இந்த வருஷம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நாளில் மேட்டூரில் இருந்தேன். அங்கிருந்து கரையோரமாக பூம்புகார் வரை போய் வரலாமா என்று தோன்றியது. ஆற்றுக்குப் புது வெள்ளம் வரும்போது அதை வரவேற்பதற்கு என்று ஒரு மரபு உண்டு. பேராசிரியர் தங்க.ஜெயராமன் அடிக்கடி அதை நினைவுகூர்வார். “அந்நாட்களில் ஆற்றில் இப்படித் தண்ணீர் வருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே காவிரிப் படுகையில், குடிமராமத்து நடக்கும். ஊர் கூடி ஆற்றைத் தூர்வாரி, இரு கரைகளையும் மேம்படுத்தி, கால்வாய்களையும் வாய்க்கால்களையும் சீரமைப்பார்கள். ஆற்றில் தண்ணீர் வரும் நாளில், காவிரிப் பெண்ணை ஆரத்தித் தட்டுடன் வரவேற்பார்கள். சூடம் கொளுத்திச் சுற்றுவார்கள். அப்படியே விழுந்து வணங்குவார்கள். புது வெள்ளம் நெருங்கியதும் அதன் மீது பூக்களைச் சொரிவார்கள். அவள் நம் வீட்டுப் பெண். அவள் வந்தால்தான் வயல் நிறையும். வீட்டில் அன்னம் நிறையும். செல்வம் பெருகும். ஆறா, அம்மா அவள். மகளாகப் பிறக்கும் தாய். அள்ளிக்கொடுக்கும் தாய். தெய்வம். வீட்டு தெய்வம்.” இதை ஜெயராமன் சொல்லி முடிக்கும்போதெல்லாம் அவருடைய கண்களில் நீர் கோத்திருக்கும்.
காவிரிக் கரையையொட்டிப் பயணிப்பது ஒரு பேரனுபவம். எழுத்தாளர்கள் தி.ஜானகிராமனும் சிட்டியும் குடகில் தொடங்கி பூம்புகார் வரை பயணித்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி..’ புத்தகம் ஒரு தனித்துவமான பதிவு. நான் கல்லணையையொட்டி மழை நாட்களில், தண்ணீர் பொங்கும் நாட்களில் கொஞ்சம் பயணித்ததுண்டு. காவிரியில் தண்ணீர் இல்லா நாட்களில், தண்ணீர் வரும் நாட்களில் பயணித்ததில்லை. அப்படிச் செல்ல நினைத்ததையும் அங்கு பார்க்க நேர்ந்ததையும் என்னவென்று சொல்வது? தீவினை. சபிக்கப்பட்ட ஒரு நாள் அது.
ஆறா? எங்குமே அது ஆறாக இல்லை. கரைகள் தளர்ந்திருந்தன. வழிநெடுகிலும் புதர் மண்டிக் கிடந்தது. இடையிடையே மணல் கொள்ளையர்களின் சூறையாடலைச் சொல்லும் பெரும் பள்ளங்கள். காய்ந்து கிடந்த ஆற்றில் தண்ணீர் தென்பட்ட இடங்கள் அத்தனையும் கழிவுகள் கலக்கும் முகவாய்கள். ஆலைக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள், ஊர்க் கழிவுகள். இவை அத்தனையோடும் புது வெள்ளம் ஒன்றிக் கலக்கிறது. ஆற்றுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சேதத்தை மூடி நிறைக்கிறது. அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு காரணங்களுக்காகக் காவிரிப் படுகைக்குச் செல்ல நேர்ந்தது. கல்லணையிலிருந்து இந்த முறை தண்ணீர் திறக்கப்பட்ட நாளில் தஞ்சாவூரில் இருந்தேன். அதே நாளில் கும்பகோணம் சென்றேன். மன்னார்குடி சென்றேன். திருவாரூர் சென்றேன். ஒரு இடத்திலும் தூர்வாரப்பட்டிருக்கவில்லை. எங்கும் புதர்கள், மணற்சூறை, கழிவுகள்... இரு மாநிலங்கள் தீப்பிடித்து எரிகின்றன; ஒவ்வொரு நாளும் இங்கு வந்தடையும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியே பெறுகிறோம். இந்தச் சூழலிலும் ஒரு நதியை இப்படித்தான் சீரழிப்போம் என்றால், எவ்வளவு கேவலமானவர்கள் நாம்!



































