யாருடைய எலிகள் நாம்?


     அமெரிக்கக் குழந்தைகளுக்கான மருந்துகளை மேம்படுத்தும் வகையில், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

      இந்தச் சட்டம் மருந்து நிறுவனங்களுக்கு பல பிரத்யேகமான சலுகைகளை வழங்குகிறது. அரசின் நிதியுதவி, மானியங்கள், சில வரிவிலக்குகள் தவிர மருந்துகள் மீதான காப்புரிமைக்கான காலக்கெடு நீட்டிப்பையும்  வழங்குகிறது.  இந்நிலையில், அமெரிக்க அரசு அளித்துள்ள தற்போதைய அனுமதி, மருந்து ஆராய்ச்சித் துறையில்
மிக முக்கியமான ஒரு நகர்வாகக் கருதப்படுகிறது.
 ஒவ்வொரு பன்னாட்டு மருந்து நிறுவனமும் ஆண்டுக்கு சுமார் | 50 ஆயிரம் கோடி வரை மருந்துப் பரிசோதனைக்காகச் செலவிடுகின்றன. ஒரு புதிய மருந்து சந்தையை வந்தடைய சராசரியாக ரூ. 3,600 கோடி செலவாகிறது. இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம் மனிதர்கள் மீதான மருந்துப் பரிசோதனையேயாகும். ஆராய்ச்சியில் பெரும் செலவு வகிப்பதும் இதுவே.
     மூன்றாம் உலக நாடுகளில் அயல் பணி ஒப்படைப்பு முறையில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது இந்தச் செலவில் 60 சதம் வரை குறையும் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும்,  ஏழை நாடுகளில் மக்களிடையே நிலவும் அறியாமை, எளிதில் வளைக்கக்கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பின்மை ஆகியவற்றின் காரணமாக
நேரடியான சட்டச் சிக்கல்களையும் மருந்து நிறுவனங்கள் தவிர்க்க முடியும். தவிர, கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை இந்தப் பரிசோதனைகளை நடத்தும் நாடுகளில் விற்க வேண்டிய கட்டாயமும் மருந்து நிறுவனங்களுக்கு இல்லை. இந்தப் பின்னணியிலேயே மருந்து நிறுவனங்கள் நீண்ட காலமாகக் கோரிவந்த அனுமதியை இப்போது
அமெரிக்க அரசு அளித்திருக்கிறது.
    அமெரிக்க அரசு அளித்துள்ள இந்த அனுமதியின் நேரடியான - எளிமையான பொருள் என்ன?
   இனி, இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் மனிதர்கள் மீதான - குறிப்பாக - குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் களம் இறங்கப்போகின்றன பன்னாட்டு மருந்து நிறுவனங்கள்.
    சரி, நாம் என்ன செய்யப்போகிறோம்?
   ஏற்கெனவே தாராளமயமாக்கலுக்குப் பின்னர், ஒப்பந்த மருந்துப் பரிசோதனை முறை இந்தியாவில் மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிர்த் தொழில்நுட்பவியல் பூங்காக்கள் உதவியுடன் 2001-ல் ரூ. 129 கோடி புரளும் தொழிலாக இருந்த இந்தத் தொழில் இப்போது ரூ. 7,200 கோடி புரளும் தொழிலாக உருவெடுத்துள்ளது. குறைந்தபட்சம் இந்தியாவில் இப்போது 400 பரிசோதனைகள் ஆய்வில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
     இந்தப் பரிசோதனைகள் நம் நாட்டில் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இப்படி நடத்தப்பட்ட மருந்துப்
பரிசோதனைகளில் குறைந்தபட்சம் 49 குழந்தைகள் உயிரிழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது. சோதனைக்குள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்குள்பட்டவர்கள் என்னும்போது எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும் ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை.
    அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் அம்பலப்பட்டபோது, "பரிசோதனைகளுக்காக மனிதர்கள் வெள்ளெலிகளாக்கப்படுவது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்'' என்றது மத்திய அரசு.
    இப்போது இந்தியக் குழந்தைகளைப் பரிசோதனைக்கூட எலிகளாக்க தன் நிறுனங்களுக்கு பகிரங்கமாகவே அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. இந்திய அரசு இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
2010 தினமணி 

1 கருத்து:

  1. நமது இந்திய நாட்டில் இலவசமாக மருத்துவம் கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெரிய மருத்துவமனைகளை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு தேவையான டாக்டர்களையும் பெரிய மருந்து கம்பெனிகளுக்கு பரிசோதனைக்கூடங்களையும் உருவாக்குவதற்கான ஏற்பாடாக பார்க்க முடியுமா? அதற்கு ஆதாரங்கள் உள்ளனவா

    பதிலளிநீக்கு