நீடாமங்கலம் பால்திரட்டு

                      
                    திருவாரூர் மாவட்டம், மூணாறுதலைப்பில் வெண்ணாறு மூன்றாகப் பிரிகிறது: கோரையாறு, வெண்ணாறு, பாமணியாறு. காவிரியின் கிளைநதிகளான இந்த மூன்று நதிகளுக்கும் இடையே ஓர் ஊர்...  சிலுசிலுவெனத் தண்ணீரும் பச்சைப்பசேல் என வயல்களும் சூழ. ஊருக்கு நடுவே அருள்மிகு சீதா பிராட்டியார் உடன் சந்தான ராமசாமி திருக்கோயில். எதிரே அழகான குளம். கூப்பிடு தூரத்தில் ரயில் நிலையம். அதையொட்டி ஒரு பூங்கா... ரம்மியமாக இருக்கிறது நீடாமங்கலம்!


                       மராத்திய மன்னன் பிரதாபசிம்ம மஹாராஜா தன் காதல் மனைவி யமுனாவைச் சந்தித்ததன் நினைவாக சர்வமானியமாக அளித்த காதல் பரிசு நீடாமங்கலம் என்று உள்ளூர்க்காரர்கள் சொன்னார்கள். சூரியனின் கதிர்கள் முற்றிலும் அஸ்தமித்துவிட்ட ஒரு மாலை வேளையில், ஆற்றங்கரையில் அமர்ந்தவாறு ஊரைப் பார்க்கும்போது இதைவிட அழகான பரிசு பிரதாபசிம்மனுக்கு கிடைத்திருக்காது என்றே தோன்றுகிறது. இந்த அழகான அனுபவத்தை மேலும் ரசானுபவமாக மாற்றும் இன்னொரு விஷயமும் நீடாமங்கலத்தில் உண்டு - பால்திரட்டு. அதுவும் சாயங்காலத்தில் மட்டுமே கிடைக்கிறது. நீடாமங்கலம் மேல ராஜவீதியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகக் கட்டடத்தின் அருகே ஒரு சின்ன மேஜையில் மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது இந்த வியாபாரம். ஒரு பெரிய தாம்பாளத்தில் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் பால்திரட்டை, கேட்பதற்கேற்ப சின்னச்சின்ன பொட்டலங்களில் கட்டித் தருகிறார்கள் எஸ். மாரியப்பன்-ஜோதி தம்பதி. சில மணி நேரங்கள் நீடிக்கும் இந்த வியாபாரம் தாம்பாளம் காலியாகும்போது முடிந்துவிடுகிறது. "ஒவ்வொரு நாளும் பால்திரட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சிலரேனும் திரும்பிச் செல்கிறார்கள். ஆனாலும், இந்த அளவுக்கு மேல் செய்வதில்லை. இந்த அளவைத் தாண்டினால் பக்குவம் சிதைந்துவிடும்'' என்கிறார்கள். ஆனால், வெளிநாடு செல்வோருக்கும் விசேஷ வீட்டுக்காரர்களுக்கும் மட்டும் - முன்கூட்டியே கேட்டால், இந்த அளவுக்கு உட்பட்டு தனியாக செய்து தருகிறார்களாம்.

                       மாரியப்பன்-ஜோதி தம்பதியின் பால்திரட்டில், பால் சுண்டும்போது கிளம்பும் மணம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நல்ல பசும்பாலாடையின் ருசி நாக்கில் கரையும்போது ஒட்டிக்கொள்கிறது. பக்குவம் கேட்கிறோம். "பத்துப் பங்கு பால்; ஒரு பங்கு ஜீனி. பால்திரட்டுக்குத் தேவையான பொருட்கள் இவ்வளவே. பால் நல்ல கறவைப் பாலாக இருக்க வேண்டும். விறகடுப்பில் முக்கால் சூட்டில் சுண்டச்சுண்ட அடி பிடிக்காமல், கை மாறாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். முக்கால் பசை பதம் கூடும்போது நார், தூசு இல்லாமல் சலித்த ஜீனியை அதில் கொட்டி தொடர்ந்து கிளற வேண்டும். ஜீனி சேர்ப்பதால் ஓர் இளகு இளகும். தளதளவெனக் கொதிக்கும். மீண்டும் முக்கால் பசை பதம் கூடும்போது தாம்பாளத்துக்கு மாற்றிக் கொஞ்ச நேரம் ஆறவிட வேண்டும். நீடாமங்கலம் பால்திரட்டு தயார்'' என்று புன்னகைக்கிறார்கள் இருவரும். "எத்தனை இண்டுகளாக நீங்கள் பால்திரட்டு விற்கிறீர்கள்'' என்று கேட்கிறோம். "30 இண்டுகளாக'' என்கிறார்கள். மீண்டும் ஒரு பொட்டலம் பால்திரட்டு கேட்டு வாங்கிச் சுவைத்துக்கொண்டே அங்கிருந்து புறப்படுகிறோம்.

                       நம் நினைவு பிரதாபசிம்மனை நோக்கிச் செல்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மாரியப்பன்-ஜோதி தம்பதி தொழிலைத் தொடங்கியிருந்தால் பிரதாபசிம்மனுக்கும்கூட இந்தப் பால்திரட்டைச் சுவைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கலாம். தன் காதலின் நினைவாக அவன் அளித்த காதல் பரிசும்கூட மாறியிருக்கலாம்!
தினமணி 2008
சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து...

1 கருத்து: