மாயாஜால வித்தை அப்போது தீயசக்திகளிடம் இருந்தது: லால்


மேடை தவிர்த்து எல்லா இடங்களையும் சூழ்ந்திருக்கிறது இருள். ஆனால், அந்த அடர்த்தியான கருமையிலும் பார்வையாளர்களின் முகத்தில் புதைந்திருக்கும் பதற்றம் எதிரொளிக்கிறது. மேடையின் நடுவே ஒரு மேஜையில் தன் மகன் கிடத்தப்பட்டிருக்க அந்தக் கிழட்டு மனிதர் பேசுகிறார்.
"எனக்குத் தெரியும். எத்தனையோ மாயாஜாலக்காரர்கள் அபாயகரமான தங்கள் வித்தையின் பாதியிலேயே மேடையில் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆம். மாயாஜாலம் என்பது அதுதான். இங்கு எதுவுமே சாதாரணம் அல்ல. இதோ அந்தக் கலைக்காகதான் நான் என் மகனையே பணயம் வைக்கிறேன்.'' 
      மேஜையில் கிடத்தப்பட்டிருக்கும் இளைய லால் மீது கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது 6 அடி சுற்றளவுகொண்ட அந்த இரும்பு வாள். சில நொடிகளில் சரி பாதியாக இரு துண்டுகளாகும் இளைய லாலின் உடல் தனித்தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. இரு துண்டுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நம்மால் பார்க்க முடிகிறது.
பார்வையாளர்கள் சகிக்க முடியாமல் கூச்சலிட, இரு துண்டுகளையும் ஒன்றாக்குகிறார் அந்தக் கிழட்டு மனிதர் லால். கூட்டம் கரகோஷம் எழுப்புகிறது. 'மாயாஜால்'. காந்தி லால் வோரா படைத்திருக்கும் அற்புத உலகத்தின் பெயர். இங்கு லாலுக்கு எதுவும் சாத்தியம். வெறும் கைகளிலிருந்து சில நிமிஷங்களில் 65  பூக் குடைகளை எடுப்பதாகட்டும், ஆடிக்கொண்டிருக்கும் பெண்களின் உடையை சில நொடிகளில் அடுத்தடுத்து 18 முறை மாற்றுவதாகட்டும், கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்ட கைகளை நொடிப் பொழுதில் விடுவித்துக்கொள்வதாகட்டும்... லாலுக்கு இங்கு எதுவும் சாத்தியம். அவருக்கும் இந்த மாய உலகத்துக்கும் பிரிக்க முடியாத ஒரு பிணைப்பு இருக்கிறது.
      இந்தப் பிணைப்புதான் இந்த 84 வயதிலும் அந்த மனிதரை ஓர் இளைஞரைப்போல இயக்குகிறது. இந்தப் பிணைப்புதான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், சர்வதேச மாயாஜாலக்காரர்கள் அமைப்பின் 'உலகின் வேகமான மற்றும் தலைசிறந்த மாயாஜாலக்காரர்' விருதை அவர் பெற காரணணமாக இருந்தது. இந்தப் பிணைப்புதான் ஹோடினி, டேவிட் காப்பர் ஃபீல்டு, ராபர்ட் பேளேர், பிளேன், மிலிண்டா என சர்வதேசக் கலைஞர்கள் வரிசையில் தனக்கென தன்னிகரற்ற ஓர் இடத்தை அவர் உருவாக்கிக்கொள்ள வைத்தது.
    தன்னுடைய 13 -வது வயதில் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார் லால். இந்த 70 ஆண்டு கால கலை வாழ்வில் உலகெங்கும் 21,500 -க்கும் மேற்பட்ட காட்சிகளை அவர் அரங்கேற்றியிருக்கிறார். 500 -க்கும் மேற்பட்ட விருதுகள், பட்டங்களை வென்றிருக்கிறார். எல்லாவற்றையும்விட மாயாஜாலமுமும் ஒரு கலை என இங்கு அங்கீகரிக்கப்பட காரணமாக இருந்த இந்திய நவீன மாயாஜாலக் கலையின் முன்னோடிகளில் ஒருவர் அவர். 'தினமணி-கதி'ருக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி இங்கே.
    "பகாசாரா காலத்திலிருந்தே நாம் தொடங்கலாம்..."
     "குஜராத்திலுள்ள ஒரு சின்ன கிராமம் பகாசாரா. அங்குதான் நான் பிறந்தேன். வசதியான வியாபாரக் குடும்பம் எங்களுடையது. எங்கள் தாத்தா பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். ஊர் திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு வரும் கலைக்கூத்தாடிகள், நாடகக்காரர்கள், நாட்டியப் பெண்கள் குஎல்லோருக்கும் எங்கள் வீடுதான் தங்குமிடமாக இருந்தது. ஒவ்வொரு கூட்டமும் வந்து செல்லும்போது அவர்களிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்வது என் இயல்பு. இப்படிதான் ஒரு மோடிமஸ்தானிடமிருந்து இந்த மாயாஜாலக் கலை என்னைத் தொற்றிக்கொண்டது."
   "அப்படியென்றால் அந்த மோடிமமஸ்தான்தான் உங்கள் குருவா?"
   "இல்லை. அது ஆர்வத்தின் தொடக்கம். அவ்வளவே. வியாபார நிமித்தம் எங்கள் குடும்பம் கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தபோது ஒரு நாள் மாமாவுடன் மாயாஜாலக் காட்சிக்குப் போயிருந்தேன். அங்குதான் என் முதல் குரு கணபதியைச் சந்தித்தேன்.காட்சி முடிந்ததும் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டேன். எனக்குத் தெரிந்த சில வித்தைகளைக் காட்டினேன். குட்டிப் பையனான என்னுடைய ஆர்வம் அவருக்குப் பிடித்துவிட்டது. அவர் என்னை சிஷ்யனாக்கிக்கொண்டார். மிகக் குறைந்த வயதிலேயே நான் ஒரு மாயாஜாலக்காரனான கதை இதுவே."
   "குட்டிப்பையனுக்கு குடும்பத்தில் நல்ல ஆதரவோ?"
"நீங்கள் நினைப்பது தவறு. முற்றிலும் நேர் எதிரான சூழலே இருந்தது. படிப்பு பிடிக்கவில்லை. நான் காட்டும் வித்தையை ரசிக்க நாலு பேர் இருக்கிறார்கள் என்பதாலேயே பள்ளிக்கூடத்துக்குப் போனேன். அதுவும் அப்புறம் நின்றுவிட்டது. இடையில் கொஞ்ச காலம் கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார் அப்பா. அங்கிருந்தும் ஓடிவந்துவிட்டேன். நிறைய அடி, உதைக்குப் பிறகே நான் வித்தைக்காரனாக முடிந்தது. அதற்குக் காரணம் அன்று இருந்த சூழல். எங்கே தன் குழந்தை சூனியக்காரர்கள் கையில் சிக்கிவிடுவோனா என்று என் பெற்றோர் ரொம்பவே பயந்தார்கள்."
     "தீய சக்திகளிடம்தான் அப்போது வித்தை இருந்ததா?"
     "ஆம். பெரும்பாலான வித்தைக்காரர்கள் தீய வழியில்தான் மக்களை அழைத்துச் சென்றார்கள். தங்களை மந்திரவாதிகளாகவும் கடவுளின் தூதர்களாகவும் அவர்கள் சித்தரித்துக்கொண்டனர். பில்லி, சூனியம், ஏவல், வைத்தியம் என எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. மக்களுக்கு வித்தைக்காரர்களைப் பார்த்தாலே பயமாக இருந்தது.
ஆனால், இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அக்கால வித்தைக்காரர்களுக்கு வேறு களம் இல்லை. ஒன்று அவர்கள் வீதியில் வித்தைக்காட்டலாம் அல்லது தங்களைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பிக்கொள்ளலாம். தங்கள் பிழைப்புக்கு வேறு வழி இல்லாமல் இருந்தார்கள் அவர்கள்."
     "இத்தகைய அமைப்பை முதலில் உடைத்தவர் பி.சி. சர்க்கார்தான் இல்லையா?"
     "ஆம். நவீன இந்திய மாயாஜாலக் கலையின் தந்தை சர்கார்தான். சர்வதேச அளவில் இந்திய மாயாஜாலக் கலைக்கென ஓர் இடத்தை நிர்மாணித்தவரும் அவரே."
       "சர்க்காரும் உங்கள் குரு என ஒரு முறை கூறியிருக்கிறீர்கள்?"
     "நிறைய முறை கூறியிருக்கிறேன். சர்க்கார் என்னைவிட 15 வயது மூத்தவர். ஆனால், அவர் மேடையேறிய அடுத்த ஆண்டே நானும் மேடையேறிவிட்டேன். அவருக்கு என்னைப் பிடித்துப்போக என்னுடைய வயதும் ஒரு காரணம். அக்காலகட்டத்தில் உலகமே அவரைக் கண்டு பிரமித்துக்கொண்டிருந்தது. அவரோ எஎன்னை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து நிறைய நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்."
     " ஆசிய மாயாஜாலக்கலை வரலாற்றில் உங்களுடைய மேடை அமைப்புக்கும் நிகழ்ச்சி வழங்கும் முறைக்கும் தனி இடம் இருக்கிறது. மாற்றம் நிகழ்ந்த கதையைச் சொல்லுங்கள்?"
      "அக்கால மாயாஜாலக்காரர்கள் ஒரு வில்லன்போல - பயங்கர சத்தத்துடன், சிவந்த பெரிய கண்களுடன் பயமுறுத்தும் தோற்றத்துடன் நிகழ்ச்சி நடத்துவார்கள். எனக்கு இந்த முறையில் ஒப்புதல் இல்லை. அதனால், மக்களுக்கு மிக நெருக்கமாக அவர்களில் ஒருவனாக என்னைக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். சாதாரண குரலில் ஒரு விகடகவி போன்ற தோற்றத்தில் நான் நிகழ்ச்சிகளை நடத்தியது நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதேபோல, அப்போது மிகக் குறைந்த மின் விளக்குகளையே மேடையில் பயன்படுத்துவார்கள். நான் பல வண்ணங்களில் மிகப் பெரிய வெளிச்சத்தில் நிகழ்ச்சி நடத்தும் முறையை அறிமுகப்படுத்தினேன். சிங்கம், புலி, யானை, ஒட்டகம் என விலங்குகளையும் மேடையில் ஏற்றினேன். ஒரு திரைப்படத்தைப்போல பிரமாண்டமாகக் காட்சியளிக்குகும் மேடை அமைப்பை உருவாக்கினேன். இவற்றுக்கெல்லாம் இப்போது உலகளாவிய வரவேற்பு கிடைத்திருக்கிறது."
      "மாயாஜாலக் கலையில் மேற்கத்தியக் கலைஞர்களின் ஆதிக்ககம் எப்போதுமே அதிகம் இல்லையா?"
     "ஆம். ஆனால், அவர்களுடைய கலை மரபு சார்ந்தது இல்லை. தொழில்நுட்பத்தையும் நவீனத்தையும் பிரதானமாகக்கொண்ட பாணி அவர்களுடையது. அவர்களிடம் உள்ள குறைந்தபட்ச திறமையும்கூட கீழை நாடுகளிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டதுதான்.
ஆனால், ஆசிய நாடுகளில் குறிப்பாக நம் நாட்டில் இந்தக் கலைக்கென மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சித்தர்களும் யோகிகளும் தீர்க்கதரிசிகளும் சுற்றித் திரிந்த பூமி இது. ஆனால், இந்த மரபுகள் எல்லாம் காலங்காலமாக பரம ரகசியமாக வைக்கப்பட்டே காலப்போக்கில் மறைந்துவிட்டன. நம்முடைய சாதனைகளுக்கு ஆவணங்களில்லை. கையில் இருக்கும் வித்தைகளையும் கலையாக்க நமக்குத் தெரியவில்லை.
மேற்கத்தியர்களோ புத்திசாலிகள். பிறரிடமிருந்து கற்ற வித்தையைக் கலையாக்கவும் அதை வரலாறாக்கவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்கள் எழுதியதாலேயே வரலாறும் அவர்களுடையதாகவே இருக்கிறது."
      "சர்வதேச அளவில் இந்திய மாயாஜாலக்கலைக்கு எப்படிபட்ட வரவேற்பு இருக்கிறது?"
      "நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால்தான் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் என ஆண்டுக்கணக்கில் எங்களால் சுற்ற முடிகிறது. உங்களுக்குத் தெரியுமா? ஜப்பானில் மட்டும் நான் 9 ஆண்டுகளை நிகழ்ச்சிகளிலேயே கழித்திருக்கிறேன்."
     "அதனால்தான் உங்களுடைய மகனையும் இந்தத் துறையிலேயே இழுத்துவிட்டீர்களா?"
     "ஒரு சின்ன திருத்தம். இளைய லாலை நான் இழுக்கவில்லை. அவராகவே வந்து விழுந்தார். தொடக்கத்தில் அவருக்கு எந்த வித்தையையும் நான் கற்றுத் தரவில்லை. என் மனைவிக்கும் அதில் உடன்பாடில்லை. ஆனால், என்னைத் தூரத்திலிருந்து பார்த்து பார்த்துப் பழகியே இளைய லாலும் வித்தைக்காரராகிவிட்டார். கலையார்வத்துக்கு விதிக்கப்படும் தடையின் வலியை நான் அனுபவித்திருந்ததால் அவருக்கு நான் தடை விதிக்கவில்லை. இப்போது என்னை மிஞ்ச போட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார்."
     "உங்கள் மனைவியைப் பற்றி பேசவே இல்லையே?"
     "வித்தைக்காரர்கள் வாழ்க்கை சராசரியானது அல்ல. எனவே, சாதாரண மனிதர்களின் வாழ்வைவிடவும் வித்தைக்காரர்களின் வாழ்வில் மனைவியின் துணையும் ஆதரவும் மிக முக்கியமானது. எங்கள் வாழ்வு நாடோடித்தனமானது. நிரந்தரமற்ற வீடு, நிரந்தரமற்ற வருவாய், நிரந்தரமற்ற வாழ்க்கை முறை என எல்லாமே முற்றிலும் நிரந்தரமற்றது. எவ்வளவோ நாட்கள் பிரிவிலேயே காலம் கழியும். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு உற்ற துணையாக இருக்க ஓர் ஆறுதலான உறவு அவசியம் தேவை. புஷ்பா எனக்கு எல்லா வகையிலும் நல்ல துணையாக இருந்தார். எனக்கு கிடைத்த மிகப் பெரிய வெகுமதியாகவே அவரை நான் கருதுகிறேன்."
    "நீங்கள் இத்துறைக்கு வந்த காலகட்டம் - இப்போதைய காலகட்டம்: எப்படி உணருகிறீர்கள்?"
    "அன்று தெருக்களிலிருந்த கலை இன்று மேடையில் இருக்கிறது. கலைஞர்கள் மதிக்கத்தக்கவர்களாகி இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்து இந்தக் கலையைப் பார்க்க ஆட்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்தச் சமூகத்துக்குச் சொல்ல எங்களுக்கும் சில செய்திகள் உண்டு என்பதை இந்தச் சமூகம் உணர்ந்திருக்கிறது."
    " ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள், நூற்றுக்கணக்கான விருதுகள், ஏராளமான செல்வம்... இன்னமும் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள்? லாலுக்கு ஓய்வு தேவையில்லையா?"
     "ஒரு முறை ராஜ்கபூர் மேடையில் பேசும்போது சொன்னார். 'லாலுடைய ரத்தத்தை யாரேனும் பரிசோதித்தால் அதில் கண்டறியப்படுவது வேறெதுவும் இருக்காது; மாயாஜாலம் தவிர்த்து' என்று. அது மிகப்பெரிய உண்மை. கனவு காண்பது எவருக்கும் அலுத்துப்போவதில்லை. நானோ கனவுகளிலேயே வசிக்கிறவன். நான் வசிக்கும் கனவுகளை உங்கள் கண்கள் திறந்த நிலையிலேயே உங்களுக்கு காட்சிகளாக அளிக்கிறவன். ஒவ்வொரு நாளும் புதிய கனவுகளை நான் தயாரித்துக்கொண்டே இருக்கிறேன். என்றேனும் ஒரு நாள் லால் மாயாஜாலத்துக்கு விடைகொடுத்துவிட்டான் என்று உங்களுக்குத் தகவல் வந்தால் அந்தச் செய்தியை நீங்கள் இப்படி எடுத்துக்கொள்ளலாம்: லால் இறந்துவிட்டான்."
2009 தினமணி கதிர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக