சச்சின் கொஞ்சம் காத்திருக்கலாம்!

        
ச்சின் ரமேஷ் டெண்டுல்கர். மங்களம் பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.
டெல்லியில் பாரத ரத்னா விருதுப் பந்தயத்தின் இறுதி ஆட்டத்தில் இப்போது இந்த இரு பெயர்கள்தான் அடிபடுகின்றன.

பாலமுரளிகிருஷ்ணா சங்கீத வாழ்க்கையைத் தொடங்கியது தன்னுடைய ஆறாவது வயதில். காந்தக் குரல் என்பார்களே... அந்தச் சொல்லாடல் அப்படியே பொருந்தும். கேட்டவர்களை அப்படியே வாரிச் சுருட்டி அணைத்துக்கொள்ளும் குரல். தியாகராஜ சிஷ்யப் பரம்பரையில் வந்த பாரப்பள்ளி ராமகிருஷ்ணா பந்துலுவின் சிஷ்யர் பாலமுரளிகிருஷ்ணா. விஜயவாடா தியாகராஜர் ஆராதனையில் உட்கார்ந்து பாடியபோது அவருக்கு எட்டு வயது. 15 வயதுக்குள் 72 மேளகர்த்தா ராகங்களும் அவருக்கு அத்துப்படி. 

ஒரு பாடலை மொழி புரிந்து பாடுவதற்கும் புரிந்துகொள்ளாமல் பாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. பாடலின் கண்ணைத் திறப்பது மொழிதான். அதை உணர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணா. தாய்மொழி தெலுங்கு தவிர, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம், பஞ்சாபி, வங்கம் என்று பல மொழிகளைக் கற்றவர். பன்முக மேதை. தேர்ந்த வாக்கேயக்காரர். ஏராளமான பாடல்களை இயற்றி, இசை கோத்திருக்கிறார். வர்ணங்கள், கீர்த்தனைகள், ஜாவளிகள், தில்லானாக்கள் என்று 400-க்கும் மேற்பட்ட உருப்படிகளை தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளில் உருவாக்கி இருக்கிறார். வயலின், மிருதங்கம், வயோலா, கஞ்சிரா என்று பல வாத்தியக் கருவிகளை வாசிக்கத் தெரியும். கர்னாடக சங்கீதத்தை சினிமாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களில் பாலமுரளிகிருஷ்ணா முக்கியமானவர். திரைப்படத் துறையிலும் சாதித்தவர். 1987-ல் ‘மாதவாச்சார்யா’ படத்துக்காகச் சிறந்த இசை அமைப்-பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். கர்னாடக சங்கீதத்தை வெகுஜன மக்கள் ரசனைக்கு எடுத்துச் சென்றதிலும், வெளிநாட்டவர் மத்தியில் இந்திய இசை யைக் கொண்டுசென்றதிலும் பாலமுரளிகிருஷ்ணாவின் பங்களிப்பு மகத்தானது. செவ்விசையில் நாட்டுப்புறப் பாடல்களைக் கலந்து கொடுப்பதில் அவர் வித்தகர். பீம்ஷென் ஜோஷி, ஹரிபிரசாத் சௌராஷியா, கிஷோரி அமோம்கர் போன்றவர்களுடன் இணைந்து அவர் நடத்திய ஜுகல்பந்திகள் ஒரு புதிய இசை அலைக்கு வித்திட்டன. ‘‘உங்களுக்கு இணையாக என்னால் பாட முடியாது’’ என்று பாலமுரளிகிருஷ்ணாவின் மேதைமைக்கு மகுடம் சூட்டினார் பீம்ஷென் ஜோஷி! 
  
இப்போது பாலமுரளிகிருஷ்ணாவுக்கு 82 வயது. 25 ஆயிரம் கச்சேரிகளைத் தாண்டி அவருடைய கலைப் பயணம் தொடர்கிறது. கலையால் - இசையால் வேறுபாடுகளின் எல்லைகளைக் கடக்கச் செய்ய முடியும்; தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என்பது உண்மையானால், பாலமுரளிகிருஷ்ணாவுக்கு எப்போதோ பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். வடக்கத்திய அரசியல் ஆதிக்கம் மிக்க பாரத ரத்னா விருதுப் பட்டியலில் பண்டிட் ரவிஷங்கர், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லா கான், பீம்ஷென் ஜோஷி என்று இதுவரை இசை சார்ந்து இடம் பெற்றிருக்கும்  கலைஞர்களில் ஒரே விதிவிலக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி. இப்படிப்பட்ட சூழலில்தான் பாலமுரளிகிருஷ்ணாவுக்கு பாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைக்கு கோதாவில் சச்சினைக் களம் இறக்கி இருக்கிறது வடக்கத்திய அரசியல். 

பாலமுரளிகிருஷ்ணாவைக் காட்டிலும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன. சச்சினை மனதில்வைத்துதான் பாரத ரத்னா விருதுக்கான தகுதி வரையறையை விளையாட்டுத் துறைச் சாதனைகளையும் உள்ளடக்கியதாக அரசு மாற்றி அமைத்தது. பாரத ரத்னா விருதுக்கு எல்லா வகையிலும் சச்சின் தகுதியானவர். அதேசமயம், அவருக்கு முன் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிப்புகள் பல முறை கேலிக்கு உள்ளாகி இருக்கின்றன. 1988-ல் எம்.ஜி.ஆர். இடம்பெற்று இரு ஆண்டுகள் கழித்துதான் பாரத ரத்னா விருதுப் பட்டியலில் அம்பேத்கர் இடம்பெற்றார். 1991-ல் ராஜீவ் காந்திக்கு பாரத ரத்னா அறிவித்தபோதுதான், அந்தப் பட்டியலில் மொரார்ஜி தேசாயும் இடம்பெற்றனர். நாட்டின் கல்வித் தந்தையான அபுல்கலாம் ஆசாத்துக்கு அவர் இறந்து 34 ஆண்டுகள் கழித்து 1992-லும் ஜெயபிரகாஷ் நாராயணுக்கு 1999-லும் விருதை அறிவித்தார்கள். ஆனால், இவ்வளவு போட்டி நிலவும் ஒரு விருதுக்கான தேர்வு ஆண்டுதோறும் நடக்காதது ஏன் என்று தெரியவில்லை. 120 கோடி பேர் வாழும் ஒரு நாட்டில், ஆண்டுக்கு ஒருவரைக்கூடவா நாம் கௌரவிக்க முடியாது? காலம் கழித்து அளிக்கப்படும் அங்கீகாரம் அர்த்தமற்றது மட்டும் அல்ல; அவமதிப்பும்கூட!

ஆனந்த விகடன் ஆகஸ்ட் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக