும் இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்றும் கவலைப்பட இந்தியா விரும்பவில்லை'' என்பதுதான் உண்மை.

சுயநலமும் அல்பத்தனமும்தான் ஆண் காதலா? - ஷகிலா


            சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…”  என்று வரவேற்கிறார் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் கலங்கடித்த ஷகிலாவுக்கு இந்தியாவைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள். இப்போது அதிகம் அவர் நடிப்பதில்லை. ஆனாலும், இன்னும் வெளியிடப்படாத அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல், அதற்குள் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருப்பதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரவிக் கிடக்கும் ஷகிலாவின் புகழுக்கு உதாரணம். வீட்டில் உடனிருக்கும் இரு சிறுமிகளை “அண்ணன் பொண்ணுங்க” என்று அறிமுகப்படுத்துபவர், அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, “இப்போ பேசலாம்ணா” என்கிறார்.

இரு கனவுகள்... ஒரே செயல்திட்டம்!




இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா. முதன்முதலில் இப்படிச் சொன்னவர் சோ.

ஆருடமா, செயல்திட்டமா?

தேசிய அரசியலில் அன்றைக்கு மோடி இவ்வளவு செல்வாக்கானவர் இல்லை. பா.ஜ.க. அத்வானி கையில் இருந்தது. ஜெயலலிதாவும் இவ்வளவு உயரத்தில் இல்லை. முந்தைய தேர்தலில் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா மூவரையும் இணைத்து ‘15-வது மக்களவையைத் தீர்மானிக்கும் மூன்று சக்திகள்’ என்று தேசிய ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் சுக்குநூறாகிவிட்டிருந்த நிலையில், ஜெயலலிதா அடுத்த பிரதமர் என்று அ.தி.மு.க. பொதுக்கூட்டப் பேச்சாளர்கள்கூட அன்றைக்குச் சொல்லத் தயங்கியிருப்பார்கள். சோ சொன்னார். தொடர்ந்து, ‘மோடி அல்லது ஜெயலலிதா’ எனும் முழக்கத்தைப் பொதுமேடைகளில் முன்வைக்க ஆரம்பித்த சோ, உச்சகட்டமாக ‘துக்ளக்’ பத்திரிகை ஆண்டு விழாவில் மோடி, அத்வானி இருவரையும் மேடையில் வைத்துக்கொண்டே “மோடி பிரதமராக அத்வானி உதவ வேண்டும்” என்று பேசினார். அந்தச் சமயத்தில் பேட்டிக்காக சோவைச் சந்தித்தபோது, மோடி அல்லது ஜெயலலிதா என்கிற தன்னுடைய குரலுக்கான அடிப்படைபற்றிச் சொன்னார்: “நான் ஒரு வாக்காளன். அந்த அடிப்படையில் ஒரு முன்மொழிவைச் சொல்கிறேன். இந்த நாட்டின் பிரதமராக மோடிக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. ஒருவேளை பா.ஜ.க-வுக்கு மோடியைப் பிரதமர் ஆக்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராக அவர்கள் உதவ வேண்டும். அவ்வளவுதான்!”
அன்றைக்கு சோ சொன்னது அரசியல் ஆருடம் அல்ல. எளிமையான வார்த்தைகளில், “இது ஒரு வாக்காளனின் முன்மொழிவு” என்று அதை அவர் வர்ணித்தாலும், அது ஒரு செயல்திட்டம். கச்சிதமான செயல்திட்டம்.

தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்



  
ஒரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்… ஆனால் தமிழ்நாட்டின் அரிய செய்திகளை அளிப்பதில் சுவரொட்டிகளுக்கு ஈடுஇணை இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏழு மண்டேலாக்கள் கிடைத்த செய்தியும் சுவரொட்டிகள் மூலம்தான் கிடைத்தது. சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம்.

யார் இந்த ஏழு மண்டேலாக்கள்?
வேறு யாராக இருக்க முடியும்? ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனையிலிருந்து தப்பி, 23 வருஷ சிறைவாசத்திலிருந்து விடுபட ஏங்கிக்கொண்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் ஃபயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவர்தான் அந்த ஏழு மண்டேலாக்கள். இவர்கள் எப்படி, எப்போது மண்டேலா ஆனார்கள் என்ற கேள்வி இங்கு பொருத்தமற்றது. ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில், ‘இன்விக்டஸ்’ படத்தில், மண்டேலாவாக நடித்த மார்கன் ஃப்ரீமேன் படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்திய வரலாறு நம்முடையது. எனினும், மனித மேரி மாதாக்கள், வாழும் வள்ளுவர்கள், சமகால சே குவேராக்கள் வரிசையில் ஏழு மண்டேலாக்களையும் சேர்க்க முடியுமா?

ராஜீவ் கொலை பெரிய தப்பு: அற்புதம் அம்மாள்




வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளில், அற்புதம் அம்மாளைச் சந்திக்க முடியவில்லை; ஓரிரு நாட்கள் கழித்துச் சென்றபோது, வழக்கம்போல, மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்கள் கனக்கும் தோள்பையுடன் கிளம்பியிருந்தார். “எம் புள்ள மட்டும் இல்லப்பா, இன்னும் நெறையப் புள்ளைங்களைத் தூக்குக் கயித்துப் பிடிக்கு வெளியே இழுத்துக்கிட்டு வர வேண்டியிருக்கு” என்றவர், வழியில் ஒரு பொரி பொட்டலத்தை வாங்குகிறார். “ரொம்ப அசத்தினா தவிர, நான் சாப்பாடு தேடுறதுல்ல; பல நாள் இந்தப் பொரிதான் நமக்குச் சாப்பாடு” என்கிறார் சிரித்துக்கொண்டே. நடந்துகொண்டே பேச ஆரம்பித்தோம்.

ஜனநாயக அரசியல் என்பது வெகுஜன அரசியல்தானே?​




ஒரு பொழுதாயினும் நீ என்னை அடித்தது கிடையாது. இருந்தும் உனது முகம் சிவப்பதும் உரத்த குரலில் நீ கத்துவதும் வேகமாகக் காற்சட்டையைச் சரிசெய்வதும். இவையெல்லாம் ஒருத்தனைத் தூக்கிலிடுவதுபோல. தூக்கிலிட்டால் அவன் செத்துவிடுவான். எல்லாம் முடிந்துவிடும். ஆனால் தூக்கிலிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவனை அருகிலிருந்து பார்க்க வைத்து, கழுத்துக்கு முன் கயிறு தொங்கும் அந்தக் கணத்தில், ஆயுள் தண்டனை என அவனுக்குச் சொல்வதைப் போல. வாழ்வு முழுதும் அவனை அந்த வலியில் துடிக்கவைப்பதைப் போல.”
- காஃப்கா தந்தைக்கு எழுதிய கடிதத்தில்.

என்றும் அழியாத கோலம்






திடீரென்று அழைக்கிறார்: “இன்னைக்கு அலுவலகம் வர முடியுமா?”

பொதுவாக, சரியான நேரத்தைப் பின்பற்றுவார் என்பதால், அவர் குறிப்பிட்டபடி சரியான நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அவருடைய நாற்காலியில் அமராமல், சோபாவில் அமர்ந்திருக்கிறார். நாற்காலியை இழுத்துப்போட்டு அருகில் அமருமாறு சைகைசெய்கிறார்: “உடம்பு சரியில்லை, டாக்டரைப் போய்ப் பார்த்தேன். என்ன மருந்து எழுதினார்னு தெரியலை. மாத்திரை முழுங்கினதிலேர்ந்து மயக்கமாவே இருக்கு” என்றவர், சத்யா என்பவரை அழைக்கிறார். சத்யா வந்ததும் அவரிடம் சாப்பிட எடுத்துவரச் சொல்லி சைகை காட்டுகிறார். சத்யா அகன்றதும், “சத்யா என்னோட மகன் மாதிரி. தப்பு. அவன் என்னோட வளர்ப்பு மகன்” என்கிறார். கொஞ்சம் இடைவெளி விட்டு, “சத்யா எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிச்சிருக்கான். டிரைவர் வேலைக்குத்தான் என்கிட்ட வந்தான். ‘தமிழ் இலக்கியம் படிச்சுட்டு என்ன செய்யப்போற’ன்னு கேட்டுட்டு, நான்தான் சினிமா கத்துக்கச் சொன்னேன். இப்போ சத்யா சினிமா படிக்கிறான். அவனும் என்னுடைய மாணவன். ஏதோ, நம்மால முடிஞ்சது இப்படிப்பட்ட உதவிகள்தான்” என்கிறார்.

சத்யா ஒரு கோப்பையில் காய்கறி சூப்பைக் கொண்டுவந்து கொடுக்கவும், மெல்ல அதைக் கரண்டியால் எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கிறார். அவருடைய கைகள் நடுங்கி, சட்டையில் சூப் சிந்துகிறது. தொடர்ந்து ஒவ்வொரு முறை சூப்பை உறிஞ்ச வாய்க்குக் கொண்டுசெல்லும்போதும், சூப் சிந்துகிறது. ஆனால், அதை உணரவோ தடுக்கவோ அவரால் முடியவில்லை. நகரும் கணங்கள் சங்கடமாக மாறுவதை உணர்ந்தவராக, அருகில் இருந்த ஒரு புகைப்படத்தைக் கையில் எடுத்துக்கொடுத்து, “இந்தப் படத்தைப் பார்த்திருக்கீங்களா?” என்கிறார்.

அது கொஞ்சம் அரிதான படம். ஒலிப்பதிவுக் கூடத்தில் கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையில் அவர் ஓவெனக் கத்துவது போன்ற படம் அது. “‘மூன்றாம் பிறை’யில ஸ்ரீதேவி பயந்து கத்துவது மாதிரியான காட்சியில, எப்படிக் கத்தணும்னு நான் விளக்கினப்போ எடுத்த படம் இது. ரவி எடுத்தது. ரவி எப்போ, எங்கேர்ந்து படம் எடுக்கிறார்னே தெரியாது” என்பவருக்குள் இருக்கும் புகைப்படக்காரர் வெளியே வருகிறார். “நான் ஸ்ரீதேவியை எடுத்த படத்தை நீங்க பார்க்கணுமே…” என்றவர் கொஞ்சம் உற்சாகம் வந்தவராக, மெல்ல எழுந்து, படங்கள் தொங்கும் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.ஸ்ரீதேவியின் அற்புதமான ஒரு படத்தைக் காட்டுகிறார்: “என்னா அழகு!”

கூடவே அங்கு மாட்டப்பட்டிருக்கும் ஏராளமான படங்களிடையே ரஜினியோடு நிற்கும் ஒரு படத்தைக் காட்டுகிறார். பாலு மகேந்திராவும் ரஜினியும் நின்றுகொண்டிருக்க, அவர்கள் அருகே கீழே அமர்ந்திருக்கும் மாதவி பாலு மகேந்திராவை ரசித்துப் பார்க்கும் படம் அது.

“தனுஷ் இங்கே வந்தப்போ இந்தப் படத்தைப் பார்த்தார். ‘சார்... மாதவியோட பார்வையைப் பாருங்க சார்... எங்க மாமனாரைப் பார்க்கலை; உங்களையே பார்க்கிறாங்க'னு சொன்னார். அப்புறம்தான் கவனிச்சேன். மாதவி என்னைத்தான் பார்த்துக்கிட்டுருக்கார்; இல்லையா?” - சிரிக்கிறார்.

“அந்தக் காலத்தில் அட்டகாசமாக இருந்திருக்கிறீர்கள் சார்…”

“ஏன், இப்போது மட்டும் என்னவாம்?” மீண்டும் சிரிப்பு.

“எல்லோர் படமும் இருக்கு. சில்க் ஸ்மிதா படம் இல்லையே?”

“ஏன் இல்லை? என் மனசுல இருக்கு” என்கிறவர் கொஞ்சம் இடைவெளிவிட்டு,“சில்க் பேரழகி. அவளோட முகம், உடல், கால்கள்... சில்க் பேரழகி. அவளுடைய உதட்​டுச் சுழிப்பு போதுமே... கவர்ச்சிக்கும் கிறக்கத்துக்கும். அத்தனை சக்தி உண்டு அவ அழகுக்கு. ”

“ஸ்ரீதேவியைவிடவும் சில்க் அழகா?”

“ஆமாம். திராவிட அழகோட உச்சம் இல்லையா அவ?ஸ்ரீதேவியும் அழகிதான். ஆனா, அவளோட சிவப்பு நிறம் திகட்டக்கூடியது. சில்க் அப்படி அல்ல” என்றவர், அப்படியே சில நிமிஷங்கள் யோசனையில் ஆழ்கிறார். “ஒரு பேரழகிங்கிறதைத் தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்? அப்படி ஒரு முடிவு அவளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. நல்ல ஆன்மாக்கள் நம்மகிட்ட நீண்ட நாளைக்கு நீடிக்க முடியாமல்போறது ஒரு சாபக்கேடு” என்கிறார். பேச்சு அவருடைய பழைய படங்கள், நண்பர்களைப் பற்றிச் செல்லும் வேளையில், ஷோபாவிடம் போய் நிற்கிறது. மீண்டும் யோசனையில் ஆழ்கிறார்.  “உங்களுக்கு ஒரு கனவு வரும்போது அதுல சந்தோஷமான, துக்கமான, குழப்பமான, நிம்மதியில்லாத இப்படி எல்லா உணர்வுகளும் அதிலே இருக்கும், இல்லையா? அப்படி ஒரு கனவு ஷோபா. வேறென்ன சொல்ல?” என்றவர் இரும ஆரம்பிக்கிறார்.

சத்யாக்களைவிடவும் நாராயணமூர்த்திகளே இந்தியாவுக்குத் தேவை!



சத்யா நாதெள்ள


உலகின் பெரும் பணக்காரராக பில் கேட்ஸை உட்காரவைத்த இடம், உலகெங்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ. 4.8 லட்சம் கோடி வருமானம் வரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக பீடம், ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடம். அதில் உட்காருகிறார் சத்யா நாதெள்ள. ‘பெப்சிகோ’ நிறுவனத்தின் இந்திரா நூயி, ‘டாய்ச் வங்கி’யின் அன்ஷு ஜெயின், ‘டீயாஜீயோ’ நிறுவனத்தின் இவான் மெனிஸிஸ், ‘ரெக்கிட் பென்கிஸர்’ நிறுவனத்தின் ராகேஷ் கபூர், ‘பெர்க்‌ஷைர் ஹாத்வே’ நிறுவனத்தின் அஜித் ஜெயின் என ஏற்கெனவே சில பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி பணியிடங்களில் இந்தியர்கள் பணியாற்றிவந்தாலும், சத்யா நாதெள்ள தேர்வு பெரும் செய்தியாகியிருக்கிறது. ஆண்டுக்கு
ரூ. 16.65 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், ரூ. 19.05 லட்சம் கோடி மதிப்பு கொண்ட ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தின் தலைமைப் பதவி ஏற்படுத்தும் பிரமாண்டமான பிம்பம் பிரமிக்கத் தக்கது அல்ல.
சத்யா கொண்டாடப்பட வேண்டியவர். சரிதான். ஆனால், நாம் பேச வேண்டிய விஷயம் அதுவல்ல; இப்படிப்பட்ட அபாரமான மூளைகளின் உழைப்பும் திறனும் ஏன் இந்தியாவுக்குப் பயன்படவில்லை?

சுகுமார் சென் எனும் ஜனநாயகத் தூண்



சுகுமார் சென்


நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டாடுபவராக இருந்தால், சுகுமார் சென்னையும் கொண்டாட வேண்டும். இந்தியாவின் தேர்தல் ஜனநாயகப் பாதைக்கு அடித்தளம் அமைத்தது காந்தி; பாதையை வகுத்தது நேரு என்றால், பாதையைக் கட்டமைத்தவர் சுகுமார் சென். நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையர்.

ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்





 திருவாரூர். 1938. சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 13 வயது கருணாநிதியின் மனதில் அரசியல் விதையாக விழுகிறது அழகிரியின் பேச்சு. பின் கருணாநிதி மாணவர் மன்றம் தொடங்குகிறார்; பத்திரிகை தொடங்குகிறார்; பேசுகிறார், எழுதுகிறார், நாடகம் போடுகிறார்; பெரியார், அண்ணாவைச் சந்திக்கிறார்… பின்னர் நடந்தவை எல்லாம் வரலாறு. சரியாக 77 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதியின் வரலாற்றில் பட்டுக்கோட்டை அழகிரி இடம்பெற்ற சூழலையும் இன்றைக்கு மு.க.அழகிரி இடம்பெறும் சூழலையும் இணைத்துப் பாருங்கள்… திராவிட இயக்கமும் கருணாநிதியும் தமிழக அரசியல் சூழலும் எவ்வளவு சீரழிந்திருக்கின்றன?

திராவிட இயக்கத்தின்பால் பற்றுகொண்ட எவரும் வாழ்வில் ஒருமுறையாவது அந்தக் கேள்வியை எதிர்கொண்டிருப்பார்கள்: கருணாநிதிக்குப் பின் தி.மு.க. என்னவாகும்? இதோ அதையும் தன் காலத்திலேயே நடத்திக்காட்ட ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி.

இலங்கை அரசு மாறாதவரை நல்லிணக்கம் உருவாகாது: இரா. சம்பந்தன்

சமஸ் - சம்பந்தன் உரையாடல்
இராஜவரோதயம் சம்பந்தன். இலங்கைத் தமிழர்களின் அரசியல் குரல். வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். போருக்குப் பின் இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் சர்வதேசம் எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறைக்கு முக்கியக் காரணம், எண்பதைத் தொடும் நிலையிலும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கும் சம்பந்தனின் முயற்சிகள். ஒருபுறம் தமிழர்களிடம் சாத்வீகத்தையும் சிங்களர்களிடம் நல்லிணக்கத்தையும் போதித்துக்கொண்டே மறுபுறம் பேரினவாத இலங்கை அரசுக்கு எதிரான தம்முடைய அறப் போராட்டங்களை எல்லைகள் தாண்டி எடுத்துச் செல்கிறார் சம்பந்தன்.

போருக்குப் பிந்தைய ஐந்தாண்டுகள், கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்த தேர்தல்… இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?
தமிழர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இழப்பை ஏற்படுத்திய போர் இது. எம் மக்கள் தம் வாழிடங்களை, வாழ்வாதாரங்களை, சொந்தங்களை எல்லாவற்றையுமே இழந்தார்கள். யுத்தம் முடிந்தாலும் அது ஏற்படுத்திய பாரிய பாதிப்பிலிருந்து இன்னமும் அவர்கள் வெளிவரவில்லை. அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசினால் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை; அரசு சார்பில் அப்படி உதவிகள் என்று செய்யப்பட்டவை மிகவும் அற்ப சொற்பமானவை.
உள்ளபடி, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஆக்கபூர்வமான சில உதவிகள்தான் மக்கள் தலையெடுக்க ஓரளவேனும் உதவுகின்றது. ஒருபுறம் மக்களின் மறுவாழ்வைக் கட்டி எழுப்புவதில் இப்படி அலட்சியம் செய்யும் அரசு, மறுபுறம் போருக்குப் பின் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையிலும்கூட ராணுவ ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொண்டே செல்கின்றது. ஏறத்தாழ ஒன்றரை லட்சம் படைப்பிரிவினர் - அதாவது, தமிழர் பகுதியில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற வீதத்திலே - அங்கே ராணுவத்தினர் நிற்கின்றார்கள்.
ராணுவம் எல்லாக் கருமங்களிலும் ஈடுபடுகின்றது. ராணுவம் விவசாயம் செய்கின்றது; வியாபாரம் செய்கின்றது; பலவிதமான போர்வைகளில், எம் காணிகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது. எவ்வளவோ நெருக்கடிகளுக்கும் சங்கடங்களுக்கும் இடையிலேதான் எம் மக்கள் இருக்கின்றார்கள். சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் எம் மக்கள் வாழ்கின்றார்கள் என்று சொல்லும் நிலை இல்லை. இந்த நிலை மாறவேணும்; மாறாவிட்டால், நல்லிணக்கம் ஒருபோதும் உருவாகாது.

அழிவைதான் பின்னோக்கி இழுக்கிறேன்: நம்மாழ்வார்




வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த ஒரு விவசாயியாக, விவசாயிகளோடு விவசாயத்துக்காகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். பாரம்பரிய விவசாயத்தை நோக்கி ஆயிரக் கணக்கான விவசாயிகளைத் திசைதிருப்பியதில் தொடங்கி, தமிழர் உணவிலிருந்து மறைந்தேபோன சிறுதானியங்கள் இன்று பேரங்காடிகளில் கிடைக்கும் நிலையை உருவாக்கியது வரை தமிழகத்தில் மகத்தான மாற்றங்களை உருவாக்கிய நம்மாழ்வாருடன் சில காலத்துக்கு முன் நடத்திய ஒரு நீண்ட உரையாடலின் சுருக்கப்பட்ட தொகுப்பு இது.

சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம்

 ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம்

இந்தியாவின் முக்கியமான, மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.

கொலைக் குற்றமா கருக்கலைப்பு?



 

                     கடந்த ஆண்டு அயர்லாந்து இருந்த இடத்தில் இந்த ஆண்டு ஸ்பெயின். பெண்கள் அமைப்புகள் கொடிகளை ஏந்தி நிற்கின்றன. அயர்லாந்து சட்டம் கருக்கலைப்பை அனுமதிக்காத நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த சவிதா அங்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டு உயிரிழந்தபோது அயர்லாந்து சர்ச்சையில் சிக்கியது; ஏற்கெனவே உள்ள சட்டத்தை மேலும் இறுக்கிக் கிட்டத்தட்ட கருக்கலைப்புத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து, சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ஸ்பெயின். பெண்களின் கருப்பைக்கான உரிமையை மேலாதிக்கம் செய்வதில் வளர்ந்த நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்ற வேறுபாடு இல்லை; உயிர்களைவிடவும் மதமும் நம்பிக்கைகளுமே அங்கு முக்கியம்.



அமுதா ஏன் இறந்தார்?



நம்மூர் கதைக்கு வருவோம். மதுரையைச் சேர்ந்த அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த வாரம் உயிரிழந்தார். அவருடைய மூன்றாவது வீட்டுப் பெண்களுக்குக்கூட அமுதாவின் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியாது. காய்ச்சலில் கிடந்து அவர் இறந்துபோனதாக அமுதாவின் உறவுக்காரர்கள் எல்லோரிடமும் சொன்னார்கள். உண்மையான காரணம் - கருக்கலைப்பின் தொடர்ச்சியாக ஏற்பட்ட நோய்த்தொற்று.

ஆனால், அமுதாவின் மரணத்துக்கான காரணம் ஏன் மறைக்கப்பட்டது? இத்தனைக்கும், அமுதாவுக்குக் கணவர் இருக்கிறார்; மேலும், இரு குழந்தை களுக்கு அவர் தாய்.


பதில்... குற்ற உணர்வும் அவமானமும்.

முன்மாதிரியா கெஜ்ரிவால் அரசியல்?


                வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் தேர்தலிலேயே அவருடைய ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் வென்றிருக்கும் 28 இடங்கள்; ஆளும் காங்கிரஸை வெறும் எட்டு இடங்களுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்துக்கு 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கொடுத்த தோல்வி, எல்லாவற்றுக்கும் மேல், டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டின் அரசியல் போக்கையும் அவர் தீர்மானிக்கும் வியூகம்… சந்தேகமே இல்லாமல் கவனிக்கப்பட வேண்டியவர் கெஜ்ரிவால்.

அதே சமயம், தேசிய ஊடகங்கள் சித்தரிக்கும் ‘இந்திய பாணி அரபுப் புரட்சி’யா இந்த வெற்றி? அமார்த்திய சென் சொல்வதுபோல, மிக முக்கியமான புறப்பாடா? ராகுல் சொல்வதுபோல, ஆம்ஆத்மியிடமிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமா? சில அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோல, இடதுசாரிகள் பரிசீலிக்க வேண்டிய சித்தாந்தமா ஆம்ஆத்மியின் சித்தாந்தம்? சுருக்கமாக, இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கொண்டாடும் முன்மாதிரியா கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசியல்?

நாம் நிறைய உணர்ச்சிவசப்படுகிறோம் என்று தோன்றுகிறது.

நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்?


மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்குஅழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின்  பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.  ‘‘சூப்பர்மேனுக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது,  “அமெரிக்க செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக்கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.

எது மண்டேலாவைத் தனித்துவப்படுத்துகிறது?





நம் காலத்தின் மிகச் சிறந்த அறம்சார் அரசியல் முன்னோடி என்று நெல்சன் மண்டேலாவைக் குறிப்பிடலாமா?
இன்றைய தலைமுறையின் முன் ஒரு சே அளவுக்கு,  ஃபிடல் அளவுக்கு, ஏன் சாவேஸ் அளவுக்குக்கூடப் புரட்சி பிம்பம் இல்லாதவர் மண்டேலா. வரலாறோ மண்டேலாவையே முன்னிறுத்தும்.
எது மண்டேலாவைத் தனித்துவப்படுத்துகிறது? ஆப்பிரிக்கப் பின்னணியில் அவர் நடத்திய போராட்டங்களைவிட, அவர்  தொடங்கிய வேகத்திலேயே கைவிட்ட – நடத்தாத  ஆயுத  யுத்தமே தனித்துவப்படுத்துவப்படுத்துகிறது.

இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் ஒரு குரூர நகைச்சுவை: குணால் சாஹா


மருத்துவ ஆராய்ச்சியாளர் குணால் சாஹா.
இந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா. இந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. “இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்” என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள். சாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்களை அம்பலப்படுத்துகிறது; கூடவே இந்திய மருத்துவத்தைச் சூறையாடும் பண வெறியையும்.

ஓர் இளம் ஆராய்ச்சியாளராக உங்கள் கனவு, உங்கள் மனைவியின் கனவு, உங்கள் மனைவியின் மரணம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம்… இவை எல்லாமும் வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். சுருக்கமாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்களேன்.
நாங்கள் இருவரும் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால், 1985 வரை சந்தித்திருக்கவில்லை. அப்போது அனுராதா தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பு முடித்திருந்தாள். அவள் தன் சகோதரனின் திருமணத்துக்காக இந்தியா வந்திருந்தாள். நானோ, கொல்கத்தாவில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்படத் தயாராக இருந்தேன். பொது நண்பர் ஒருவரால் நாங்கள் சந்தித்தோம். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி; நாங்கள் எங்களுக்காகப் பிறந்தவர்கள் என்றே நினைத்தோம். 1987-ல் நாங்கள் திருமணம்செய்துகொண்டோம்.

அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் இளம் தம்பதியர் பலரைப் போலவே நாங்கள் படித்துக்கொண்டே எங்கள் துறையில் நன்கு காலுன்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 1998-ல் நாங்கள் இருவரும் எங்கள் துறையில் மேல்படிப்பை முடித்தோம். எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த ஆய்வும் உயர் பயிற்சியும் எனது துறை. நியூயார்க்கில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ‘குழந்தைகள் உளவியல்’ துறையில் முதுகலைப் பயிற்சியை அப்போதுதான் முடித்திருந்தாள் அனு.
நாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்க அதுவே தருணம். எனவே, பரபரப்பான நியூயார்க் நகரத்தை விட்டுப் புறப்படலாம் என்று முடிவெடுத்தோம். ஒஹியோ மாகாணப் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. ஆராய்ச்சி மையத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அனு தனது துறையில் முழுமூச்சுடன் இறங்குவதற்கு முன் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சிறு இடைவெளி விடலாம் என்று நினைத்தாள். குழந்தையோடு, புது வாழ்வைத் தொடங்குவதற்கு முன் கொல்கத்தா சென்று தன் குடும்பத்தினரின் ஆசியைப் பெற்றுவரலாம் என்று விரும்பினாள். எங்கள் அமெரிக்கக் கனவை நிறைவுசெய்யும் விதத்தில் எல்லாமே கச்சிதமாக இருந்தது. ஆனால் விதி நினைத்ததோ வேறு.