ஆகப் பிரமாதம் எல்லாம் இல்லை. விசேஷ நாட்களில் நம் வீட்டுப் பெண்கள் இட்லியோடு செய்வார்களே... அப்படியொரு வெங்காய சாம்பாரும் அதோடு, கூட தொட்டுக்கொள்ள சட்னியும்தான். ஆனால், சாப்பிடும் சூழல் அதை அத்தனை பிரமாதமானதாக ஆக்கிவிடுகிறது!
ரயிலைப் பார்த்துவிட்டால் எந்த வயதில் இருப்பவர்களும் பிள்ளைகள்தான். அதிலும், ரயில் பயணம் என்றால் கேட்கவா வேண்டும்? தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து வட மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் திருச்சி வழியே ரயிலில் செல்வது ஒரு வித்தியாசமான அனுபவம். கூட்ட நெரிசல் கொஞ்சம் நசநசப்புதான். ஆனால், சற்றேறக்குறைய தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மண் வகையறாவும் பார்வைக்குப் படும். பல ஊர் பாசக்காரர்களையும் பார்க்க, பேச முடியும்.இப்படியாகப் பேசிக்கொண்டே பயணம்செய்தால் ஏதேனும் ஒரு பசி வேளையில் திருச்சி வந்துவிடும். அல்லது திருச்சி வந்தால் பசிக்க ஆரம்பிக்கும். மண்வாகு அப்படி! வறண்டதும் அழகுதான்; கருத்ததும் அழகுதான். ஆனால், நிலத்தில் மண் நிறத்தைவிடவும் பயிர் நிறம் பார்க்கக் கிடைப்பது பேரழகு! காவிரி தொட்ட இடமெல்லாம் பச்சைதான். உங்களுக்குத் தெரியுமா? திருச்சியும் ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டம்தான். அது ஒரு காலம்! திருச்சியைத் தாண்டுகிற வரைக்கும் மலைக்கோட்டையும் பார்வைக்குத் துணை வரும். மலைக்கோட்டை மறைந்தால் காவிரி. அகண்ட காவிரி. கண்ணுக்கெட்டும் வரை இரு பக்கமும் தண்ணீர். வாய்விட்டு 'அம்மா' என்று கூப்பிடச் சொல்லும். அதற்கு மேல்தான் ரயில் போகும். காவிரியைத் தாண்டினால் தென்னந்தோப்புகள், வயல்கள், பாலங்கள், சாக்கடைகள், கட்டடங்கள், இத்தியாதி இத்தியாதி... ரயில் முக்கி மூச்சுவிடும்போது ரயில் பயணமும் ஸ்ரீரங்கம் இட்லிப் பொட்டலமும் பசி வயிற்றைக் கிள்ளினால் அது ஸ்ரீரங்கம்!
ஸ்ரீரங்கம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையே அமைந்திருக்கும் இந்தத் தீவு கிராமம் இன்றைக்குக் கிட்டத்தட்ட தன் பழைய அடையாளங்களில் பெரும்பாலானவற்றை இழந்துவிட்டது. ஆனாலும், இன்னமும் சில நல்ல அனுபவங்கள் இந்த ஊருக்குள் உறைந்துகிடக்கின்றன. ஓர் இளங்காலை வேளையில், இப்படி ஒரு சூழலில், பசிப்பதுபோல் தோன்றும் நேரத்தில் வெங்காய சாம்பார், கெட்டி தேங்காய்ச் சட்னியுடன் சுடச்சுட இட்லியும் பொசுபொசு மெதுவடையும் கிடைத்தால் சொல்லவா வேண்டும்? ஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீனில் மூங்கில் தட்டுகளில் குவித்துவைத்திருக்கிறார்கள் இட்லி, பூரி பொட்டலங்களை. இட்லி பொட்டலத்தைப் பிரித்தால் மூன்று இட்லி, இட்லிக்கு அடியில் கெட்டி தேங்காய்ச் சட்னி, சாம்பார், மெதுவடை இருக்கிறது. பூரி பொட்டலத்தில் பூரி செட், மசாலுடன் கூடவே இணைப்பு மெதுவடை. ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சாம்பார், சட்னியும் உண்டாம். ரயில் நிற்கும் சில நொடிகளில் வேகவேகமாக ஓடிச் சென்று பொட்டலங்களை அள்ளி வருகிறது பயணிகள் கூட்டம்.
ஸ்ரீரங்கம் கேன்டீன் நிர்வாகி ஆர். குழந்தைவேல் கூறுகிறார்: "இங்கு வேலை செய்யும் எல்லோருமே தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தூத்துக்குடிச் சமையல் பாணியை சின்ன மாற்றங்களோடு இங்கு கையாள்கிறோம். அந்த ருசியும் தரமுமே மக்களை இங்கு இழுத்து வருகின்றன. அதேபோல், ஸ்ரீரங்கம் பலகாரம் என்றால் சுடச்சுட கிடைக்கும்; ஆறிப்போனவற்றை ஒருபோதும் விற்பது இல்லை. ரயில் வியாபாரம்தானே, அன்றைய வியாபாரம் அன்றோடு முடிந்துவிடும் என நினைத்து எதையும் செய்வதில்லை'' என்கிறார் குழந்தைவேல். "நிர்வாகம் நினைத்தால் ரயில் நிலையத்தின் ஒவ்வோர் அங்குலத்திலும் தரத்தைக் கொண்டுவர முடியும். ஸ்ரீரங்கத்தில் அதைத்தான் பாரம்பரியமாகத் தொடர்கிறோம்'' என்கிறார் ரயில் நிலைய அலுவலர் டி. மாணிக்கவாசகசுவாமி.
ரயில் புறப்படுகிறது. ரம்மியமான காற்று உங்களைத் தழுவுகிறது. பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டு முடித்து, கொள்ளிடத்தை ரயில் கடப்பதற்குள் நல்ல தூக்கமும் வந்தால் பாக்கியவான் நீங்கள்தான் போங்கள்!
சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து...
2008 தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக