நீரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது? சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். மேலாளராக நண்பர் இருக்கும் வங்கியில், “ஒரு மணி நேரம் இங்கு உட்கார்ந்திருந்தால், சூழலை நீங்களே புரிந்துகொள்ளலாம்” என்றார். கொஞ்சம் அந்தக் காலத்து மனிதர் என்பதோடு, பெரிய கூட்டம் நெருக்கியடிக்கும் வங்கிக் கிளையும் அல்ல அதுவென்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட உறவு உண்டு. அந்த ஓரிரு மணி நேரத்தில், கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர் அவரிடம் வந்து பேசிவிட்டு போனார்கள். பெரும்பாலானோர் கேட்டது, “ஏன் சார், நம்ம பேங்காவது பாதுகாப்பா இருக்கா? பேசாம பணத்தையெல்லாம் எடுத்து வேற எதுலேயாவது முதலீடு பண்ணிறலாமான்னு தோணுது!”
அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த ஒரு பெண், தன்னுடைய வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் முடிவோடு வந்திருந்தார். அவரைச் சமாளித்து, திருப்பியனுப்ப மட்டும் நண்பருக்கு அரை மணி நேரம் ஆனது. நண்பர் அசந்துபோனார். “இதுரைக்கும் இல்லாத அச்சம், என் வாழ்நாள்ல பார்க்காதது மக்கள்கிடட்ட இப்போ உருவாகியிருக்கு!”
அங்கிருந்து திரும்பிய பின் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களிடம் பேசினேன். பொதுத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டில் வைப்புத்தொகையில் பெருத்த சேதாரத்தைச் சந்திக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் பலர் வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றுவருவதாகவும் அங்குள்ள நண்பர்கள் சொல்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் நடந்திருக்கும் மிகப் பெரிய வங்கி ஊழல் இது. ஊழல் என்பதைக் காட்டிலும் சட்டப்பூர்வக் கொள்ளை என்றே சொல்ல வேண்டும். நாட்டின் பெரும்பான்மை ஊடகங்களும் எழுதிக்கொண்டிருக்கிறபடி இது வெறும் ரூ.12,600 கோடி இழப்புடன் முடியப்போவதில்லை. வங்கிகளை இந்திரா காந்தி நாட்டுடமையாக்கிய பின்னரான, இந்த அரை நூற்றாண்டில் பொதுத்துறை வங்கிகள் சேர்த்திருக்கும் பெரும் சொத்தான நம்பகத்தன்மையை இந்த ஊழல் சூறையாடிக்கொண்டிருக்கிறது. கொடுமை, எந்த அரசாங்கம் இந்த நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்க வேண்டுமோ, அதுவே பொதுத்துறை வங்கிகளை மானபங்கப்படுத்திவருகிறது. அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் முதலியோரெல்லாம், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கிவிடலாம்” என்று பேசிவருவது பொறுப்பின்மையின் உச்சம்.
நமக்கு ஒரு கடை இருக்கிறது. நீண்ட காலம் நல்ல வருமானம் தந்த கடை. காலத்துக்கும் உறுதுணையாக இருக்கவல்ல கடை. கொஞ்ச காலமாக நஷ்டம் காட்டுகிறது. “நிர்வாகம் சரியில்லை அதுதான் காரணம்” என்கிறார் ஒருவர். “சரியப்பா, இனி நீங்கள்தான் நிர்வாகி. மேம்படுத்திக்காட்டுங்கள்” என்று அவரையே கல்லாவில் உட்கார வைத்துவிடுகிறோம். ஒரு நல்ல நிர்வாகி என்ன செய்ய வேண்டும்? நிர்வாகத்தைச் செம்மையாக்கி, லாபத்தை நோக்கி கடையைத் திருப்ப வேண்டும். அது நடக்கவில்லை. “கடையை விற்று காசாக்கித் தின்றுவிடலாம்” என்கிறார் புரிய நிர்வாகி. “இதுதான் சீர்திருத்தம். இந்த முடிவெடுக்க ஒரு நிர்வாகிக்குத் துணிச்சல் வேண்டும்!” என்று கூடவே ஜல்லியடிக்கிறது ஒரு கும்பல். உடைமையாளர்கள் நாம் எப்படி சகித்துக்கொள்ள முடியும்?
ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குகிறதா? விற்றுவிடு! பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கிறதா? விற்றுவிடு! கோல் இந்தியா லாபத்தில் போகிறதா? அதன் பங்குகளையும் விற்றுவிடு! கேட்கவே நாராசமாய் இருக்கிறது. இன்றைக்குக் காலையில் கேள்விப்பட்ட இரு செய்திகள் இவை. கதர் கிராம வாரியத் தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் 7 லட்சம் பேர் கடந்த ஆண்டில் வேலையை இழந்திருக்கிறார்கள். ரயில்வே துறை புதிதாகக் கொண்டுவரும் ஏற்பாட்டின்படி, இருப்புப் பாதைப் பராமரிப்புப் பணிக்கு வெளியே தேர்ந்தெடுக்கப்படவிருந்த 65,000 வேலைகள் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன. புதிதாக ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூடக் கட்டியெழுப்ப முடியாதவர்கள், நேரடியாக அரசுத் துறையிலிருந்து ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைக்கூட உருவாக்க முடியாதவர்கள், தேசத்தின் நவநிர்மாண வளர்ச்சிக்காக அப்படி கட்டியெழுப்பப்பட்ட ஒவ்வொன்றையும் கை மாற்றிவிடத் துடிக்கிறார்கள்; இருக்கிற வேலைவாய்ப்புகளைக் குறைத்திட நினைக்கிறார்கள் என்றால், இவர்கள் யார் நலனுக்காக இந்த முடிவுகளை எடுக்கிறார்கள்? இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?
ஊழலைத் துளியும் சகித்துக்கொள்ள முடியாத அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த மோடி அரசின் ஆட்சியில்தான், இந்த மாபெரும் ஊழலின் ஒட்டுமொத்த பலிகடாக்களாகவும் கீழ்நிலை ஊழியர்களை உருமாற்றும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கீழ்நிலை வங்கி ஊழியர்களைப் பணிமாற்றம் செய்வதால் என்ன பெரிய மாற்றங்கள் நடந்துவிடும்? இந்த ஊழலுக்கான மையக் காரணம் வங்கிகளின் உரிமையாளர் அரசா அல்லது தனியாரா என்பதில் இல்லை; ரிசர்வ் வங்கியின் தவறான கொள்கைகளிலும் அரசின் கண்காணிப்பின்மையிலும் நிர்வாகச் சீர்கேடுகளிலும், பெருமுதலாளிகள் - ஆட்சியாளர்கள் இடையிலான கள்ள உறவிலும் இருக்கிறது. இந்தியன் வங்கி சரிவைச் சந்தித்தபோது கசிந்த கதைகளையும் ஊழலில் அடிபட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களையும் இன்னமும் நாடு மறந்துவிடவில்லை. இவ்வளவு பெரிய தொகை உயர்நிலை நிர்வாகத்துக்குத் தெரியாமல், தணிக்கையாளர்கள் கண்களில் படாமல் எப்படித் தொடர்ந்து நடந்திருக்க முடியும் என்னும் எளிய கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதி அமைச்சர், பிரதமர் ஒருவரும் இதுபற்றிப் பேசவில்லை. எல்லாவற்றையும்விடக் கொடுமை இவைபற்றியெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள், காட்டிவரும் மென்போக்கும், குற்றவாளிகளை வரலாற்றிலிருந்து தேட முற்படும் அறிவுஜீவிகளின் முனைப்பும்! எனக்கு மோடிகள், அருண் ஜேட்லிகளைக் காட்டிலும், “இன்னும் ஏன் பொதுத்துறை நிறுவனங்களை அரசு கையில் வைத்திருக்கிறது? விற்றிடு! விற்றிடு!” என்று கூப்பாடு போடும் சேகர் குப்தாக்கள், அர்னப் கோஸ்வாமிகள் அபாயகரமானவர்களாகத் தெரிகிறார்கள்.
அமைப்புக்கு கொடி பிடித்து, அமைப்பின் குற்றங்களை எப்படியாவது நியாயப்படுத்தி தன்னைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திக்கொள்ளும் கேவலம் அறிவுத்தளத்தில் எல்லா காலங்களிலும் நடப்பது. நம் காலத்தின் அடுத்தகட்ட இழிநிலை, அமைப்பின் அயோக்கியத்தனத்துக்கான முன்கூட்டிய ஒப்புதலை, அதற்கு உகந்த சூழலை மக்களிடம் உற்பத்தி செய்யும் வேலையை அறிவுஜீவிகள் தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்டிருப்பது. ஒருநாள் இப்படியும்கூட எழுதுவார்கள், “எடையைக் குறைக்க வேண்டும் என்றால், தலையை வெட்டிக்கொள்வது நல்லது. தங்கள் எடையைச் சுமக்க முடியாமல் மக்கள் அல்லலுறுகிறார்கள்; நோய்க்கு ஆளாகிறர்கள். தேச நலன் கருதி அவர்களுடைய தலையை அரசாங்கம் வெட்டி உதவ வேண்டும்! ஒரு துணிச்சலான ஆட்சியாளரால்தான் இதைச் செய்ய முடியும்!”
இந்திராவுக்கு இந்திய மக்கள் மனதில் இன்னமும் ஈரமான ஒரு இடமும் இருக்கிறது என்றால், அது ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வைக் குறைக்க அவருடைய ஆட்சிக் காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கானதாகவே இருக்கும். நிறைய செய்ய நினைத்தார். மாற்றுக்குரல்களைக் கவனத்தில் கொள்ள முடியாத அவருடைய இயல்பின் காரணமாக, உருப்படியான யோசனைகளுக்குக் காது கொடுக்காமலேயே தோற்றுப்போனார். எப்படிப் பார்த்தாலும் வங்கிகளை தேசியமயமாக்க 1969-ல் இந்திரா எடுத்த நடவடிக்கை அசலான துணிச்சல். பொதுத்துறை வங்கிகளில் இன்று நடந்துகொண்டிருக்கும் மோசடிகளுக்கு இந்திராவின் நாட்டுடமையாக்க நடவடிக்கையை காரணமாகப் பேசுவது, மடத்தனம் மட்டுமல்ல; கடைந்தெடுத்த வரலாற்றுப் புரட்டுமாகும்.
இந்திரா ஏன் வங்கிகளை நாட்டுடமையாக்கினார்? 1. அதுவரையில் இந்நாட்டின் வங்கிகள் பெருமளவில் மேல்தட்டு - மேல்சாதிக்காரர்களுக்கானவையாகவே இருந்தன. 2. சென்ட்ரல் வங்கி என்றால் டாடா குழுமம், யூகோ வங்கி என்றால் பிர்லா குழுமம், கனரா வங்கி என்றால் பை குழுமம் என்று ஒவ்வொரு வங்கியையும் ஒவ்வொரு தொழில் குழுமங்கள் தம் கையில் வைத்துக்கொண்டு ஆடின. 3. இந்நாட்டின் உற்பத்தியில், அன்றைய தேதியில் 44% பங்களிப்பைக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு, வங்கிகள் அளிக்கும் மொத்தக் கடன்களில் 2% கடன்கூட போய்ச்சேரவில்லை. 4. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, வங்கிகள் எந்நேரமும் திவாலாகலாம் என்றிருந்த பாதுகாப்பற்ற சூழல். சுதந்திர இந்தியாவில் வங்கிகள் நாட்டுடைமையாக்கம் செய்யப்படும் வரையிலான காலகட்டத்தில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 35 வங்கிகள் திவாலாகிக்கொண்டிருந்தன. வங்கிகளை இந்திரா நாட்டுடைமையாக்கிய பின்னரே, மக்களின் முதலீடுகளுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு கிடைத்தது. வங்கிகள் அளிக்கும் மொத்த கடன்களில் குறைந்தபட்சம் 18% விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. சாமானிய மக்கள் வங்கிகளுக்குள் நுழைய முடிந்தது.
பணமதிப்புநீக்கம் போன்ற ஒரு பகாசுர நடவடிக்கைக்குப் பின், ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் வங்கிச் செயல்பாட்டோடு பொருத்தும் வேலைகளை முடுக்கி, மக்களின் எல்லா சேமிப்புகளையும் சுரண்டி வங்கிகளில் போட வைக்கும் நிர்பந்தங்களை ஒவ்வொரு நாளும் உருவாக்கி, கடைசியில் அவர்களுடைய கடைசி நம்பிக்கையாக விளங்கும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்று பேசுவது திட்டமிட்ட கொள்ளைக்கான அறைகூவலேயன்றி வேறு அல்ல. கோடிக்கணக்கான சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தோடு பிணைந்த அவர்களது சேமிப்பை, அவர்களுடைய உழைப்பிலிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த ரத்தத்தை பொதுத்துறை வசமிடமிருந்து தனியார் கைக்கு மடை மாற்றுவதற்குப் பெயர்தான் திறமையான நிர்வாகம், அந்த முடிவை எடுப்பதற்குப் பெயர்தான் நிர்வாகத் துணிச்சல் என்று எவரேனும் சொல்வார்கள் என்றால், மனம் கொதிக்கும் மக்களில் ஒருவனாக எழுதுகிறேன்: அவர்கள் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் மண்ணுக்குச் சமானம்!
மார்ச், 2018, `தி இந்து`
வங்கி கொள்ளையென்றால் வங்கி உழைக்கும் மக்கள் பணத்தை வங்கியே கொள்ளையடிப்பதாகும்
பதிலளிநீக்குவங்கி கொள்ளையென்றால் வங்கி உழைக்கும் மக்கள் பணத்தை வங்கியே கொள்ளையடிப்பதாகும்
பதிலளிநீக்குBeautiful!
பதிலளிநீக்குhttps://www.google.co.uk/amp/s/balablogsdotcom.wordpress.com/2018/02/15/psu-banks-cheating-the-public-some-quick-and-angry-thoughts-pnbscam/amp/
பதிலளிநீக்குமனம் கொதிக்கும் மக்களில் ஒருவனாக எழுதுகிறேன் அவர்கள் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் மண்ணுக்கு (மயிருக்கு)சமானம் இவர்களை இதற்கு மேலும் திட்டலாம் சார்.
பதிலளிநீக்குஎனக்கெல்லாம் நிஜமாகவே பயமாக இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் மீது இவர்களுக்கெல்லாம் ஏன் இத்தனை காழ்ப்பு என்று தெரியவில்லை. வங்கி மோசடிகளுக்கெல்லாம் அவற்றை கண்காணிக்கிற பொறுப்பில் இருக்கும் ரிசர்வ் வங்கி தானே பொறுப்பு. அவர்களின் கள்ளத்தனத்தால் அல்லது கண்டு கொள்ளாத தனத்தினால் தானே வங்கிகளால் இவ்வளவு சுலபமாக மோசடிகள் பண்ண முடிந்திருக்கிறது. அப்படியென்றால் ரிசர்வ் வங்கியையும் தனியாரிடம் ஒப்படைத்து விடுவார்களா? ராணுவத்திலும் ஊழல் நடக்கிறது. அதையும் நிர்வகிக்க தனியாரிடம் தூக்கிக் கொடுத்து விடுவார்களா? பார்லிமெண்டிலும் எப்போதும் ஒரே அமளி. அவற்றையும் நம்மால் நிர்வகிக்க முடியவில்லை. அதனால் இந்திய அரசாங்கத்தை ஆங்கிலேயனுக்கு வருஷக் குத்தகைக்கு விட்டு விடுங்கள். எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிக் கொண்டிருந்தால் நாளைக்கு அதுதான் நடக்கப் போகிறது. வங்கிகளைத் தனியார் மயமாக்கினால் சாமான்ய இந்தியனின் மொத்த சேமிப்பும் கொள்ளை போகப் போகிறது என்று அர்த்தம். ஏனென்றால் பெரு முதலாளீகள் யாரும் வங்கிகளை சேமிப்பதற்கான இடமாகப் பாவிப்பதில்லை. கடன் வாங்கும் இடமாகத்தான் பார்க்கிறார்கள்.அதனால் தான் வாங்கிய கடனைக் கட்டாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடுகிறார்கள்.
பதிலளிநீக்குஇந்திரா காந்தி எடுத்த முடிவுகளில் பாராட்டப்படவேண்டிய ஒன்றினைப் பற்றி ஆழமாக விவாதித்ததோடு நாம் தற்போது செல்லும் அவல நிலையையும் கோடிட்டுக் காட்டியது அருமை.
பதிலளிநீக்குகுனிந்து கட்டுரையை வாசித்து முடிக்கும்போது ஆசிட் வீச்சுக்கு உள்ளானேன்!
பதிலளிநீக்கு(அவர்கள் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் மண்ணுக்குச் சமம்...யப்பா!)
குனிந்து கட்டுரையை வாசித்து முடிக்கும்போது ஆசிட் வீச்சுக்கு உள்ளானேன்!
பதிலளிநீக்கு(அவர்கள் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் மண்ணுக்குச் சமம்...யப்பா!)
Intha nattula vala payama iruku.... Aduthu in tha muttalkal enna seriyaporangalo therila
பதிலளிநீக்கு1969 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி, வங்கிகள் தேசிய மயமாக்கம் என்னும் நிதிக்கட்டமைப்பு நடவடிக்கையைத் துவக்கினார். அப்போது, இந்தியாவில் 8261 வங்கிக் கிளைகள் இருந்தன. 77% கிளைகள், சிறு/பெரு நகரங்களில் இருந்தன. 70% கடன்கள், 1% கடனாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. வேளாண்மைக்கு வழங்கப்பட்ட கடன் சதவீதம் 2.2%. வங்கிகள் மூழ்கிப் போவது மிகச் சாதாரணமான நிகழ்வாக இருந்தது.
பதிலளிநீக்குதேசியமயமாக்கலுக்குப் பிறகு, இந்த வங்கிக்கிளைகள், 1987 ல், 53840, 2015 ல் 120000 என உயர்ந்திருக்கின்றன. 34% வங்கிக் கிளைகள் கிராமப்புரங்களிலும், 27% சிறு நகரங்களிலும் இருக்கின்றன. உலகிலேயே மிக அதிக வங்கிக் கிளைகள் அமைந்துள்ள நாடு இந்தியா. சீனாவை விட அதிகம்.
1969 ல், வேளாண்மைக்கு வழங்கப்பட்ட கடன் 40 கோடி. இது 2011 ஆம் ஆண்டு 3 லட்சம் கோடி. 1969 ல் சிறு தொழில் கடன் 251 கோடி. 2011 ஆண்டு, 3.69 லட்சம் கோடி.
இந்த அளவு நிதியை, ஒரு ஊரக வேளாண் துறை மற்றும் சிறு தொழில் பொருளாதாரச் செயல்பாடுகளை இயக்க அனுப்பியது, சுதந்திர இந்தியாவின் மிகப் பெரும் நிதிச் சீர்திருத்தம். 2011 ஆம் ஆண்டு, வேளாண்மை மற்றும் சிறு தொழில்களுக்கு, 6.7 லட்சம் கோடி கடன் கொடுக்கப்பட்டது எனில், ஒரு கிராமத்துக்கு, 1.34 கோடி நிதி என்னும் அளவுக்கு, வங்கிகளின் நிதி சென்றடைந்திருக்கிறது. அரசு வங்கிகள் என்பதால், மூழ்கி விடும் என்னும் பயமில்லாமல், மக்கள் வங்கிகளில் சேமிக்க முன் வந்தார்கள். 1969 ஆம் ஆண்டு, 4646 கோடியாக இருந்த வங்கிச் சேமிப்பு, 2011 ஆம் ஆண்டு, 57 லட்சம் கோடியாக உயர்ந்தது.
இந்த நிதி இல்லாத காலத்தில், ஊரக வேளாண்மையும், தொழில்துறையும், உள்ளூர் உயர் சாதிச் செல்வந்தர்களையும், வட்டிக்கடைக்காரர்களையும்தான் நம்பியிருந்திருக்க வேண்டும். சேமிப்பை, சரியான வட்டி ஈட்டாத வழிகளில், பாதுகாப்பு இல்லாமல் வைத்திருந்திருக்க வேண்டும். இந்த நிதிக்கட்டமைப்பு, காலகாலமாக இருந்து வந்த உயர்சாதி, நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை பின்னொதுக்கி, ஏழைகளின், சிறு உழவர்களின், தொழில் முனைவோரின் பொருளாதார நலன்களை முன்னெடுத்தது. இதனால் பெரிதும் பயன் பெற்ற சேவைப் பொருளாதாரம், வேக வளர்ச்சிப் பாய்ச்சலை 1975 ஆண்டு நிகழ்த்தியது.https://www.jeyamohan.in/113298#.XTFx8vZuKP8 - very well written. There is a government enterprise which studies public sector performance - there the overall performance is decent. if you compare with Tata group, you will be surprised that PSUs do better. tks
Excellent article.
பதிலளிநீக்குசமஸ் 2014 முதல் எத்துனை வங்கிகள் தனியார் மயமாக்கபட்டுள்ளதோ. ஏதோ கையில் பேனாவும் பேப்பரும் இருந்தால் கதைவிடவேண்டயதுதானா. என்னங்க சார் உங்க திட்டம். மக்களை முட்டாளாக கருதுபவன்தான் உங்களைப்போன்ற ஆக சிறந்த அறிவாளி. உங்களின் பல கட்டுரைகள் இந்த அரசுமீது பொய்யுரைகளை பரப்புவதாகவே உள்ளது. அது சரி நீங்களும் தமிழக உடகம்தானே. கப்ஸாவைதவிர வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.இன்னமும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் நாட்டிலே நம் நாட்டிலே.
பதிலளிநீக்கு