வெள்ளம் கடலூரைத் தத்தளிக்கவிட்டிருந்த நாட்களில் பாலச்சந்திரனைத் தேடிச் சென்றிருந்தேன். விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் தலைமைத் தீயணைப்போனாக இருக்கிறார் பாலச்சந்திரன். இந்த வெள்ளத்தில் விருத்தாசலத்துக்குப் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், கூப்பிடு தொலைவில் இருக்கும் நெய்வேலி தொடங்கி வடலூர் வரைக்கும் சுற்றுவட்டப் பகுதிகள் யாவற்றையும் வெள்ளம் பிய்த்துப்போட்டிருக்கிறது. இது போன்ற நாட்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தூக்கமே இருப்பதில்லை.
அன்றிரவு பாலச்சந்திரனைச் சந்தித்தபோது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வந்த வேகத்தில், “சார், ஒரு டீயைப் போட்டுட்டு வந்துடட்டுமா, ரொம்பப் பசியா இருக்கு’’ என்றவாறு ஓடியவர், அடுத்த ஐந்து நிமிடங்களில் நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். “இன்னையோட பத்து நாள் ஆச்சு சார், நாங்க வீட்டுக்குப் போய். தீபாவளியோட வீட்டைவிட்டு வந்தவங்கதான். உத்தரவு வந்துடுச்சு. ‘படை திரட்டும் பணி உத்தரவு’னு இதை நாங்க சொல்வோம். இந்த உத்தரவு வந்துடுச்சுன்னா, மறு உத்தரவு வர்ற வரைக்கும் யாரும் வீட்டுக்குப் போகக் கூடாது. 24 மணி நேர வேலை. வீடு திரும்ப இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியலை. வருண பகவான் கருணை காட்டணும்.” கையை மேலே காட்டுகிறார்.















































