வலியின்றி சாகவிடு அரசே!

       
                                    வாழ்வின் மோசமான நாட்களில் ஒன்று அது. மரண ஓலத்தை நேரில் கேட்ட நாள். வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் அவர். தொண்டையில் ஆரம்பித்து ஒரு பக்கக் கன்னம் முழுவதையும் நோய் சிதைத்து இருந்தது. மூக்கின் ஒரு பகுதிக்கும் நோய் பரவி, அங்கு சீழ் கோத்திருந்தது. கை, கால்களை எல்லாம் ஒடுக்கிக்கொண்டு அந்தப் பெண் படுத்திருந்தாள். ‘‘ம்ம்ம்...’’ என்று அரற்றல் மட்டும் அவளிடம் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. 100 மூட்டைகளுக்கு நடுவே அகப்பட்டுக்கொண்டவனிடம் இருந்து வெளிப்படுமே... அப்படி ஓர் அழுத்தம் அந்தக் குரலில். திடீரென்று அவளுடைய உடல் தூக்கிப்போடுகிறது. அந்தக் கட்டடமே நொறுங்கி விழுவதுபோல் அவளுடைய அலறல் வெளிப்படுகிறது... ‘‘அம்மா...’’
      
                                    மனிதப் பேரவலம் இது! எய்ட்ஸ் நோயாளிகளும் புற்றுநோயாளிகளும் தன்னுடைய இறுதி நாட்களில் அனுபவிக்கும் வலி. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், வலி என்கிற வார்த்தை இங்கு போதாது. ‘‘தாங்கவே முடியாதது என்று பிரசவ வலியைச் சொல்வார்கள். அதுபோல, நூறு மடங்கு வலி என்று சொன்னால்கூட இந்த வலிக்கு ஈடாகாது’’ என்கிறார்கள் அதை அனுபவிப்பவர்கள். கூடவே, ‘எனக்கு ஏன் இந்த நிலை, யார் செய்த பாவத்தின் விளைவு இது, மரணத்துக்குப் பின் என்ன நடக்கும், எனக்குப் பின் இந்தக் குடும்பம் என்ன ஆகும்’... இப்படி மனரீதியிலான சித்ரவதைகள் வேறு.
      
                                    உலகெங்கும் சிகிச்சை பலன் அளிக்காமல் கைவிடப்பட்ட நோயாளிகள் தன்னுடைய இறுதி நாட்களில் இந்த மரண வலியை எதிர்கொள்கிறார்கள். ஆனால், இந்த வலியில் 80 சதவிகிதம் அளவுக்கு மருந்துகள் மற்றும் உரிய கவனிப்பின் வாயிலாகக் குறைக்க முடியும்; அதிக சித்ரவதை இல்லாமல் நோயாளிகள் சாக உதவ முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சாதாரண வலி நிவாரணிகளான ‘பாரசிட்டமால்’, ‘ஐபுப்ரூஃபென்’ மருந்துகளில் தொடங்கி ‘கோடின்’, ‘மார்பின்’ என்று போதை தரும் மருந்துகள் வரை அடங்கிய ஒரு பட்டியலையே இந்த வலியை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
      
                                    பொதுவாக, இந்த வலியைப் பொறுத்த அளவில், தொடக்கக் கட்டத்தில் சாதாரண வலி நிவாரணிகள் பலன் அளிக்கலாம். ஆனால், இறுதிக் கட்டத்தில் போதை தரும் வீரியம்மிக்க மருந்துகளேகூட ஓரிரு மணி நேரத்துக்கு மட்டுமே பலன் அளிக்கும். பின்னர், வலி விஸ்வரூபம் எடுக்கும். அதனாலேயே, இந்த மரண வலித் தணிப்பு மருத்துவத்தின் (Palliative care) ஒரு பகுதியாகவே கருணைக் கொலைக்குக்கூட சட்டபூர்வ அனுமதி வழங்கி இருக்கின்றன சில நாடுகள். ஆனால், இந்தியாவிலோ அவர்களுக்கான மருந்துகள் கிடைப்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. கொடும் வலிக்கும் மரணத்துக்கும் இடையே இப்படித் துடித்துக்கொண்டு இருக்கும் நோயாளிகள் மீது இந்திய அரசு காட்டும் அக்கறைக்குச் சின்ன உதாரணம், ‘மார்பின்’. இது விலை மலிவான ஒரு மருந்து. கடுமையான வலியால் துடிப்பவர்களுக்கு ‘மார்பின்’ நிவாரணம் அளிக்கும். அதேசமயம், தவறாகப் பயன்படுத்தினால், போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆகையால், ‘மார்பின்’ மருந்தைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தும் உலக சுகாதார நிறுவனம், அதேசமயம், இந்தக் கண்காணிப்பின் பெயரால் நோயாளிகளுக்கு ‘மார்பின்’ கிடைப்பதில் சின்ன சிக்கலைக்கூட உண்டாக்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறது.

                                    இந்தியாவில் நோயாளிகளுக்கு ‘மார்பின்’ கிடைப்பதில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கிறது. அரசு மருத்துவமனைகளில் கிடைப்பது இல்லை. அதாவது, சாகும் நிலையில், மரண வலியோடு ஒருவர் போராடும் சூழலில்கூட ஏழை - பணக்காரர் பாரபட்சம் தொடர்கிறது. நீங்கள் பணக்காரராக இருந்தால், வலியால் துடிக்கும் சூழலில், ‘மார்பின்’ மாத்திரை அல்ல; அதைவிடப் பல மடங்கு சக்தி மிக்க ‘ஃபென்டாலின்’ மருந்தே உங்களுக்குக் கிடைக்கும். மாதம் 10,000 ரூபாய் செலவிட்டால், பிளாஸ்திரிபோல மருந்து தடவப்பட்ட பட்டையாக (பேட்ச்) ‘ஃபென்டாலின்’ உங்களுக்குக் கிடைக்கும். உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் அதை ஒட்டிக்கொண்டாலே போதும். தோல் வழியே மருந்து உடலுக்குள் சென்று நிவாரணம் அளிக்கும். இன்னும் பெரும் பணக்காரராக இருந்தால், நான்கு லட்ச ரூபாய் செலவிட்டால் ஒரு சின்ன அறுவைச் சிகிச்சையின் மூலம் ‘மார்பின்’ மருந்து அடங்கிய குப்பியையே (இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்) உங்கள் உடலோடு இணைத்துவிடலாம். அந்த மருந்து நேரடியாக முதுகுத்தண்டுவடத்துக்குச் சென்று நீங்கள் உயிரோடு இருக்கும் சில மாதங்கள் வரை உங்களை வலியின்றிச் செயல்படவைக்கும். ஆனால், ஏழையாக இருந்தால், வெளியில் மருந்தகங்களிலும் ‘மார்பின்’ கிடைக்காது; அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு இருக்காது.

                                           இந்தியச் சுகாதாரத் துறை அரசு மருத்துவமனைகளில், கடுமையான வலியால் அவதியுறுவோருக்கு  ‘மார்பின்’ அளிப்பதைக் கொள்கையாக வைத்திருக் கிறது. இருந்தும் ஏன் மருந்து கிடைப்பது இல்லை? முறைகேடான வழியில் ‘மார்பின்’ வெளியே சென்றால், அதற்கான விளைவுகளை மருத்துவர்களும் மருத்துவ மனை அதிகாரிகளுமே எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதே மருத்துவர்கள்தான் தனியார் மருத்துவமனைகளில் எந்தத் தயக்கமும் இல்லாமல் ‘மார்பின்’ வழங்குகிறார்கள். இது ஆரம்ப நிலைப் பிரச்னை. இந்தியாவில், மரணவலித் தணிப்பு மருத்துவம்குறித்து அரசுக்கு எந்த அக்கறையுமே இல்லை என்கின்றன சர்வதேச அளவில் இந்தத் துறையில் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகள். உலகிலேயே நோயாளிகளின் கண்ணியமான மரணத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில் இங்கிலாந்துக்கு முதல் இடம் கொடுக்கும் அந்த அமைப்புகள், கடைசி வரிசையில் - உகாண்டாவுக்கும் கீழே - இந்தியாவை வைத்திருக்கின்றன.
       
                                     இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் இப்படி 10 லட்சம் பேர் துடிதுடித்துச் சாகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் எந்த வசதியும் இல்லாதவர்கள். ஒரு நோயாளிக்குத் தேவையான அடிப்படை வசதியான கட்டிலும் மின் விசிறியும்கூட இல்லாதவர்கள். இன்னும் உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் - மல ஜலத்தை அள்ளக்கூட ஆள் இல்லாதவர்கள் - எல்லாம் இருக்கிறார்கள். அவர்களுடைய நிலை எப்படி இருக்கும்? உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோரும்கூட இப்படிப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய நிலை எப்படி இருக்கும்? சின்னக் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கும்? தன் உயிருக்கு நெருக்கமானவர்களை இப்படித் துடிதுடிக்கப் பார்த்து இயலாமையால் துடிக்கும் அவர்களுடைய உறவினர்களின் நிலை எப்படி இருக்கும்? இவைபற்றி எல்லாம் இந்தியா யோசிப்பதே இல்லை என்கிறார்கள் மரண வலித் தணிப்பு மருத்துவத்தில் இருப்பவர்கள். உலகிலேயே சட்டத்துக்குப் புறம்பாக சகஜமாக கருணைக் கொலை செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியா, சட்டரீதியிலான கருணைக் கொலைபற்றியும்கூட யோசிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள்.
      
                                    ஒரு மனிதன் கண்ணியமாக வாழ்வதும் சாவதும் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. இந்தியக் குடிமக்கள் நோய்கள் இல்லாமல் வாழ்வதற்கேற்ற சுற்றுச்சூழலைக் கொடுக்க நம்முடைய அரசுக்கு வக்கில்லை. நோய் வந்துவிட்டால், அதற்குத் தரமான சிகிச்சையை அளிக்கவும் அரசுக்குத் திராணி இல்லை. குறைந்தபட்சம் சாகும்போதேனும் நிம்மதியாகச் சாக அரசு உதவ வேண்டும்!
ஆனந்த விகடன் செப்.2012

3 கருத்துகள்:

  1. சிறப்பாகச் செய்தி சொல்லி வருகிறீர்கள் சமஸ். நுட்பமான விஷயம். என்ன செய்யப்போகிறோம்? இப்படி ஒருவிஷயம் நடப்பதாவது உலகிற்குத் தெரியட்டும். தொடர்ந்த எழுதுங்கள். வாழ்த்துக்கள்
    - சேதுபதி

    பதிலளிநீக்கு
  2. Very good point Samas. I can feel the pain from your writing. I appreciate your writing and your content.

    பதிலளிநீக்கு
  3. Raghu Raman (Saudi Arabia)23 மே, 2014 அன்று 2:15 AM

    I have been reading your articles. You are writing on various topics and the narration is very attractive and crisp. Please keep continuing. I am really thankful to read your articles.

    பதிலளிநீக்கு