ஈழம்: கனவிலிருந்து யதார்த்தத்துக்கு...


         
               லங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கும் சூழ்நிலையில், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் ஓர் ஆழ்ந்த மௌனத்தை அவதானிக்க முடிகிறது. "அடுத்தது என்ன; இனி நாம் என்ன செய்யப்போகிறோம்?'' என்ற கேள்வி ஒவ்வொருவரிடமும் தொக்கி நிற்பதையும் உணர முடிகிறது.



                      ஏறத்தாழ ஓர் அறுபதாண்டு காலப் போராட்டம் - முப்பதாண்டு காலப் போர் லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் குடித்துவிட்டு, ஓர் இனத்தையே அகதி இனமாக்கிவிட்டு படுதோல்வியில் முடிந்திருக்கிறது.   இந்தப் போரின் முடிவு கசப்பானதாக இருக்கலாம். நம்மால் ஜீரணிக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. அதிலிருந்து தப்பி நம்மால் ஓடி ஒளிந்துகொள்ள முடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் ஈழத் தமிழர்கள். இந்தப் போராட்டமும் போரும் தொடங்க எவையெல்லாம் காரணங்களாக இருந்தனவோ அந்தக் காரணங்கள் அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆனால், கேட்டவை கிடைக்காததுடன் இருந்தவற்றையும் இழந்து நிற்கின்றனர் நம் மக்கள்தம்முடைய மொழிக்கும் தம்முடைய இனத்துக்கும் தம்முடைய பண்பாட்டுக்கும் சம உரிமை கேட்டுப் போராடிய அவர்களுக்கு, இன்று அவை எதுவுமற்ற பழைய வாழ்க்கையே பெருங்கனவாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழினமும் தன்னை ஆத்மப் பரிசோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு நேரமிது. இனி கடந்த காலத்தை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஓயாத குண்டுகளுக்கு இடையே உறவுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து முகாம்களில் அடைந்து கிடக்கும் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் இன்றைய தேவை இன்னொரு போரோ போராட்டமோ அல்ல. ஈழத் தமிழினம் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த தமிழினமும் மூன்று தளங்களில் தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்முதலாவது, மறு நிர்மாணம் மற்றும் வளர்ச்சி. இரண்டாவது, சமாதான நல்லெண்ண நடவடிக்கைகள். மூன்றாவது, சகல தளங்களிலும் தமிழர்களுக்கு சம உரிமைகள், அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு.

   

         இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் முன்னைவிடவும் வேகமாகச் செயல்பட வேண்டிய நேரம் இது. இலங்கை ராணுவம் கைப்பற்றிய இடங்களை சிங்களர்கள் இனி ஆக்கிரமிக்கக் கூடும். விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழர் பகுதிகளில் ராணுவமயமாக்கம் அகற்றப்பட சர்வதேச அழுத்தம் கொடுக்கப் பணியாற்ற வேண்டும். முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை விடுவிக்கப் பணியாற்றுவதுடன் ஈழத் தமிழர்கள் பொருளாதாரரீதியாக எழுந்து நிற்க தேவையான நிதி உதவிகளையும் நாம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். போர்ச் சூழலில் இதுவரை தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டின் தீவிரத்தையே தங்கள் அரசியல் பகடைக்காயாகப் பயன்படுத்திவந்த சிங்கள அரசியல் கட்சிகளை அந்தப் போக்கிலிருந்து வெளிக்கொண்டுவர ராஜதந்திரரீதியாக நாம் பணியாற்ற வேண்டும். போருக்கு முன்பும் போர்ச் சூழலிலும், மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுத்த சிங்களர்களுடன் கை கோத்து இதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். தமிழர்களின் நலனுக்கு அப்பாற்பட்டு இலங்கையின் நலன் சாத்தியமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். ராணுவமயமாக்கல் அகன்ற, பொருளாதார மீட்சியே ஈழத்தின் இப்போதைய உடனடித் தேவை. போருக்குப் பின் ஒருவேளை வறுமை அங்கு சூழ்ந்தால், மோசமான வாழ்க்கைக்கு நம் மக்கள் நிரந்தரமாகத் தள்ளப்படுவார்கள்.



           கனவுகள்; நம்பிக்கைகள்; உண்மைகள். இவை எல்லா தருணங்களிலும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமுமில்லை; வெவ்வேறாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. உலகில் போரால் பாதிக்கப்படாத சமூகங்கள் ஏதுமில்லை. ஆனால், போரைவிடவும் போருக்குப் பிந்தைய காலகட்டமே பல சமூகங்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானித்திருக்கின்றன. தமிழினம் நம்பிக்கையை இழக்கக் கூடாது!

2009 தினமணி

2 கருத்துகள்:

  1. அண்ணா, நீங்கள் எம் உணர்வுகளை அப்படியே படம் பிடிக்கிறீர்கள். எம் மக்களின் இன்றைய தேவை இன்னொரு போரோ போராட்டமோ அல்ல. இதுதான் உண்மை. இதுதான் நிதர்சனம். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இந்த விடயம் புரியாது. அவர்களுக்குப் போர் என்பது சினிமா காட்சி போன்று பரவசம் அளிக்கும் விடயம்.

    பதிலளிநீக்கு
  2. உலகின் சிறந்த வழி காந்திய வழியே
    அகிம்சை என்றும் தோற்பதில்லை

    பதிலளிநீக்கு