சித்திரை உச்சிவெயில். உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருந்தாலும் அசராமல் காத்திருக்கிறது கூட்டம். அலரும் ஒலிபெருக்கியின் முழக்கங்களுக்கும், தொண்டர்களின் ஆரவாரத்துக்கும் இடையில் கிழித்துக்கொண்டு நுழையும் பிரச்சார வேனிலிருந்து வெளிப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மூன்றாண்டுகளுக்கு முன்புபோல பலராலும் சாதாரணமாக மதிப்பிடப்பட்டவராக இல்லை; 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உட்பட எதிரில் உள்ள அத்தனை நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பிரதான இலக்கும் அவரே. ஆளுங்கட்சியின் தலைவரை அல்லது முதல்வரைப் பிரதான இலக்காக்கி நடக்கும் பிரச்சாரங்களிலிருந்து இந்தத் தேர்தல் முழுவதுமாக மாறுபட்டிருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவரையே எல்லோரும் குறிவைக்கிறார்கள். ஜாம்பவான் கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுகவில் அதிகார மாற்றத்தைச் சுமுகமாகக் கைமாற்றிக்கொண்டதோடு, ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஸ்டாலின் கூட்டணியையும் ஜாக்கிரதையாகக் கையாள்கிறார்.
தன்னுடைய தவறுகள், போதாமைகளை ஸ்டாலின் தீர்வுகள் வழி எதிர்கொள்கிறார். தான் கருணாநிதிபோல வசீகரமான பேச்சாளர் அல்ல என்பதை உணர்ந்திருப்பவர் திமுகவின் கூட்டங்களை மக்களுடன் உரையாடும் களமாக மாற்றியிருக்கிறார். எல்லோருக்கும் பொறுமையாகக் காது கொடுப்பதும், குறைகளுக்கு முகம் கொடுப்பதும், சரியானவர்களிடம் பொருத்தமான பொறுப்புகளை ஒப்படைப்பதும் ஸ்டாலினின் பெரிய பலம் என்கிறார்கள் கட்சியினர். சரியான தருணத்தில் கட்சியைத் தகவல் தொழில்நுட்ப யுகத்துக்கும் நகர்த்தியவர் மாறிவரும் புதிய சூழல்களுக்கு ஏற்ப கட்சிக்குப் புது உருவம் கொடுத்திருக்கிறார். 2014 மக்களவைத் தேர்தலில் அத்தனை இடங்களிலும் தோற்ற கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வென்றது பெரிய திருப்பம். 2021 சட்டமன்றத் தேர்தல் ஸ்டாலினுடைய வாழ்வில் முக்கியமான தேர்தல். கடுமையாக உழைக்கிறார். 20 நாட்களில் அவருடைய பிரச்சார வாகனம் 12,000 கி.மீ. பயணித்து 234 தொகுதிகளையும் சுற்றிவந்திருக்கிறது. தங்கும் ஊர்களில் வீதிகளில் மக்களுடன் நடப்பவர் தொடர் பயணங்களுக்கு இடையே பேசினார்.
இந்த நாட்களில் உங்களுடைய ஒரு நாள் எப்படியிருக்கிறது?
உண்மையில், எந்த ஊருல இருக்கேன், எந்த ஊருல தூங்குறேன்னு என்னாலேயே யூகிக்க முடியாத அளவுக்கு ஓடிக்கிட்டே இருக்கேன். பொதுவா, ஒரு திட்டமிட்ட வாழ்க்கை முறை என்னுடையது. காலையில அஞ்சரை மணிக்கு எழுந்துடறது, பத்திரிகைகளை வாசிக்கிறது, ஐஐடி வளாகத்துல நடைப்பயிற்சி, அடுத்ததாக வீட்டுல உடற்பயிற்சி, காலை உணவு, விருந்தினர் சந்திப்பு, அப்புறம் ‘முரசொலி’ அலுவலகத்துக்குப் போறது, அதன் பிறகு அறிவாலயம், அப்புறம் வீட்டுல மதிய உணவு, சின்ன தூக்கம், மீண்டும் சந்திப்புகள், திரும்பவும் மாலையில் அறிவாலயம், இரவு பொதுக்கூட்டங்கள், அப்புறம் வீடு, இரவு உணவு, கொஞ்ச நேரம் வாசிப்பு, தூக்கம்னு இருக்கும். ஆனா, தேர்தல் எல்லாத்தையும் மாத்திருச்சு. தேர்தல்னாலே அப்படித்தானே! அதுவும் இது தேர்தலா இல்லை; யுத்தமா ஆயிடுச்சு.
நீங்கள் செய்த முதல் தேர்தல் பிரச்சாரம் எது? இன்றிலிருந்து அன்றைய தமிழகத்தை நினைவுகூர்ந்தால், நாம் எதையெல்லாம் பெற்றிருக்கிறோம், எதையெல்லாம் இழந்திருக்கிறோம், என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
எனக்குப் பன்னிரண்டு வயசு இருக்கும். சென்னை மாநகராட்சிக்கு அப்போ தேர்தல் நடந்துச்சு. எங்க பகுதியிலேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு ஜேசுதாஸ்ங்கிறவர் திமுக சார்புல நின்னார். நானும் நண்பர்களும் சேர்ந்துக்கிட்டு சைக்கிள்ல முன்னாடி மைக்கைக் கட்டிக்கிட்டு உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு கோபாலபுரம் தெருக்கள்ல போனோம். அப்படித்தான் என் பேச்சு மைக்ல ஆரம்பிச்சுச்சு. கோபாலபுரத்துல சண்முகம் அண்ணன்னு நாங்க சொல்வோம், அவரோட சலூன்தான் எங்க கூடுகைக்கான இடம். அங்கேதான் ‘இளைஞர் திமுக’னு மன்றம் ஆரம்பிச்சோம். அடுத்து, 1967 சட்டமன்றத் தேர்தல்லேயும் கொடி புடிச்சோம். 1971 தேர்தல்ல நாடகம் போட்டோம். பெரிய ஆளாகி தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செஞ்சது அப்படிங்கிறது 1984-ல் நடந்துச்சு. இளைஞரணியைப் பெரிசாக் கட்டுற வேலையையும் சேர்த்து அப்ப பார்த்தோம். பரிதி இளம்வழுதி, திருச்சி சிவா இவங்களையெல்லாம் உள்ளடக்கி ஒரு குழு. கார்லேயே தமிழ்நாடு முழுக்கப் போனோம். இரவுல பயணம்; பகல்ல கூட்டங்கள். நான்தான் காரை ஓட்டுவேன். அன்னைக்குப் பார்த்த தமிழ்நாட்டுக்கும் இன்னைக்குப் பார்க்கிற தமிழ்நாட்டுக்கும் இடையில நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கு. முக்கியமா வறுமையை, பசியைப் பெரிய அளவுல ஒழிச்சுருக்கோம். ஆனா, இன்னும் நிறைய நாம முன்னேறியிருக்கணும். அது நடக்காமல் போக முக்கியமான ஒரு காரணம் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏற்படக்கூடிய தேக்கநிலை; திமுக கொண்டுவர்ற நல்ல திட்டங்களைத் திமுக கொண்டுவந்ததுங்கிற ஒரே காரணத்துக்காக அவங்க நிறுத்துறது தொடர் வளர்ச்சியில பெரும் முட்டுக்கட்டை. தமிழகம் இழந்திருக்கிறதா நான் நினைக்கிறது நல்ல சுற்றுச்சூழலை. இதை மாத்தணும்னுதான் கட்சியிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குன்னு ஒரு அணியை உருவாக்கினோம். வளர்ச்சின்னு பேசும்போதெல்லாம் சுற்றுச்சூழல் நலனையும் கவனத்துல எடுத்துக்கணும்னு நெனைக்கிறேன். அதுதான் நீடித்த வளர்ச்சிக்கான வழி, இல்லையா?