நம் சமூகத்தில் எனக்கு வெறுப்பேற்றக் கூடிய ஒரு குணம் எந்தவொரு விஷயத்திலும் கண நேரத்தில் உள்ளே நுழைந்து மாபெரும் விவாதத்தை நடத்தி ஒரு தீர்வையும் முன்வைக்கும் நம்முடைய ஆற்றல். ஒருபுறம் கோபம் வந்தாலும் மறுபுறம் எனக்கு ஆச்சர்யமாகவும் இருக்கிறது; தனக்கு முன்பின் தெரியாத ஒரு விஷயத்தை இவ்வளவு தீர்க்கமாகப் பேச உலகில் நம்மைத் தவிர வேறு எவராலும் முடியுமா என்று!
வரலாற்றைப் பொருட்படுத்தாமல் பேசுவதை நாம் எப்போதுமே வழக்கமாக வைத்திருக்கிறோம். காஷ்மீர் பிரச்னையைப் பற்றிப் பேசும் முன் கடந்த கால வரலாற்றை - சில உண்மைகளைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திக்கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.
* இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் நாள் காஷ்மீர் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இல்லை. அது தனி நாடாகவே இருந்தது.
* பாகிஸ்தானின் தாக்குதலைத் தொடர்ந்து, மன்னர் ஹரிசிங் ஒப்புதலுடன் 1947-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் நாள் ராணுவத்தின் உதவியுடனேயே காஷ்மீரை இந்தியா கைப்பற்றியது.
* இந்தியாவின் வைஸ்ராய் மவுன்ட்பேட்டன், பிரதமர் ஜவஹர்லால் நேரு இருவரும் காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கப் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்தனர்.
* இந்தியா 1948-ல் ஐக்கிய நாடுகள் சபையிடம் காஷ்மீர் பிரச்னையைக் கொண்டுசென்றது. காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.சபை சொன்னதை இந்தியா ஏற்றது. பொது வாக்கெடுப்புக்காக இரு ஆணையங்களை உருவாக்கியது.
* இவை யாவும் பிற்காலத்தில் இந்திய அரசால் மறுக்கப்பட்டன. கிட்டத்தட்ட 10 பேருக்கு ஒருவர் என்னும் விகிதத்தில் 4 லட்சம் வீரர்களைக் குவித்து காஷ்மீரில் ஜனநாயகம் நிலவுவதாகக் காட்டிக்கொள்கிறது நம்முடைய அரசாங்கம். ஆனால், காஷ்மீரிகள் 'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என்றே இப்போதெல்லாம் எழுதவும் பேசவும் செய்கிறார்கள்.
இப்போது நாம் காஷ்மீர் பிரச்சினையை விரிவாகப் பேசலாம் என்று நினைக்கிறேன். இப்போது நம் முன் உள்ள தலையாய கேள்வி இதுதான்: காஷ்மீரிகள் சுதந்திரம் கேட்கிறார்கள்; இந்தியா என்ன செய்ய வேண்டும்? நண்பர்களே, நான் காஷ்மீரிகளின் போராட்டத்திலுள்ள நியாயத்தை அங்கீகரிக்கிறேன். இந்திய அரசின் அநீதியான அணுகுமுறையையும் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஆனால், நான் முழுமையாக காஷ்மீரிகளின் பக்கத்திலோ இந்திய அரசின் பக்கத்திலோ நின்று இந்தப் பிரச்னையை அணுக வேண்டும் என்று கூற மாட்டேன். அப்படிப் பேசுவது நடைமுறைக்கு அப்பாற்பட்ட, யதார்த்தத்துக்கு கொஞ்சமும் தொடர்பற்ற அணுகுமுறை என்றே நான் கூறுவேன்.
இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற பிரச்னைகளின்போது நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய உண்மை, முக்கியமாக மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் பக்கம் நிற்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய உண்மை... எந்த ஒரு நாடும் எந்த ஓர் அரசும் தனி நாடோ, தனி அரசோ இல்லை என்பது. மேலும், ஒரு தனிப்பட்ட மனிதனிடம் எதிர்பார்க்கும் அதே நியாயத்தை ஒரு நாட்டிடமோ அரசிடமோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றும் நான் கூறுவேன். ஆதலால், காஷ்மீருக்கு சுதந்திரம் அளிப்பது இந்தியாவுக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது என்றே நான் கருதுகிறேன். இன்னும் சொல்லப்போனால், காஷ்மீருக்குமேகூட அது நிரந்தரத் தீர்வாக அமையாது என்றே கருதுகிறேன். பொருளாதார மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த காஷ்மீரை தனி நாடாக, அமைதியான சுதந்திர காஷ்மீராக நீடிக்க ஒருபோதும் வல்லாதிக்க நாடுகள் அனுமதிக்காது. ஒருபுறம் சீனாவும் மறுபுறம் பாகிஸ்தானும் சூழ்ந்திருக்கும் சூழலில், காஷ்மீரை முற்றிலுமாக இந்தியாவால் ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. எனவே, காஷ்மீரிகளின் தனி நாடு கோரிக்கையை இந்தியா ஏற்கும் என்றோ அது சரியான தீர்வு என்றோ நான் கருதவில்லை. ஆனால், காஷ்மீரிகள் கோரும் சுயாட்சியை - அதன் விரிவான பொருளில் - காஷ்மீர் மட்டுமின்றி தன்னுடைய எல்லா மாநிலங்களுக்கும் அளிக்கக் கூடிய நாடாக இந்தியா தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுவேன்.
என்னைப் பொறுத்த அளவில் காஷ்மீர் இந்தியாவுக்கு நெருக்கடி அல்ல; வாய்ப்பு. எப்படி?
வெளியில் என்னதான் பூசிமெழுகிக்கொண்டிருந்தாலும் இந்திய ஆட்சியாளர்களுக்கு ஓர் உண்மை நன்றாகத் தெரியும்: இந்தியா தெறித்துக்கொண்டிருக்கிறது. ஆமாம். இந்தியாவின் எல்லையோர பிராந்தியங்களில் ஒரு வகையிலான தெறிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால், இந்தியாவின் இதயப் பகுதிகளில் ஒரு விதமான தெறிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், அரசு செய்ய வேண்டிய - செய்யக் கூடிய விஷயம் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குவதாகவே இருக்க முடியும்.
இந்தியா அதன் மாநிலங்களுக்கு நிறையவே தர வேண்டியிருக்கிறது. முக்கியமாக நிதி. மிகமிகக் குறைச்சலாக இப்போது மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்கிறது இந்திய அரசு. என்னைக் கேட்டால் மூன்றில் ஒரு பங்கு மத்திய அரசுக்குப் போதும்; ஒரு பங்கு மாநில அரசுக்கு; ஒரு பங்கு உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு. சுயாட்சி கேட்பவர்கள் நிதியில் உரிய பங்கு கேட்டாலே பாதி பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும்.
இந்தியா உண்மையான ஓர் ஒன்றியமாக, மாநிலங்களின் ஒன்றியமாக மாற வேண்டும். நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு நீங்கலாக ஏனைய அனைத்துத் துறைகளின் நிர்வாகமும் மாநிலங்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். நம்முடைய அரசியல் அமைப்பை கூடுதல் ஜனநாயகத்தன்மையுடையதாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான எல்லா வாய்ப்புகளைகளையும் இந்திய அரசுக்கு காஷ்மீர் வழங்குகிறது!
2004
காஷ்மீர் பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ள வரலாற்று உண்மைகள் பல எனக்குத் தெரியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குசமஸ் இப்படி நடுவில் நின்று யோசிப்பதே உங்கள் எழுத்துகளை நாங்கள் நேசிக்கக் காரணம். தொடரட்டும் சேவை...
பதிலளிநீக்குAFSPA பற்றி கருத்து ?
பதிலளிநீக்கு