வரலாற்றால் சபிக்கப்பட்ட இரு நிலங்கள். நவீன உலகைப் பின்னோக்கி இழுக்கும் இரு போர் வெறியர்கள். துப்பாக்கிகள், எறிகணைகள், வெடிகுண்டுகள், பீரங்கிகள், ஏவுகணைகள், ரத்தம், ஓலம், மரண ஓட்டம், சாவு...
வரலாறு நெடுக மேலாதிக்கத்தாலும் போர் அச்சுறுத்தலாலும் பீடிக்கப்பட்டவை காஸாவும் வன்னியும். ஏறத்தாழ ஒரே காலகட்டம். ஏறத்தாழ ஒரே பிரச்னை. ஏறத்தாழ ஒரே சூழல். ஆனால், அணுகுமுறைகளில் எத்தனை வேறுபாடுகள் பாருங்கள். கடந்த டிசம்பர் 27-ம் தேதி ஹமாஸுடனான போர்நிறுத்தத்தைத் தூக்கியெறிந்துவிட்டு காஸா மீதான தன் தாக்குதலை எஹுத் ஒல்மர்ட் தொடங்கினார். 22 நாட்களில் ஏறத்தாழ 1,200 உயிர்களைப் பலிகொண்ட பின்னர் ஒட்டுமொத்த சர்வதேச எதிர்ப்பின் விளைவாக போர்நிறுத்தத்தை இப்போது அறிவித்திருக்கிறார்.
இந்தப் போர்நிறுத்தத்துக்காக குரல் கொடுக்காதவர்கள் யாருமே இல்லை. போர் தொடங்கிய நாளிலிருந்தே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தினார். ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. ஐ.நா.சபையின் நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்தது. "இந்தத் தீர்மானம் சரியான திசையில் எடுக்கப்பட்ட முடிவு'' என்றார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீஸா ரைஸ். "நான் பதவியேற்ற முதல் நாளிலேயே மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முழுவீச்சில் தொடங்குவேன்'' என்றார் அடுத்த அதிபர் ஒபாமா.
இஸ்ரேலால் தீர்மானம் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அரபு நாடுகளின் வற்புறத்தலின்பேரில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் போர்நிறுத்தத்தை ஐ.நா.சபை வலியுறுத்தியது. பான் கி மூன் லெபனான் சென்றார். ஐரோப்பிய ஒன்றியம் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியது. பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி எகிப்து அதிபர் முபாரக்கைச் சந்தித்தார். எஹுத் ஒல்மர்ட்டிடம் போரை நிறுத்தச் சொன்னார். இங்கிலாந்தும் சீனாவும் இந்தியாவும் இஸ்ரேல் நடவடிக்கையைக் கண்டித்தன. அரபு நாடுகளில் தொடங்கி இஸ்லாமிய நாடுகள் முழுவதும் பரவிய மக்களின் தன்னெழுச்சியான இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம் எகிப்து, கியூபா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா என்று உலகெங்கும் பரவியது. ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். இந்தியாவிலும்கூட காஷ்மீரில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசுகள் மௌனம் காக்க முற்பட்டபோதும் மக்களின் குரல் அரசாங்கங்களை அசைத்து மௌனத்தைக் கிழித்தது.
ஆனால், உலகின் இன்னொரு பக்கம் ஓர் இனமே அழிந்துகொண்டிருக்க ஒட்டுமொத்த உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. 2008, ஜனவரியில் விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்தத்தை முறித்துக்கொண்டார் ராஜபக்ஷ. இலங்கை அரசின் வன்னி மீதான போர் தொடங்கி ஏறத்தாழ ஓராண்டாகிறது. உயிரிழந்தோர், காயமடைந்தோர், காணாமல்போனோர் எண்ணிக்கை தெரியவில்லை. வன்னியின் ஒவ்வொரு நகரமும் ஆவி நகரமாகிக்கொண்டிருக்கிறது. முல்லைத்தீவில் சுமார் 1 லட்சம் பேர் மட்டுமே வாழக் கூடிய பரப்பளவில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் உயிரைக் கையில் ஏந்தி தஞ்சமடைந்திருக்கின்றனர். காடுகளிலும் கிராமங்களிலும் வெட்டவெளியில் ஆயிரக் கணக்கானோர் எவ்வித வசதியுமின்றி தங்கியிருக்கின்றனர். விஷ ஜந்துக்கள் கடிக்கு ஆளாகி மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் வன்னியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துகொண்டிருக்கின்றனர். மோட்டார் வாகனங்களில், மாட்டு வண்டிகளில், இரு சக்கர வாகனங்களில் எனக் கிடைத்த வாகனத்தில் சொந்த மண்ணையும் உடைமைகளையும் துறந்து பெட்டி, படுக்கையோடு வரிசையாய் அணிவகுத்துச் செல்லும் தமிழர்களால் யாழ்குடா செல்லும் பாதைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றன. ஆனால், இலங்கை அரசோ சமர்களுக்கெல்லாம் தாய்ச் சமரை நடத்திக்கொண்டிருக்கிறது. முல்லைத்தீவைச் சுற்றி வளைத்திருக்கும் இலங்கை ராணுவம் தன்னுடைய பெரும்பகுதி வீரர்களையும் அங்கு குவித்துவருகிறது. தாக்குதலின் உக்கிரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லறைகள் என எவ்விதப் பாகுபாடுமின்றி குண்டுவீச்சு தொடர்கிறது.
ஐ.நா. சபை, அமெரிக்காவின் புதிய அதிபர், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா என ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் ஈழத் தமிழர்கள் தனித்தனியே விடுத்த போர்நிறுத்த கோரிக்கை எவராலும் பொருட்படுத்தப்படவில்லை. "இடம்பெயரும் பிரதேசங்கள் மீதான தாக்குதலையேனும் தாற்காலிகமாக நிறுத்த வேண்டும்'' என்ற தமிழ் மக்களின் குறைந்தபட்ச உயிர்ப்பிச்சையையும்கூட ராஜபக்ஷ நிராகரித்துவிட்டார். "மருத்துவவமனைகள் மீதான தாக்குதலைக் கைவிட வேண்டும்'' என்ற மருத்துவர்களின் வேண்டுகோளும் புறக்கணிக்கப்பட்டதால் போரில் தாக்குதலுக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள்கூட இல்லை. இலங்கையில் இதற்கும் மேல் நிகழ வேண்டியது என்ன? ஒட்டுமொத்த உலகமும் இன்னமும் மௌனம் காக்கிறதே ஏன்?
ஏனெனில், இலங்கையில் கொல்லப்படுவது தமிழர்கள். இந்த ஒரு காரணம்தான் இந்தியாவின் பிரதமர் முதல் அறிவுஜீவி பத்திரிகையாளர்கள் வரை இஸ்ரேலுக்கு ஒரு நியாயமும் இலங்கைக்கு ஒரு நியாயமும் பேச வைக்கிறது; தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை பொதுத் தேர்தல் வரை காத்திருக்கச் சொல்கிறது; தம் சொந்த இனத்தவர் ஆயிரக் கணக்கில் உயிரழிய, குற்ற உணர்வற்ற மெüனத்தை தமிழர்களுக்குப் பழக்கி இருக்கிறது. இந்த மௌனம் அசிங்கமானது; அவமானகரமானது; ஆபத்தானது. ஆறரை கோடி தமிழர்களின் உணர்வைப் புறந்தள்ளி தன்னுடைய ரகசிய உதவிகள் மூலம் ஒரு வரலாற்றுக் குற்றத்தைத் திட்டமிட்டு நிகழ்த்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தன்னுடைய வெற்று வார்த்தைகள் மூலம் அந்தக் குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. தம்முடைய ஓட்டு அரசியல் மூலம் மன்னிக்க முடியாத இனத் துரோகத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர் தமிழக அரசியல்வாதிகள். எல்லாவற்றையும் மௌனமாக கவனித்துக்கொண்டிருக்கிறது வரலாறு!2009 தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக