முதல்வர் வேட்பாளர்: ஜனநாயகமா, சர்வாதிகாரமா?


தொடர்ந்து பயணங்கள். குறுக்கும் நெடுக்குமாக. தேர்தல் சூடு பரவும் சூழலில், தமிழக மக்களின் மனநிலை ஓரளவுக்குப் பிடிபடுவதுபோலவே தோன்றுகிறது. ரயிலோ, பஸ்ஸோ, ஆட்டோவோ உடன் பயணிப்பவர்கள் யாராக இருந்தாலும் பேச்சில் இயல்பாக வந்து அரசியல் ஒட்டிக்கொள்கிறது. நம்மூரில் மக்கள் தயக்கத்தைவிட்டு அரசியல் சூழலை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டாலே, ஆளுங்கட்சிக்கு அனர்த்தம் என்று அர்த்தம். வெளிப்படையாக அதைப் பார்க்க முடிகிறது. அடுத்து யார் என்று கேட்டால், பொதுவாக, மறுபடியும் இவங்களேதான் சார் என்றோ அடுத்த பெரிய கட்சியின் தலைவர் பெயரோதான் பதிலாக இருக்கும். இப்போது அவற்றைத் தாண்டி “இரண்டு பேருமே வரக்கூடாதுங்க” என்கிற குரல்களும் சகஜமாக கேட்கின்றன. “சரி, அப்போ வேற யாரு?” என்றால், “அதாங்க குழப்பமா இருக்கு. நம்பிக்கையா யாருமே கண்ணுல தெரியலீயே!” என்கிறார்கள்.

தமிழகத்தில் ஏனைய கட்சிகளைத் தாண்டி இடதுசாரிகள் மூன்றாவது அணியாக உருவாக்கியிருக்கும் ‘மக்கள் நலக் கூட்டணி’ எல்லோர் கவனத்திலும் விழுந்திருக்கிறது; ஆனால், மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கும் கூட்டணியாக அதுவும் உருவெடுக்கவில்லை. “கூட்டணியெல்லாம் சரி, யாரை நம்பி ஓட்டுப்போட? ஜெயிக்குறதுக்கு முன்னாடியே எங்காளு இவருதான்னு ஒத்துமையா ஒருத்தரை அவங்களால காட்ட முடியலீயே!” என்று கேட்டார் ஆட்டோக்காரர் குமரேசன். மக்களால் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாமல் இருக்கலாம்; தங்கள் தேவையைக் கோடிட்டுக் காட்ட ஒருபோதும் அவர்கள் தவறுவதில்லை.

இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?


திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.


காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?



தென்காசி போயிருந்தேன். ரயிலில் வழக்கம்போல் உடன் பயணித்தவர்களுடன் உற்சாகமான உரையாடல் அமைந்தது. இளைஞர்கள் இருவர் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் தொடர்பாகப் பேச ஆரம்பித்தனர். உரையாடல் மெல்ல சாதி நோக்கி நகர்ந்தது. பேச்சு சமகால தலித் இயக்கங்கள், அம்பேத்கர், காந்தி என்று விரிந்து, காந்தி எனும் புள்ளியைத் தொட்டபோது, அவர்களிடமிருந்து கசப்பான வார்த்தைகள் விழத் தொடங்கின. “சமூக விடுதலைக்கு காந்தியை எப்படி ஒரு வழிகாட்டியாகக் கருத முடியும்?” என்றார் ஒருவர். “இந்தியாவில் தலித் அரசியலை சிசுவிலேயே சிதைக்கப்பார்த்தவர் காந்தி” என்றார் இன்னொருவர். சாதியத்துக்கு எதிரான காந்தியின் செயல்பாடுகள் சிலவற்றை நான் குறிப்பிட ஆரம்பித்தபோது, “காந்தி தலித்துகளுக்காகப் பேச ஆரம்பித்ததெல்லாம் பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகுதானே? அதுவும் அம்பேத்கர் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் பேச ஆரம்பித்தார்?” என்றார்கள் இருவரும். இப்படியான புரிதலற்ற பேச்சுகள் புதியன அல்ல. எனினும், நாளுக்கு நாள் இத்தகைய கசப்புணர்வுகள் இளைய தலைமுறையிடம் வளர்வது, இந்தியாவில் விளிம்புநிலை அரசியல் எதிர்கொள்ளும் பேராபத்தாகவே தோன்றுகிறது. காந்திய வெறுப்பு அரசியலுக்குப் பின், குறைந்தது நூற்றாண்டு வரலாறும் பலதரப்பு அரசியல் சதிகளும் இருக்கின்றன. காங்கிரஸை ஒழித்து தம் அரசியலை முன்னே கொண்டுவர அநேகமாக இந்தியாவின் ஏனைய அரசியல் கட்சிகள் பெரும்பான்மையும் காந்தி எதிர்ப்பை ஒரு செயல்திட்டமாகவே முன்னெடுத்திருக்கின்றன. மறுபுறம், காங்கிரஸோ காந்திய மதிப்பீடுகளிலிருந்து விடுபட காந்தியை மறக்கத் துடித்தது. இன்றைய சூழலில் எந்த அரசியல்வாதிக்குத்தான் காந்தி தேவைப்படுவார்!

சிறு வயதில் வீட்டு வேலைக்காரர் ஒருவரின் மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார் காந்தி. இதைப் பார்க்கும் புத்திலிபாய் காந்தியை அழைத்து, அந்தச் சிறுவனுடன் பேசக் கூடாது என்று கூறி காந்தியைக் குளிக்கச் சொல்கிறார். காந்தி காரணம் கேட்கிறார். அந்தச் சிறுவன் கீழ்சாதியைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடும் புத்திலிபாய், அவனுடன் பேசியதால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது காந்தி தன் தாயிடம் கேட்கிறார், “நாம் எல்லோரும் ராமனின் குழந்தைகள் என்று சொல்வீர்களே, அப்படியென்றால் உக்காவும் ராமனின் குழந்தைதானே?”

உயர் கல்விக்காக காந்தி லண்டன் செல்ல முடிவெடுக்கும்போது அவருக்கு வயது 15. அவர் சார்ந்த மோத் சாதி வழக்கப்படி வெளிநாட்டுப் பயணத்தை அனுமதிக்க முடியாது என்று சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்கள் சாதியத் தலைவர்கள். “வெளிநாடு செல்வேன். இதில் சாதி தலையிடவே கூடாது” என்கிறார் காந்தி. காந்தியை சாதி பிரஷ்டம் செய்கிறார்கள். சாதியை மீறியே காந்தி வெளிநாடு சென்றார்.

தென்னாப்பிரிக்காவில் அவர் எதிர்கொண்ட முதல் அடித்தட்டு மனிதரின் வழக்கு பாலசுந்தரத்தினுடையது. தன்னுடைய முண்டாசுத் துணியைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு, இரு கைகளையும் கூப்பியவாறு கூனிக்குறுகி, உடைந்த பற்களிலிருந்து ரத்தம் வழிய காந்தி முன் வந்து நின்ற தமிழர். கூலித் தொழிலாளி. அவரை வேலைக்கு அமர்த்தியிருந்த ஆங்கிலேயர் பாலசுந்தரத்தை அத்துமீறித் தாக்கியிருக்கிறார். பாலசுந்தரத்தின் முழுக் கதையையும் கேட்கும் காந்தி அவருக்காகப் பேச முடிவெடுக்கிறார். பாலசுந்தரத்திடம் இதைத் தெரிவிக்கும்போது கூடவே சொல்கிறார், “தயவுசெய்து உங்கள் முண்டாசுத் துணியைக் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்.” பின்பு ‘சத்திய சோதனை’யில் எழுதுகிறார். “மனிதர்கள் தம் சகோதர, சகோதரிகளை அவமானப்படுத்துவதன் மூலம் தாங்கள் கவுரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது என்றைக்குமே எனக்குப் புரிந்துகொள்ள முடியாத மர்மமாக இருக்கிறது.”

தென்னாப்பிரிக்காவில் கூலிகளாக இருந்த இந்தியர் களில் கணிசமானோர் தாழ்த்தப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்டவர்களுடனான ஆழமான உறவு காந்திக்கு அங்கே ஏற்பட்டுவிட்டது. இந்தியச் சேரிகளுக்கு இணையான குடியிருப்புகளே அங்கும் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. “நாம் நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும் என்றால், முதலில் கண்ணியமான வாழ்க்கை முறைக்கு நாம் மாற வேண்டும்” என்று அவர்களிடம் கூறினார் காந்தி. கூலிகளின் சேரிகளுக்குச் சென்று பணியாற்றுகையில் அவர் தொடர்ந்து அவர்களிடம் வலியுறுத்திய இரு விஷயங்கள்: 1. சுகாதாரம், 2. கல்வி. தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள ஆங்கிலம் படிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார் காந்தி.

ஆரம்ப நாட்களிலேயே உடன் வேலைசெய்வோரைப் பாகுபாடின்றி வீட்டில் தங்கவைக்கும் பழக்கம் காந்தியிடம் இருந்தது. அப்படித் தங்கியிருந்த ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரின் கழிவுச்சட்டியைச் சுத்தம்செய்ய கஸ்தூர் பா மறுத்ததே காந்தி அவரிடம் கடுமையாக நடந்துகொள்ளக் காரணமாக இருந்தது. 1904-ல் பீனிக்ஸ் குடியிருப்பில் வேலைகள் தொடங்கிவிட்டன. பல்வேறு சமூகத்தினரும் சமத்துவத்தோடும் கூட்டுறவோடும் வாழும் முயற்சி இந்தக் குடியிருப்பு. ‘யார் எந்தப் பணியில் இருந்தாலும் சரி, உடலுழைப்பிலும் ஈடுபட வேண்டும், எல்லோரும் எல்லா வேலைகளிலும் பங்கேற்க வேண்டும்’ என்பது காந்தி வகுத்த அடிப்படைக் கட்டுப்பாடுகளில் ஒன்று. மலம் அள்ளுவது உட்பட.

1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் காந்தி ஆற்றிய தலைமை உரையில் குறிப்பிடுகிறார், “நாம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்காகப் போராடுகிறோம். ஆனால், நம்மில் பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல், தீண்டாமைக் கொடுமையால் பிரித்துவைத்திருக்கிறோம். தீண்டாமை தொடரும் வரை நமக்குச் சுயராஜ்யம் சாத்தியமே இல்லை.”

வைக்கம் போராட்டம் 30.3.1924 அன்று தொடங்கியது. முன்னதாக வைக்கத்தில் உள்ள மோசமான சூழலை விவரித்து கேசவ மேனன் எழுதும் கடிதத்துக்கு 19.03.24 அன்று பதில் கடிதம் எழுதுகிறார் காந்தி. வைக்கம் போராட்டத்துக்குத் தன் முழு ஆதரவைத் தெரிவித்து எழுதும் இக்கடிதத்தில், காந்தி குறிப்பிடுகிறார், “அவர்கள் தீண்டாதவராக இருப்பது மட்டுமல்ல; சில தெருக்களில் நடக்கவும் கூடாது என்ற நிலை எவ்வளவு வேதனைக்குரியது! நமக்கு ஏன் இன்னமும் சுயராஜ்யம் கிடைக்கவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமே இல்லை. நம் நாட்டின் தாழ்ந்த வர்க்கத்தினர் பொது வழிகளில் நடக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றே தீர வேண்டும்.”

முக்கியமான விஷயம், இந்த விஷயங்கள் எல்லாம் நடந்த காலகட்டங்களில் அம்பேத்கர் பிறக்கவேயில்லை அல்லது சிறுபிராயத்தில் இருந்தார் அல்லது படித்துக்கொண்டிருந்தார்.

கான்: ஒரு வழிகாட்டி!


கான் அப்துல் கஃபார் கானின் 125-வது ஆண்டு இது. தன்னுடைய வாழ்நாளில் 27 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். அதில் 14 ஆண்டுகள், இந்தியச் சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அவர் அனுபவித்தவை. ஒரு லட்சம் பஷ்தூனியர்கள் அணிவகுத்த அஹிம்சைப் படையை உருவாக்கியவர். இந்தியப் பிரிவினையின்போது, “எங்களை ஓநாய்களிடம்  வீசியெறிந்துவிட்டீர்கள்” என்று காந்தியிடம் கூறிவிட்டு, கலங்கிய கண்களுடன் விடைபெற்றவர். இந்தியாவில் ஒரு இடத்திலேனும் இந்த ஆண்டு கான் நினைவுகூரப்பட்டதாகத் தெரியவில்லை. அரசியல் அடையாள நிமித்தமாகவேனும் நேருவின் 125-வது ஆண்டைக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சி, கானை முற்றிலுமாகவே கைகழுவிவிட்டது. சரி, இந்திய முஸ்லிம்களே மறந்துவிட்ட ஒரு மாமனிதரை காங்கிரஸ் மறந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஆனால், இன்றைக்கு இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பவராக கான் இருக்க முடியும்.

காளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்?


அலங்காநல்லூர். இந்தக் குளிர்காலத்திலும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வேலையை ஆரம்பித்துவிடுகிறார் செல்வம். வீட்டில் ஐந்து மாடுகள் நிற்கின்றன. இவற்றைத் தாண்டி உதவி என்று கேட்பவர்களின் மாடுகளைப் பராமரிக்கவும் ஓடுகிறார். “நமக்கு பால் மாடு வளப்புதான் பொழைப்பு. ஜல்லிக்கட்டு காளைகள பழக்குறது பொழுதுபோக்கு. ஆறு மாசக் கன்டா இருக்குறப்பவே காளய பழக்க ஆரம்பிப்பாய்ங்க. அதோட சேந்து நாமளும் நடக்கிறது, நீச்சல் அடிக்கிறது, குத்துப் பழக்குறதுன்னு விளையாடறப்ப நமக்கும் வயசு குறைஞ்சுரும்” என்கிறார்.

செல்வத்துடன் பேசிக்கொண்டே இருந்தால், ஒரு மாட்டை வாங்கிக்கொண்டு கிராமத்துப் பக்கமாகப் போய்விடலாமா என்று தோன்றும். அப்படி ஒரு பிரியமான பேச்சு மாடுகள் மீது!

“பொறந்ததுலேர்ந்து மாட்டோடதான்யா கெடக்குறோம். மாடுங்க இல்லாட்டி வாழ்க்கையே இல்லை. நம்மளவிட யாருக்கு மாட்டைப் பத்தி தெரியப்போவுது? இந்தச் சல்லிக்கட்டு சமயத்துலதான்யா பூராப் பயலும் மாட்டு மேல அக்கறையிருக்கிற மாதிரிப் பேசிக்கிட்டு வர்றாய்ங்க. நல்ல நாள்ல இங்கெ மாடுக என்ன கதியில கெடக்குதுன்னு ஒரு பயலுக்கும் அக்கறை கெடையாது.

தமிழ்நாட்டோட பாரம்பரிய மாட்டினம் பூராவும் அழிஞ்சுக்கிட்டுருக்கு. ஒருகாலத்துல முப்பது நாப்பது ரகம் சொல்லுவாய்ங்க மாட்டுத் தரகருங்க. இப்ப அஞ்சாறு இனத்தைக் காப்பாத்துறதுக்கே போராடிட்டுருக்கோம். இது விவசாயிங்களோட பிரச்சினை மட்டும் இல்ல. பால் குடிக்குற ஒவ்வொருத்தரும் கவலைப்பட வேண்டிய பிரச்சினை. எப்படின்னு சொல்றன்.

இந்தத் தாய்க்கு என்ன பதில்?


வெயில் சுள்ளென்று தெறித்துக்கொண்டிருந்த நேரத்தில், அற்புதம் அம்மாள் வந்திருந்தார். முதுமையின் படபடப்பு. பயணமும் அலைச்சலும் தந்த களைப்பு. முகச்சுருக்கங்களில் ஓடி வழியும் வியர்வை. மூச்சிரைப்பு இன்னும் அடங்கவில்லை. 69 வயதாகிறது. ஏறாத படிகள் இல்லை. சிறைச்சாலை, வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், அரசியல்வாதிகள் - மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் வீடுகள், ஊடக அலுவலகங்கள் நீதிமன்றங்கள், சட்டப்பேரவை... மகனை மீட்பதற்காக 25 ஆண்டுகளாக அலைகிறார். பார்த்த மாத்திரத்தில் அவருடைய கனத்த பைக்குள் கைகள் செல்கின்றன. காகிதங்களை உருவுகிறார். “யப்பா, கடைசியில அறிவு வாழ்க்கைய சிறைக்குள்ளேயே முடிச்சுடுவாங்கபோல இருக்குப்பா. எல்லார் கவனத்துலேர்ந்தும் அதை வேற பக்கம் கொண்டுபோயிட்டாங்கப்பா!”

கத்தை கத்தையாகக் காகிதங்களை மேஜை மீது போடுகிறார்.

வெள்ளம் அடித்துச்சென்ற தீர்ப்பு 
தமிழகத் தலைநகரம் வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்த 2015, டிச.2-ல், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியானது. ராஜீவ் கொலை வழக்கில், மரண தண்டனை வளையத்திலிருந்து வெளியே வந்து, இப்போது ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும் இவர்களை விடுவிக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்குப் பேரிடியாக விழுந்தது அன்றைய தினம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட மூன்று விஷயங்கள் இத்தீர்ப்பில் முக்கியமானவை.

1. ஆயுள் தண்டனை என்பதற்கு, ‘எஞ்சிய ஆயுள் முழுவதற்குமான தண்டனை’ என்பதே அர்த்தம்.
2. மத்தியப் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் தண்டனைக் குறைப்பு வழங்க முற்பட்டால், அந்த முடிவை மாநில அரசு மட்டுமே எடுத்துவிட முடியாது; மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும்.
3. தேசப் பாதுகாப்பை மனதில் கொள்ளாமல் மன்னிப்பின்பேரில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க முடியாது. தேசத் தலைவர்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு அல்லது வெளிநாட்டுத் தாக்குதல் நடவடிக்கையாகவே கருத வேண்டும்.

சாதாரண நாட்களில் வெளியாகியிருந்தால், தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை இந்தச் செய்தி உருவாக்கியிருக்கக் கூடும்.

உணவல்ல; உயிர் கொடுக்கிறோம்!


சென்னை, திருவல்லிக்கேணி உணவு விடுதிகளுக்குப் பேர் போனது. தலைநகரில் ஒண்டிக்கட்டைகளின் பேட்டை இது என்பது அதற்கான பின்னணிகளில் ஒன்று. நூற்றாண்டுகளைக் கடந்த படா படா உணவகங்களின் மத்தியில் ‘பாரதி மெஸ்’ அப்படி ஒன்றும் பழுத்த கிழம் அல்ல. சின்னதும்கூட. சென்னை வந்த புதிதில் வெளியே வீட்டுச் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தபோது நண்பர்கள் ‘பாரதி மெஸ்’ஸுக்கு வழிகாட்டினார்கள். கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

முதல் முறை உணவகத்துக்குள் நுழைந்தபோதே ஆச்சரியமாக இருந்தது. முகப்பிலேயே கடவுள் இடத்தில் பாரதி. தவிர, சுவர் எங்கும் பாரதியின் அரிய படங்கள். கூடவே, “இதுவரை பாரதியாரின் 5 புகைப்படங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றில் மூன்று வகையான தோற்றத்தில் உள்ளார்” என்பது போன்ற சிறுசிறு குறிப்புகள். ஒரு அலமாரியில் பாரதியின் எல்லாப் படைப்புகளும். ஒரு அலமாரியில் சலுகை விலையில் ‘பாரதி கவிதைகள்’. ஒரு அலமாரியில் விலையில்லாப் புத்தகங்கள். விரும்புவோர் தாம் படித்த புத்தகங்களை இங்கே அளிக்கிறார்கள்; விரும்புவோர் அவற்றை எடுத்துச்செல்கிறார்கள். சுவரில் ஒரு இடத்தில் எழுதியிருந்தது, “இங்கு வீட்டு முறையிலேயே சமைக்கிறோம். அஜினோமோட்டோ, சோடா உப்பு, பாமாயில், டால்டா சேர்ப்பது இல்லை. வயிற்றுக்கு எந்தப் பழுதும் நேராது; மனதாரச் சாப்பிடுங்கள்.” ஒரு இடத்தில் எழுதியிருந்தது: “நாம் தோசையில் மேல் மாவு சேர்ப்பதில்லை.”

உணவின் சுவையில் மட்டும் அல்ல; தரத்திலும் தனித்துவம் தெரிந்தது. இப்படிதான் ‘பாரதி மெஸ்’ கண்ணன் அறிமுகமானார்.

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?



நாஞ்சில் சம்பத் விவகாரம் அடங்கியபாடில்லை. ஒரு கட்சிப் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவது - மன்னியுங்கள், விடுவிக்கப்படுவது - அவ்வளவு பெரிய செய்தியா? இந்த ஆட்சியில் இதுவரை 22 முறை அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது; 20 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; 6 பேர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவை அத்தனைக்குமான காரணங்கள் நமக்குச் சொல்லப்பட்டனவா? நாம்தான் கேட்டோமா?

எல்லோரிடமும் மன்னிப்பு கோருகிறேன்!


புத்தாண்டு நாளுக்குப் பெரிய கவனம் கொடுப்பதில்லை. உட்கார்ந்து யோசிக்கவோ, கொண்டாடித் தீர்க்கவோ என்று நாட்களை ஒதுக்குவதும் இல்லை. ஆனால், பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு நாள் போன்ற தருணங்களைக் கொஞ்சம் யோசிக்க ஒதுக்குவது முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரே ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும்போது நம்மைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக்கொள்ள இவையெல்லாமும் ஒரு வாய்ப்புதானே?

எங்கெல்லாம் குறை என்று கவனிக்க உட்காரும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. ஏகப்பட்ட ஓட்டைகள். நம் முகத்தை நாமே அவலட்சணமாக உணர்வது அவலம். ஓட்டைகள் இருக்குமிடம் தெரியாமல் ஓடுவது தவறு என்றால், தெரிந்தும் திருத்திக்கொள்ளாமல் ஓடுவது அயோக்கியத்தனம்.

இப்போது சரிசெய்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். நிறைய. வீட்டில் ஆரம்பித்து அலுவலகம் வரையில். எல்லாவற்றையும் வெளியே சொல்லத் தேவையில்லை என்றாலும், அம்பலத்தில் செய்த தவறுகளுக்கு அம்பலத்திலேயேதானே பரிகாரமும் தேட வேண்டும்?

என்னுடைய வார்த்தைகள் - பேச்சு/எழுத்து இரண்டுமே - சில நேரங்களில் வெறுப்பை உமிழ்ந்திருப்பதை உணர்கிறேன். பொதுவாக, என் பக்கம் நியாயம் இல்லாமல் கோபிக்க மாட்டேன். ஆனால், வெறுப்பை எந்தக் கோபத்தைக் கொண்டும் நியாயப்படுத்தவே முடியாது; கூடாது.

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?


இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழா தடைபட்டு கிடக்கிறது. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்.

ஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை?


எப்போதெல்லாம் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக காமராஜரைக் குறிப்பிட்டு எழுதுகிறேனோ அப்போதெல்லாம் இடதுசாரி வாசகர்களிடமிருந்து காட்டமாக அழைப்புகள் வரும்: “நேர்மையான, எளிய அரசியலுக்கான உதாரணங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் எழுத்தாளர்கள் ஏன் கடந்த காலத்துக்குள் போய்ப் புகுந்துகொள்கிறீர்கள்? இன்றைக்கும் அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் இடதுசாரித் தலைவர்கள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை?”

அடுத்த முதல்வர் சகாயம்?


எப்படி யோசித்தாலும் இப்படியொரு நிகழ்வு நினைவில் இல்லை; பணியிலிருக்கும் ஒரு அதிகாரியை அரசியலுக்கு அழைக்க மக்கள் கூட்டம் திரண்டதும் அதைத் தடுக்க அரசு இயந்திரம் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்ததும்!

சமூக வலைதளங்களில் வசிப்பவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை முதல்வர் பதவிக்கு முன்னி றுத்தி நடந்துகொண்டிருக்கும் கோஷங்களும் பிரச் சாரங்களும் புதிதாக இருக்காது. பல்லாயிரக்கணக் கானோர் இந்த முழக்கங்களுடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றனர். ஆனால், இணையத்தில் இருந்தவர்கள் இப்படி ஒரு கோரிக்கையோடு வீதியில் இறங்குவது தமிழகத்தில் அநேகமாக இதுவே முதல் முறை. நேரடித் தேர்தல் அரசியலில் சகாயத்துக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது; அவருக்கு அப்படியான கனவுகள், திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ‘அரசியலில் சகாயம்’ எனும் வார்த்தைகளே அரசியல்வாதிகள், கட்சி அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் அமிலத்தைப் போன்ற எரிச்சலை உருவாக்குவதை உணர முடிகிறது. அதற்குள்ளேயே சிலர் கேட்கிறார்கள், “நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா? சமூக நீதி தொடர்பாக சகாயத்தின் கருத்து என்ன, சமய நல்லிணக்கத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தனியார்மயம் குறித்த அவருடைய கருத்து யாது?”

அது சரி, தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு இதுபற்றியெல்லாம் என்ன கருத்து இருக்கிறது என்று நமக்குத் தெரியும்? மேலும், இதுவரை இதுபற்றியெல்லாம் பேசாததாலேயே ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்று முடிவெடுக்க நாம் யார்? எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் அரங்கில் புதிதாக ஒருவர் பெயர் உச்சரிக்கப்பட்டால் ஏன் இவ்வளவு பதற்றம்?

என்னுடைய பள்ளி நாட்களில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக உமாசங்கர் ஐஏஎஸ் பணியாற்றிய நாட்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. இளமைத் துடிப்போடு பணிக்கு வந்திருந்த உமாசங்கர் கலக்கிக்கொண்டிருந்தார். புது சினிமா வந்தால் டிக்கெட்டைப் பல மடங்கு உயர்த்தி விற்பது அங்குள்ள திரையரங்குகளின் வழக்கம் (மன்னார்குடி திரையரங்குகளில் அப்போது முதல் வகுப்புக் கட்டணம் ரூ.10 என்று நினைவு). ஒருநாள் இரவுக் காட்சியின்போது ஒரு திரையரங்கில் உள்ளூர் விவசாயிபோல, லுங்கி-முண்டாசோடு உள்ளே புகுந்தார் உமாசங்கர். ரூ.10 டிக்கெட்டை ரூ.100-க்கு விற்ற திரையரங்க சிப்பந்தியை கவுன்ட்டரிலேயே வைத்து கையும் டிக்கெட்டுமாகப் பிடித்தார். இன்னொரு நாள் இப்படித்தான். பெட்ரோல் நிலையங்களுக்கு மாறுவேஷத்தில் போன அவர், அளவு குறைவாக பெட்ரோல் நிரப்பியவர்களைக் கையும் பெட்ரோல் போத்தலுமாகப் பிடித்தார். இப்படி ஆற்றில் அத்துமீறி மணல் அள்ளியவர்களைப் பிடித்துவிட்டார், ரேஷன் அரிசி கடத்தியவர்களைப் பிடித்துவிட்டார் என்று ஏதாவது சேதிகள் வந்துகொண்டே இருக்கும். மக்கள் சதா பேசிக்கொண்டே இருப்பார்கள். தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மின் ஆளுகை மாவட்டமாகக் கொண்டு வந்தவர் உமாசங்கர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நிறையப் பேச வருவார். எவரும் அவரை எளிதில் சந்திக்க முடியும். எங்களூர் பக்கம் பள்ளி மாணவ-மாணவியர் பலர் வெகுநாட்களுக்கு, “உமா சங்கர்போல நானும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவேன்” என்று சொல்வதை சக மாணவனாகப் பார்த்திருக்கிறேன்.


மாற்றமாவோம்!


அரசியலுக்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இப்படியும் புரிந்துகொள்ளலாம்: சகஜீவிகள் மீதான அன்பு. அரசியல் செயல்பாடுகளுக்கு நிறைய தொடக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இங்கிருந்தும் தொடங்கலாம்: சுயமாற்றம்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சங்கீதா ஸ்ரீராம். நுண்கலை படித்தவர். கணவர் ராஜீவ் பெங்களூருவில் பொறியாளர். இன்றைய நெருக்கடியான நகரமயமாக்கல் நவீன வாழ்க்கை, நவீன விவசாயம் நஞ்சாகத் தரும் உணவு, நவீன கல்வி உருவாக்கும் அடிமையாக்கப் பயிற்சி எல்லாவற்றினாலும் விரக்தி அடைந்தார் சங்கீதா. எல்லாவற்றுக்கும் மாற்றுத் தேட ஆரம்பித்தார். மாற்று வாழ்க்கைச்சூழல், மாற்றுக் கல்வி, மாற்று விவசாயம்… திருவண்ணாமலையில் இருக்கிறார் இப்போது. நவீன விவசாயத்துக்குப் பின்னுள்ள சர்வதேச சந்தை அரசியலை அம்பலப்படுத்தும் ‘பசுமைப் புரட்சியின் கதை’ அவர் எழுதிய முக்கியமான புத்தகம். இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே பாலமாகப் பணியாற்றும் சந்தை அமைப்பின் உருவாக்கத்தில் பங்கேற்றார். இப்போது நாடு முழுவதும் மாற்றத்துக்காக உழைக்கும் வெவ்வேறு தனிநபர்கள், சிறுகுழுக்கள் இடையேயான உறவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இரு வழிகள்; நாம் எந்த வழி?



நகுலனின் அமரத்துவமான கவிதை வரிகளில் இது ஒன்று: “இருப்பதற்கென்றுதான் வருகிறோம்; இல்லாமல் போகிறோம்.” விக்கிரமாதித்யன் எழுதிய ஒரு கவிதையும் அடிக்கடி முன் நின்று கேள்வி கேட்கும்: “எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்; எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?”
 

சென்னை வந்த கொஞ்ச நாளிலேயே ஒரு உண்மை அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்த நாடு வாழ்வதற்கானதாக அல்ல; பிழைப்பதற்கானதாக நம் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கிறது.
“ஏன் மாப்ள, ஓடி ஓடிச் சம்பாதிக்குற காசையெல்லாம் சின்ன வயசுல பிள்ளைங்களுக்காகப் பள்ளிக்கூடங்கள்ல கொடுத்துடுறோம்; நடு வயசுல சம்பாதிக்கிறதைக் கல்லூரிகள்ல கொடுத்துடுறோம்; வயசான பின்னாடி மிஞ்சுற காசை ஆஸ்பத்திரிக்காரன் பறிச்சுக்குறான். உள்ளபடி நாம யாருக்குச் சம்பாதிச்சுக் கொடுக்க இந்த ஓட்டம் ஓடுறோம்? யாரு காலை ஆட்டிக்கிட்டு கடலை வேடிக்கை பார்க்க இந்த ஓட்டம் ஓடுறோம்?”
கேள்விக்கான பதிலை யோசிக்கும் முன்பே மீண்டும் ஓட்டத்தை நோக்கி விரட்டிவிடுகிறது சூழல்.


ஒருவேளை இந்தப் பள்ளிக்கூடம் தொடங்கி ஆஸ்பத்திரி வரையிலான எல்லாச் செலவுகளைத் தாண்டியும் நம்மால் கொஞ்சம் காசு சேர்த்து வைக்க முடியும் என்றால், நம் பேரப் பிள்ளைகளுக்கு அது உதவலாம். அவர்களுக்கும்கூட வைத்தியச் செலவுகளுக்கு அந்தக் காசு உதவுமே தவிர, காலை ஆட்டிக்கொண்டு கடலை வேடிக்கை பார்க்க உதவாது என்பதே உண்மை. உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து ஒரு விபரீதத்தைச் சுட்டிக்காட்டிவருகிறது. இப்போதெல்லாம் வாழ்முறை சார்ந்த நோய்களே இந்தியர்களை அதிகம் கொல்கின்றன. குறிப்பாக, இந்திய நகர்ப்புறங்களில் ஏற்படும் 80% மரணங்கள் இதயநோய், புற்றுநோய், சுவாச நோய், நீரிழிவு நோய் போன்றவற்றாலேயே ஏற்படுகின்றன. 60 வயதுக்குள் இந்நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் 13%. இந்தியாவில் 30%. இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2005-ல் 3.8 கோடியாக இருந்தது. இப்போது 6 கோடி. நீரிழிவு நோயாளிகள் 5.1 கோடி. இது தவிர, 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களைக் கொல்லும் நோய்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த புற்றுநோய் முதலிடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் பேரைப் புதிதாக அது பீடிக்கிறது; 7 லட்சம் பேரை அது கொல்கிறது.

குப்பை அரசியல்!




அடையாற்றிலிருந்து அதிகபட்சம் 250 மீட்டர் தூரத்துக்குள் இருக்கிறது என் வீடு. வெள்ளம் வீட்டுக்குள் என்ன வேகத்தில் வந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டியது இல்லை. 10 நாட்களுக்குப் பின்னரே வீட்டுக்குள் நுழைய முடிந்தது. நிறைய நண்பர்கள் விசாரித்தார்கள். பொருளாதாரரீதியாகப் பெரும் இழப்புகள் நேர்ந்திருக்குமோ என்கிற கவலையில், உதவவும் பலர் முன்வந்தார்கள். அப்படியான பொருள் இழப்புகள் எதுவும் நேரவில்லை. உண்மை இதுதான். எங்கள் வீட்டில் கார், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எதுவும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால், அப்படியான பொருட்கள் எதுவுமே வீட்டில் இல்லை. மிச்சமிருந்த சாமான்களும் புத்தகங்களும் அரை மணி நேரத்துக்குள் சில மூட்டைகளில் கட்டி பரண்களில் வைக்கக் கூடிய அளவிலானவை. ஆகையால், யாவும் தப்பித்தன. இதற்காக பொருட்களே இல்லை என்றால், எந்தப் பாதிப்புமே இருக்காது என்று சொல்ல வரவில்லை; என்னளவில் நான் புரிந்துகொண்டிருக்கும் ஒரு உண்மை, பொருட்களை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்குச் சுமைகளும் சிரமங்களும் குறைவு என்பது.

ஆறா, சாக்கடையா?


சற்று ஆறுதலாக இருக்கிறது. மறைமலையடிகள் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சொல்கிறார்கள்: “அடையாத்துல எவ்ளோ தண்ணீ!”

சென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அடையாறு, கூவமாறு, கொசஸ்தலையாறு. ஏராளமான கால்வாய்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் வெட்டுகின்றன. ஆனால், சென்னைவாசிகளுக்கு சாலையில் எந்த நீர்நிலை குறுக் கிட்டாலும் அதற்கு ஒரே பெயர்தான். கூவம். அதுவும் ஆற்றின் பெயராக விளிக்கப்படுவது இல்லை. சாக்கடைக்கான மறுபெயர்.

கக்கா போவதும் அரசியல்தான்!


சிகாகோவிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் சதீஷ்குமார். இளைஞர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான வேலூர் வந்துவிடலாமா என்று நினைக்கிறேன். நம்மூரில் சமூகத்துக்காக எதாவது செய்ய வேண்டும். இன்றைய அரசியல் சூழலை எப்படி மாற்றுவது என்று கேட்டிருக்கிறார். கோவையிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் மைதிலி. இரு குழந்தைகளுக்குத் தாய். இந்தச் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டிருக்கிறார். மதுரையிலிருந்து ஒரு மின்னஞ்சல். தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை அவர். நாட்டின் அரசியல் சூழல் மாற்றத்துக்குப் பங்களிக்க விரும்புகிறேன். ஆனால், என்னுடைய குடும்பச் சூழலில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாது. எங்களைப் போன்றவர்களுக்கு என்ன வழி இங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். நிறையப் பேர் மாணவர்கள். என்ன செய்வது; எங்கிருந்து தொடங்குவது என்பதே அவை சுமந்திருக்கும் அடிப்படைக் கேள்விகள்.

உண்மையில், செய்வதற்குக் கண் முன் ஏராளமான பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவை என்னவென்றால், ஒரே ஒரு தெளிவு: எல்லாமே அரசியல்தான். அரசியல் மாற்றத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்றால், முதலில் வீட்டிலிருந்து, கழிப்பறையிலிருந்தேகூடத் தொடங்கலாம்.

கொஞ்சம் விளக்கமாகவே எழுதுகிறேன்.

என் தாத்தாவுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது. கூடவே மூல உபத்திரவமும் இருந்தது. கழிப்பறைக்குச் செல்வது என்பது ஒவ்வொரு நாளும் அவரளவில் நரகத்துக்குச் சென்று திரும்பும் அனுபவம். இந்திய பாணிக் கழிப்பறையில் உட்காருவதும் எழுவதும் அவருக்கு மரண அவஸ்தை. பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு எழவும் உட்காரவும் சுவரில் ஒரு இரும்புக் குழாய் பதிக்கப்பட்ட இந்திய பாணிக் கழிப்பறையையே கடைசிவரை பயன்படுத்தினார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சொல்வார், 1. சுற்றுச்சூழலுக்கு ஓரளவேனும் இதுவே உகந்தது - தண்ணீர் சிக்கனம். 2. சுகாதாரத்துக்கு உகந்தது - நம்முடைய உடல் கழிப்பறையில் ஒட்டுவதில்லை. 3. உடலியக்கத்துக்கு நல்லது - நம்முடைய மலக்குடல் அமைப்புக்கு இப்படி உட்கார்ந்து கழிப்பதே சரியானது. தவிர, இது ஒரு வகையான ஆசனம். மூன்றுமே அறிவியல்பூர்மானவை.

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்!


ரவு வெகுநேரமாயிற்று வேலை முடித்துச் செல்ல. குளிர் உடலுக்குள் ஊடுருவிச் சென்றது. உள்ளூர் ரயில் நிலையங்களில் எப்போதும் நிற்கும் கூட்டம் இல்லை. நடைமேடைக் கடையில் தண்ணீர் போத்தல் வாங்கினேன். தலையைச் சுற்றி கம்பளி மப்ளரைக் கட்டிக்கொண்டு, கைகளை இறுகக் கட்டியவராக உட்கார்ந்திருந்தார் கடைக்காரர். “எப்படி இருந்த ஊர், எப்படியாயிட்டு பாருங்க…” என்றார். “ஒரு பத்து லட்சம் பேர் ஊரைவிட்டுப் போயிருப்பாங்களா?” என்றார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவரே தொடர்ந்தார், “கூடவே இருக்கும். உலகப் போர் சமயங்கள்லகூட சென்னைல இவ்வளவு மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்குமானு தெரியலை. அவ்ளோ போயிருக்கு சனம். அகதிங்க மாதிரி. சீக்கிரம் திரும்பிரும். ஆனா, எவ்ளோ கஷ்டம்!” ஒரு பிஸ்கட் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். அவர் இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு என் பக்கம் இரண்டை நீட்டினார். கொஞ்ச நேரம் அமைதி. “இனி மேலும் இவங்களையெல்லாம் இப்படியே விடக் கூடாதுங்க!” என்றார். சிரித்தேன். ரயில் வந்தது. வெறிச்சோடி கிடந்தது. ரயிலின் வேகம் குளிரை மேலும் கூட்ட ஆரம்பித்தது.

மக்கள் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறார்களா? இப்படி ஒரு கேள்வி கேட்டால், எப்போதுமே அதற்கான பதில் ஆம். ஆனால், புதிய மாற்றங்களுக்கான முயற்சிகள் ஏன் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகின்றன?

பிள்ளைகளுக்கு அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்தாரா கலாச்சாரம்?


அடிக்கடி நினைப்பது உண்டு. உலகில் நம்மைப் போல வேறு எந்தச் சமூகமாவது சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் வீட்டுக்கல்வியாகக் கற்றுக்கொடுக்குமா என்று. கல்வியில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக நம் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். செல்வத்தில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஏன் வீரத்தில் மட்டும் அவர்கள் நம்மைவிடவும் கோழைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? எது போராட்டக் குணத்தைப் பொறுக்கித்தனம் என்றும் அரசியலை ஒரு சாக்கடை என்றும் சிறுமைப்படுத்திக் காட்டி அவர்களை ஒதுக்கி வளர்க்கச் சொல்கிறது?

ஊருக்கு ஊர், பள்ளிக்குப் பள்ளி, கல்லூரிக்குக் கல்லூரி மேடை போட்டு உரக்கக் கத்த வேண்டும்போல இருக்கிறது, “கேரியர் என்ற வார்த்தையைச் சொல்லி பிள்ளைகளை அடிமைகளாக்காதீர்கள்” என்று. “உனக்கு கேரியர் முக்கியம்; உனக்கு எதிர்காலம் முக்கியம்!” எனும் வார்த்தைகளைப் போல பிள்ளைகளிடம் சுயநலத்தை விதைக்கும் ஆபாசமான வார்த்தைகள் இல்லை. மேலும், உண்மையாகவே நம்முடைய பிள்ளைகள் மகத்தானவர்கள் ஆக வேண்டும் என்றால், அதற்கும் நாம் ஊட்டி வளர்க்கும் இந்தச் சுயநல வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமும் இல்லை.

1869-ல் போர்பந்தரில் காந்தி பிறந்த வீடு மூன்று தளங்களைக் கொண்டது. காந்தி ஏழையாகப் பிறந்தவர் அல்ல. 1893-ல் காந்தி தென்னாப்பிரிக்கா செல்லும்போது அவருடைய வயது 24. தென்னாப்பிரிக்காவுக்குப் புரட்சி செய்வதற்காக அவர் செல்லவில்லை. பொருளீட்டத்தான் சென்றார். ஓரிரு வருஷங்கள் தங்கி வழக்கறிஞர் பணியாற்றச் சென்றார். ஆனால், பயணத்தில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அவருக்கு நேரிட்ட அவமானம் அவர் வாழ்க்கையை மாற்றியது. தான் எதிர்கொண்ட பிரச்சினை தன்னுடையது மட்டும் அல்ல; தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினை என்பதை உணர்ந்தார். போராடினார். மாற்றத்தை உண்டாக்கினார். கோகலே அழைப்பின்பேரில் இந்திய அரசியலில் காலடி எடுத்துவைத்தார். 1915-ல் இந்தியா திரும்பியபோது காந்திக்கு வயது 45. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமையை அனுபவிப்பதற்கான, பொருளீட்டுவதற்கான, தன் வாரிசுகளுக்கான சொத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மிக முக்கியமான காலகட்டம் என்று நம்பும் காலகட்டம் அவர் தென்னாப்பிரிக்காவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது. இந்தியா வந்த காந்தி சொத்துகளோடு வரவில்லை. அதன் பின்னரும் சாகும் வரை தன் குடும்பத்துக்காகச் சொத்து சேர்க்கவில்லை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல காந்தி.

1916-ல் கமலாவைத் திருமணம் செய்துகொண்டபோது நேருவுக்கு வயது 27. 1936-ல் இறந்தபோது, கமலாவுக்கு வயது 36. நேரு-கமலா தம்பதியின் 20 ஆண்டு தாம்பத்திய வாழ்வில் பெரும் பகுதி நேரு சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்தார் அல்லது சிறையில் இருந்தார். அலகாபாத்தில் அரண்மனை போன்ற மாளிகையில் பிறந்த நேரு, ஒருகட்டத்தில் வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் விற்கும் முடிவுக்கு வந்தார். காந்தியிடம் ஆலோசனை கேட்டு நேரு எழுதிய கடிதங்களில் முக்கியமானவை தனிப்பட்ட வாழ்வில் அவர் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் தொடர்பானவை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல நேரு.

கொல்வது பயம்


இந்தியப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘லைஃப் ஆஃப் பை’. எழுத்தாளர் யான் மார்ட்டலின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு சின்ன குடும்பம் கதாநாயகன் பையினுடையது. அம்மா, அப்பா, அண்ணன், பை. வாழ்க்கைச் சூழல்களால் பாண்டிச்சேரியைக் காலிசெய்துவிட்டு புறப்படுகிறது பையின் குடும்பம். கப்பலில் பயணம். கடலில் கடும் புயலில் கப்பல் சிக்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரையும் பையின் கண் முன் கடல் காவு கொள்கிறது. பை மட்டும் உயிர் தப்புகிறான் ஒரு படகில். கூடவே ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு குரங்கு, ஒரு புலி. யாவும் கப்பலிலிருந்து தப்பியவை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள். எல்லோருக்கும் பசி. முதலில் வரிக்குதிரையை ஓநாய் கொல்லும். அடுத்து குரங்கைக் கொல்லும். அப்புறம் அந்த ஓநாயைப் புலி கொல்லும். இப்போது மிச்சம் இருப்பது புலியும் பையும். கடும் பசி. இருப்பது நடுக்கடலில். அடிக்கடி அவரவர் இருப்புக்கான சண்டை. இதனிடையே மீண்டும் ஒரு புயல். அந்தப் பயணம் எப்படி முடிகிறது?

நமக்குள் ஒரு தலைவன்!


தேசிய ஊடகங்கள் பெரும்பாலனவை சென்னை வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மும்பையில் ஒரு பெண் தொழிலதிபர், தன் மகளை எப்படிக் கொன்றார் எனும் கதையைக் கிளுகிளுப்பான பின்னணியில் ஒரு மாதத்துக்கும் மேல் பக்கம் பக்கமாக எழுதியவர்கள். இன்றைக்கு வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரை வாங்கியிருக்கும் தமிழக வெள்ளச் செய்தியை உள்பக்கங்களில் ஒரு மூலையில் அடக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆச்சரியம் அடைய ஏதுமில்லை. காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ காலனியாதிக்க, நிலப்பிரபுத்துவ, சாதி-மத-மொழி-இன துவேஷ மனோநிலையில்தான் செயல்பட்டுவருகின்றன.

மக்கள் ஆட்சி


ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். “அது என்ன நீங்கள் ‘தி இந்து’வில் இப்படி எழுதுகிறீர்கள், ‘முகம் தெரியாத அரசு ஊழியர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள்; ஆனால், அரசியல்வாதிகளை முகமாகக் கொண்ட அரசாங்கம் என்று ஒன்று இங்கே இல்லவே இல்லை!’ என்று. அரசாங்கம் வேறு; அரசு ஊழியர்கள் வேறா?” இன்னொரு வாசகர், “இது போன்ற பேரிடர்களின்போது அரசாங்கத்தை விமர்சிக்கலாமா?” என்று கேட்டிருந்தார்.

மனிதப் பேரவலம்!

நன்றி: படம்: தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன்
திர்பாராதது அல்ல. அப்படிச் சொன்னால், அது பெரும் பாவம்! சென்னை இந்தப் பருவத்தில் எதிர்கொள்ளும் கடும் மழையை அக்.16-ம் தேதி அன்று நண்பர் கணேஷ் சொன்னார். அவர் கையிலிருந்த வானிலை அறிக்கை சொன்னது. சரியாக ஒரு மாதம் கழித்து, நவம்பர் 14-ல் சென்னை கடும் மழையை எதிர்கொண்டது. நகரம் ஸ்தம்பித்தது. அடுத்த கடும் மழை நவம்பர் 22-ம் தேதி என்றது முன்னெச்சரிக்கை. நவம்பர் 30-ல் எதிர்கொள்ளவிருக்கும் மழை இவற்றின் உச்சமாக இருக்கும் என்பதையும் அப்போதே கணேஷ் சொன்னார்.

பேரழிவுக்கு யார் பொறுப்பு?


வீடு முழுக்க வெள்ளம் சேர்த்த சேறு. ஒரு வாரம் தண்ணீரில் மூழ்கியிருந்ததில் வீட்டின் உள்பக்கச் சுவர்கள் சாயும் நிலையில் இருந்தன. வீட்டின் அத்தனை சாமான்களும் வீட்டுக்கு வெளியே வீதியில் வெயிலுக்காகப் பரப்பிக் கிடந்தன. வீட்டுச் சுவரில் பளிச்செனத் தெரிகின்றன ஒரு பக்கம் இரட்டை இலை, ஒரு பக்கம் உதயசூரியன். இரண்டுக்கும் நடுவே உட்கார்ந்து பைத்தியம் பிடிக்காத குறையாக அரற்றிக்கொண்டிருந்தார் சின்னக்கா: “ஏ தெய்வமே நான் என்ன செய்வேன்?” பேரழிவுக்குள்ளான கடலூரில் பயணித்தபோது, தமிழகத்தின் சமகால சமூக நிலை யையும் அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் கணத்தில் உணர்த்தும் ஒரு குறியீடுபோல இருந்தது அந்தச் சூழல்.

மக்களின் முதல்வர்!


யா அத்தனை அழுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தூசி, புகை, அழுக்கு, குப்பை, சாக்கடை. பண்டைய இந்தியாவில் பெரும் பேரரசை பிஹார் இயக்கியிருக்கலாம். நவீன இந்தியாவில் அது கிராமங்களின் தொகுப்பு. அமைதியான கிராமங்கள் அல்லது நகரங்கள் என்ற பெயரைக் கொண்ட அழுக்கான கிராமங்கள். அன்றைக்குப் பகலில் மின்சாரமே இல்லை. நம்மூர் மின்வெட்டு ஞாபகம் வந்தது. பிஹாரிகளோ, “எங்களுக்கு மின்வெட்டு ஒரு பிரச்சினை இல்லை. இருட்டிய பிறகு மின்சாரம் கிடைப்பதே இங்கே பெரிய விஷயம். அதுவும், நிதிஷ் ஆட்சிக்கு வந்ததால் கிடைத்தது” என்றார்கள். தமிழக ஜனத்தொகை 7 கோடி. பிஹார் ஜனத்தொகை 11 கோடி. தமிழக மின்நுகர்வு 12,000 மெகாவாட். பிஹார் மின்நுகர்வு 3,500 மெகாவாட். இது நிதிஷின் 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு. அப்படியென்றால், அதற்கு முன் பிஹார் எவ்வளவு இருட்டில் இருந்திருக்கும்?

சமகால இந்திய அரசியலில் ‘புனிதர்கள்’ அல்லது ‘முழுத் தூய்மையாளர்கள்’ என்று அரசியல்வாதிகளைத் தேடுவது கடினம். எனினும், அரசியல் லாப - நஷ்டக் கணக்குகள், கச்சடாக்கள் பொதுவாகிவிட்ட சூழலில், செயல்பாட்டின் அடிப்படையில் நிச்சயம் இன்றைய முதல்வர்களில் நிதிஷ் கொண்டாடப்பட வேண்டியவர்.


சகா ஷஃபி முன்னா சொன்னார், “அப்போதெல்லாம் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் வெளியே ஆட்களைப் பார்க்க முடியாது. பயம். எங்கும் ரவுடிகள் ராஜ்ஜியம். கொஞ்சம் வசதி வந்துவிட்டால், நீங்கள் தனியாகப் பாதுகாப்புக்காக ஆள் போட்டுக்கொள்ள வேண்டும், துப்பாக்கியோடு. இல்லாவிட்டால் தூக்கிவிடுவார்கள். புதிதாக வீடு வாங்குகிறோம், கார் வாங்குகிறோம், தொழில் தொடங்குகிறோம் என்றால் தாதாக்களுக்குத் தனியே ‘ரங்தாரி’ கட்ட வேண்டும். எல்லாவற்றுக்கும் கப்பம்.” அவர் சொன்னது நகரங்களின் நிலை. கிராமங்கள் முழுக்க நிலச்சுவான்தார்கள் கைகளில் இருந்தன. அத்துக்கூலிக்குக் கொத்தடிமை வேலை. எதிர்த்தால், தீர்த்துக்கட்டுவது. பொறுக்க முடியாமல் கூலித் தொழிலாளர்கள் நக்ஸல்களாக மாறினார்கள். அதை எதிர்கொள்ள நிலச்சுவான்தார்கள் கூலிப்படைகளை அமைத்துக்கொண்டார்கள். அப்படி உருவானவற்றில் ஒன்றுதான் ரன்வீர் சேனா. 1997-ல் லக்ஷ்மண்பூர் பாத்தேவில் 58 தலித் தொழிலாளர்களை ரன்வீர் சேனா கொன்று குவித்தது, அன்றைய அராஜகச் சூழலின் ஒரு துளி.

மனிதர்கள்: நம்ம உயிரு மறந்துரும்!


வெள்ளம் கடலூரைத் தத்தளிக்கவிட்டிருந்த நாட்களில் பாலச்சந்திரனைத் தேடிச் சென்றிருந்தேன். விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் தலைமைத் தீயணைப்போனாக இருக்கிறார் பாலச்சந்திரன். இந்த வெள்ளத்தில் விருத்தாசலத்துக்குப் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், கூப்பிடு தொலைவில் இருக்கும் நெய்வேலி தொடங்கி வடலூர் வரைக்கும் சுற்றுவட்டப் பகுதிகள் யாவற்றையும் வெள்ளம் பிய்த்துப்போட்டிருக்கிறது. இது போன்ற நாட்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தூக்கமே இருப்பதில்லை.

அன்றிரவு பாலச்சந்திரனைச் சந்தித்தபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வந்த வேகத்தில், “சார், ஒரு டீயைப் போட்டுட்டு வந்துடட்டுமா, ரொம்பப் பசியா இருக்கு’’ என்றவாறு ஓடியவர், அடுத்த ஐந்து நிமிடங்களில் நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். “இன்னையோட பத்து நாள் ஆச்சு சார், நாங்க வீட்டுக்குப் போய். தீபாவளியோட வீட்டைவிட்டு வந்தவங்கதான். உத்தரவு வந்துடுச்சு. ‘படை திரட்டும் பணி உத்தரவு’னு இதை நாங்க சொல்வோம். இந்த உத்தரவு வந்துடுச்சுன்னா, மறு உத்தரவு வர்ற வரைக்கும் யாரும் வீட்டுக்குப் போகக் கூடாது. 24 மணி நேர வேலை. வீடு திரும்ப இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியலை. வருண பகவான் கருணை காட்டணும்.” கையை மேலே காட்டுகிறார்.


கொல்வது மழை அல்ல!


திகாலை 3 மணி.  செல்பேசி அழைக்கிறது. மறுமுனையில் அழைப்பவன் நண்பன். பதற்றமும் அழுகையும் கூடிய குரல். வெளியே சாலைகளை ஆறுகளாக மாற்றியிருக்கிறது மழை. எங்கும் கும்மிருட்டு.
“குழந்தைக்கு உடம்பு கொதிக்குது, தலை வேற கடுமையா வலிக்குதுங்குறான். விடாம அழறான். நாசமாப்போன இந்த மழையில ஆட்டோ, டாக்ஸி யாரும் வர மாட்டேங்குறாங்க. எங்கெ போறது, என்ன பண்றது. ஒண்ணுமே தெரியலைடா…”

“பாரசிட்டமால் மாத்திரை இருக்கா?”
ஒரு ரூபாய் மாத்திரை. அரை மாத்திரை கொடுத்தால், காலை வரைக்கும் பிரச்சினையை எதிர்கொண்டுவிடலாம். நண்பன் வீட்டில் பாரசிட்டமால் இல்லை. அந்த இரவு எத்தனை கொடுமையான இரவாக இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை. காரணம், குழந்தையா, மழையா, நண்பனின் முன்னெச்சரிக்கையின்மையும் அலட்சியமுமா?

இயற்கையைக் குற்றஞ்சாட்ட முடியாது. ஓரளவுக்கு மேல் மக்களையும் குற்றவாளிகளாக்க முடியாது. ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள், அதிகார வர்க்கம் என்ன செய்கிறது?

நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்?


சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் விஷயங்களில் ஒன்று இது. நேரு நாட்டின் முதல் பிரதமரானது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற படேல் பிறந்த நாள் விழாவில் அந்தக் கேள்வி இன்னொரு முறை உயிர் பெற்றது. சரிதான், தன்னைச் சுற்றிலும் எவ்வளவோ பேர் இருந்தபோது, நேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார்? உள்நோக்கத்தோடு எழுப்பப்பட்டாலும்கூட சுவாரஸ்யமான கேள்வி இது. கூடவே, காந்தி, நேரு எனும் இரு ஆளுமைகளையும் இந்திய வரலாற்றையும் நாம் இன்றைய தலைமுறைக்குச் சொல்ல மேலும் ஒரு வாய்ப்பு!

இன்றைக்கு அரசியல் எதிரிகள் பலரும் குறிப்பிடுவதுபோல, ஜாடிக்கேற்ற மூடியாக இருந்தது அல்ல காந்தி - நேரு உறவு. வெறும் விசுவாசம் மட்டுமே கருதி தன்னுடைய வாரிசாக நேருவை அறிவித்தவர் அல்ல காந்தி. மாறாக, காந்தியைப் போல நேருவும் மகத்தான ஓர் ஆளுமை. பெரும் சிந்தனையாளர். ஜனநாயகவாதி. மாபெரும் மக்கள் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் காலமெல்லாம் காந்தியுடன் கருத்து யுத்தம் நடத்தியவர். இந்தியர்களின் ஆன்மிக வழி அரசியல் வாழ்வியலுக்கான வழிகாட்டி காந்தி என்றால், அரசுத் தலைமைக்கான முன்னுதாரணம் நேரு.

ஆடம்பரமான சூழலில் பிறந்தவர் நேரு. அலகாபாத் 'ஆனந்த பவன்' மாளிகையில் பெரிய குதிரை லாயம், இரு நீச்சல் குளங்கள் என்று ஏகப்பட்ட வசதிகள் உண்டு. புகழ்பெற்ற ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து நேருவுக்குப் பாடம் எடுத்தார்கள். உயர்கல்விக்கு ஹாரோ, கேம்பிரிட்ஜ் சென்றார். ராஜ தடபுடலுடன் நடந்தது திருமணம். சுதந்திரப் போராட்டம் அவருடைய குடும்பப் பொருளாதாரத்தைச் செல்லரித்தது. ஒருகட்டத்தில் கையில் சல்லிக்காசுகூட இல்லாத காலம் வந்துவிடுமோ என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். மனைவியின் நகைகள், வெள்ளிச் சாமான்கள், ஏனைய தட்டுமுட்டுப் பொருட்களை விற்க தீர்மானிக்கிறார். காலமெல்லாம் காசநோயோடு போராடிய கமலா நேரு 36 வயதிலேயே இறந்தார். நேருவின் 20 வருட தாம்பத்ய வாழ்வின் பெரும் பகுதி போராட்டங்களில் கழிந்தது. மொத்தம் 9 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். நேருவின் கால் நூற்றாண்டு களப் பணிகளையும் தியாகங்களையும் நேரடியாகப் பார்த்தவர் காந்தி.

காந்தி 1869-ல் பிறந்தவர். நேரு 1889-ல் பிறந்தவர். 20 வயது வித்தியாசம். உண்மையில் காந்தியும் நேருவின் தந்தை மோதிலாலும் ஒரே தலைமுறை. காந்தியின் மூத்த மகனான ஹரிலாலைவிட ஒரு வயது சிறியவர் நேரு. மேலும், தன் இளமைப் பருவத்தின் கணிசமான பகுதியை ஐரோப்பாவில் கழித்த நேரு, கிழக்கு-மேற்குலகுகளின் சரிவிகிதக் கலவை. காந்தியை ஏற்றுக்கொண்ட அவருடைய கடுமையான விமர்சகர்களில் ஒருவர் என்று நேருவைச் சொல்லலாம். தன்னை பாபு என்று அழைத்த நேருவை ஒரு மகனாக, அடுத்த தலைமுறையின் பிரதிநிதியாக, அவர்களுடைய குரலாகவே காந்தி பாவித்தார். வரலாற்றுணர்வும் உலகளாவிய பார்வையும் கொண்ட காந்தி - நேருவுக்கு இடையேயான கருத்து மோதல்களின் விளைவே ஒரு வகையில் நவீன இந்தியா எனும் கருத்தாக்கத்தின் மையப்புள்ளி.

இந்தியாவின் வெற்றி!


ஒரு மாநிலத் தேர்தல் முடிவை ஒரு பிரதமரின் தோல்வியாக எழுத மனம் ஒப்ப மறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி பிரதமர் பதவியில் அமர்வதற்கு முன்பே இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நினைவில் கொண்டுவருவது முக்கியமானது. 2013 செப்டம்பர் 13-க்குப் பிறகான ஆறு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகளுக்கும் மோடியையே காரணமாகக் காட்டினார்கள் பாஜகவினர். கொஞ்சம் யோசித்தால், அப்போது தொடங்கி சமீபத்திய டெல்லி தேர்தல் வரை அவர்கள் மக்களிடம் உருவாக்கிய ஒரு மாயை ஞாபகத்துக்கு வந்துவிடும். ஆம், மோடி அலை! மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகானும் சத்தீஸ்கரில் ரமன் சிங்கும் மூன்றாவது முறையாக ஜெயித்ததற்கும்கூடக் காரணம் மோடி அலை என்றால், இப்போது பிஹாரில் அடிக்கும் அனலிலிருந்து மட்டும் மோடியை எப்படி விடுவிக்க முடியும்?

மனிதர்கள்: காவிரி சாமி!


திருச்சி வழியாகச் சென்றாலும் சரி, தஞ்சாவூர் வழியாகச் சென்றாலும் சரி, கல்லணை செல்லும் அனுபவமே தனி. ஒரு பெரும் பிரவாகமாக ஓடும் பிரம்மாண்டமான காவிரியின் கரைதான் சாலை. சுற்றிலும் பச்சை. சாலையின் இரு மருங்கிலும் வரிசையாகத் தூங்குமூஞ்சி மரங்கள், கண்ணுக்கு எட்டிய வரை பரவிக் கிடக்கும் நெல் வயல்கள், வரிசையாக தென்னை - வாழைத் தோப்புகள், இடையிடையே மாந்தோப்புகள்… கல்லணைப் பயணம் சாதாரண நாட்களிலேயே மனதை ஒரு அருவிக்குள் கொண்டுபோய் அமிழ்த்திவிடக் கூடியது. மழை நாட்களில் பயணிப்பது கூடுதல் சுகம். கார் போய்க்கொண்டிருந்தது. கண்கள் காவிரியிலேயே மிதந்துகொண்டிருந்தன.

உலகிலேயே காலத்தால் மிக முற்பட்டது, இன்னும் புழக்கத்தில் இருப்பது எனும் இரு சிறப்புகள் கல்லணைக்கு உண்டு. திருச்சிக்கு மேற்கே முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரு ஆறுகளாகப் பிரியும் அகண்ட காவிரி, மீண்டும் ஒரு மாலைபோல நெருங்கி வரும் இடம் இது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் இங்கு கல்லணை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. காவிரி நீரைத் தஞ்சைப் பகுதி முழுமைக்கும் திருப்பிவிட்டு, பாசனப் பரப்பையும் நெல் விளைச்சலையும் அதிகரிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது கல்லணைக் கட்டுமானம். 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் கல்லணையின் வடிவத்தை மேலும் மேம்படுத்தினர். காவிரியைப் பார்வையிட்ட பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளர் கேப்டன் கால்டுவெல், ஏராளமான தண்ணீர் காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தில் வீணாகப் பாய்வதையும் பாசனத்துக்கு மிகக் குறைவான தண்ணீரே கிடைப்பதையும் உணர்ந்தார். அணையின் உயரத்தைக் கொஞ்சம் உயர்த்தலாம் என்றார். அணை உயர்ந்தபோது நீரைத் தேக்கிவைக்கும் அளவும் கணிசமாக உயர்ந்தது. கொள்ளிடம் ஆற்றுக்குத் தண்ணீர் பாயும் பகுதியில் அணையின் கீழ்ப்புறத்தில் மதகுகளை அமைத்து, அணையில் வண்டல் படியாமல் அவ்வப்போது திறந்துவிடலாம் என்று மேஜர் சிம் கூறினார். தொடர்ந்து, கொள்ளிடத்தின் குறுக்காக மணற்போக்கியை சர் ஆர்தர் காட்டன் கட்டினார். பின்னாளில், கல்லணைக் கால்வாய் கட்டப்பட்டது. ஆக, காவிரி நான்கு நதிகளாக இங்கு பிரிகிறது. காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்.

கல்லணையால் எத்தனை உயிர்கள் வாழ்கின்றன என்று கேட்டால், சொல்லிவிடலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வேளையில், கல்லணை வழியே பாயும் காவிரி அரிசியைத்தான் சாப்பிடுகிறோம் சோறாக, இட்லியாக, தோசையாக… ஆமாம், தமிழகத்தின் மூன்றில் ஒரு பகுதி உணவு காவிரிப் படுகையிலிருந்தே வருகிறது. கல்லணையால் வாழ்வது வேறு; கல்லணையில் வாழ்வது வேறு. பரமசிவம் கல்லணையில் வாழ்பவர்!

மோடி தோல்விகளின் இமாலய ஆரம்பம்!


பிரதமர் அலுவலக அதிகாரிகள் லண்டன் ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறார்கள். மோடியின் அடுத்த விஜயம் இங்கிலாந்து. பிரதமராக அமர்ந்த முதல் 17 மாதங்களில் 28 நாடுகளைச் சுற்றி வந்துவிட்டார் நரேந்திர மோடி. இடையிடையே மாநிலத் தேர்தல்கள் மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், பிரதமரை எப்போதேனும் காணும் அரிய வாய்ப்பும் கிடைக்கக்கூடியது அல்ல. இப்படி ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் வெளியிலிருந்து எவ்வளவு முதலீடுகளைக் கொண்டுவந்திருக்கிறார் என்கிற கணக்குகளை அப்புறம் பார்க்கலாம். ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம், தெற்காசியாவில் வலுவான ‘தாதா’ எனப் பல கோதாக்களோடு ராஜீய உறவுகளைக் கையாளத் தொடங்கியது மோடி அரசு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் எவ்வளவு மோசமாக அடிவாங்க ஆரம்பித்திருக்கின்றன என்பதற்கு இப்போது அழுத்தமான புள்ளியாகியிருக்கிறது நேபாளம்.

கலாம் நினைவுகூர்வார் மோடி


ப்துல் கலாமின் ‘எண்:10, ராஜாஜி மார்க் வீடு’ காலிசெய்யப்பட்டு, ராமேசுவரத்துக்கு அவருடைய மூட்டை முடிச்சுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் புதுடெல்லியில் இருந்தேன். முன்னாள் குடியரசுத் தலைவர் என்கிற வகையில் கலாமுக்கு இந்திய அரசு ஒதுக்கிய அந்த வீட்டுக்கெனச் சில முக்கியத்துவங்கள் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் புது டெல்லி நகரத்தையும் இன்றைய குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் முதல் நம்முடைய ஆட்சியாளர்கள் பிடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மாளிகையையும் நிர்மாணித்த பிரிட்டீஷ் பொறியாளர் எட்வின் லூட்டியன்ஸ், தான் வசிப்பதற்கு என்று திட்டமிட்டு கட்டிய வீடு அது. கிட்டத்தட்ட 79,297 சதுர அடி நிலத்தில் இரு தளங்களாக 11,775 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வீடு. கலாமின் மறைவுக்குப் பின் அந்த வீட்டை, அவருடைய நினைவகமாக மாற்றக் கோரி மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கங்கள் தீவிரமான சமயத்தில்தான் கலாமின் உடைமைகளை ஏறக்கட்டிவிட்டு, தன்னுடைய உலகப் புகழ்பெற்ற கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு அதை ஒதுக்கியிருக்கிறது நரேந்திர மோடி அரசு.

முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரான மகேஷ் சர்மா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாயைத் திறந்தால் கழிவுகளாகக் கொட்டும் வார்த்தைகளுக்காகவே கவனம் பெற்றவர். இந்தியக் கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்துவது தமது அரசின் தலையாயப் பணி என நம்புபவர். “மேற்கத்தியமயமாக்கப்பட்ட எல்லா விஷயங்களையும் நாங்கள் தூய்மைப்படுத்துவோம்; அது வரலாறானாலும் சரி, நிறுவனங்களானாலும் சரி” என்று வெளிப்படையாக அறிவித்தவர். “ராமாயணம், கீதையைப் போல பைபிளோ, குர் ஆனோ இந்தியாவின் ஆன்மாவின் மையத்தில் இருப்பவை அல்ல” என்பதைத் தன்னுடைய மறுவாசிப்பின் மூலமாக வெளிக்கொணர்ந்த மாமேதை. “பெண்கள் இரவில் வெளியில் செல்வது என்பது இந்தியக் கலாச்சாரம் அல்ல” என்று பெண்களுக்குப் புதிய கலாச்சார வழி காட்டிய கண்ணியவான். கேவலம் மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனும் வதந்தியின் பெயரால் தாத்ரியில் முதியவர் இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டபோது, “அது ஒரு “விபத்து” என்றும் “சம்பவம் நடந்த வீட்டில் 17 வயது இளம்பெண் ஒருவரும் இருந்தார்; அவரை யாரும் தொடவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூசாமல் கூறிய பெருந்தகை. அப்துல் கலாமைப் பற்றியும் அன்னார் கருத்து தெரிவித்திருக்கிறார். “முஸ்லிமாக இருந்தாலும்கூட ஒரு தேசபக்தராக இருந்தவர் கலாம்” என்ற ஒரே வரிச் சான்றிதழ் மூலம் அப்துல் கலாம் வரலாற்றையும் இந்திய முஸ்லிம்களின் வரலாற்றையும் ஒருசேரக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பியவர். மகேஷ் சர்மா இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு உரியவர் என்றாலும், கலாம் இருந்த வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது டெல்லியில் பாஜகவினரின் புருவங்களையும்கூட  உயர்த்தியிருக்கிறது. பொதுவாக, அரசு அதிகாரத்தில் உச்ச நிலையில் இருப்பவர்களுக்கே இப்படியான இரு தள வீடு ஒதுக்கப்படுவது மரபு. அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி போன்ற மூத்த அமைச்சர்களின் வீடுகளே இதைவிடவும் சிறியவை (சிங்கின் வீடு 4,144 சதுர அடி; ஜேட்லியின் வீடு 7,825 சதுர அடி). எல்லாமே ஒரே தள வீடுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, வழிகாட்டு விதிகளின்படி, அந்த வீடு மகேஷ் சர்மாவின் பதவிக்கு உரியது அல்ல. 


இத்தனையையும் தாண்டிதான் ஒரு இளைய அமைச்சருக்கு, அதுவும் ஒரு இணையமைச்சருக்கு கலாம் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிகக்  குறுகிய காலத்தில் தேசத்துக்கு மகேஷ் சர்மா   ஆற்றிய அளப்பரிய சேவைக்கு பிரதமர் மோடி அளித்திருக்கும் அங்கீகாரமாகவும் பரிசாகவும் இதை நாம் கருதலாம். தன்னுடைய ஒவ்வொரு அசைவின் மூலமாகவும் ஒவ்வொரு செய்தியை அனுப்புபவர் அல்லவா மோடி!


மனிதர்கள்: ஒரு பொழப்பு.. பல வயிறு..

படம்: முஹம்மது ராஃபி
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் அழகு என்று குதிரை வண்டிகளைச் சொல்லலாம். தமிழகத்தில் இன்னும் குதிரை வண்டிகள் மிச்சமிருக்கும் மிகச் சில இடங்களில் ஒன்று ராமேஸ்வரம். அங்குதான் சுப்பிரமணியைச் சந்தித்தேன். பெட்டிகளை வாங்கி வண்டிக்குள் வைத்த சுப்பிரமணி, “நம்பி ஏறுங்க சார், ராஜா சல்லுனு கொண்டுபோய் விட்டுடுவான்” என்றார். வண்டியில் கட்டப்பட்டிருந்த ராஜாவைப் பார்த்தால் சல்லென்று கொண்டுபோய் விட்டுவிடுவதாகத் தெரியவில்லை. பரிதாபமாக நின்றது. வண்டி நகர ஆரம்பித்தது.

மனிதர்கள்: தமிழ்தான் அடையாளம்!


முதன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்பணிப்பு மிக்க அசாதாரணமான உழைப்பினால் இறுதியில் அதைச் சாத்தியமாக்கினர்; ‘யூனிகோடு' வரை கூட்டிவந்தனர். அவர்களில் ஒருவர் முத்து நெடுமாறன். கணினிக்குத் தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர். மலேசியத் தமிழர்.

காண்டாமிருகங்கள் ஆகிறோம்!


றேழு ஆண்டுகள் இருக்கும், திருச்சியில் இருந்தபோது நடந்தது. வெளியூரிலிருந்து நண்பர் வந்திருந்தார். அதிகாலை நான்கு மணிக்கு அவருக்கு வண்டி. வீட்டிலிருந்து ரயில் நிலையம் செல்ல குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். முன்கூட்டியே இரண்டரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டோம். வீதி இருண்டு கிடந்தது. செல்பேசி விளக்கின் துணையோடு நடக்க ஆரம்பித்தோம். நூறடி நகர்ந்திருக்காது. இருளையும் காற்றையும் கிழித்துக்கொண்டு வந்தது அலறல். சட்டென இன்னதென்று யூகிக்க முடியவில்லை. அமைதி. திரும்பவும் அலறல். கூடவே நாய்களின் உறுமல். திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தபோது, கொஞ்ச தூரத்தில் ஒரு சின்ன கொட்டைகையின் முன்நடுக்கத்தோடு ஒடுங்கி நின்றுகொண்டிருந்தார் ஒரு பெரியவர். மூன்று நாய்கள் அவர் அருகே. உறுமிக்கொண்டு பாய்ந்துவிடத் தயாராக நின்றன. கையில் வைத்திருக்கும் காலி துணிப்பைகளை வைத்துக்கொண்டு “ச்சூ… ச்சூ…போ” என்றார் பெரியவர். நண்பர் கற்களை அள்ளி வீசினார். நாய்கள் சிதறி ஓடின. அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆகியும் பெரியவருக்குப் பதற்றமும் பதைபதைப்பும் நீங்கவில்லை. பேச முடியவில்லை. நாங்கள் புறப்பட்டோம். நண்பரை ரயில் ஏற்றிவிட்டுவிட்டுத் திரும்பும்போது, மணி ஏழரை இருக்கும். அப்போதுதான் கவனித்தேன். ஒரு ரேஷன் கடையின் முன்பகுதி அந்தக் கொட்டகை. அந்தப் பெரியவர் கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். தலை தொங்கிக்கொண்டிருந்தது. அவருக்குப் பின் இருபது முப்பது பேர். கிட்ட நெருங்கிப் பார்த்தால், பெரியவரின் கண்கள் மூடியிருந்தன. தூக்கத்தில் இருப்பதுபோல இருந்தது. முன்னும் பின்னும் வரிசையில் மனிதர்களோடு பைகள், கற்களும் கலந்திருந்தன. “எல்லாம் பருப்புக்காக” என்றார்கள் நின்றவர்கள்.

நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?



ராமேசுவரம் சென்றிருந்தேன். உலகின் மிக நீண்ட பிராகாரத்தைக் கொண்டது ராமநாதசுவாமி கோயில். கோபுர வாசலை ஒட்டியுள்ள அனுமன் முகத்தில் செந்தூரப்பூச்சு. அடுத்து தனுஷ்கோடி நோக்கிப் பயணம். வழியில் நம்புநாயகி அம்மன் கோயில். நம்புநாயகி அம்மன் முகத்தில் செந்தூரப்பூச்சு. தனுஷ்கோடியின் காவல் தெய்வம் முத்துமாரியம்மன். தனுஷ்கோடி கடலோடிகள் வாழ்வின் ஒரு பகுதி என்றும்கூட இதைச் சொல்லலாம். ஊரில் பெரும்பாலானோர் பெயர்கள்  மாரி, முத்து, முத்துமாரி, மாரியம்மாள் இப்படி இருக்கும். கடற்கரையில் புதிய வடிவில் ஒரு கோயில் முளைத்திருக்கிறது. சிலைகள் எதிலும் நம்மூர் பாணி இல்லை. வடக்கிலிருந்து உபயமாக வந்தடைந்த சிலைகள் என்கிறார்கள். உள்ளூர் மாரியம்மனுக்கு இப்போது சவாலாக ஆரம்பித்திருக்கிறது பெருந்தெய்வ வழிபாடு.

தமிழகத்தின் கோயில் நகரங்களான கும்பகோணம், காஞ்சிபுரம் செல்லும்போது ஒவ்வொரு முறையும் வழியில் புதுப்புது கோயில்கள் முளைப்பதைப் பார்க்க முடிகிறது. கோபுரங்கள் / விமானங்களில் தொடங்கி உள்ளே இருக்கும் சாமி சிலைகள், வழிபாட்டு முறைகள் வரை எல்லாம் புதுப் பாணி. இந்தியர்களின் எல்லை கடந்த ஆன்மிகப் பயணங்களும் உறவுகளும் பங்களிப்புகளும் வரலாறு முழுக்க விரவிக் கிடக்கின்றன. ஆனால், இந்தப் புதிய கலாச்சாரத்தையும் அதன் தொடர்ச்சியாகப் பார்க்க முடியுமா? முடியாது. இதன் பின்னுள்ளவர்களைத் தேடினால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு பெயர் ஒலிக்கிறது நன்கொடையாளர் ரூபத்தில். உள்ளூர் மக்களுக்கோ, வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கோ இதில் நேரடித் தொடர்பு இல்லை. ஊருக்கு ஊர் வெவ்வேறு கடவுள்கள். அந்தந்த ஊரின் இயல்போடும் எளிதில் நெருங்கிப் பொருந்தக் கூடிய வகையிலுமான கடவுள்கள். ஆனால், இக்கோயில்கள் உருவாக்கும் கலாச்சாரம் ஒருமித்தது. “ஷீர்டி சாய்பாபாவின் ஆரம்ப கால ஓவியங்கள், சிலைகளில் அவர் கன்னம் ஒட்டிப்போயிருக்கும். இப்போது கவனிக்கிறீர்களா? கன்னம் பூச ஆரம்பித்திருக்கிறது. புதிய ஓவியங்கள், சிலைகளில் மோடி மாதிரி இருக்கிறார் சாய்பாபா” என்றார் நண்பர் சங்கர். அப்படிப் பார்த்தால், அப்படியும் தெரிகிறார். எது ஒன்றையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

தமிழகத்தில் எங்கெல்லாம் கோயில்களில் செந்தூரம் புதிதாக நுழைகிறதோ அங்கெல்லாம் நிலத்துக்கு அடியில் சங்கப் பரிவார வேர்கள் பரவுவதை உணர முடிகிறது. ராமேசுவரத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் செயல்படும் ‘தமிழ்நாடு விடுதி’யில் தங்கல். விடுதி உணவகத்தில் அசைவத்துக்கு இடம் இல்லை. கூடவே, உணவகம் முழுக்க சைவப் பிரச்சாரம். வாசல் சுவர் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சுவரொட்டி கேட்கிறது: “நாங்கள் ஏன் சைவமாக இருக்கிறோம் என்று கேட்காதே! மாறாக, நீ ஏன் சைவமாக இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்!”

உலகின் மிகச் செழிப்பான கடல் பகுதியைக் கொண்ட ராமேசுவரத்துக்கு நிறைய விசேஷங்கள் உண்டு. முக்கியமானது, இந்தியக் கடற்பரப்பில் காணப்படும் 2,200 மீன் இனங்களில் 450 இனங்கள் கண்டறியப்பட்ட ராமேசுவரம் கடல். இங்கு கிடைக்கும் மீன்கள் பல வேறு எங்கும் சாப்பிடக் கிடைக்காதவை. தவிர, அசைவ சமையலில் ராமேசுவரத்துக்குத் தனிப் பாரம்பரியம் உண்டு. இந்திய - இலங்கை - அரேபிய - பாரசீக சமையல் கலாச்சாரத்தின் கூட்டுக் கலவை அது.  ஒரு அலை கொஞ்சம் ஓங்கி அடித்தால், விடுதிக்குள் வந்து தண்ணீர் விழும்; கடலுக்கு அவ்வளவு நெருக்கமாகக் கரையில் கட்டப்பட்டிருக்கிறது ‘தமிழ்நாடு விடுதி’.

கடலோடிகளின் நகரத்தில், கடற்கரையில் அமைந்திருக்கும் ஒரு அரசுசார் விடுதியில் மீன் உணவு இல்லை என்றால், நாம்தான் நியாயமாகக் கேள்வி எழுப்ப வேண்டும். மாறாக, ஏன் விடுதி நிர்வாகம் நம்மைப் பார்த்துக்கேள்வி எழுப்புகிறது? கோயிலைக் காரணமாகச் சொன்னார் ஒரு ஊழியர். இந்தியாவில் கோயில் இல்லாத ஊர் ஒன்று உண்டா? தவிர, கடவுளையே சைவம் அல்லது அசைவம் ஆக்க நாம் யார்? பதில் இல்லை. விடுதியை விட்டு வெளியேறும்போது, அது கண்ணில் பட்டது. கடற்கரையில், விடுதிக்கு வெளியே கொஞ்ச தூரத்தில் மண்ணில் நிறுவப்பட்ட நடுகல். சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘பலிதான இடம்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். சூழலையும் சூழலுக்கான பின்னணியையும் சொல்லாமல் சொல்லும் குறியீடுபோல இருந்தது அது!

மனிதர்கள்: திருவிழா ஜோரா நடக்குது... சாமிதான் அநாதை ஆயிடுச்சு!

ஞ்சாவூர் வடக்கு வாசல்.
“ஏண்ணெ, இங்கெ காமாட்சி தேவியம்மா வீடு எது?” சைக்கிளில் செல்லும் இளைஞர், கால் ஊன்றி வண்டியை நிறுத்தி, தெருவின் பின்பக்கத்தைக் காட்டுகிறார். வீடுகள் அழுதுவடிகின்றன. ஒருகாலத்தில் வடக்கு வாசல் வாழ்வாங்கு வாழ்ந்தது. வடக்கு வாசல் மட்டும் இல்லை, ரெட்டிபாளையம், கீழஅலங்கம் எல்லாமே வாழ்வாங்கு வாழ்ந்தன. தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைகள் செழித்த இடங்கள் இவையெல்லாம். கும்மியாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பாம்பாட்டம், காவடியாட்டம், உறுமியாட்டம், உறியாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குறவன்குறத்தியாட்டம், சேவையாட்டம், சாமியாட்டம், காளியாட்டம், பேயாட்டம்.. இப்படி எந்த ஆட்டம் என்றாலும் தஞ்சாவூருக்கு வந்தால் செட்டு பிடித்துச் சென்றுவிடலாம். அதிலும், கரகாட்டத்திலும் பொய்க்கால் குதிரையாட்டத்திலும் தஞ்சாவூருக்கு என்று தனி மரபும் சிறப்பும் உண்டு.

நாட்டுப்புறக் கலைஞர்கள் உலகம் இரவுலகம் என்றாலும், பகல் பொழுதுகளில் இங்கெல்லாம் உலாத்துவது தனி அனுபவம். எந்தத் தெருவில் நுழைந்தாலும் சலங்கைச் சத்தமும் பாட்டுச் சத்தமும் கேட்கும். வீடுகளில் சிறு பிள்ளைகள் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். டீக்கடைகள், கோயிலடிகள், கட்டைச்சுவர்களில் அரட்டைக் கச்சேரிகள் அள்ளும். பகடிகள் பறக்கும்.

“ஏம்மா, காமாட்சி தேவியம்மா வீடு இதுதானுங்களா?”
வாசல் கதவு திறந்தே இருக்கிறது என்றாலும், உள்ளே வெளிச்சம் தெரியவில்லை. பதிலும் இல்லை. அந்தக் காலத்தில் கரகாட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் காமாட்சி தேவி. கரகாட்டத்தின் அத்தனை போக்குகளையும் அறிந்த, மிச்சமிருக்கும் வெகு சிலரில் ஒருவர். கணவர் நாடி ராவ் பொய்க்கால் குதிரையாட்டத்தில் பேர் போனவர். பிள்ளைகளும் இதே தொழிலில்தான் இருக்கிறார்கள்.

“ஏம்மா, வீட்டுல யாரும் இருக்கீங்களா?”
மெல்ல அசைவு தெரிகிறது. “வாங்கய்யா, யாரு வந்திருக்கீங்க?” நாடி ராவும் தொடர்ந்து, காமாட்சி தேவியும் வருகிறார்கள். முகத்தில் பழைய களை இல்லை. “ஆனா, இப்பவும் ஞாபகம் வெச்சித் தேடி வந்திருக்கீங்களே; இதுவே பெரிய சந்தோஷம்தான்!” என்கிறார்கள். “டீ சாப்பிடுறீங்களா?” என்கிறார்கள். பேரப் பிள்ளைகளை அனுப்பி டீ வாங்கி வரச் சொல்கிறார்கள்.

மனிதர்கள்: புலிக்குத் தமிழ் தெரியும்!


தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய உயிரியல் பூங்கா சுமார் 1490 ஏக்கருக்கு விரிந்து கிடக்கிறது; லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள், செடி கொடிகள் காற்றுடன் விளையாடுகின்றன. வண்டலூரைப் பூங்காவாகப் பார்ப்பவர்களுக்கு, அது ஒரு பிரமாண்டமான உயிரியல் பூங்கா. காடாகப் பார்ப்பவர்களுக்கு அது ஒரு சின்ன காடு. இந்தியாவிலேயே அதிகமான விலங்குகள், இனங்களைக் கொண்ட பூங்காவும் இது. கிட்டத்தட்ட 166 இனங்களைச் சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் இங்கிருக்கின்றன. நான் ஒரு மனிதரைப் பார்க்கச் சென்றிருந்தேன். செல்லையா!

மீண்டும் ஒரு பயணம் - மனிதர்கள்

மீண்டும் ஒரு பயணம். வயலில், மலையில், காட்டில், கடலில்… நடைபாதையில், சாலையோரங்களில், ரயிலடிகளில்… பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில், தொழிற்சாலைகளில்…

‘மனிதர்கள்!’ சகஜீவிகளை நோக்கிச் செல்லும் பயணம் இது. நம் பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வாழக் கூடியவர்கள், பயணத்தில் கடக்கும்போது நம் கண்ணில் படக்கூடியவர்கள், சட்டென ஒருகணம் வந்து யார் என்று யோசிக்கும் முன் மறைந்துவிடக் கூடியவர்கள், நாம் நினைத்தால் தோழமையுடன் தோள் மீது கை போட்டுக்கொள்ளக் கூடியவர்கள், நம்மைப் போலவே பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருப்பவர்கள், ஆனால், ஏதோ ஒருவகையில், நம் ஒவ்வொருவரின் உலகத்துடனும் பிணைக்கப் பட்டவர்கள், ஏதோ ஒரு வகையில், நம் வாழ்க்கைக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்பவர்கள், நமக்கு மிக நெருக்கமானவர்களை நெருங்கிச் செல்லும் பயணம் இது.

ஒரு மடக்கு தண்ணீர் நம் வாயைத் தேடி வர எத்தனை முகமற்ற மனிதர்களின் உழைப்பைக் கடக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் யோசிப்பது இல்லை. சமூக வாழ்க்கையின் அடிப்படைக் கல்வி சக உயிரைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் இருந்தே தொடங்குகிறது என்றால், இந்தப் பயணம் ஒருவகையில் அப்படிப்பட்ட முயற்சி!

அக். 2015, ‘தி இந்து’

எதிரில் இருப்பவர்கள் எதிரிகளா?


இந்த காந்தி ஜெயந்திக்கு அற்புதமான ஓர் அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது லுதுவேனியா. காந்தி தன் ‘ஆன்ம நண்பர்’ என்று குறிப்பிட்ட ஹெர்மன் காலன்பக் - காந்தி இருவரும் சேர்ந்திருக்கும் சிலையை நிறுவியிருக்கிறது. லுதுவேனியாவில் பிறந்த யூதரான ஹெர்மன் காலன்பக் பின்னாளில் தொழில் நிமித்தம் தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தவர். தேர்ந்த கட்டிடக் கலைஞரான அவர், 1904-ல், தன்னுடைய 33-வது வயதில் காந்தியைச் சந்தித்தார். ஆன்மிக உரையாடலால் வலுப்பெற்ற நட்பு, கூடிய சீக்கிரம் காந்தியின் எளிமை, சைவம், சமத்துவ அரசியலை ஹெர்மன் காலன்பக்கிடம் கொண்டுசேர்த்தது.

தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகிகளுக்கு என காந்தி திட்டமிட்ட குடியிருப்பான ‘டால்ஸ்டாய் பண்ணை’ உருவாக காந்திக்கு 1,000 ஏக்கர் நிலத்தைக் கொடையாக வழங்கியதோடு, குடியிருப்புகள் அமைக்கவும் உதவியவர் காலன்பக். 1913-ல், ‘ஃபீனிக்ஸ் பண்ணை’யில் காந்தி நடத்திய முதல் பிராயசித்த உண்ணாவிரதப் போராட்டம், சத்தியாகிரக இயக்கம் இரண்டிலும் முக்கியப் பங்காற்றியவர். உலகப் போர் சூழலும் இந்தியச் சுதந்திரப் போராட்டச் சூழலும் காந்தியையும் காலன்பக்கையும் வெவ்வேறு இடங்கள் நோக்கித் திருப்பினாலும், இருவரும் இறுதி வரை ஆன்ம நண்பர்களாகவே இருந்தார்கள். 1945-ல் காலன்பக் இறந்தபோது, தன்னுடைய எஸ்டேட்டின் ஒரு பெரும் பகுதியை தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு எழுதிவைத்துச் சென்றிருந்தார். இன்றைக்கெல்லாம் வரலாற்றின் இடுக்குகளில் தள்ளப்பட்டு, அடுத்தடுத்த பாறைகளும் இருளும் சேர்த்து மூடிப் புதைத்துவிட்ட ஒரு பெயர் ஹெர்மன் காலன்பக். லுதுவேனிய அரசு இந்தச் சிலையின் மூலம் அதை மீட்டெடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கூடவே, இந்தியர்களுக்கும் ஒரு மகத்தான செய்தியை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.

ஹிட்லரும் ஃபோக்ஸ்வேகனும் அமெரிக்காவும் பின்னே மோடியும்!

அடால்ஃப் ஹிட்லரை ஞாபகப்படுத்தக் கூடியவை ‘ ஃபோக்ஸ்வேகன்’ கார்கள். ஜெர்மனில் ‘ஃபோக்ஸ்வேகன்’ என்றால், மக்களுடைய வாகனம் என்று அர்த்தம்.

சீமான்கள் மட்டுமே கார் வைத்திருந்த காலம். சிறிய ரக கார்களை உருவாக்கும் முயற்சிகள் 1920-களில் தொடங்கின என்றாலும், ஹிட்லரால் புதிய போக்கு உருவானது. அமெரிக்காவைப் போல ஜெர்மனியிலும் வீட்டுக்கு ஒரு கார் சூழலை உருவாக்க நினைத்தார் ஹிட்லர். இரு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியதாக ஒரு கார் - அதுவும் 999 ரெய்க்ஸ் விலைக்குள். ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை + பொருளாதாரத்தில் உத்வேகத்தை உருவாக்குவதோடு, உள்நாட்டில் நாஜி கட்சியின் செல்வாக்கை மேலே கொண்டு செல்லவும் இத்திட்டம் உதவும் என்பது கணக்கு. 1937-ல் இப்படித்தான் ‘ஃபோக்ஸ்வேகன்’ உருவாக்கப்பட்டது.

நம்முடைய கர்ணப்பரம்பரை மரபுகள் மடியப்போகின்றன… பெரியவர்களிடம் பேசுவோம்; தேச நலன் கருதியேனும்!


அலுவலக வரவேற்பறையிலிருந்து, “செ.கணேசலிங்கன் வந்திருக்கிறார்” என்று தகவல் வந்தது. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தவர்களில் முன்னோடி. நாவல், சிறுகதை என்று புனைவுகளில் மட்டும் இல்லாமல், சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு என்று சகலப் பிரிவுகளிலும் எழுதிக் குவித்தவர். எல்லாவற்றையும்விட ஈழப் போராட்டத்தின் முக்கியமான சாட்சியங்களில் ஒருவர். ஒருகாலத்தில் போராளிகளுக்கு அரசியல் பாடம் எடுத்தவர். வயது இப்போது 87 ஆகிறது.

கணேசலிங்கன் நல்ல பேச்சாளியும்கூட. ஒரு காபி உள்ளே போனால், இலங்கை, மஹிந்த ராஜபட்ச – விக்கரமசிங்க உள்கதைகள், புலிகள் விட்டுப்போன தங்கச் சுரங்கம் என்று வெள்ளமாகப் பேச்சு பாயும். வரவேற்பறைக்குச் சென்றபோது, கையில் ஒரு புத்தகத்துடன் சிரித்துக்கொண்டிருந்தார். “கொழும்பு போய் வந்தேன். இது புது நாவல். ‘சுசிலாவின் உயிரெச்சம்’. போன முறை கொடுத்துவிட்ட ‘பாலுமகேந்திரா’ புத்தகம் வாசிச்சீங்களா?” புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்காக பேனாவை எடுக்கும்போது விரல்களில் அத்தனை நடுக்கம். பிரமிப்பாக இருந்தது. கடந்த ஒரு வருஷத்தில் அவர் எழுதியிருக்கும் மூன்றாவது புத்தகம் இது. கணேசலிங்கன் சென்ற பின் சகாக்களிடம் இதுபற்றிப் பேச்சு ஓடியது. சாரி சொன்னார், “அந்த உயிரிடம் சொல்ல அவ்வளவு இருக்கிறது; அவற்றை முடிந்தவரை யாரிடமாவது சொல்லிவிட அது துடிக்கிறது; அதுதான் அவரைத் தொடர்ந்து இயக்குகிறது.”
ஊரில் வீட்டுக்கு முன் குளம். இக்கரையில் பிள்ளையார் கோயில்; அக்கரையில் கனகாம்பாள் கோயில்; நடுவே ஆலமரத்தடி. மூன்றுமே பெரியவர்கள் உட்காரும் இடங்கள். வீட்டில், பள்ளிக்கூடங்களில் இருந்த நேரத்தைக் காட்டிலும் பிள்ளைகள் இங்குதான் அதிகம் கிடப்போம். பெரியவர்களின் பேச்சில் சொக்கிக்கிடப்போம்.

இந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்!

முஸ்லிம் சமூகம் கர்வம் கொள்ளத் தக்க இரு கலைஞர்களுக்கு ஃபத்வா அறிவித்திருக்கிறார் சயீத் நூரி. யார் இந்த சயீத் நூரி? தெரியாது. அறிமுகமில்லாத ஓர் உலமா. ஆனால், ஃபத்வாவுக்கு உள்ளாகியிருக்கும் இரு கலைஞர்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள். ஒருவர், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னொருவர், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இருவரும் சேர்ந்து பணியாற்றும் ‘முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் தி காட்’ படத்தின் தலைப்பு சயீத் நூரிக்குப் பிடிக்கவில்லை. ஃபத்வா போட்டுவிட்டார். கூடவே, அவர்கள் இருவரையும் மதத்தைவிட்டு விலக்கியிருப்பதோடு, அவர்களுடைய திருமணங்களையும் இவரே ரத்துசெய்திருக்கிறார். மேலும், படத்துக்குத் தடை கேட்பதோடு, மஜித் – ரஹ்மான் இருவர் மீதும் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஹ்மான் அவருக்கே உரிய பணிவோடு உருக்கமாக ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். மஜித் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

பொதுவாக, இப்படி மத அமைப்புகள் / மதத் தலைவர்களால் கலைஞர்கள் குறிவைக்கப்படும்போது, இந்தியாவில் அறிவுஜீவிகளிடமிருந்து வெளிவரும் எதிர்வினைகள் அலாதியானவை. மதவெறியர்கள் இந்துத்வர்கள் என்றால், அறிவுஜீவிகள் வர்க்கம் பாயும்; இஸ்லாமியத்துவர்கள் என்றால், கோமாவில் படுத்துவிடும். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி, கெட்ட கொள்ளி என்ற வித்தியாசமெல்லாம் இருக்கிறதா என்ன? ரஹ்மான் - மஜிதி விவகாரமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஒரு பிள்ளை போதுமா?


சீன அரசின் ஒரு குழந்தைக் கொள்கை சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றுகிறது. முன்னதாக 13-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போதைய சீனப் பொருளாதாரத் தேக்கம் அதற்கு முன்னதாகவே, அந்த அறிவிப்பு வெளியாவதற்கான சாத்தியங்களைக் கட்டியம் கூறுகிறது.

பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவருவது எனும் தாமஸ் ராபர்ட் மால்துஸின் மக்கள்தொகைக் கொள்கை பெரும்பாலான நாடுகளால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. எனினும், சீன கம்யூனிஸ்ட் அரசு 1979-ல் அறிவித்த ஒரு குழந்தைக் கொள்கை முன்னுதாரணமே இல்லாதது. மேலும், அதைச் செயல்படுத்த சீனா கையாண்ட வழிமுறைகள் எல்லோரையும் உறையவைத்தன.

ஒரு குழந்தைக் கொள்கையில் சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்கிறார்கள். இந்த விஷயத்தில் சீனப் பெண்களுக்கு அவர்களுடைய கருப்பையின் மீது உரிமையே கிடையாது என்பதுதான் உண்மை. சீனப் பெண்கள் மாதவிடாய் சுழற்சியை அவரவர் பகுதியில் இருக்கும் சுகாதாரத் துறை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். சுகாதாரத் துறையினர் சந்தேகப்பட்டால், பரிசோதனை நடக்கும். விதி மீறப்பட்டிருப்பது தெரியவந்தால், கட்டாயக் கருக்கலைப்பு நடக்கும். 9 மாத, 8 மாதக் கர்ப்பங்கள் எல்லாம் கலைக்கப்படும் கொடூரம் சீனாவில் சகஜம். ஒரு குழந்தைத் திட்டத்தின் கீழ் 33.6 கோடி கருக்கலைப்புகள், 1.96 கோடி குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சைகளைச் செய்திருப்பதாகச் சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது சீன சுகாதாரத் துறை. இந்த அதிகாரபூர்வப் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேசமயம், இந்தக் காட்டுமிராண்டிக் கொள்கை அமலாக்கமெல்லாம் சாமானியர்களுக்குதான். ஒரு குழந்தைக் கொள்கையை மீறி குழந்தை பெற்றுக்கொள்பவர்கள், அவர்களுடைய ஆண்டு வருமானத்தைப் போல் 10 மடங்கு வரை அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று ஒரு விதி உண்டு. பணக்காரர்கள் வெளியேற இந்த விதி ஓட்டை போதுமானதாக இருக்கிறது.

ஆர்எஸ்எஸ்ஸிடம் கற்க ஒரு பாடம்!



பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் வேர் பரப்ப ஆரம்பித்திருப்பதைச் சொல்லி விசனப்பட்டார் காங்கிரஸ் நண்பர் ஒருவர். மோடியின் இலக்குகளில் சங்கப் பரிவாரங்கள் வளர்ச்சி – விரிவாக்கத் திட்டங்களுக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. மக்களவைத் தேர்தலுக்கு முன் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நடத்திக்கொண்டிருந்த ‘ஷாகா பயிற்சி வகுப்பு’களின் எண்ணிக்கை 39,000. மோடி பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த அடுத்த 4 மாதங்களில் இது 42,000 ஆனது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்று சொல்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். கூடவே, எங்கெல்லாம் முன்பு அவர்கள் செயல்படுவது சிரமமாக இருந்ததோ, அங்கெல்லாம் இப்போது கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படி ஷாகாக்கள் எண்ணிக்கை அதிகரிப்பது எந்த அளவுக்கு அரசியலில் நேரடி விளைவுகளை உண்டாக்கும் என்பதற்கு, மேற்கு வங்கம் சமீபத்திய உதாரணம். வங்கதேச அகதிகளை முன்வைத்து நடத்தப்படும் இந்து – முஸ்லிம் பிளவு அரசியல் அங்கு வேலை செய்யத் தொடங்கியதோடு, பாஜக ஓட்டுவங்கி கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.