நீங்கள் இருப்பது தெரிய வேண்டும் என்றால், நீங்கள் செயல்பட வேண்டும். இந்தியக் காப்புரிமைக் கட்டுப்பாட்டாளர் பி.ஹெச்.குரியனும் அவருடைய அலுவலகமும் இப்போது இந்தியாவைத் தாண்டியும் தெரிய ஆரம்பித்திருப்பது அப்படித்தான். ஜெர்மனியைச் சேர்ந்த ‘பேயர்’ மருந்து நிறுவனத்துக்கு குரியன் கொடுத்த அடி, உலகம் முழுவதும் பொது சுகாதாரத்துக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது!
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்காக ‘பேயர்’ நிறுவனம் தயாரிக்கும் மருந்து ‘நெக்ஸாவர்’. ஒரு மாதத்துக்கு ‘நெக்ஸாவர்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு ரூ. 2.80 லட்சம் செலவிட வேண்டி இருந்தது. இந்த விலை இந்தியர்களுக்குக் கட்டுப்படியாகாது என்று ‘பேயர்’ நிறுவனத்திடம் சொன்னார் குரியன். ‘பேயர்’ அசைந்து கொடுக்காத நிலையில், கட்டாயக் காப்புரிமையின் அடிப்படையில் இந்த மருந்தைத் தயாரிக்கும் அனுமதியை இந்திய நிறுவனமான ‘நாட்கோ பார்மா’வுக்கு வழங்கிவிட்டார் குரியன். இனி, இந்த மாத்திரைகள் ரூ. 8,800-க்குக் கிடைக்கும். இந்த மருந்தின் அடிப்படை மூலக்கூறுக்கான சர்வதேச காப்புரிமை ‘பேயர்’ நிறுவனத்திடம் இருக்கிறது. இதற்காக ‘பேய’ருக்கு ‘நாட்கோ பார்மா’ காப்புரிமைத் தொகையாக விற்பனையில் 6 சதவிகித்தைத் தரும். இப்படிக் காப்புரிமைக்குட்பட்ட ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கான அனுமதியை உள்நாட்டு நிறுவனத்துக்கு இந்திய அரசு அளிப்பது இதுவே முதல் முறை!
உலக அளவில் மருந்து உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மருந்து உற்பத்தி நடக்கிறது. இதில் ஏற்றுமதியாகும் 40 சதவிகித மருந்துகள் ஏழை நாடுகளுக்கே செல்கின்றன. குறிப்பாக ஐ.நா.சபைசார் சுகாதார அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் மருந்துகளில் மூன்றில் இரு பங்கு இந்திய மருந்துகள். காரணம்... இந்திய மருந்துகளின் விலைக் குறைவு. இந்திய மருந்துத் துறையைக் கைப்பற்ற இப்போது மூன்று விதமான போர்களில் இறங்கி இருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். முதலாவது... இந்திய மருந்து நிறுவனங்களை விலை பேசி வாங்கிவிடுவது. ‘ரான்பாக்ஸி’, ‘டாபர் பார்மா’, ‘பிராமல் ஹெல்த்கேர்’ எல்லாம் இப்போது இந்திய நிறுவனங்கள் இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் நிறுவனங்கள். இரண்டாவது... விலைக்கு வராத இந்திய நிறுவனங்களைக் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வளைப்பது. ‘டாக்டர் ரெட்டீஸ்’, ‘அரபிந்தோ’, ‘காடில்லா’... பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இந்த வலைக்குள் வந்துவிட்டன. மூன்றாவது காப்புரிமைப் போர். முந்தைய இரு வழிகளைவிட மோசமான உத்தி இது. இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான மரணங்கள் ‘தொற்றா நோய்கள்’ எனப்படும் புற்றுநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகியவற்றாலேயே ஏற்படுபவை. 10 இந்தியர்கள் இறந்தால், அவர்களில் 8 பேர் இந்நோய்களாலேயே இறக்கின்றனர் என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்த நோய்களுக்கான மருந்துகளைக் காப்புரிமையின் பெயரால் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முனைகின்றன. இந்தப் போரை, எவ்வளவு திட்டமிட்டு அவை நடத்துகின்றன என்பதற்கும் இந்தப் போரில் அவை வென்றால் என்ன நடக்கும் என்பதற்கும் ஒரு சின்ன உதாரணம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘நோவார்டீஸ்’ மருந்து நிறுவனம் தொடுத்திருக்கும் ஒரு வழக்கு.
ரத்தப் புற்றுநோய்க்கான ‘இமாடினிப் மெசிலேட்’ என்ற மருந்தைத் தயாரிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் இந்த மருந்தை உற்பத்தி செய்ய இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறது ‘நோவார்டீஸ்’. அறிவுசார் சொத்துரிமைக்கான மேல்முறையீட்டு வாரியமும் சென்னை உயர் நீதிமன்றமும் நிராகரித்த இந்த வழக்கு இப்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இந்திய மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ‘இமாடினிப் மெசிலேட்’ மாத்திரை ஒன்றின் விலை ரூ. 90. அதே மருந்தை சின்ன மாற்றங்களோடு ‘நோவார்டீஸ்’ தயாரிக்கும் ‘கிளிவெக்’ மாத்திரை ஒன்றின் விலை ரூ. 1,000. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் பேர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில் ‘நோவார்டீஸ்’ இந்த வழக்கில் வென்றால், என்னவாகும் என்று நினைத்துப்பாருங்கள்!
இந்த வழக்கில் ‘நோவார்டீஸ்’ சார்பில் இதுவரை ஆஜரான வழக்குரைஞர்கள் யார் யார் தெரியுமா? ப. சிதம்பரம் (இன்றைய உள்துறை அமைச்சர்தான்), ரோகிந்தன் நாரிமன், கோபால் சுப்ரமண்யம் (இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை அலங்கரித்தவர்கள்). எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரிக்கே மருந்து நிறுவனங்களுடன் சந்தேகத்துக்குரிய தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து, அவர் வழக்கில் இருந்து விலக நேர்ந்தது. ‘நோவார்டீஸ்’ மட்டும் அல்ல. பல நிறுவனங்கள், பல்லாயிரம் மருந்துகள் அடுத்தடுத்து வரிசையில் நிற்கின்றன. இத்தகைய சூழலில்தான் ‘பேயர்’ நிறுவனத்துக்கு எதிராகக் கட்டாயக் காப்புரிமையைப் பயன்படுத்தி இருக்கிறார் குரியன். உலக வர்த்தகக் கழகம் அளித்திருக்கும் ஒரு விசேஷ உரிமையின் அடிப்படையில் _ அதாவது தேச நலன் சார்ந்து, உரிமம் அற்ற நிறுவனங்களுக்குக்கூட மருந்துகளைத் தயாரிக்க அரசு அனுமதி வழங்கலாம் என்கிற விதியின் அடிப்படையில் _ இந்த அனுமதியை அளித்திருக்கிறார் குரியன். கட்டாயக் காப்புரிமையை முன்னெடுத்திருக்கும் முதல் நாடு இந்தியா இல்லை. ஏற்கெனவே, தாய்லாந்து இப்படிச் சில மருந்துகளுக்குக் கட்டாயக் காப்புரிமை தந்திருக்கிறது. ஆனால், இந்திய மருந்துச் சந்தை பெரியது என்பதால் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றன பன்னாட்டு மருந்து நிறுவனங்கள். பெரும்பாலான அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் ‘‘இந்தியா காப்புரிமைகளுக்குத் துளியும் மதிப்பளிப்பது இல்லை’’ என்று கடுமையாகச் சாடி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து காப்புரிமை என்பதற்கான எல்லை எது என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
இந்தத் தருணத்தில் இந்தியாவிடம் தொடரும் ஒரு முக்கியமான பலகீனத்தைப் பற்றியும் நாம் பேச வேண்டியது அவசியம். அது ஆராய்ச்சித் துறையில் நாம் மிக மோசமான நிலையில் இருப்பது. இந்திய அரசோ, நிறுவனங்களோ ஆராய்ச்சிக்குச் செலவிடும் தொகை சொற்பம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம்கூட ஆராய்ச்சிக்காகச் செலவிடப்படுவது இல்லை. ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிப்பது என்பதைக் காட்டிலும் பிறர் கண்டுபிடித்த பொருட்களைப் பிரதியெடுப்பதே இந்தியத் தொழில் கலாசாரமாகிவருகிறது. இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு ஒருவர்தான் ஆராய்ச்சிப் பணிக்குத் தகுதி உடையவராக இருக்கிறார் (சீனாவில் இந்த எண்ணிக்கை 633). நாம் பெரிய அளவில் கோலோச்சிக்கொண்டிருப்பதாக நினைக்கும் கணினி அறிவியல் துறையிலேயே முனைவர் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு இருநூறைத் தாண்டவில்லை. (அமெரிக்காவிலும் சீனாவிலும் இந்த எண்ணிக்கை 2,000). மருந்து உற்பத்தியையே எடுத்துக்கொண்டால், ஒரு பன்னாட்டு நிறுவனம் செலவிடும் தொகையைக்கூட நம்முடைய மருந்துத் துறையின் ஒட்டுமொத்த ஆராய்ச்சி செலவோடும் ஒப்பிட முடியாது. உதாரணமாக பேயர் நிறுவனம் ஆராய்ச்சிக்காகச் செலவிடும் தொகை ரூ. 4.75 லட்சம் கோடி. நாம் எங்கே இருக்கிறோம் என்பதற்கு இது போதுமானது. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்களைச் சுமக்கும் இந்தியா இந்தச் சூழலிலேனும் விழித்துக்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிப் பணிகளில் பிரதான கவனம் செலுத்துவதுடன் நலிவடைந்துகொண்டிருக்கும் பொதுத் துறை மருந்து நிறுவனங்களை மீட்டெடுக்க வேண்டும். மேலும் பல பொதுத் துறை மருந்து நிறுவனங்களை உருவாக்க வேண்டும். ஒரு பொருளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அதற்குரிய காப்புரிமையை வழங்கும் அதேசமயத்தில் அந்தக் காப்புரிமை நியாயமானதாகவும் கட்டுப்படியானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய குரல் கொடுக்க வேண்டும். குரியனின் நடவடிக்கை அதற்கான முதல் படியாக இருக்கட்டும்!
ஆனந்த விகடன் மார்ச் 2012
excellent article.. as he said, govt should be aware on this issue.. Mr P C should not do like this for money...
பதிலளிநீக்குநேற்று உச்ச நீதிமன்றத்தின் நோவார்டிஸ்க்கு எதிரான தீர்ப்பு ஒரு சின்ன ஆறுதல்
பதிலளிநீக்குமிக அருமையான கட்டுரை சமஸ்..
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல பதிவு. மக்களுக்கு தெரிய வேண்டிய விஷயம். உங்கள் பதிவிற்கு வருவது இதுவே முதல் முறை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநாட்டு நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை வெளிப்படுகிறது. இளைஞனே! உன் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குதங்கள் கருத்துரைகள் அற்ப்புதம் . எவ்வாறு நமது அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்றி வருகின்றனர் , என்பதை தெளிவாகவும் கூரியுள்ளிர்கள்
பதிலளிநீக்கு