வறுமை ஒழிப்பா, ஏழைகள் ஒழிப்பா?

ழைகளின் வாழ்க்கை நிலையை மாற்ற ஒன்றுக்கும் உதவ முடியாத ஓர் அரசால் வறுமையை ஒழிக்க என்ன செய்ய முடியும்? எண்களை வைத்து விளையாட்டுக் காட்டி ஊரை ஏமாற்ற முடியும். ஒரே நாளில் 5.26 கோடி ஏழை இந்தியர்களை அப்படித்தான் ‘பணக்காரர்கள்’ ஆக்கி ‘வரலாற்றுச் சாதனை’ படைத்து இருக்கிறது மன்மோகன் சிங் அரசு!
மத்தியத் திட்டக் குழுவின் புதிய வரையறையின்படி, ஒரு நாளைக்கு ரூ. 28.35 (மாதம்  ரூ. 859.60) சம்பாதிக்கும் நகர்ப்புற இந்தியர்கள்; ரூ. 22.42 (மாதம் ரூ. 672.80) சம்பாதிக்கும் கிராமப்புற இந்தியர்கள் இனி ஏழைகள் அல்ல. அவர்கள் வறுமைக்கோட்டைத் தாண்டிவிட்டவர்கள். இந்தப் புதிய வரையரையின்படி, இந்தியாவில் பரம ஏழைகளின் எண்ணிக்கை 35.46 கோடி. முன்னதாக 2004-05 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 40.72 கோடியாக இருந்தது. 2009-10 காலகட்டத்தில் இது 35.46 கோடியாகக் குறைந்திருக்குறதாம். அதாவது, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 29.4 சதவிகிதத்தில் இருந்து 17.1 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறதாம். எப்படி இருக்கிறது இந்த முன்னேற்றம்?
ஒரு வேளைக்கு வயிறு நிரம்பச் சாப்பிடவே இருபத்தியெட்டு ரூபாய் காணாதே; கூவம் கரையோரக் குடிசையில் வாழ்ந்தால்கூட மாதம் ஐந்நூறு ரூபாய் வாடகை கொடுக்க வேண்டுமே; மாதம் எண்ணூற்று அறுபது ரூபாய்க்குள் யாரால் வாழ முடியும் என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால், கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் தன்னுடைய இந்த ‘வெற்றி’க்கு _ ‘நாட்டில் வறுமையைக் குறைத்த சாதனை’க்கு - காரணம் அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்தான் என்றும் அறிவித்திருக்கிறது அரசு!
இந்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பின் பலருக்கும் தெரியாத ரகசியம் ஒன்று உண்டு. கடந்த 2008-ல் மாறிவரும் பொருளாதாரச் சூழல், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உலக வங்கி சர்வதேச அளவில் வறுமைக்கோட்டுக்கான அளவை மாற்றி அமைத்தது. அதாவது, அதுவரை ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருவாயுடன் வாழ்பவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் என்று இருந்த அளவுகோலை 1.25 டாலர் என்று உயர்த்தியது (இந்திய மதிப்பில் இன்றைக்கு ரூ. 63). ஓரளவுக்கு நியாயமான அளவுகோல் இது. இந்தக் கணக்கின்படி இந்தியாவில் வாழும் பரம ஏழைகளின் எண்ணிக்கை 45.58 கோடி என்று ஆனது. கிட்டத்தட்ட மூன்று இந்தியர்களில் ஒருவர் பரம ஏழை என்ற அவமானகரமான நிலைக்கு நாடு அப்போது தள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் அப்போது ‘‘வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பிரதான கவனம் அளிப்போம்’’ என்று சொன்னார். தன்னுடைய வார்த்தைகளுக்கு நேர்மையாகச் செயல்பட முடியாத அவருடைய அரசுதான் இப்போது குறுக்குவழியில் ஏழைகளின் எண்ணிக்கையை இப்படிக் குறைத்துச் சொல்கிறது.
நம் நாட்டில் அரசாங்கத்தின் கணக்கு எப்போதுமே இப்படித்தானே, இதில் அலட்டிக்கொள்ள என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். எப்போதும் அப்படித்தான்; ஆனால், இனி மேல் அப்படி இருக்காது. இந்த முறை வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டிருப்பதன் பின்னணியில் அரசுக்குப் பெரிய திட்டங்கள் இருக்கின்றன. மக்களுக்கான மானியங்களைக் குறைப்பது அவற்றில் முக்கியமானது. அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருள்கள், உரம் என ஏராளமான பொருட்களுக்கான மானியங்களைக் குறைக்கும் முடிவை அரசு எடுத்திருக்கிறது. தற்போது ஆண்டுக்கு ரூ. 2.08 லட்சம் கோடி அளவுக்கு இந்த மானியங்களுக்காக அரசு செலவிட்டுவரும் நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் படிப்படியாக இந்தச் செலவை வெகுவாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது (இதே அரசாங்கம்தான் பெரு நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 4.87 லட்சம் கோடி மானியமாகப் படி அளக்கிறது). இதன் ஒரு பகுதியாக மானியத்தை நேரடியாக மக்களிடமே ரொக்கமாக அளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல்கட்டமாக 50 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான அறிவிப்பு மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. ‘ஆதார்’ அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு, மானியத் தொகை மக்களிடம் அளிக்கப்படும் என்பதால், எப்போதும்போல் இனி எல்லோருக்கும் ரேஷன் பொருட்கள், எல்லோருக்கும் ஒரே விலையில் காஸ் விநியோகம் தொடராது என்பதே இதன் நேரடியான பொருள். இத்தகைய சூழலில் ஏழைகளை நேர்மையான முறையில் வரையறுப்பது முக்கியமானது. அரசோ தில்லுமுல்லு செய்கிறது. எனில், அரசின் திட்டம் வறுமையை ஒழிப்பதா, ஏழைகளை ஒழிப்பதா?
ஜூனியர் விகடன் மார்ச் 2012

2 கருத்துகள்:

  1. ஏற்கனவே டாஸ்மாக் போன்ற விஷபான கடைகளின் வழியாக மக்களின் எண்ணிக்கையை குறைக்க மறைமுக நடவடிக்கைகளில் அரசு இடுபட்டு வருகிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. எதிர்காலத்தில் மோசமான நோய்கிருமிகளை பரப்பி மால்தூசியன் வழியில் ஏழைபாழைகளின் எண்னிக்கையை குறைக்க அரசே ஆவன செய்தாலும் ஆச்சரியபட ஒன்றுமில்லை.

    இதெற்கெல்லாம் முடிவு தான் என்ன?

    பதிலளிநீக்கு