அந்த விருதுக்குத் தகுதியானவர் கமல்: ஸ்ரீதேவி

ட்டகாசமான மறுவருகையை நிகழ்த்தி இருக்கிறார் ஸ்ரீதேவி. பத்ம விருதுக்கானத் தேர்வுப் பட்டியலில் அவர் பெயரைக் கொண்டுசேர்த்து இருக்கிறது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’. வெற்றி சந்தோஷத்தில் இருந்தவருடன் பேசினேன்... எல்லாவற்றையும்பற்றி.

                                      ‘‘நான்கு வயதில் நடிக்கத் தொடங்கினீர்கள். இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்கிற உச்சம் வரை பார்த்துவிட்டீர்கள். எது உங்களை இன்னமும் நடிப்பை நோக்கி இழுக்கிறது?’’
‘‘திட்டம் போட்டு எல்லாம் நடிக்க வரவில்லை. சின்ன வயசில் அம்மா நடிக்கச் சொல்வார்கள். நடிப்பேன். அந்த வாழ்க்கை பிடித்தது. பழகிவிட்டது. எந்தக் காலகட்டத்திலுமே ஒரு பெரிய ஸ்டாராக நினைத்துக்கொண்டது கிடையாது. ஒவ்வொரு படத்திலும் பயத்தோடுதான் நடித்தேன். கல்யாணம் ஆன பிறகு, இன்னொரு உலகம் இருப்பதைப் பார்த்தேன். எனக்கு என்று நிறையக் கடமைகள் இருந்தன. அந்த வழியில்தான் போய்க்கொண்டு இருந்தேன். பால்கி எங்கள் குடும்ப நண்பர். ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ கதையைச் சொல்லி நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்றார். கதை பிடித்தது. நடித்தேன். அவ்வளவுதான்.’’

                                      ‘‘வயது சார்ந்து ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ சஷி பாத்திரத்தை உங்களுடன் ஒப்பிட முடியும். உங்கள் வாழ்க்கையோடு அந்தப் பாத்திரத்தை ஒப்பிட முடியுமா?’’
‘‘இந்தியாவில் பல பெண்கள் தங்களை சஷி பாத்திரத்துடன் ஒப்பிட்டுக்கொள்ள முடியும். நான் நிறையப் பேரை அப்படிப் பார்த்திருக்கிறேன். ஆனால், என்னை சஷியோடு ஒப்பிட முடியாது. என்னுடைய கணவரும் சரி, குழந்தைகளும் சரி... அன்பானவர்கள். என் மீது மிகுந்த மரியாதை உடையவர்கள்.’’

                                      ‘‘ஒரு பரபரப்பான நடிகையாக இருந்துவிட்டு, 15 ஆண்டுகள் அமைதியாகிவிட்டீர்கள். புதிய சூழல் எப்படி இருந்தது?’’
‘‘நடித்துக்கொண்டு இருந்தவரைக்கும் தினமும் காலையில் நாலரை மணிக்கே எழுந்துவிடுவேன். கிளம்பி ஏழு மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனால், ராத்திரி வீடு திரும்புவேன். தூக்கத்துக்காக ஏங்கி இருக்கிறேன். இப்போது ஆறரை மணிக்கு எழுந்திருக்கிறேன். குழந்தைகளைக் கிளப்பிவிட்டு அனுப்பும்வரைக்கும் வீட்டு வேலைகள் இருக்கும். அப்புறம் நீச்சல், ஓவியம் என்று குழந்தைகள் வரும் வரை எனக்கான நேரம்தான். குழந்தைகள் வந்ததும் எல்லாக் குடும்பப் பெண்களையும்போல என் நேரமும் கழியும்.’’

                                      ‘‘சமைப்பீர்களா?’’

''அய்யய்யோ, அந்த அளவுக்கு எல்லாம் நான் இன்னும் ஹோம் மேக்கராகவில்லை."

                                      ‘‘நடிகையாக இருப்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை நிறையவே இழக்க வேண்டி இருக்கும். அப்படி நீங்கள் இழந்த விஷயங்கள் என்று எதைச் சொல்லலாம்?’’

‘‘ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்து, பறிபோனால்தானே அதை இழப்பு என்று சொல்ல முடியும்? எனக்கு விவரம் தெரிந்தது முதல் சினிமாதான் என் உலகமாக இருக்கிறது. இங்கே எனக்குக் கிடைக்காத எதுவுமே இல்லை.’’

                                      ‘‘உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான முடிவுகளை எடுத்தவர் உங்கள் அம்மா. ஆனால், நீங்கள் திருமணம் என்னும் முக்கியமான முடிவை எடுத்தபோது அவர் இல்லை. அம்மாவின் இழப்பை இன்றைக்கு எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘உண்மைதான். அம்மா எனக்கு அம்மாவாக மட்டும் இல்லை. நல்ல தோழி. வழிகாட்டி. நான் இன்றைக்கு ஒரு ஆளாகி நிற்கக் காரணமே அவர்தான். அவருடைய இழப்பு எனக்குப் பேரிடி.’’

                                      ‘‘நிறையப் பேரால் காதலிக்கப்பட்ட பெண் நீங்கள். உங்கள் பார்வையில் காதல் என்பது என்ன?’’

‘‘அன்பு, மரியாதை, நம்பிக்கை.’’

                                      ‘‘எவ்வளவோ கதாநாயகர்களுடன் நடித்தீர்கள். இந்தியாவே உங்களைக் கனவு கண்டது. ஆனால், ஏற்கெனவே திருமணமான போனி கபூரைத் தேர்ந்தெடுத்தீர்கள்...’’
‘‘அவர் நிஜமான கதாநாயகன். அவ்வளவு அற்புதமான மனிதர் அவர். தன்னுடைய குடும்பத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட வாழ்க்கை அவருடையது. உண்மையில், என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறு என்று அவரைத்தான் நான் சொல்வேன். எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தவரே அவர்தான்.’’

                                      ‘‘உங்களுடைய அம்மாவே கமலைத்தான் நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஒருகாலத்தில் தமிழ்நாடே அப்படித்தான் நினைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. என்னவானது  என்று சொல்ல முடியுமா?’’
‘‘இந்த மாதிரி கேள்விகளைத் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்.’’

                                      ‘‘சரி... இப்போதும் படம் பார்க்கிறீர்களா? இன்றைக்கு நடிப்பவர்களில் யார் பிடித்தமானவர்கள்?’’

‘‘ரன்வீர் கபூர், கரீனா. தமிழில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா.’’

                                      ‘‘இயக்குநர்களின் நடிகையாகவே இருந்தீர்கள். ஆனால், நீங்கள் இருந்தது மசாலா  காலகட்டம். இப்போதோ இந்தி திரை உலகம் அதன் பொற்காலத்தில் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நாம் களத்தில் இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறதா?’’

‘‘அந்தந்தக் கணங்களில் வாழ்பவள் நான். எனக்குக் கிடைத்த வாய்ப்புகளே இறைவன் அளித்த வரம் என்று நினைக்கிறேன். அதனால், அப்படியான நினைப்பு வந்தது இல்லை.’’

                                      ‘‘இத்தனை வருடங்களில் இது நாம் நடித்திருக்க வேண்டியது என்று நீங்கள் நினைத்த பாத்திரம் ஏதும் உண்டா?’’
‘‘பானுமதியம்மா, சாவித்ரியம்மா, சரோஜாதேவியம்மா படங்களை எல்லாம் பார்த்து நிறைய ஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். ஆனால், அப்படி எல்லாம் ஏக்கம் எதுவும் இல்லை.’’

                                      ‘‘இந்திய சினிமாவில் பெரும்பாலும் நடிகைகள் கவர்ச்சி ஊறுகாயாகத்தான் பயன்படுத்தப்படுகிறார்கள். இது ஏன் என்று யோசித்து இருக்கிறீர்களா?..’’
‘‘மலை ஏறிவிட்ட காலத்தைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள்.’’

                                      ‘‘உங்களுடன் நடித்த பல நடிகர்கள் இப்போது அசைக்க முடியாத இடங்களில் இருக்கிறார்கள். ரஜினி, கமலில் ஆரம்பித்து சிரஞ்சீவி, அமிதாப் வரை. அவர்களுடன் எல்லாம் உறவு எப்படி இருக்கிறது?’’
‘‘அவர்கள் எப்போதும் என்னைப் பழைய ஸ்ரீதேவியாகவே பார்க்கிறார்கள்.’’

                                      ‘‘உங்கள் காலத்துப் பெரும் போட்டியாளர்களான ரேகா, ஜெயப்ரதா, மாதுரி ஆகியோருடன் இப்போது உங்களுக்கு உறவு எப்படி இருக்கிறது?’’
‘‘அப்போதே நல்ல உறவுதான் இருந்தது. பத்திரிகைகளில்தான் ஏதாவது எழுதுவார்கள்.’’

                                      ‘‘முழுக்கவே ‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவி படம் என்று சொல்லி இருந்தார் பாலு மகேந்திரா. இன்னமும் பலருக்குக் கனவு அதில் நீங்கள் நடித்த பாத்திரம். தேசிய விருது கிடைக்காமல் போனபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?’’
‘‘உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அந்த அளவுக்கு எல்லாம் அப்போது எனக்கு விவரம் தெரியாது. அந்தப் படம் எனக்குப் பெரிய திருப்தி தந்தது. ஆனால், கமல் தேசிய விருது வாங்கியபோது சந்தோஷப்பட்டேன். அந்த விருதுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் கமல்.’’

                                      ‘‘இயக்குநராகும் கனவு உங்களுக்கு உண்டா?’’
 ‘‘இல்லை. தெரிந்த வேலையைச் செய்தால் போதும் என்று நினைக்கிறேன்.’’

                                      ‘‘சின்ன வயதிலேயே நடிக்க வந்தது முதல் பல விஷயங்களில் ஜெயலலிதாவுடன் உங்களை ஒப்பிட முடியும். நிறைய விஷயங்களில் அவர் உங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார். ஆனால், உங்களுக்கு ஏன் அரசியல் ஆர்வம் இல்லாமல் போனது?’’
‘‘உண்மைதான். என்னுடைய சின்ன வயது தேவதை அவர். நிறைய விஷயங்களை  அவரிடம் இருந்து கற்று இருக்கிறேன். ஆனால், அரசியல் என்பது வெறும் ஆசைகளும் கனவுகளும் மட்டும் கிடையாது. அது மிகப் பெரிய திறமை தேவைப்படும் களம். நிறைய அர்ப்பணிப்பு வேண்டும். அந்தப் பண்புகள் என்னிடம் கிடையாது.’’

                                      ‘‘சென்னைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லையா?’’
‘‘என் கணவரிடம் கேட்டுப்பாருங்கள். குழந்தைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்றாலும் நான் எங்கே போகப் பிரியப்படுவேன் என்று. மாதத்துக்கு ஒரு முறையாவது சென்னை வந்து, மெரினாவில் உட்கார்ந்து போனால்தான் எனக்கு நிம்மதி. ஆனால், இங்கேயே வர முடியுமா என்று தெரியவில்லை.’’

                                      ‘‘குழந்தைகளுக்குத் தமிழ் தெரியுமா? வீட்டில் என்ன மொழியில் பேசுவீர்கள்?’’
‘‘கொஞ்சம் தெரியும். பேசினால் புரிந்துகொள்வார்கள். வீட்டில் இந்தி, இங்கிலீஷ்தான்.’’

                                      ‘‘அழகுக்காக நிறைய மெனக்கெடுகிறீர்கள் என்று உங்களைப் பற்றிச் சொல்வார்கள்...’’
(குறுக்கிட்டு...) ‘‘அப்படி எல்லாம் மெனக்கெட்டால், அழகு வந்துவிடுமா என்ன? தனியாக இன்னொரு முகம் மாதிரி ஒட்டிக்கொண்டு தெரியும்.’’

                                      ‘‘அழகுதான் உங்களுடைய அடையாளம் என்று இன்றைக்கும் நினைக்கிறீர்களா? வயதாவதை நீங்கள் விரும்பவில்லையா?’’
(குறுக்கிட்டு...) ‘‘உண்மையில் சந்தோஷம்தான் உண்மையான அழகு. அது எந்த வயதிலும் அப்படியே இருக்கும். அதை என் அடையாளமாகச் சொல்லலாம்!’’
ஆனந்த விகடன் அக். 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக