நம்புங்கள் இவர்கள் உங்களைக் காப்பற்றுவார்கள்!

னி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு, குழந்தைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள். ஓட ஓட விழுந்தார்கள். மூச்சடைத்து, கை - கால்கள் வெட்டி வெட்டி இழுக்க விழுந்து செத்தார்கள். காலையில் பார்த்தபோது கொத்துக் கொத்தாகப் பிணங்கள். பல நூற்றுக்கணக்கான பறவைகள், கால்நடைகள், மனிதர்கள்... அரசாங்கத்தின் துரோகத்தாலும் முதலாளிகளின் லாப வெறியாலும் ஒரு நகரம் உருக்குலையத் தொடங்கியது. போபால்... உலகின் மோசமான தொழில் வேட்டைக் கொலைக் களம்!

      போபால் பேரழிவுக்குப் பிந்தைய இந்த 28 ஆண்டுகளில், போபால் துயரத்தைக் கடந்து நாம் எவ்வளவோ தூரம் வந்திருக்கலாம். ஆனால், 'யூனியன் கார்பைடு நிறுவனம்’ பறித்த உயிர்களின் ஆன்மாக்கள் இந்தியாவின் மனசாட்சியைத் தொடந்து உலுக்கிக்கொண்டே இருக்கின்றன. 5,925 மரணங்கள், 4,902 நிரந்தர ஊனமுற்றோர், 5,63,352 பேர் பாதிப்பு, பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தை ஆகிய கொடூரங்களை எல்லாம் தாண்டி, இன்னமும் விஷத்தைக் குடித்துக்கொண்டு இருக்கும் போபால் மக்களை இந்தியா எப்படி வேடிக்கை பார்க்கிறது என்று கேட்கின்றன அந்த ஆன்மாக்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மேற்கொண்ட ஆய்வு, போபாலில் 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்ட இடத்தைச் சுற்றி மூன்று கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகி இருப்பதை உறுதி செய்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் மேற் கொண்ட பரிசோதனையோ, 'ஐ.நா. சபை நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் 2,400 மடங்கு வரை ரசாயனக் காரணிகள் அடங்கிய தண்ணீரைக் குடிக்கிறார்கள் போபால்வாசிகள்’ என்கிறது. ''இங்கு 'யூனியன் கார்பைடு ஆலை’ செயல்பட்டபோது, அது பூச்சிக்கொல்லியை உருவாக் கியது. அது மூடப்பட்ட பிறகு, புற்றுநோயாளி களையும் சிறுநீரக நோயாளிகளையும் உருவாக் கிக்கொண்டு இருக்கிறது'' என்கிறார்கள் போபால்வாசிகள். காரணம், ஆலையைச் சுற்றி  பரவியிருக்கும் 350 டன் நச்சுக் கழிவுகள்.
      இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று இந்திய அரசுக்குத் தெரியவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த உச்ச நீதிமன்றம், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தக் கழிவுகளை அகற்ற இறுதிக் கெடு விதித்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கழிவுகளை அகற்றும் வழி தெரியாததால், ரூ.  25 கோடி நிதி ஒதுக்கி, ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு
நிறுவனத்திடம் (ஜி.ஐ.எஸ்.) இந்தப் பணியை ஒப்படைத்தது இந்திய அரசு. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை ஆகிய காரணங்களைக் காட்டி கடந்த வாரம் இந்தப் பணியில் இருந்து பின்வாங்கிவிட்டது அந்த நிறுவனம். இப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது இந்திய அரசு. நம்முடைய லட்சணம் இதுதான்.
      போபால் பேரழிவுக்குக் காரணமாக இருந்தது ஆலையில் இருந்து வெளிப்பட்ட 'மெத்தில் ஐசோசயனேட்’. குளிர் நிலையில் பராமரிக்கப்பட வேண்டிய ரசாயனம் இது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், குளிர் சாதனங்களை இயக்குவதை ஆலை நிர்வாகம் நிறுத்தியதால் ஏற்பட்ட வெப்ப நிலை உயர்வாலேயே 'மெத்தில் ஐசோசயனேட்’ வெடித்து வெளியேறியது. 'மெத்தில் ஐசோசயனேட்’ ரசாயனத்தை எதிர்கொள்ள எளிய பாதுகாப்பு முறை ஒன்று உண்டு. மூக்கையும் வாயையும் ஈரத் துணியால் மூடிக்கொண்டு வாயு பரவும் திசைக்கு எதிர் திசையில் மெள்ள முன்னேறுவது. ஆனால், இந்த எளிய முன்னெச்சரிக்கைப் பயிற்சியைக்கூட ஆலையைச் சுற்றி உள்ள மக்களுக்கு ஆலை நிர்வாகமோ, அரசோ கொடுக்கவில்லை. இந்த அழிவுக்கு முன்பே ஆலையில் ஏராளமான விபத்துகள் நடந்தன; அவற்றை அரசு வழக்கம்போல் மூடி மறைத்தது. அழிவு நடந்த அடுத்த சில வாரங்களில் ஏராளமான மருத்துவக் குழுக் களைக் கண்துடைப்பாக அரசு அழைத்துச் சென்றபோது, அப்படி ஒரு சூழலை எதிர்கொண்ட பழக்கம் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்கள் முன் செய்வதறியாமல் நின்றார்கள் மருத்துவர்கள். 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தச் சூழல்கள் எல்லாம் இந்தியாவில் எந்த அளவுக்கு மாறி இருக்கின்றன?
      வளர்ச்சியின் பெயரால் கொஞ்சமும் அறிமுகம் இல்லாத எவ்வளவோ அபாயகரமான தொழில்நுட்பங்களுடன் இயங்கும் நிறுவனங்களை நாட்டில் அனுமதித்துக்கொண்டு இருக்கிறோம். ஆண்டுக்கு 2 லட்சம் டன் அபாயகரமான வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதி ஆகின்றன. தவிர, உள்நாட்டிலும் உற்பத்தியாகின்றன அணுக் கழிவுகள் உட்பட. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறே கடக்கிறோம்.
யாரை நம்பி?
      இப்படி ஒரு படுகொலையின் பிரதான குற்றவாளியான வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்கவிட்டு, ஏனைய உள்ளூர் குற்றவாளிகளுக்கு 25 ஆண்டுகளுக்குப் பின் வெறும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வாங்கிக் கொடுத்த அரசை நம்பி. ஒரு தொழிற்சாலை விபத்து எவ்வளவு மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கான எல்லா அனுபவங்களையும் 'யூனியன் கார்பைடு’ நிறுவனத்திடம் இருந்து பெற்ற பின்னும் நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமான வகையில், அணு சக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றிய அரசை நம்பி. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் நியாயமான இழப்பீட்டுக்காகப் போராடும் மக்களுக்கு, குடிக்கக்கூட பாதுகாப்பான தண்ணீரை வழங்காத அரசை நம்பி. மார்க்ஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது: ''வரலாறு திரும்பவும் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது, முதல் முறை விபத்தாக, மறுமுறை கேலிக்கூத்தாக!''
ஆனந்த விகடன் அக்.2012    

3 கருத்துகள்:

  1. andha Warren Anderson thanadhu 92vadhu vayadhil sameebathil irandhullar;kadaisikaalamvarai manaiviyudan vaalndhu maruthuvamanaiyil uyirvittadhai avargal kudambam velipaduthave illaiyai;ullur seidhiyaga mattume irundhadhu. arumaiyana dhandanai -arasiyalum,panabalamum nammudaiya kaiyalagathanamum idhaivida nangu velipadamudiyathu.indrum union carbide companiyai vilaikku vaangiyathu unilever endru padithen adhu thannudaiya varthagathai soap,shampoo,toothpaste endru nandragave kallakattikondirukiradhu-ethanai uyirgalai izhandhaalum engo nadakkirathu namakkenna endru seidhigalai seidhiyaimattume kadanthusellave nammai pazhakkikondom.

    பதிலளிநீக்கு