தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் அனுகூலம்... அரசியல் எதிரிகள் திடீர் நண்பர்கள் ஆவது. மக்களுக்குக் கிடைக்கும் அனுகூலம்... அரசியல் நண்பர் கள் திடீர் எதிரிகள் ஆவது. திடீர் எதிரிகள் புதிய சூழலில் உளறத் தொடங்கும்போது நிறைய ரகசியங்கள் சந்திக்கு வரும். ஜனநாயகத்தில் உண்மைகள் இப்படித்தான் வெளியே வர வேண்டும்!
அமெரிக்காவுக்கு இது போதாத காலம். அமெரிக்க அரசின் சமீபத்திய இருப்பு அறிவிப்பின்படி, அமெரிக்கர்களின் செல்வத்தின் மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில், 40 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்து 1992-ல் இருந்த நிலையை அடைந்திருக்கிறது. பொருளாதார நிபுணர் பீட்டர் ஸ்சிஃப் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், ‘‘வரலாற்றிலேயே மோசமான பொருளாதாரச் சூழலை இனிதான் அமெரிக்கா எதிர்கொள்ளப்போகிறது!’’
பொருளாதாரச் சீர்திருத்தம்பற்றியோ மாற்றம்பற்றியோ இந்தத் தேர்தலில் பேச ஒபாமாவுக்கு வழி இல்லை. சரி, வேறு எதைப் பற்றிப் பேசுவது? சீனாவின் வளர்ச்சியைப் பூதாகாரமாக்கிப் பேசலாம் என்று வியூகம் அமைத்தது ஒபாமாவின் தேர்தல் பிரசாரக் குழு. ஒபாமாவின் போதாத காலம், அவருடைய எதிரி மிட் ரோம்னி முந்திக்கொண்டார். சீனாவுக்கு எதிரியாகத் தன்னை முன்னிறுத்தி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக ரோம்னி கொடுத்த விளம்பரங்கள் ஒபாமாவின் வியூகத்தில் பேரடியாக விழ, மன்மோகன் சிங்கின் போதாத காலம் ஒபாமாவின் பிரசாரத்தில் சிக்கிக்கொண் டது.
சில வாரங்களுக்கு முன் அமெரிக்க அரசு கசியவிட்ட தகவல்களின்படி, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஒரு கட்டுரையை வெளியிட்டது. அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை அயல்பணி ஒப்படைப்பு முறையில் வெளிநாடுகளுக்கு அளிப்பதில் ரோம்னியின் ‘பெய்ன் கேபிடல்’ நிறுவனம் முன்னணி வகிக்கிறது என்று சொன்னது அந்தக் கட்டுரை. இதன் தொடர்ச்சியாக அமெரிக்கத் தேர்தலில் இந்தியா விவாதப் பொருள் ஆனது.
ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, ‘‘வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகிவரும் சூழலில், அமெரிக்கர் களின் வேலைவாய்ப்பை எப்படி எல்லாம் பெருக்கலாம் என்று யோசிக்கும் அதிபர்தான் அமெரிக்காவுக்குத் தேவை. இந்தியா, சீனா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் என்று வெளிநாடுகளுக்கு நம்முடைய வேலைகளை ஏற்றுமதிசெய்யும் ரோம்னி அல்ல’’ என்றார் ஒபாமா. அந்தக் கூற்றை அப்படியே அடியொற்றினர் அவருடைய கட்சியினர். ‘‘ ‘இந்தியர்கள் நம்முடைய வேலைவாய்ப்புகளைப் பறிக்கும்போது ஏன் அந்த நாட்டுக்குச் செல்கிறீர்கள்?’ என்று 2008-ல் இந்தியாவுக்குச் சென்ற போது ஒபாமாவை நோக்கிக் கேட்டார்கள். அமெரிக்கர்களுக்கு 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் ஒபாமாவிடம் இருந்ததை அறியாதவர்கள் அவர்கள்’’ என்றார் ஒபாமா வின் தேர்தல் பிரசாரப் பொறுப்பாளர். அடுத்த இரு வாரங்களிலேயே ஒபாமா மீண்டும் திருவாய் மலர்ந்தார். ‘‘அந்நிய முதலீடுகள் தொடர்பான இந்தியாவின் கொள்கைகள் கவலை அளிக்கின்றன. குறிப்பாக, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாடுகளை அனுமதிக் கும் விஷயங்களில் இந்தியா கடும் கட்டுப்பாட்டை விதிக்கிறது. பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்றால், இந்தியா கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்-கொள்ள வேண்டும்’’ என்றார்.
ஓர் இந்தியராக, இந்திய அரசின் கொள்கை முடிவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல ஒபாமா யார் என்று நீங்கள் கோபப்படலாம். அதற்கு முன் ஒபாமாவின் நண்பர் மன்மோகன் சிங் என்ன செய்தார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அலைக்கற்றை வழக்கில், ‘‘இனி வரும் காலங்களில் அலைக்கற்றை உட்பட நாட்டின் எல்லா இயற்கை வளங்களையும் ஏல முறையிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது அல்லவா? அந்தத் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த
மன்மோகன் சிங் அரசு, குடியரசுத் தலைவர் மூலம் அந்தத் தீர்ப்பு தொடர்பாக விளக்கம் கேட்கும் மனுவைத் தாக்கல் செய்தது. எப்படியாவது இந்தத் தீர்ப்பை மாற்றத் துடிக்கும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாகன்வதி தன்னுடைய வாதத்துக்குத் துணைக்கு அழைத்தது யாரைத் தெரியுமா? ஒபாமாவை!
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் முன், ‘‘இந்தியாவைப் பாதுகாப்பான நாடாக உலக நாடுகள் பார்க்கின்றன. அந்தப் பார்வை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் மாறும். பன்னாட்டு
நிறுவனங்கள் இந்தத் தீர்ப்பின் விளைவாக இந்தியாவில் தொழில் தொடங்க அஞ்சுகின்றன. இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவது நாட்டின் அந்நிய நேரடி முதலீட்டில் கடுமை யான விளைவுகளை உருவாக்கும்’’ என்ற வாகன்வதி, ‘‘அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சூழல் மோசம் அடைந்துவருகிறது’ என்று குறிப்பிட்டு இருப்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார்.
நாட்டின் ராஜாங்கக் கொள்கைகள் யாரால், யாருக்காக வகுக்கப் படுகின்றன என்று புரிகிறதா?
ஆனந்த விகடன் ஜூலை 2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக