13 / 12 + 26 / 11 = ?

     
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிந்தப்பட்ட ரத்தக்கறை இன்னும் முழுமையாகக் கழுவப்படவில்லை. அதற்குள் அசாமில் ரயிலில் குண்டு வெடித்திருக்கிறது. இப்போது யாரெல்லாம் ராஜிநாமா செய்யப்போகிறார்கள்? பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஒவ்வொருமுறை ஆளாகும்போதும் பயங்கரவாதத்தின் குரூரமான முகம் மட்டும் இந்தியர்களுக்கு உணர்த்தப்படவில்லை.  அதற்கு இணையான மற்றொரு ஆபத்தான முகமும் உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நாம்தான் ஒவ்வொரு முறையும் அதை நினைவில் வைத்துக்கொள்ள தவறிவிடுகிறோம். மும்பை நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான மறுநாள் இங்கிலாந்து பத்திரிகை ஒன்று இப்படி எழுதியது:  "ஏறத்தாழ இது ஒரு போர்தான். ஆனால், பயங்கரவாதத்தின் தீவிரத்தை இன்னமும் இந்திய அரசியல்வாதிகள் உணராதது பயங்கரவாதத்தைவிடவும் ஆபத்தானது.''
      இந்தக் கருத்து மேலோட்டமானது அல்ல. ஒரு நாட்டின் நாடாளுமன்றம் பயங்கரவாதிகளின் இலக்குக்கு ஆளாவதைவிடவும் நாட்டின் பாதுகாப்புக்குப் பெரிய பங்கம் வந்துவிட முடியாது. ஆனால், அதன் பின்னரும்கூட ஏறத்தாழ 24 பெரும் சம்பவங்களை நாம் அனுமதித்திருக்கிறோம்; நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறோம் எனில், அதற்கு யார் காரணம்?
   மும்பையிலேயே என்ன நடந்தது? யோசித்துப் பாருங்கள். தாக்குதல் நேரத்தில் கேரளத்தில் இருந்த மஹாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அவசர, அவசரமாக மும்பை திரும்பினார்.  மறுநாள் காலை முதல் வேளையாக தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் சூழ ஏறத்தாழ ஒரு பேரணிபோல 'தாஜ் மஹால் பேலஸ்' சென்றார். உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் அன்று ஈர்த்திருந்த அந்தக் கட்டடத்தின் முன் நின்று, நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு ஓர் அபத்தமான பேட்டியை அளித்தார். பின்னர், அதற்காகவே வந்ததுபோல் திரும்பிச் சென்றார்.  அவருடைய துணை சகா ஆர்.ஆர். பாட்டில் அவரையே விஞ்சினார். "பெரிய நகரங்களில் இத்தகைய சின்னச்சின்ன சம்பவங்கள் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கும்'' என்று தாக்குதலை அவர் வர்ணித்தார். பயங்கரவாதிகளுடனான சண்டை நடந்துகொண்டிருந்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி மும்பை புறப்பட்டார். எங்கே அவர் மட்டும் சென்று, தான் செல்லாவிட்டால் தன்னுடைய 'வீர'த்தின் மீது நாட்டு மக்களுக்கு சந்தேகம் எழுந்துவிடுமோ என அஞ்சிய பிரதமர் மன்மோகன் சிங்கும் அடுத்த விமானத்திலேயே மும்பை புறப்பட்டார். கூடவே சோனியாவிலிருந்து அமர்சிங் வரை வால்பிடித்துச் சென்றனர். சம்பவ இடத்துக்கு இந்த 'முக்கியப் பிரமுகர்கள்' உடனே வரவில்லை என யார் அழுதது? யாரை மீட்க இத்தனை அவசரமாக இவர்கள் அங்கு சென்றார்கள்?
        இந்த 'முக்கியப் பிரமுகர்க'ளின் வருகையின் வலியை ஜே.ஜே. மருத்துவமனையில் இருந்தவர்கள் உணர்ந்தார்கள். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையானவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் அந்த மருத்துவமனையின் முன் குவிந்திருந்தனர். அடுத்தடுத்து வந்த இந்த 'முக்கியப் பிரமுகர்க'ளுக்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்த மருத்துவமனை வளாகமே அல்லோகலப்பட்டது. மருத்துவமனை ஊழியர்களில் தொடங்கி வெளியில் குவிந்திருந்தோர் வரை எல்லோரும் அலைக்கழிக்கப்பட்டனர்.
        தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட அத்வானி, "இதுகுறித்து உளவுத் துறையைக் குறை கூற விரும்பவில்லை; அனைவரும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது'' என்றார். அதே கருத்தை மன்மோகனும் பிரதிபலித்தார். நம்முடைய ஊடகங்கள் இதை 'ஆரோக்கிய அரசியல்' எனப் புல்லரித்தன. ஆனால், அதே நேரத்தில், மற்றொரு பக்கம், அரசியலிலிருந்து ஏறத்தாழ ஓய்வுபெற்றுவிட்ட வாஜ்பாய் மூலம், "பயங்கரவாதத்துக்கு எதிராக வாக்களியுங்கள்'' எனக் குரல் கொடுக்கச் செய்தார் அத்வானி. வாஜ்பாய்க்குப் பதில் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் சோனியா. பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் பயங்கரவாதிகளுடன் போராடிக்கொண்டிருந்த அந்த 60 மணி நேரச் சண்டைக்கு இடையிலேயே இத்தனை அவலங்களும் அரங்கேறிக்கொண்டிருந்தன. மீட்பு நடவடிக்கை முடிந்த அடுத்தக் கணம் ஆளும் கூட்டணியின் ராஜிநாமா நாடகமும் எதிர்க்கட்சிகளின் லாவணியும் வழக்கம்போல் உச்சஸ்தாயியில் தொடங்கிவிட்டன.
      பயங்கரவாதம், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையேயான பிரச்னை அல்ல. காங்கிரஸ் - பாஜக இடையேயான பிரச்னை அல்ல. இந்து - முஸ்லிம் இடையேயான பிரச்னை அல்ல. ஓட்டு - தேர்தல்; ஆட்சி - அதிகாரம் இடையேயான பிரச்னை அல்ல. இந்திய அரசியல்வாதிகள் இதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். ஓட்டு அரசியலிலிருந்து பயங்கரவாதத்தைப் பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தேசம் இப்போது அதைத்தான் எதிர்பார்க்கிறது. மீட்பு நடவடிக்கைகளுக்கு மறுநாள் மும்பையில் தன்னெழுச்சியாக நடந்த பேரணியும் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் சந்தீப்புடையதந்தை உன்னிகிருஷ்ணன் - கேரள முதல்வர் அச்சுதானந்தன் இடையேயான சந்திப்பும் இந்திய அரசியல்வாதிகளுக்கு இதைத்தான் சொல்கின்றன. அனுபவம் ஓர் நல்ல ஆசான். ஆனால், அதன் பாடங்களிலிருந்து படிப்பினை பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் அதன் பாடங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இந்திய அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். 
டிச.  2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக