ஆளுக்கொரு செய்தி... ஜமாய்!

         
             புது தில்லி மீது எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும்  விஷயங்கள் நிறைய உண்டு. அங்கு நடக்கும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் உடனடியாக ஊதிப் பெருக்கிவிடும் ஊடகவியலாளர்களின் சாமர்த்தியமும் அதில் ஒன்று. ஆனால், சமீபத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை - முக்கியமான செய்தியை - இந்திய ஜனநாயக வரலாற்றில் மிக அவமானகரமான நிகழ்வும் செய்தியும்கூட  அது -  தில்லியில்தான் நடந்தது -  ஊடகவியலாளர்கள் மூடி மறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பெரும்பான்மையான ஊடகங்கள் இருட்டடிப்பில் ஈடுபட்டன. இத்தனைக்கும் இந்தியப் பத்திரிகையாளர்கள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு அது. ஏன் ஊடகங்கள் மூடி மறைத்தன? என்ன நிகழ்வு அது?
      
        கடந்த மக்களவைத் தேர்தலின்போது, இந்தியப் பத்திரிகை நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய, பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் முறையைக் கண்டித்து நடந்த  கருத்தரங்கே, பெரும்பாலான பத்திரிகைகளால் - குறிப்பாக - பிராந்திய பத்திரிகைகளால் இருட்டடிப்புசெய்யப்பட்ட அந்த நிகழ்வாகும்.       ஏன் அந்தச் செய்தி இருட்டடிப்புசெய்யப்பட்டதென்றால், இந்தியப் பத்திரிகைத் துறையின் கோரமான இன்னொரு முகம் அன்றைய தினம் விவாதத்துக்கு வந்திருந்தது. இந்தியப் பத்திரிகை முதலாளிகள் கடைப்பிடிக்கும் அசிங்கமான தொழில் தர்மம் அந்த நிகழ்வில் சந்தி சிரித்தது.

     
        தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரோஷி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் பிரகாஷ் காரத் ஆகியோர் அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.  பணம் பண்ணுவதற்காக பத்திரிகைகள் கடந்த தேர்தலில் கையாண்ட முறை தொடர்பான அவரவர் அனுபவங்களை கருத்தரங்கில் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, தன் சொந்த தொகுதி தொடர்பான செய்திகளை வெளியிட ஒரு பத்திரிகை ரூ.1 கோடி பேரம் பேசியதாகக் கூறினார். இம்முறையைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லோருமே வலியுறுத்தினார்கள். கடைசியாக, "பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் முறைக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்ற தீர்மானத்தோடு கருத்தரங்கு முடிந்தது.      

         

       இந்தியப் பத்திரிகைத் துறை அடைந்திருக்கும் சீரழிவுகளின் உச்ச நிலையாக இதைக் குறிப்பிடலாம். (பத்திரிகையாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது என்று அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுப்பதைவிடவா ஒரு மோசமான நிலை வரப்போகிறது?) ஊருக்கெல்லாம் உபதேசங்களை வாரி வழங்கும் பத்திரிகைகள் இந்நிலையிலேனும் வெட்கப்பட வேண்டும்; தாம் அடைந்திருக்கும் மோசமான நிலை குறித்து தம்மைப் பரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நீங்களும் நானும் எதிர்பார்க்கலாம். ஆனால், நடக்காது. ஏன் தெரியுமா?

     
               விளம்பர வடிவில் பணம் பத்திரிகைக்குள் புகுந்ததும், மெல்ல விளம்பரதாரருக்கு எதிரான செய்திகள் வந்துவிடாமல் அது பார்த்துக்கொண்டதும், அப்புறம் விளம்பரதாரர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைச் செய்திகளாக்கியதும், பிறகு விளம்பரம் பாதி; செய்தி பாதி என்று அர்த்தநாரியாக்கியதும் (அட்விட்டோரியல்), கடைசியில் விளம்பரத்தையே செய்தியாக்கிவிட்டதையும்தான் நாம் அறிவோம். அதை எதிர்த்துதான் இப்போது நாம் குரல் எழுப்புகிறோம். ஆனால், இந்தியப் பத்திரிகைத் துறை பணக் கலாசாரத்தில் மூழ்கி வருஷங்கள் பல ஆகிவிட்டன.  நீங்கள் இந்தியாவின் மிகவும் பின் தங்கிய கிராமப்புறப் பகுதியில் வசிப்பவராக இருக்கலாம். மிக எளிமையான பொது நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் நடத்தலாம். ஆனால், அது குறித்த விவரம் பத்திரிகைகளின் 'இன்றைய நிகழ்ச்சிகள்' பகுதியில் இடம் பெற வேண்டும் என்றால்கூட, உங்கள் பகுதிக்கான செய்தியாளருக்கு நீங்கள் ரூ. நூறோ, இருநூறோ அடங்கிய உறையைக் கொடுத்தால்தான் அந்த நிகழ்வு பத்திரிகையில் வெளிவரும். "கவர் கொடுத்தால்தான் கவரேஜ்".
  
    
        இதற்காக பத்திரிகையாளர்கள் வெட்கப்படுவதில்லை. பத்திரிகை நிறுவனங்களும் கேள்வி கேட்பதில்லை. ஏன் என்றால், பல பத்திரிகை நிறுவனங்கள் - குறிப்பாக பிராந்திய மொழிப் பத்திரிகை நிறுவனங்கள் தம் ஊழியர்களை கொத்தடிமைகளாகவே நடத்துகின்றன. திருச்சி மாதிரி ஒரு மாநகரத்தை ஒட்டி உள்ள  ஒரு சின்ன நகரத்தில், முன்னணி தினசரிப் பத்திரிகையில்  செய்தியாளராகப் பணியாற்றும்  ஒருவருக்கு  மாதம் ரூ. 1,500 மட்டுமே சம்பளம் என்றால், பலர் அதிரக் கூடும். ஆனால், அதுதான் உண்மை. ஆனால், தவறுகள் பத்திரிகை நிறுவனங்களிலிருந்தே தொடங்குகின்றன. இன்றைக்குப் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வியர்வையிலிருந்து நிறுவனத்தை நடத்தவில்லை; தாங்கள் கொடுக்கும் சொற்ப ஊதியத்துக்கு அவர்களுடைய ரத்தத்தை எதிர்பார்க்கின்றன. இப்படிப்பட்ட குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் எனக்கு இருக்கிறார். 'பயிற்சி (?) பகுதிநேரச்  செய்தியாளர்' என்ற அடையாள அட்டையோடு... பல ஆண்டுகளாக.
    
  
         இது நியாயமே கிடையாது. ஆனால், பத்திரிகை நிறுவனம் இதற்கு கற்பிக்கும் நியாயம் என்ன தெரியுமா?:  "விளம்பர வருவாய் கிடைக்கும்; அப்புறம் உறை வருமானம்; ஒரு நாளைக்கு அனுப்பும் உப்புசப்பற்ற ஓரிரு செய்திகளுக்கு இது போதும்''.  நண்பர் உறை வாங்குவார். அவர் கற்பிக்கும் நியாயம் இப்படி: "இந்த நகரத்தில் இருந்துகொண்டு இதற்கு மேல் என்ன செய்தி கொடுக்க முடியும்? சம்பளம் கட்டாது. உறை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.'' (உறை வாங்காமல் பத்திரிகைப் பணியைச் செய்யக்கூடிய - விளம்ரம் வாங்கும் திறனும் அற்ற ஒரு நேர்மையான பத்திரிகையாளன்  இத்தகைய சூழலில் பணியாற்றுவது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.)


     உறைகள் ஆயிரங்களில் புரளக்கூடிய பெருநகரங்களில், நல்ல சம்பளத்திலுள்ள பெரிய பத்திரிகையாளர்களிடமிருந்து இதே நியாயத்தை வேறு வார்த்தைகளில் கேட்கலாம். இந்த நியாயங்களுக்கு முடிவே கிடையாது. கோழியிலிருந்து முட்டை; முட்டையிலிருந்து கோழி என்பதைப் போல. பத்திரிகையாளர்களை அநீதியாக நடத்தும் பத்திரிகைகள் அவர்களுடைய தவறுகளைத் தட்டிக் கேட்கும் திராணியையும் இயல்பாகவே இழந்துவிடுகின்றன. இப்படி மேலிருந்து கீழே; கீழிருந்து மேலே என்று பத்திரிகைத் துறையில் பாய்கிறது பணம்.
  
    
        கேவலம், ஒரு சின்ன நகரத்தில் பணியாற்றும் செய்தியாளராலேயே ஒரு செய்திக்கு நூறு ரூபாய் பணம் பண்ண முடியும் என்றால், பத்திரிகைக்கே அதிபர்கள் - ஒட்டுமொத்த செய்திகளையும் தீர்மானிக்க வல்லவர்கள் - அவர்களால் சும்மா இருக்க முடியுமா? பின்னி  எடுக்கிறார்கள். ஒரு நல்ல செய்தி வெளியாக நாம் பத்திரிகையாளருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால், ஒரு மோசமான செய்தி வெளியாகாமல் இருக்க பத்திரிகை அதிபர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். பத்திரிகை அட்டையில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் அதிபர்கள் எல்லாம் இப்போது இங்கே உண்டு.
   
   
        இந்திய அரசியல்வாதிகள் ஊழலில் திளைத்திருக்கிறார்கள். இந்திய அதிகாரிகளும் ஊழலில் திளைக்கிறார்கள். இப்போது மக்களும் ஊழல் பணத்தில் பங்கு கேட்கிறார்கள். எல்லோருமே கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஊடக வெளிச்சத்துக்காக ஏங்குகிறார்கள்.அப்புறம் என்ன? ஆளுக்கொரு செய்தி. உறை கிடைத்தால் உறை; பெட்டி கிடைத்தால் பெட்டி;  ஜமாய். எனக்கு ஒரேயொரு சந்தேகம் என்னவென்றால், நம்மட்களுக்குத்தான் வெட்கமே கிடையாதே, அப்புறம் ஏன் அந்தச் செய்தியை மறைத்தார்கள்?
- 2010 நாட்குறிப்பேட்டிலிருந்து...

12 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சமஸ் சார். தமிழில் இப்படி எழுத உங்களைவிட்டால் ஆள் கிடையாது என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். அருந்ததி ராய், சாய்நாத், அக்பர் வரிசையில் வைத்து போற்றப்பட வேண்டியவர் நீங்கள். தொடர்ந்து சமூகத்தின் கருப்புப் பக்கங்களை தாங்கள் புரட்ட வேண்டும் என்பது இந்த வாசகியின் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான கட்டுரை... வாழ்த்துக்கள் சார்..

    பதிலளிநீக்கு
  3. சமஸ், மிக முக்கியமான விஷயம். உங்கள் தைரியத்துக்கு பாராட்டு. உங்கள் பதிவில் பாராவுக்கு பாரா கொஞ்சம் இடைவெளி வருமாறு செய்யவும். படிக்க வசதியாக இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மிக மிக மிக முக்கியமான கட்டுரை. சில ஆண்டுகளுக்கு முன் தினமணியில் பதிப்புலகத்தைக் கிழித்தீர்கள். இப்போது பத்திரிக்கையுலகத்தை. சமஸுக்கு நிகர் சமஸ்தான். ஞாயிறுதோறும் காத்திருக்கிறோம். கிழியுங்கள் தோழர். சின்ன வேண்டுகோள். பதிவை ஞாயிறு காலையிலேயே போடுங்கள். இன்றைக்கு மட்டும் மூன்று முறை உங்கள் வலைப்பூவுக்கு வந்து ஏமாந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. அருமை நண்பா.. உங்கள் எழுத்து நடையின் வேகம் என்னை ஆச்சரிய படவைக்கிறது.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தும் எழுத்துக்கள்..நெத்தியடி..

    பதிலளிநீக்கு
  7. Fact fact fact - we must feel ashamed about this. Thanks SAMAS for bringing this to lime light also for exploring the attitude of the few Indian PRESS.

    பதிலளிநீக்கு
  8. Nanraaga ullathu. Aanaal ella pathirikaiyalaruma 'URAI' vangugirar. Aanaal katturai appadi oru thotrathai vuruvakkugirathe nanbare.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா8 மே, 2013 அன்று AM 9:04

    நண்பரே தங்களது கட்டுரையில் வந்துள்ள வாசகங்கள் ஒவ்வொன்றும் உண்மையின் உரைகல் தான். நானும் ஒரு பத்திரிக்கையில் ஏரியா நிருபராக பணியாற்றினேன். மனசாட்சிக்கு விரோதமான செய்திகள், மற்றும் கவர் வாங்குவது உள்ளிட்ட கலாச்சாரங்களுக்கு உடன்படாமல் 13 ஆண்டுகள் அந்தப்பத்திரிக்கையில் காலம் தள்ளினேன். அந்தக்காலத்தின் ஒவ்வொரு நாளும் போராட்டம் தான். சக நண்பர்கள், நிறுவனம், அரசியல்வாதிகள், இவர்கள் தந்த தொல்லையின் உச்சம் எனக்கு மன அழுத்தத்தை கொண்டுவந்தது. முடிவில் எனது தந்தையாரின் மறைவுக்கு கூட நிறுவனமோ, துறை நண்பர்களோ துக்கம் விசாரிக்ககூடவில்லை. இந்த 13 ஆண்டுகாலத்தில் பத்திரிக்கையாளானாக இருந்ததில் எனக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு 21 லட்சம். எனது அனுபவங்களை ஒரு தொடராகவே தரலாம் ஆதாரங்களுடன்.

    பதிலளிநீக்கு
  10. nadu nilaiyaalagal anaivarum sernthu oru perum thogaiyai koduththirunthaal antha seithiyum velichchaththirkku vanthirukkum!!

    பதிலளிநீக்கு