"என்னய்யா உங்க ஊர்? ஒரு இது இல்ல; ஒரு அது இல்ல. இதெல்லாம் ஒரு ஊரா'' என்று எதற்கெடுத்தாலும் வாயால் அவல் அரைக்கும் ஆட்களைப் பார்த்திருப்பீர்கள். நம் நாட்டில் ஊர் என்று ஓர் இடத்தை அழைக்கலாம் எனில், அதற்கு என்னென்ன தகுதிகளை வரையறுக்கலாம் என்று ஒரு முறை உண்மையாகவே விவாதம் வந்ததாம். பலரும் பல மாதிரி தீவிரமாய்ப் பேசிக்கொண்டிருக்க, திடீரென எழுந்த ஒருவர், "ஒரு டீக்கடை இருந்தால் அதை ஊர் ஏன்று ஒத்துக்கொள்ளலாம்'' என்றாராம். கூடியிருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே, "இதையும் ஒரு தகுதியாக வைத்துக்கொள்ளலாம்'' என்றார்களாம்.
நம் வாழ்வுடன் பிரித்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது டீ. உலகிலேயே அதிகமாகத் தேயிலை உற்பத்தி செய்யும் நாடு நம்முடையது; உலகிலேயே அதிகமாக டீ குடிப்பவர்களும் நாமே. ஆனாலும், ஒரு நல்ல டீக்கு நாம் படும் பாடு சொல்லி மாளாதது. அது போகட்டும். சூடான ஒரு கோப்பை டீயை அருந்தும் முன் சுவையான அதன் கதையைக் கொஞ்சம் பார்ப்போம். தேயிலையின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி, வடக்கு பர்மா மற்றும் தென்மேற்கு சீனாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தேயிலை விளைந்திருக்கிறது. ஆயினும், டீயை முதன்முதலாக பருகத் தொடங்கியவர்கள் சீனர்களே. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே பரவலாக டீ குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தியர்களை டீ ருசிக்கு அடிமையாக்கிவிட்டால் இந்த வியாபாரத்தில் கொழுத்த லாபம் பார்க்கலாம் என்று திட்டமிட்ட ஆங்கிலேயர்கள், ஆரம்பக் காலத்தில் ஊர்ஊராக இனாமாகவே டீ கொடுத்தார்கள். திடீரென ஒரு நாள், "இனி டீக்கு விலையுண்டு'' என்று அவர்கள் சொன்னபோதுதான் நம்மாட்களுக்குத் தெரிந்தது நம் நாக்குகள் டீக்கு அடிமையாகிவிட்டன என்று. அப்புறம், தேயிலை விற்பனைக்கு வந்தபோது அதை வாங்கிக் கண்ட கண்ட நேரத்திலும் காய்ச்சிக் குடித்துவிட்டு இரவெல்லாம் கொட்டகொட்ட விழித்துக்கொண்டிருந்த கதையை அந்தக் காலத்துப் பெருசுகளிடம் இன்றைக்கும் கேட்கலாம்.
காபிக்கும் டீக்கும் இடையேயான உலகளாவிய பனிப்போர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நம்மூரிலும் 1930-களில் இந்தப் போர் ரொம்பவும் பிரசித்தம். எந்த அளவுக்கு என்றால், 'தொழிலாளர் வர்க்கத்தின் நண்பன் டீ' என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் அளவுக்கு. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. அசாம், டார்ஜிலிங், நீலகிரி தேயிலை ரகங்கள் உலகின் சிறந்த ரகங்களாகக் கருதப்படுகின்றன. காபி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொள்ள, டீயும் ஒரு தனி ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டு இரண்டும் சேர்ந்து நம்மை அடிமைப்படுத்திவிட்டன. சரி, நேரமாகிவிட்டது. சூடாக ஒரு நல்ல டீ குடிப்போமா? புறப்படுங்கள். மன்னார்குடிக்குப் போவோம்.
ஏன்?
ஏனெனில், தமிழகத்திலேயே அதிகமாக டீ போடும் க. நேதாஜி அங்குதான் இருக்கிறார். ஒரு நாளைக்கு ஐயாயிரம் டீ போடுகிறார். விஷயம் அது மட்டும் இல்லை. ஐயாயிரம் டீயையும் ஒரே ருசியுடன் தருகிறார். அதிகாலை 4 மணிக்குக் கடையைத் திறக்கிறார். நண்பகல் சில மணி நேரம் ஓய்வு. பிறகு, இரவு 8 மணி வரை சதா சர்வ நேரமும் டீ, டீ, டீ... இத்தனைக்கும், எல்லாக் கடைகளையும்விட இங்கு எப்போதுமே 50 பைசா கூடுதலாகவே டீ விற்கிறார்கள். ஆனாலும், கூட்டத்துக்குக் குறைவே இல்லை.
"சும்மா இல்லை. இத்தனை தரமாக வேறெங்கும் டீ குடிக்க முடியாது'' என்கிறார் நேதாஜி. "கறவைப் பால் மட்டுமே வாங்குகிறோம். இரண்டு அடுப்பு. ஒன்று தண்ணீர் கலக்காத பால் கொதிக்க; இன்னொன்று ஒன்றுக்கு மூன்று என்று தண்ணீர் கலந்த பால் கொதிக்க. டிக்காஷனைத் தண்ணீரில் போட மாட்டோம். இரண்டாவது பால் போடுவோம். டிக்காஷன் தயாரானதும் பழுக்கக் காய்ச்சிய முதல் பால் சேர்த்தால் நேதாஜி டீ தயார்'' என்கிறார் சிரித்துக்கொண்டே.
டீத்தூள் ஆதிகம் வேகக் கூடாது; பால் நன்கு கொதிப்பேற வேண்டும்- நல்ல டீ போட நேதாஜி தரும் ஆலோசனை இது.
நாம் இன்னும் பேசி முடித்திருக்கவில்லை. அதற்குள் ஒரு பெருங்கூட்டம் அந்தக் கடையின் முன் வரிசை கட்டி நிற்கிறது. ஒரு கோப்பை டீக்கான அந்த நீண்ட வரிசையில், இப்போது நின்றுகொண்டிருக்கிறோம் நாமும்!
தினமணி 2008
சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து...
ஊர் ஊராக சந்தையில் டீயை இனாமாக கொடுத்தார்கள் .பின்னர் டீ தூளை இனாமாக கொடுத்தார்கள் .பின்னர் காசுக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள் .-பீட்டர் துரைராஜ்
பதிலளிநீக்குகாபி குடிப்பது பிராமின. டீ குடிப்பது மற்ற சாதிக்காரர்கள் என்ற மனோபாவமும் தமிழ்நாட்டில் இருந்தது .-பீட்டர் துரைராஜ்
பதிலளிநீக்குஉங்களின் தளம் அறிமுகம் இங்கே... http://www.kadalpayanangal.com/2014/02/blog-post_3.html
பதிலளிநீக்குநன்றி...
வாழ்த்துக்கள்...