தேவை: தேசியப் போக்குவரத்துக் கொள்கை

      
   
    
ஒவ்வொரு விலை உயர்வின்போதும் கச்சா எண்ணெய் விலை விகிதப் பட்டியலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டக் கணக்கையும் படித்துக் காட்டுவது நம் அமைச்சர்களுக்கு மிக எளிதான ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. ஆனால், விலை உயர்வின் பின்விளைவுகளை எதிர்கொள்வது மக்களுக்கு அத்தனைச் சுலபமானதாக இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பதும் இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு அதிகரிக்கவே செய்யும் என்பதும் உண்மை. ஆனால், இப்பிரச்னையை எதிர்கொள்ள அரசு இதுவரை என்ன ஆக்கபூர்மான நடவடிக்கையை எடுத்திருக்கிறது?
        உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் நாட்டின் தேவையில் 30 சதவீதத்தை மட்டுமே பூர்த்திசெய்கிறது; பெரும்பான்மைத் தேவைக்கு சர்வதேச சந்தையையே நாம் நம்பியிருக்கிறோம். இந்நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துக்கொண்டேபோவதுடன் எண்ணெய் உற்பத்திக்கான ஆதாரங்களும் அருகிவருகின்றன. நாளொன்றுக்கு உலகின் பெட்ரோலியத் தேவை 8.5 கோடி பீப்பாய்கள். இந்தத் தேவை 2010-ல் 9.6 கோடி பீப்பாய்களாகவும் 2020-ல் 10.32 கோடி பீப்பாய்களாகவும் அதிகரிக்கும். ஆனால், உற்பத்தி விகிதமோ இதற்கு நேரெதிர். இன்றைய தேதியில் நாளொன்றுக்கு 8 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுவரும் நிலையில், 2010 -ல் 7.9 கோடி பீப்பாய்களாகவும் 2020 -ல் 5 கோடி பீப்பாய்களாகவும் உற்பத்தி குறையும்.
       பெட்ரோலியப் பொருட்கள் இல்லாத நவீன வாழ்க்கையை யோசிக்கக்கூட முடியாது என்பதாலேயே வளர்ந்த நாடுகள் அனைத்தும் எரிபொருள் சிக்கன நடவடிக்கைகள், மாற்று எரிபொருளுக்கான, மாற்றுப் போக்குவரத்துக்கான சாத்தியங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தன்னுடைய பெட்ரோலியப் பயன்பாட்டை 2010-க்குள் 20% குறைத்துக்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது அமெரிக்கா. 2020-க்குள் தனது பயன்பாட்டில் 10 சதத்தைக் குறைத்துக்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். சிங்கப்பூரும் ஜப்பானும் தனிநபர்ப் போக்குவரத்தை முற்றிலும் கட்டுப்படுத்திவருகின்றன. புதிய கார்களுக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகளைக் கடினமாக்கியுள்ளன. கடும் வரிவிதிப்பு, கட்டுபாடான பயன்பாடு போன்ற நடவடிக்கைகளால் அங்கு பணக்காரர்கள்கூட பொதுப் போக்குவரத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். பாகிஸ்தான் அரசு, நாட்டின் நேரத்தையே மாற்றி அமைத்திருக்கிறது. ஆனால், நம்முடைய அரசோ சீரழிவுப் பாதையை நோக்கி தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
       கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக மட்டும் இந்தியா செலவிட்டிருக்கும் தொகை ரூ. 2.73 லட்சம் கோடி. முந்தைய ஆண்டைவிட இது 40% அதிகம். பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு முந்தைய ஆண்டைவிட 7% அதிகரித்துள்ளது. உலகின் 5 -வது பெரிய எரிசக்தி நுகர்வோரான இந்தியாவின் தேவை அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் 40 சதம் அதிகரிக்கும். இந்நிலையில்தான், மோட்டார் வாகனங்களுக்கான உற்பத்தி வரியை மேலும் குறைத்திருக்கிறது நம் அரசு. விளைவு என்ன தெரியுமா?  நிகழாண்டின் நிதிநிலை அறிக்கை அமலுக்கு வந்த ஒரே மாதத்தில் வாகனங்களின் விற்பனை 9.83 சதமாக அதிகரித்துள்ளது; 8.06 லட்சம் வாகனங்கள் விற்றிருக்கின்றன (கடந்த ஆண்டைவிட 0.72 லட்சம் அதிகம்). போதாக்குறைக்கு வங்கிகளின் குறைந்த வட்டியிலான கடன், லட்ச ரூபாய் கார்கள், காட்டாமணக்கு சாகுபடி உபதேசம் என்று அழிவுக்கான ஊக்குவிப்புகள் தொடர்கின்றன.
   ஒருபுறம் நம்முடைய பெட்ரோலியத் தேவை அதிகரித்துக்கொண்டேபோகிறது. இன்னொருபுறம் நம்முடைய சாலைகள் இரவு பகல் வித்தியாசமின்றி போக்குவரத்து நெரிசலில் பிதுங்கி வழிகின்றன. சாலை வழிப் பயணம் என்பது மிகுந்த நெருக்கடிக்குரியதாக - நாம் நிர்ணயிக்க முடியாததாக மாறிவருகிறது. விபத்துகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1.25 லட்சம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்; 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் சூழலியல் பிரச்னைகள் துரத்துகின்றன. ஆனால், அரசுக்கோ இவை எதையும்பற்றி அக்கறை இல்லை. பெட்ரோலியப் பொருள்கள் தரும் வருவாய் அரசின் கண்களை மறைக்கிறது. பெட்ரோலியப் பொருள்கள் விலையில் 52 சதம் வரை வரியாக ஈட்டும் அரசு, தனக்குக் கீழ் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது.
    நம் அரசுக்கு உண்மையிலேயே  இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் ஆர்வம் இருந்தால், நாட்டின் பெட்ரோலிய உற்பத்திகேற்ப தேவையைக் குறைக்கும் வகையில் புதிய தேசியப் போக்குவரத்துக் கொள்கையை வகுக்க வேண்டும். எரிபொருள் சிக்கனத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தனிநபர்ப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிவிதிப்பை அறவே நீக்க வேண்டும்; மாறாக, தனிநபர் வாகனங்களுக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் வரி விதிப்பை அதிகரிக்க வேண்டும். நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் ரயில் தடங்களால் இணைக்க வேண்டும். நாட்டிலுள்ள மாநகரங்கள் அனைத்திலும் பாதாள ரயில் திட்டத்தைச் செயலாக்க வேண்டும். மாற்று போக்குவரத்துத் திட்டங்களுக்கான ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். முக்கியமாக தீயைப் பொட்டலம் கட்டி வைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!
2008 தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக