அமெரிக்காவிலிருந்து வரும் அபாய எச்சரிக்கை

    
   முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன அமெரிக்க நிதி நிறுவனங்கள். 1929, 1984-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடியைவிடவும் இந்தச் சூழல் மோசமானது என்கின்றனர் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள். அடுத்தடுத்து நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் திவாலாவதும் நெருக்கடியில் சிக்கித் திணறுவதும் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
     சில மாதங்களுக்கு முன் அந்நாட்டின் முக்கியமான நிதி நிறுவனங்களில் ஒன்றான 'இண்டி மாக்', ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கைக்கு ஆளானபோதே அமெரிக்க நிதித் துறை கடுமையான அதிர்வுகளைச் சந்தித்தது. இதையடுத்து, 'ஃபெனிமா அண்டு ஃப்ரெடிமாக்', நெருக்கடியில் சிக்கியபோது அந்த அதிர்வுகள் மேலும் அதிகரித்தன. இதனிடையே, திவாலாகும் நிலையிலிருந்த 'மெரில் லிஞ்ச்'சை 'அமெரிக்க வங்கி' வாங்கி அதற்கு உயிர் கொடுத்தது. ஆனால், 'மெரில் லிஞ்ச்'சை வாங்கிய உடனேயே 'அமெரிக்க வங்கி'யின் பங்குகள் 21 சதம் சரிவைச் சந்தித்ததால் அதுவும் நெருக்கடிக்குள்ளானது.
     இந்நிலையில், 158 ஆண்டுகள் பாரம்பரியமிக்க 'லேமன் பிரதர்ஸ்' கடந்த வாரம் திவாலானது. நாட்டின் நான்காவது பெரிய வங்கியான அந்த வங்கியின் வீழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியை எதிர்கொள்வதற்குள் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான 'ஏஐஜி'யும் திவாலாகும் நிலைக்குச் சரிந்தது. உலகெங்கும் 130 நாடுகளில் 1.16 லட்சம் ஊழியர்கள், 7.4 கோடி வாடிக்கையாளர்களுடன் கோலோச்சிவரும் 'ஏஐஜி' திவாலாகி இருந்தால், பெரும்பான்மை அமெரிக்கர்கள் ஒரே நாளில் காப்பீடற்றவர்களாகி இருப்பார்கள். தவிர, உலகெங்கும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மீதுள்ள மதிப்பும் காற்றில் பறந்திருக்கும். இதனாலேயே, ரூ. 3.91 லட்சம் கோடி நிதி அளித்து அந்நிறுவனத்தை தாற்காலிகமாகக் காப்பாற்றியிருக்கிறது அமெரிக்க அரசு.
       ஆனால், 'மார்கன் ஸ்டான்லி', 'கோல்டுமேன் சாக்ஸ்', 'வாஷிங்டன் மியூச்சுவல் இங்க்' என அடுத்தடுத்து நிறுவனங்கள் சரிவை நோக்கி அணிவகுத்து நிற்பது புஷ் அரசுக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது. மிகப்பெரிய அளவிலான வங்கி மீட்புத் திட்டத்தைத் தீட்டும் நிலைக்கு அரசை இச்சூழல் தள்ளியிருக்கிறது. கட்டுப்பாடற்ற-சுதந்திரமான நிதி நிறுவனக் கொள்கைக்கு அமெரிக்கா கொடுத்துக்கொண்டிருக்கும் விலை இது!
        ஆனால், உலகமே அமெரிக்காவின் இந்நிலையை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கும்போது, "யாரும் அஞ்சத் தேவையில்லை; இந்தியாவில் நிதி நிறுவன சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்'' என்று கூறியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். அவர் சொல்லும் சீர்திருத்தம் என்பதன் அர்த்தம் வேறில்லை; அமெரிக்கப் பாதைதான். சுதந்திரமான - கட்டுப்பாடற்ற நிதி நிறுவனக் கொள்கை! சர்வதேச வங்கிகளின் போட்டியை எதிர்கொள்வதற்காக எனக் கூறி இந்தச் 'சீர்திருத்த'த்தை மேற்கொள்வதில் மன்மோகன் சிங் அரசு மிகத் தீவிரமாக இருக்கிறது. அரசின் 'சீர்திருத்தம்' முழுமை பெறும்போது பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 33 சதமாகக் குறையும். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 26 சதத்திலிருந்து 49 சதமாக அதிகரிக்கும். சிறிய அளவிலான நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் விற்பனைக்கு வரும். இழப்பைச் சந்திக்கும் கூட்டுறவு வங்கிகளின் கதவுகள் நிரந்தரமாக அடைக்கப்படும். வங்கிப் பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்படும். அந்நிய முதலீடு சுதந்திரமாக அனுமதிக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால் இந்திய நிதி நிறுவனங்கள் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மாதிரியாகிவிடும். அப்படியென்றால் அமெரிக்காவின் இன்றைய நிலை நமக்கும் ஒரு நாள் வந்துவிடாதா என்று கேட்டால், அதற்குதான் சிதம்பரம் சொல்கிறார்: "அஞ்சத் தேவையில்லை'' என்று!
        நிதித் துறையில் தனியாரை சுதந்திரமாக அனுமதிப்பதன் ஆபத்துகளை ஏற்கெனவே நாம் சந்தித்துவருகிறோம். இதற்கு சரியான உதாரணம் இந்தியக் காப்பீட்டுத் துறை. சுதந்திரத்துக்கு முன் இந்தியக் காப்பீட்டுத் துறை தனியார் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முறைகேடுகளின் உச்சத்தையெல்லாம் தாண்டிச் சென்றன அன்றைய காப்பீட்டு நிறுவனங்கள். அதனாலேயே, 245 நிறுவனங்களை ஒருங்கிணைத்து 1956-ல் 'இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்' (எல்ஐசி) உருவாக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் உலகின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக அது உருவெடுத்திருக்கிறது. ஆனால், "தனியார் இத்துறையில் ஈடுபடும்போது கிராமப்புறங்களில் காப்பீட்டுத் துறை மேலும் வளரும். புதிய திட்டங்கள் நிறைய வரும்'' என்றெல்லாம் கூறி மீண்டும் தனியாரை காப்பீட்டுத் துறையில் அனுமதித்தது நம்முடைய அரசு. தனியார் நிறுவனங்களோ 'எல்ஐசி'யின் பழைய திட்டங்களையே புதிதாக பிரதியெடுத்தன. நகரங்களை அவை மொய்த்தனவே தவிர, கிராமப்புறங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இன்றும் 'எல்ஐசி'யே கடைகோடி கிராமவாசிகளின் காப்பீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது. ஆனால், தனியார் துறை போட்டியின் மோசமான விளைவாக இன்று காப்பீட்டுத் துறையின் பிரதான நோக்கமான 'காப்பீடு' பின்னுக்குத் தள்ளப்பட்டு 'முதலீடு' பிரதான நோக்கமாக மாறிவருகிறது. பங்குச்சந்தை என்றால் என்னவென்று அறிந்திராதவர்கள் கைகளில்கூட பங்குப் பத்திரங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. வங்கிகளும்கூட கை நீட்டுவோரிடமெல்லாம் கடன் அட்டையைப் புழங்கவிடுவதும் 'கந்துவட்டிவிகித'த்தில் கடன் அளிப்பதும் தனியார் வருகையின் பின்விளைவுகளே.  சுதந்திரமான நிதியாள்கையின் முதல் நோக்கம்  லாபம்தான். அதனாலேயே, இம்முறையில் பாதுகாப்புக்கு ஒருபோதும் உத்தரவாதம் இல்லாமல் போய்விடுகிறது. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல; நிறுவனங்களுக்கும்.
      அமெரிக்காவில் இப்போது 'ஒளிர்ந்துகொண்டிருக்கும்' அபாய விளக்கு தெளிவாகத் தெரிகிறது. புத்திசாலிகள் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தத் தவறமாட்டார்கள்!
2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக