இயந்திரமயமாதல்

      
     எல்லாவற்றையும் இயந்திரமயமாக்கி வருகிறோம். இப்போதோ நமது பார்வையே இயந்திரமயமாகிவிட்டது. சக மனிதர்களையும் மனித வாழ்வையும் இயந்திரமயத்திலிருந்துப் பிரித்துப் பார்க்க அதற்குத் தெரியவில்லை. என்ன செய்வது? எல்லாக் கொடுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியதுதான்! 
     தமிழக அரசு பிப். 29 அன்று வெளியிட்ட ஓர் அறிவிப்பு தொழிலாளர்களின் வாழ்க்கை முறையையே தூக்கி வீசுவதாக அமைந்திருக்கிறது. அரசின் அறிவிப்பு இப்படியே படிப்படியாக எல்லா துறையினருக்கும் அமலாக்கப்பட்டால் நாமெல்லாம் இனி தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் எனத் தேசிய விடுமுறை நாள்களில்தான் குடும்பத்துடன் கூடியிருக்கலாம்போல இருக்கிறது.
       ஆனால், யாரும் அதைப் பற்றி பேசவில்லை. வழக்கம்போல் பொருளாதார ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, அரசியல் ரீதியாக என்று இயந்திர ரீதியாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களிடையே மனஉளைச்சலையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கும் அந்த அறிவிப்பின் சாராம்சம் இதுதான்.
"தமிழகத்தின் மின் தேவையில் தற்போது பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க தமிழகத்திலுள்ள தொழில்சாலைகள் இனி, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றாக வேறு ஒரு நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். அந்த நாளில் தொழிற்சாலைகளில் மின் விநியோகத்தைக் கொண்டு இயந்திரங்களை இயக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்பதே அந்த அறிவிப்பு.
        இதன்படி, தமிழகம் ஆறு மமண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சென்னை தெற்கு மண்டலத்துக்கு திங்கள், வடக்கு மண்டலத்துக்கு செவ்வாய், ஈரோடு; விழுப்புரம் மண்டலத்துக்கு புதன், திருநெல்வேலி; வேலூர் மண்டலத்துக்கு வியாழன், மதுரை; திருச்சி மண்டலத்துக்கு வெள்ளி; கோவை மண்டலுத்துக்கு சனி என விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
      இந்த 'வாராந்திர மின் விடுமுறை'யால் 300 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என்று மின் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தொழிற்சாலைகள் இயக்கப்படவில்லை என்றால் மின்சாரம் மிச்சமாகும் என்பது பாமரருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றாக வேறு ஒரு நாளை விடுமுறை நாளாக அறிவிப்பதால் மட்டுமே மின்சாரம் எப்படி மிச்சமாகும்? "இந்நாள் வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும் பல தொழிற்சாலைகள் 'ஷிப்ட்' முறையில் இயக்கப்பட்டன. வார விடுமுறை நாளில் இனி தொழிற்சாலைகள் இயங்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க இந்த அறிவிப்பு வழிவகை செய்வதால் இனி, அந்நாளில் தொழிற்சாலைகளை இயக்க முடியாது. ஆகையால், அந்த மின்சாரமும் மிச்சமாகும்'' என்கிறது அரசுத் தரப்பு. அப்படியென்றால், ஞாயிற்றுக்கிழமையை கட்டாய வார விடுமுறை நாளாக அறிவித்துவிட்டு, அந்த நாளில் இயக்கப்படும் தொழில்சாலைகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து மின்சாரத்தை மிச்சப்படுத்த வேண்டியதுதானே என்று கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை.
       சரி, நாமும் மற்றவர்கள்போல இயந்திரகதியாக பேச வேண்டாம். மின்சார சிக்கனம் ஒரு பக்கம் இருக்கட்டும்,  இந்த ஞாயிற்றுக்கிழமை?!
   வாரத்தின் எல்லா நாட்களிலும் வேலை, வேலை என்று இயந்திர கதியில் சுழன்றுகொண்டிருக்கும் நகரத்து மனிதர்கள் தன்னை மனிதனாக உணருவதே சனிக்கிழமை மாலையில்தான். அதுவும்கூட மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்தான். தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவற்றில் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். சொற்ப சம்பளத்துக்குப் பணியாற்றும் இவர்களில் பலர், குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்வதற்காக தம்பதி சகிதமாய் வேலைக்குச் செல்கிறவர்கள். இவர்கள் அவ்வளவு பேரும் ஒரே துறையில், ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் அல்லர். காலையில் சென்று இரவு வீடு திரும்பும் இவர்களுக்கும் எல்லோரையும்போல் வாரத்தில் ஒரு நாள் - ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் எல்லா வாழ்வும். உறவினர்களை - நண்பர்களைப் பார்க்க, கோயில், குளத்துக்குப் போய் வர, ஊர்ச் சுற்ற, சிவனே என்று வீட்டிலிருக்க, பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்க, வாழ்க்கைத் துணையுடன் வம்படிக்க, குழந்தைகளைக் கொஞ்சித் தூக்க என்று எல்லோருக்கும் எல்லாமும் இந்த ஞாயிறில்தான்!
       ஆனால், அரசின் இந்த அறிவிப்போ, "தொழிலாளர்களுக்கெல்லாம் எதற்கடா ஒரு வாழ்க்கை'' என்று கேட்காமல் கேட்கிறது. ஒரு தொழிலாளி வாரத்தில் ஒரு நாள் தன் குழந்தையுடன் கழிக்க வேண்டும் என்று நினைத்தால்கூட இனி, அந்தக் குழந்தையோ தொழிலாளியோ விடுப்பு எடுத்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையை இந்த அறிவிப்பு உருவாக்கியிருக்கிறது.
       இது ஒருபுறமிருக்க, இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் தமிழகத் தொழிற்பேட்டைகளில் பெரிய நிறுவனங்கள் தங்களைச் சார்ந்திருக்கும் சிறு நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளன. "விடுமுறை நாளில் குறையும் உற்பத்தியை எப்படி ஈடுசெய்வீர்கள்?'' என்று அந்தச் சுற்றறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, பல நிறுவனங்கள் மற்ற வேலை நாள்களில் தொழிலாளர்களைக் கூடுதல் நேரம் வேலை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால், பிற வேலைநாட்களிலும் தொழிலாளர்கள் இனி கூடுதல் நேரம் வேலை பார்த்தாக வேண்டும் என்பதோடு ஒரு நாள் விடுப்பு என்பதும்கூட பெரிய காரியமாக மாறிவிடும்.
     ஆகையால், தன் மனைவியுடன், குழந்தையுடன் ஒரு நாள் சேர்ந்திருக்க நினைக்கும் சாதாரண ஆசைகூட தொழிலாளர்களைப் பொறுத்தளவில் இனி ஒரு பெரிய கனவுதான்.
         என்ன செய்வது? எல்லாவற்றையும் இயந்திரமயமாக்கி வருகிறோம். இப்போதோ நமது பார்வையே இயந்திரமயமாகிவிட்டது. சக மனிதர்களையும் மனித வாழ்வையும் இயந்திரமயத்திலிருந்துப் பிரித்துப் பார்க்க அதற்குத் தெரியவில்லை. எல்லாக் கொடுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியதுதான்!
 2008  'தினமணி'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக