தமிழகத்தின் நிகழாண்டு 'பிளஸ் 2' தேர்வு முடிவுகளைப் பார்ப்பது வான்காவின் ஓவியங்களைப் பார்ப்பதுபோல இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மஞ்சள், மஞ்சள், மஞ்சள்...
நிகழாண்டில் 6,40,844 பேர் 'பிளஸ் 2' தேர்வெழுதினர். இவர்களில் 5,32,222 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 83 சதம். கடந்த ஆண்டைவிட 1.4 சதம் குறைவு என்றாலும் மோசமான தேர்ச்சி விகிதமில்லை இது. நான்கு பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் (1,183/1200). 4,060 பேர் வெவ்வேறு பாடங்களில் சத மதிப்பெண்கள் (200/200) பெற்றிருக்கின்றனர். நூற்றுக் கணக்கான பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சிப் பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் தொடர்பான ஒவ்வொரு செய்தியும் ஜொலிக்கிறது.
இந்த மஞ்சள் முழு உண்மையாக இருந்தால், இந்த மஞ்சளின் ஜொலிப்பு முழு உண்மையாக இருந்தால், இந்தத் தேர்வு முடிவு உண்மையான கல்வியின் முழு வெளிப்பாடாக இருந்தால், நாம் எல்லோருமே கொண்டாடலாம். ஆனால், நம்மால் கொண்டாட முடியாது. ஏன்?
ஏனெனில், இந்தத் தேர்வுகள், மதிப்பெண்களுக்குப் பின்னணியிலுள்ள உண்மைகள் நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அரசாங்கத்துக்குத் தெரியும். கல்வித் துறைக்குத் தெரியும். ஆசிரியர்களுக்குத் தெரியும். பெற்றோர்களுக்குத் தெரியும். மாணவர்களுக்கும் தெரியும். ஆனாலும், எல்லோரும் எல்லோரையும் ஏமாற்றப் பழகியிருக்கிறோம்.
தாய்மொழியைக்கூட பிழையின்றி எழுதத் தெரியாதவர்கள், மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும்கூட வேறுபாடு தெரியாதவர்கள், சாதாரண வங்கிப் படிவத்தைக்கூட சுயமாக பூர்த்திசெய்ய முடியாதவர்கள் என்று லட்சக் கணக்கானோரை ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக் கல்வி முடித்துவிட்டதாகச் சான்றளித்து வெளியேற்றுகின்றன நம் பள்ளிக்கூடங்கள். இதைவிடக் கொடுமை, ஒரு சமூகம் எவ்விதச் சலனமுமின்றி இதை அப்படியே எதிர்கொள்வது.
ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் நம்முடைய கல்விமுறையையும் தேர்வுமுறையையும் மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஒலிக்கும் குரல்கள் அரசாலோ கல்வித் துறையாலோ பொருட்படுத்தப்படுவதே இல்லை. சமூகத்திலும் அவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், இனிவரும் காலங்களில் அப்படி இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஏனெனில், இதுவரை எச்சரித்த காலங்களெல்லாம் போய் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.
உலகப் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டில் நம் நாட்டில் மட்டும் ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியானதை நாம் அறிவோம். சமூக, பொருளாதார தளங்களில் இந்த விஷயத்தை நாம் வேறு மாதிரி விவாதிக்கலாம்.
ஆனால், ஆட்குறைப்பு நடந்த துறைகளிலெல்லாம் சொல்லப்படும் ஓர் உண்மை என்னவென்றால், "எங்கள் துறை தன்னைத்தானே கழுவிக்கொண்டது" என்பதுதான். அதாவது, ஆட்குறைப்பு நடத்தப்பட்ட பெரும்பாலான இடங்களில் போதிய திறனற்ற ஊழியர்களே முதல் களபலியாகி இருக்கின்றனர்.
ஆனால், இதிலுள்ள நகைமுரண் என்னவென்றால், எல்லா துறைகளிலுமே நல்ல ஆட்களுக்கான தேவை இருக்கிறது என்பதாகும். நாட்டிலுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் போதிய திறன் மிக்க ஆட்கள் இன்றியே செயல்பட்டுவருகின்றன என்கிறது ஓர் ஆய்வு.
நம் இளைய தலைமுறையிடம் வேலைவாய்ப்புக்கும் அதற்குத் தேவையான திறனுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவு,அடுத்த ஐந்தாண்டுகளில் ஏறத்தாழ 55 கோடி பேர் பணிகளுக்கான போட்டியைச் சந்திக்க நேரிடும்போது ஒரு சமூகப் பிரச்னையாக இது மாறும்.
குறிப்பாக, நம் நாட்டில் வெறும் 7 சதவீதத்தினரே அமைப்பு சார்ந்த பணிகளில் இருக்கின்றனர். அமைப்புசாராத் தொழில்களே மிகப் பெரிய வேலையளிப்புக் களமாக இங்கு இருக்கின்றன. ஆனால், அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடுவோருக்கு முறையான பயிற்சியோ, ஒருங்கிணைப்போ இங்கில்லை. அமைப்புசாராத் தொழில்களில் தொழில்முறைமயமாக்குதல் என்ற பேச்சுக்கெல்லாமும் இங்கு இடமேயில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் அரசுக்கோ, கல்வித் துறைக்கோ எந்தப் பிரக்ஞையுமில்லை.
நம்முடைய அரசுப் பள்ளிகள் ஏழைகளுக்கானவை என்ற மனோபாவத்தில் அரசு இருக்கிறது. மக்களிடத்திலும், தனியார்ப் பள்ளிகளில் படிக்கவைக்க முடியாதவர்களுக்காக நடத்தப்படும் பள்ளிகள் என்ற மதிப்பீடே அரசுப் பள்ளிகள் மீது இருக்கிறது. மக்கள் வாயை அடைக்கவும் ஏழைகளின் கல்வி ஆசை கனவாக மாறிவிடாமலிருக்கவும் ஏதோ, ரேஷன் அரிசிபோல அரசுப் பள்ளிகளில் கல்வி அரசால் அளிக்கப்படுகிறது. தனியார்ப் பள்ளிகளோ தேர்வு மதிப்பெண்களையும் விளையாட்டு வெற்றிகளையும் தவிர்த்து வேறு எந்தச் சிந்தனையுமின்றிச் செயல்படுகின்றன.
நாட்டின் மிகப் பெரிய பிரச்னையான மக்கள்தொகைப் பெருக்கத்தில் நமக்குள்ள ஒரே அனுகூலம், அதை திறன் மிக்க மனிதவளமாக மாற்றுவதிலேயே இருக்கிறது. தரமான கல்வியால் மட்டுமே அது சாத்தியம். பாடத்தைப் புரிந்துகொள்வதை ஊக்கப்படுத்தும் பாடத் திட்டமும் தேர்வும் நம் கல்விமுறையின் அடிப்படையாகும்போது மட்டுமே அது சாத்தியம். மஞ்சள் உண்மையாகவே ஜொலித்தால் அப்போது அதை எல்லோருமே கொண்டாடலாம்!
தினமணி 2009
சமஸ் இது வெறும் மனித வளப் பிரச்னை மட்டும் அல்ல. ஒரு வளரும் நாட்டில் என்ன மாதிரியான மனிதர்களை உருவாக்குகிறோம் என்பதையும் சார்ந்தே இந்த பிரச்னையை அணுகவேண்டும். சமுக அக்கறை இல்லாத, சுயநலம் மிகுந்த தனி மனிதனைத்தான் இன்றைய கல்வி உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தன் படிப்பு, தன் வீடு என்பதை தாண்டி,... பெரிய சிந்தனைகளை இன்றைய கல்வி மறந்தும் மாணவனுக்கு போதிப்பது இல்லை. மனிதன் சமுக விலங்கு என்னும் போது, சமூகத்துடன் இணைந்து, இயைந்து வாழ்வதற்கு ஏற்ப ஒரு தனி மனிதனை கல்வி உருவாக்க வேண்டும்.அதை உருவாக்குகிறதா கல்வி...? மனிதன் நல்லவனாக இருந்தால் தான் அது திறமைமிக்க மனித வளமாக மாறும்.
பதிலளிநீக்குசமஸ் , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பாடப்புத்தகத்திற்கு வெளியே எதுவும் தெரியாது. முதலில் ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுக்க வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களுக்குமான புரிந்துணர்வை அதிகப்படுத்த வேண்டும். சுயநலமுள்ள மாணவர்களையே இன்றைய பள்ளிகள் தயார்படுத்திக் கொடுக்கின்றன என்பது உண்மையிலேயே வேதனைக்குரிய விஷயம் :(
பதிலளிநீக்குபள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களும் மேற்கண்டவாறு உருவாக்கப்பட்ட முன்னாள் மாணவர்களே
நீக்குபள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களும் மேற்கண்டவாறு உருவாக்கப்பட்ட முன்னாள் மாணவர்களே
பதிலளிநீக்குபள்ளிப்பாடத்தை தவிர (அதுவும் மனப்பாடம் செய்ததைத்தவிர ) வேறு எதுவுமே தெரியவில்லை என்பதுததான்
பதிலளிநீக்குஉண்மை ,டீச்சிங் இருந்தாலல்லவா இந்த நிலை மாறும்?படித்ததை வாந்தி எடுத்தால் இப்படித்தான் !