பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. ‘‘பத்ம விருது வாங்கின முதல் விவசாயியின் ஊர்ங்கிறதைத் தாண்டி எங்களுக்கு இதில் இன்னொரு சந்தோஷமும் உண்டு; எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ‘பத்மஸ்ரீ’ வெங்கடபதி ரெட்டியார் பூரிப்பில் இருக்கிறார். ‘‘தோட்டத்துக்குப் போலாமா?’’ என்று ‘ஹுண்டாய் வெர்னா’ காரில் என்னை அழைத்துச் செல்கிறார். ‘‘அம்பாஸிடரும் கிடக்கு. ஆனா, இந்தக் காலத்துக்கு இதுதான் சொகம். என்ன சொல்றீங்க?’’ என்கிறார். அருகில் அமர்ந்திருக்கும் மகள் ஸ்ரீலஷ்மியைப் பார்த்து ‘‘ஏம்மா, படம் எல்லாம் மெயில் அனுப்பச் சொன்னேனே, அனுப்பிச்சிட்டியா?’’ என்கிறார். வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரகக் கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பி வழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்கு காய்த்து தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், வாயைத் திறந்தால் தாவரங்களின் தகவமைப்பு, குரோமோசாம்கள், மரபிணி மாற்றம், அணுக்களின் ஆற்றல் என்று பின்னி எடுக்கிறார்.
‘‘நவீன விவசாயத்தில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?’’
‘‘ஆர்வம் எல்லாம் இல்லை. நிர்பந்தம். பரம்பரை பரம்பரையா விவசாயம்தான் தொழில். முப்போகம் பண்ணிணோம். ஆனா, உழவன் கணக்குப் பார்த்தா உழக்குகூட மிஞ்சாதுங்கிறது ஒருநாள் எனக்கும் நேர்ந்துச்சு. ஊரைச் சுத்திக் கடன். தற்கொலை முடிவுக்கே வந்துட்டேன். கடைசியா ஒருமுறை வேளாண் துறை ஆளுங்களைப் பார்த்து யோசனை கேட்டுப் பார்ப்போம்; ஏதாவது வழி கிடைக்குமான்னு கிளம்பினேன். பெரியகுளம் தோட்டக்கலைத் துறை இயக்குநரா இருந்த சம்பந்தமூர்த்தியைச் சந்திச்சேன். மலர் சாகுபடி நல்ல வருமானம் தரும்னு சொன்னார். நெல்லை விட்டுட்டு, டெல்லி கனகாம்பரத்தைக் கையில் எடுத்தேன். நல்ல ஈரப்பதம் வேணும் அது வளர; சீதோஷ்ண நிலை 23 டிகிரியைத் தாண்டக் கூடாது; இங்கே எல்லாம் வளர்க்கவே முடியாது. ஆனா, வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும். என்ன செய்யலாம்? அப்பதான் விஞ்ஞானத்தை வரிச்சுக்கிட்டேன்.’’
‘‘அயல் மகரந்தச் சேர்க்கை, மரபிணு மாற்றம், திசு வளர்ப்பு முறை... இந்த விஷயங்களை எல்லாம் எப்படிக் கத்துக்கிட்டீங்க?’’
‘‘அய்யா, நான் கைநாட்டுதான். ஆனா, கேள்வி ஞானம் ஜாஸ்தி. ஒரு விஷயம் தோணிடிச்சுன்னா, அதை யார்க்கிட்ட கேட்டா முடிக்கலாமோ, அவங்ககிட்ட போய்டுவேன். பெரிய மனுஷங்களைப் பார்க்கப்போகும்போது வெறுங்கையோட போக மாட்டேன். கையில் டேப் ரிக்கார்டரை எடுத்துக்கிட்டுப் போயிடுவேன். அவங்க சொல்ற வழிமுறைகளைப் பதிவு பண்ணிக்கிட்டு வந்து ஒரு தடவைக்கு பத்து தடவை போட்டு கேட்டு, தெரியாததைத் தெரிஞ்சவங்கக்கிட்ட கேட்டு ஒவ்வொண்ணாப் புரிஞ்சுக்குவேன். உயர் ரக மலர் உற்பத்தியோட அடுத்தகட்டத்துக்குப் போகணும்னா அதுக்குத் தொழில்நுட்ப அறிவு அவசியம்னு புரிஞ்சுச்சு. ஜெர்மனிக்காரர்கள் இந்த விஷயத்தில் கில்லாடிகள்னு சொன்னாங்க. அப்ப ஜெர்மானிய அமைச்சர் ஒருத்தர் நம்ம நாட்டுக்கு வந்திருந்தார். ‘இந்தியாவுக்கு வேண்டிய ஒத்துழைப்பை நாங்க வழங்குவோம்’னு அவர் பேசியிருந்ததைப் பத்திரிகையில படிச்சேன். அவருக்குக் கடிதம் எழுதி, உயர் ரகப் பூக்களை உருவாக்குற தொழில்நுட்பம் என்னன்னு எனக்கு உதவுணும்னு கேட்டேன். அவரு அந்தக் கடித்தத்தைப் படிச்சுட்டு ஒரு ஜெர்மானிய விவசாயியோட தொடர்பை எனக்கு உருவாக்கிக்கொடுத்தார். நானே ஒரு ஆய்வுக்கூடம் அமைச்சு திசு வளர்ப்பு முறையில் கன்னுங்களை உருவாக்கக் கத்துக்கிட்டேன்.
ஒருநாள் என்னோட சம்சாரம் விஜயாள், கனகாம்பரத்தை ஏன் வெவ்வேற நிறத்துல உருவாக்கக் கூடாதுனு கேட்டாங்க. கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக இயக்குநரா இருந்த ஸ்ரீரங்கசாமி அய்யாவைப் போய்ப் பார்த்து யோசனை கேட்டேன். வழிகாட்டினார். அப்துல் கலாம் அய்யா அப்போ ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானியா இருந்தார். அவரோட பழக்கம் ஏற்படுத்திக்கிட்டேன். கல்பாக்கம் போய் காமா கதிர்வீச்சு முறையில் கனகாம்பரத்தோட குரோமோசோம்களைப் பிரிச்சு ஒரு புதிய வகையை உருவாக்கினேன். அந்தக் கன்னுக்கு ‘அப்துல் கலாம்’னு பேர் வெச்சேன். சாதாரண டெல்லி கனகாம்பர ரகம் ஒரு செடிக்கு 30 பூக்கள்தான் பூக்கும். அதுவும் பத்து மணி நேரம்கூட தாங்காது. ஆனா, ‘அப்துல் கலாம்’ ரகம் ஒரு செடிக்கு 75 பூக்கள் பூக்கும். 17 மணி நேரம் வரைக்கும் பொலிவா இருக்கும். இதேபோல, கல்பாக்கம் அணு விஞ்ஞானி பாபட் உதவியோட புது சவுக்கு ரகத்தை உருவாக்கினேன். சாதாரண சவுக்கு ஏக்கருக்கு 40 டன் விளைஞ்சா, இந்த ரகம் 200 டன் கொடுக்கும். கொய்யாவும் அப்படித்தான். இன்னும் நிறைய ஆய்வுல இருக்கு.’’
‘‘ஒரு விவசாயியாக அரசாங்கத்தின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
‘‘அரசாங்கம் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முக்கிய கவனம் கொடுக்கணும். குறிப்பா, தண்ணீர் மேலாண்மைக்கு விசேஷ கவனம் கொடுக்கணும்னு நெனைக்கிறேன். ஆனா, இப்ப எல்லோரும் பேசுற மாதிரி விவசாயிகளோட எதிரியா நான் அரசாங்கத்தைப் பார்க்கலை. உதாரணமா, நான் டெல்லி கனகாம்பரத்தை வளர்க்க ஆரம்பிச்ச காலகட்டத்துல, அந்த ரகச் செடியோட விலை ஐந்நூறு ரூபாய். பனியறை அமைச்சு கனு பதியன் போட்டு நானே செடிகளை உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். அரசாங்கத்துல பேசினேன். ‘விவசாயிகளுக்கு இது நல்ல வருமானம். வெளிநாடுகள்லேயும் நல்ல கிராக்கி இருக்கு. அரசாங்கமே வாங்கி மானிய விலையில் விவசாயிகளுக்குக் கொடுப்பாதா இருந்தா, ஒரு கன்னு அஞ்சு ரூபாய்னு என்னால தர முடியும். விவசாயிகளுக்கு வருமானம் ஆச்சு. அரசாங்கத்துக்கு அந்நியச் செலாவணி ஆச்சு’னு பேசினேன். அரசாங்கம் ஒரு லட்சம் கன்னுங்களை என்கிட்ட அஞ்சு ரூபாய்க்கு வாங்கி விவசாயிகளுக்கு மானியத்துல ரெண்டாரூபாய்க்குக் கொடுத்துச்சு. ஆயிரக் கணக்கான விவசாயிகள் வாழ்க்கையில் விளக்கு ஏறுனுச்சு. ஒரு செடிக்கு காப்புரிமை பெற டி.என்.ஏ. பரிசோதனை பண்ணிப் பார்க்க மூணு லட்ச ரூபாய் கட்டணமா இருந்துச்சு. நான் இதைக் குறைக்கணும்னு வலியுறுத்தினப்ப இந்தத் தொகையை அரசாங்கம் நாற்பத்தி அஞ்சாயிரமா குறைச்சுச்சு. அதையும் எங்க புதுச்சேரி அரசாங்கமே எனக்காகச் செலுத்துச்சு. எனக்கு மட்டும் மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ஐம்பது பைசாதான். இதுக்காக அரசாணையே வெளியிட்டாங்க. இப்படி எவ்வளவோ விஷயங்களைச் சொல்லலாம். நானும் அரசாங்கத்துக்கு எதிரா எவ்வளவோ போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கேன். ஆனா, போராட்டம் மட்டுமே தீர்வு இல்லை.’’
‘‘அப்படி என்றால், நவீன விவசாயம்தான் தீர்வு என்று சொல்கிறீர்களா?’’
‘‘வேற வழி இல்லைனு சொல்றேன். இயற்கை விவசாயம் அற்புதமான விஷயம்தான். ஆனா, இனி அந்த வழிக்குத் திரும்ப சாத்தியமே இல்லைங்கிறதுதான் நிதர்சனம். உதாரணமா, ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு நாலு மூட்டை ரசாயன உரம் ஆகுது. இதே, இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னா தொழு உரத்துக்கு ஒரு விவசாயி முப்பது மாடு வளர்க்கணும். கிராமங்களுக்குப் போய்ப் பாருங்க. அறுப்புக்குகூட ஆள் கிடைக்கலைம்பாங்க. இதுல மாடு மேய்க்க ஆளுக்கு எங்கே போறது? இது ஒருபக்கம். இன்னொரு பக்கம், எல்லோருக்கும் சோறு போட இயற்கை விவசாயத்தால் முடியாது. நாடு சுதந்திரம் அடைஞ்சப்ப இருந்த வயல்வெளிப் பரப்பு எவ்வளவு, இப்போ இருக்குற பரப்பளவு எவ்வளவு? அன்னைக்கு இருந்த ஜனத்தொகை எவ்வளவு; இன்னைக்கு இருக்குற ஜனத்தொகை எவ்வளவு? 120 கோடி ஜனம் இருக்கு. இயற்கை விவசாயத்துல கிடைக்குற விளைச்சல் இன்னைக்கு கிடைக்கிறதுல பாதிகூட கிடையாது. இந்தியா இயற்கை விவசாயத்துக்கு மாறினா ரெண்டா வருஷத்துல இதுல பாதி பேர் பசியில செத்துப்போவாங்க. மூணு வேளை சோறு கிடைக்குறது முக்கியமா? சாப்பிடுறது கைக்குத்தல் அரிசியாங்கிறது முக்கியமா?’’
‘‘ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு இல்லையா?’’
‘‘சரி, எது கேடு இல்லை? ரயிலும் பஸ்ஸும்கூடத்தான் கேடு. அதை விட்டுட்டு மாட்டு வண்டி காலத்துக்குத் திரும்ப முடியுமா? புரிஞ்சுக்குங்க. இயற்கையான விவசாயம், இயற்கையான உணவு, இயற்கையான வாழ்க்கை... இதெல்லாம் நல்ல கனவுதான். ஆனா, இனி நடைமுறைக்கு உதவலையே?’’
‘‘சரி, இந்தியாவில் விவசாயம் லாபகரமான தொழிலாக மாற வேண்டும் என்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’
''இந்திய விவசாயிகளோட பெரிய எதிரி அறியாமைதான். முதல்ல அதைத் துடைக்கணும். எல்லாத் தொழிலேயும் இருக்குறவங்க எவ்வளவோ கத்துக்குறாங்கள்ல, விவசாயிகளுக்கும் அது பொருந்துமா இல்லையா? ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் எதிர்த்து நாம இவ்வளவு வலுவாப் பேசுறோம்ல, ஆனா நவீன விவசாயத்துல கோலோச்சுற இஸ்ரேல் விவசாயிங்க இவ்வளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துறது இல்லை தெரியுமா? அவன் சொட்டுநீர்ப் பாசனம் செய்யுறான். நம்ம விடுற தண்ணியில நூத்துல ஒரு பங்கு தண்ணியில் நம்ம போடுற ரசாயன உரத்துல பத்துல ஒரு பங்கு உரத்தைக் கலந்து சொட்டுசொட்டா தண்ணீ பாச்சுறான். எனக்குத் தெரிஞ்சு உலகத்துல தண்ணியை இவ்வளவு மோசமா எந்த நாட்டு விவசாயியும் பயன்படுத்தலை. தண்ணீ கூடுதலா இருக்குறதாலதான் விஞ்ஞானம் இங்கே வேலை செய்ய மாட்டேங்குதுனு நெனைக்கிறேன். தண்ணீர் மேலாண்மையை இந்திய விவசாயிங்க கத்துக்கணும். தொழில்நுட்பத்தைக் கத்துக்கணும். விஞ்ஞானத்தை மிஞ்சினது எதுவும் இல்லைங்கிறதை உணரணும்.’’
‘‘நவீன விவசாயத்தின் தேவையை இப்படி உரக்கப் பேசுவதால்தான் அரசாங்கம் உங்களுக்கு பத்மஸ்ரீ அளித்து இருக்கிறதா?’’
‘‘யாருக்கு இருக்கோ, இல்லையோ... எனக்கு என் தகுதி மேல நம்பிக்கை இருக்கு. ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு வந்து பாருங்க. சர்வரோக நிவாரணி ஒண்ணைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் இருக்கேன். இந்தியா என்ன, அப்ப உலகமே கொண்டாடும்.’’
ஆனந்த விகடன் ஏப்ரல் 2012
nandru nanbare, nammazhvarium konjam oppittup paarthu oru nalla mudivukku vanga!
பதிலளிநீக்குThe last two questions are thought provoking. Great.
பதிலளிநீக்குvery rare personality. excellent efforts.
பதிலளிநீக்குI need his contact no , Can you share
பதிலளிநீக்குநல்ல மனிதர்! நல்லவர்கள் வரவேண்டும்!
பதிலளிநீக்குBest Reddiar Matrimony in tamilnadu visit: Reddiar matrimony
பதிலளிநீக்குBest Reddiar Matrimony in tamilnadu visit: ரெட்டியார் தி௫மண தகவல் மையம்
இவரது கற்றுக் கொள்ளும் ஆர்வமும் தொடர்ந்த முயற்சியும் வியக்க வைக்கிறது!
பதிலளிநீக்குமகிழ்ச்சி.....
பதிலளிநீக்குமகிழ்ச்சி.....
பதிலளிநீக்குWhy he was not felicitated by TN govt
பதிலளிநீக்குEps-ops fools