இந்திய அரசின் 'காட்டு வேட்டை' தொடங்கி ஆண்டுகள் சில ஆகிவிட்டன. ஆனால், 2009-க்குப் பிறகுதான் அரசு இந்த 'வேட்டை' குறித்து கொஞ்சம் பேசத் தொடங்கியது; ஊடகங்களும் இந்த விஷயத்துக்கு கொஞ்சம் இடம் கொடுக்கத் தொடங்கின. உண்மையில் இது ஒரு போர். உள்நாட்டுப் போர். அதிலும் இந்த நாட்டாலும் அரசாலும் காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவரும் எளிய மக்களுக்கு எதிரான போர். இந்திய இயற்கை வளத்தை - பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 30 வகையான கனிம சுரங்கங்களை பெரு நிறுவன முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக வனங்களின் பூர்வகுடிகளை அங்கிருந்து துரத்த நம்முடைய அரசு தொடுத்திருக்கும் போர். எனினும், பெரும்பான்மை இந்தியச் சமூகம் இந்தப் போரைப் பொருட்படுத்தவில்லை. இப்போதுதான், இப்போதுதான் அது பேசுகிறது. எப்போது? தந்தேவாடா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளால் காவல் துறையைச் சேர்ந்த 76 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட பிறகு. இதற்கு முன்பும் இப்படித்தான். ஒரிஸாவில் பாலிமேலா நீர்த்தேக்கத்தில் 38 வீரர்கள் கொல்லப்பட்டபோதும் மேற்கு வங்கத்தில் சில்டா முகாம் தாக்கப்பட்டு 24 வீரர்கள் உயிரிழந்தபோதும் பேசியது. இப்படி அவ்வப்போது காவல் துறையைச் சேர்ந்தவர்களோ, சிறப்புப் படையினரோ கொல்லப்படும்போது மட்டும் முணுமுணுத்தது. 'எவ்வளவு கொடூரம்?' என்று பரிதாபப்பட்டது. கொடூரம்தான். ஆனால், போர் என்றால் அப்படித்தானே?
நாட்டின் 16 மாநிலங்கள், 220 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியிருக்கின்றனர்; 83 மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 'இந்தியாவின் தனிப் பெரும் உள்நாட்டு அபாயம்' என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிடுவது உண்மைதான். ஆனால், இதற்கு காரணம் யார்? சாதாரண மக்களுக்கு இந்திய அரசியல் சாஸனம் அளித்த உரிமைகளைச் செயலாக்கத் தவறிய நமது மோசமான அரசியல் அமைப்பினுடைய தோல்வியின் வெளிப்பாடு அல்லவா இது?
இன்று காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தண்டகாரண்ய வனப் பகுதியிலும் இந்திய அரசு வெவ்வேறு விதமான போர்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்தப் போர்கள் ஒவ்வொன்றிலும் இந்திய அரசு எதிர்கொள்ளும் எதிரிகளாகட்டும்; சித்தாந்தங்களாகட்டும்; கோரிக்கைகளாகட்டும்; எல்லாமே வெவ்வேறானவை. ஆனால், அரசு யாருடன் நேரடியாக போரிட்டுக்கொண்டிருக்கிறது என்று பாருங்கள்; தன் சொந்த மக்களை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் உத்வேகத்துடன் அரசுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறார்கள். ஏன், பயங்கரமானவர்கள் என்று அறிந்திருந்தும் அரசை எதிர்ப்பவர்களுக்குப் பின் மக்கள் அணிவகுக்கிறார்கள்? ஏன், தங்களுக்கு முழுமையான தீர்வளிக்கக்கூடியவர்களல்லர் என்று தெரிந்திருந்தும் மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள்? இதற்கான காரணம் எளிமையானது: ஏனெனில், மக்களுக்கு வேறு வழியில்லை.
உங்களுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன் இந்த நாடு கையாண்ட சத்தியாகிரகப் போராட்டங்கள் நினைவுக்கு வரலாம். நீங்கள் அமைதியான வழியை எல்லோருக்கும் உபதேசிக்கலாம். என்னுடைய உபதேசமும் வழியும்கூட அதுவாகவே இருக்கும். அதேசமயம், சாத்வீகப் போராட்டங்களுக்கு இந்த நாட்டில் என்ன மதிப்பிருக்கிறது என்ற கேள்வியை நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
கொடுமையான 'ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்ட'த்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் இரோம் ஷானு ஷர்மிளாவின் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு இந்த நாடு கொடுக்கும் மதிப்பு என்ன?
இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாகச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில் சமீபத்தில் பொதுமக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதல் நடத்தியது காவல் துறை. ஏன் தெரியுமா? அந்தக் கிராமத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் நிறுவனம் எரிசாராய ஆலை அமைக்கவிருக்கிறது. இந்த ஆலை அமைக்கப்பட்டால், ஏற்கெனவே மோசமான நிலையிலுள்ள நிலத்தடி நீர்மட்டம் மேலும் கீழே இறங்கிவிடும். தங்கள் வாழ்வாதரமான விவசாயம் பாதிக்கப்படும் என்பதால், இந்த ஆலை அமைவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன் ஆலை அமைப்பது தொடர்பாக அங்கு கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்போர் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று திட்டமிட்ட ஆலை நிர்வாகம் - வேறு யார் டி.ஆர். பாலுவும் அவருடைய பிள்ளைகளும்தான் - கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூலிப்படையினரை நிறுத்தியிருக்கின்றனர். இதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியபோது, முன்னதாகவே அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல் படை ஏற்கெனவே திட்டமிட்டபடி காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. ஏராளமானோர் காயம் அடைந்திருக்கின்றனர் (இந்தத் தடியடியில் களப்பணியாற்றிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்வேலன் மருத்துவம் படித்தவர்). ஊடகங்கள் - குறிப்பாக பிராந்திய நாளிதழ்கள் இந்தச் செய்தியை முழுமையாக இருட்டடிப்புசெய்துவிட்டன. இதைவிட கொடுமை என்னவென்றால், இந்தச் செய்தியை வெளியிடாத தமிழின் முன்னணி நாளிதழ் ஒன்று ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது. கூட்டம் 'அமைதி'யாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்து ஆலை நிர்வாகம் கொடுத்திருந்த விளம்பரம் அது! சொல்லுங்கள், இந்த நாடு யாருடையதாக இருக்கிறது?
காலங்காலமாக சாதாரண மக்களின் நலனைப் புறக்கணித்தே பழகிய அரசாங்கத்தை விட்டுவிடுவோம்; காலங்காலமாக அதிகாரத்தின் சகல வன்முறைகளையும் சாதாரண மக்கள் மீது பிரயோகப்படுத்தியே பழகிய அதிகார வர்க்கத்தை விட்டுவிடுவோம். தன்னைச் சுற்றியுள்ளோர் மீது எவ்வளவு அநீதிகள் பிரயோகப்படுத்தப்பட்டாலும் கொஞ்சமும் சொரணையற்று, தன் வழி; தன் போக்கு என்று கடந்துகொண்டிருக்கும் நம்முடைய சமூகத்தை - உங்களையும் என்னையும் நம் குடும்பங்களையும் - ஒரு கணம் நினைத்துப் பார்த்துச் சொல்லுங்கள். அமைதிக்கு நாம் கொடுக்கும் மதிப்பு என்ன?
நாம் ஜனநாயகத்தை விரும்புகிறோம் என்றால், முதலில் ஜனநாயகம் உயிருடன் இருக்க வேண்டும். அது இப்போது செத்துக்கொண்டிருக்கிறது. சிலர் அதைக் காக்கப் போராடுகிறார்கள். அவரவருக்குத் தெரிந்த வழிகளில். அவர்களுடைய வழி மோசமானது என்றால், அந்த வன்முறை வழியை நோக்கி அவர்களைத் தள்ளியதற்கான பொறுப்பை, அவர்கள் தனித்துவிடப்பட்டதற்கான பொறுப்பை நாம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என்னால், நிச்சயம் சொல்ல முடியும். காந்தி இப்போது உயிருடன் இருந்தால், அவர் தண்டகாரண்யத்தில் பழங்குடி மக்களுடன் இருப்பார்; மணிப்பூரில் இரோம் ஷானு ஷர்மிளாவுடன் இருப்பார்; வடசேரியில் விவசாயிகளுடன் இருப்பார்; நிச்சயம் இந்த அரசுடன் அல்ல. நீங்கள்?
2010
காந்தியம் சிறந்தது தான் ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ்காரர்களை விட மோசமானவர்கள்.இன்று காந்தியிருந்தால் நாடு கடத்தியிருப்பர்.அதுதான் பிரிட்டிஷ் ஆட்சியில் நன்றாக இருந்த காந்தி காங்கிரஸ் ஆட்சியில் தானே குண்டடிப்பட்டார்.
பதிலளிநீக்குகஷ்மீரில் இந்தியப்பகுதியில் சில்விஷமம் செய்யும் பாகிஸ்தானை ஆதரிக்கும் மக்கள் இருக்கின்றனர்.எல்லைப்பகுதியில் வடகிழக்கில் அன்னிய எல்லை உள்ளது எனவே சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டியது அவசியமாகிறது.ராணுவம் செய்யும் அத்துமீறல்களை ஆதரிக்க முடியாது,.மக்களை அடக்கி ஆளுவதைவிட நம்னாடு என உணரவைத்து ஆளுவதுதான் சரியானது.ஆனால் .இதனால் எல்லாம் பிரிவினை சக்திகளை யும் வன்முறை நக்சலைட்டுகளையும் அவர்களின் வன்முறைதாண்டவங்களையும் ஆதரித்துவிட முடியாது
பதிலளிநீக்குwhen ever reading this kind of articles,I unable to avoid remembering the film AVTAR.
பதிலளிநீக்குஆஹா என்ன அருமையான கருத்துக்கள் -- தீவிரவாதத்தை எதிர்த்து எந்த ஒரு நாடும் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளுக்குப் பெயர் யுத்தம், நல்லது, இப்போது எனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா?
பதிலளிநீக்குசல்வா ஜுதும் என்பது மாவோயிஸ்டுகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆதிவாசிகளுக்கு அரசாங்கம் ஆயுதம் கொடுத்து அவர்களை சிறப்பு காவல் அதிகாரி என்று அறிவிப்பது, இப்படி தற்காப்புக்காக ஆயுதம் வழங்கப்பட்ட ஆதிவாசிகள் ஏராளம்,
ஆனால் மனித உரிமை ஆர்வலர்களால் இந்த விஷயம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை ஆகவே பொதுமக்களுக்கு ஆயுதம் கொடுப்பது தவறானது என்று தீர்ப்பளிக்கப்பட்டவுடன் இது கலைக்கப்பட்டது
1. நீங்கள் சொல்வது (நீங்கள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பலர்) போல மாவொயிஸ்டுகள் சுரண்டப்படும் ஆதிவாசிகளுக்காகப் போர்புரிகின்றனர் என்றால், ஆதிவாசிகள் அரசாங்கதிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அல்லவா ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும்? ஆனால் மாவோயிஸ்டுகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளத்தானே அவர்கள் அரசாங்கத்திடமிருந்து ஆயுதங்களைப் பெற்றார்கள்? முரண்பாடாக இருக்கிறதே? (ஆயுதம் வாங்கியோர் எல்லாம் அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்ற அபத்தமான ஆதாரமில்லாத வாதம் வேண்டாம், அரசாங்கத்திடம் படை இருக்கிறது, ஆனால் அது போதுமான அளவில் இல்லாததால்தான் ஆதிவாசிகள் தங்கள் பாதுகாப்புக்கு ஆயுதம் பெற்றனர்)
2. மாவோயிஸ்டுகள் ஆயுதப்படையினரை மட்டுமல்ல, இதுவரை ஆயிரக்கணக்கான ஆதிவாசிகளையும் கொன்று குவித்துள்ளனர், ஆகவேதான் மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம்பெற்றனர், அப்படியானால், ஆதிவாசிகளுக்காகப் போராடும் மாவொயிஸ்டுகள் அதே ஆதிவாசிகளைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன?
3. மக்களைப் பாதுகாப்பது அரசின் கடமை அதனால் பொதுமக்களிடம் ஆயுதம்தருவதை ஏற்கமுடியாது, அது சட்ட விரோதமானது என்றால், பணம்படைத்தவர்களுக்கு துப்பாக்கி உரிமம் தருவது எதற்காக? பணம் இருந்தால் உங்களுக்கு சுய பாதுகாப்புக்கான உரிமை தரப்படும் -- பணம் இல்லாத, அதிகார பலமோ அரசியில் பலமோ இல்லாத ஆதிவாசிகள் என்றால் அவர்களுக்கு சுய பாதுகாப்புக்கான உரிமை கிடையாதா?
4. மாவோயிஸ்டுகள் கொன்று குவித்துள்ள ராணுவத்தை விடுங்கள், ஆதிவாசிகள் எல்லோரும் மனிதர்கள்தானே, அவர்களுக்கு மனித உரிமைகள் கிடையாதா? அல்லது மனித உரிமை அவர்களுக்குப் பொருந்தாதா?
5. மாவோயிஸ்டுகளின் கொலைவெறியை எந்த விதத்திலாவது நியாயப்படுத்துபவர்கள், கொல்லப்பட்ட ஆதிவாசிகள் மற்றும் படைவீரர்களைப்பற்றி ஒன்றும் பேசாதது ஏன்? (நீங்கள் மட்டுமல்ல, மனித உரிமை வீரர்கள் யாரும் இது பற்றி பேசுவதில்லை?
காந்தி இப்போது உயிருடன் இருந்தால், அவர் தண்டகாரண்யத்தில் பழங்குடி மக்களுடன் இருப்பார்; மணிப்பூரில் இரோம் ஷானு ஷர்மிளாவுடன் இருப்பார்; வடசேரியில் விவசாயிகளுடன் இருப்பார்; நிச்சயம் இந்த அரசுடன் அல்ல.
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை ! வாழ்த்துக்கள் சமஸ் !---காஸ்யபன்.
பதிலளிநீக்கு