தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், சமகாலத்தில் இந்த விழாவில் கொண்டாடப்பட வேண்டியவர் யாராக இருக்க முடியும்? கேள்வி நீளமானது. ஆனால், பதில் சுருக்கமானது. குடவாயில் பாலசுப்ரமண்யன்.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் என்றாலே, இன்றைக்கு ஆன்மிகவாதிகளிலிருந்து அரசாங்கம் வரை எல்லோரும் அவரைத்தான் தேடுகிறார்கள். கோயில் பற்றி அவர் பேசுவதைக் கேட்பதே ஓர் அலாதியான அனுபவமாக இருக்கிறது. பேசத் தொடங்கிய சில நிமிஷங்களில் சோழர் கால வரலாற்றினூடே நம்மை ஒரு சுற்றுலா அழைத்துச் சென்றுவிடுகிறார் மனுஷர். முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது வரலாற்றோடு தத்துவ விசாரங்களிலும் அவருக்கு இருக்கும் ஈடுபாடு. அது நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் என்றாலே, இன்றைக்கு ஆன்மிகவாதிகளிலிருந்து அரசாங்கம் வரை எல்லோரும் அவரைத்தான் தேடுகிறார்கள். கோயில் பற்றி அவர் பேசுவதைக் கேட்பதே ஓர் அலாதியான அனுபவமாக இருக்கிறது. பேசத் தொடங்கிய சில நிமிஷங்களில் சோழர் கால வரலாற்றினூடே நம்மை ஒரு சுற்றுலா அழைத்துச் சென்றுவிடுகிறார் மனுஷர். முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது வரலாற்றோடு தத்துவ விசாரங்களிலும் அவருக்கு இருக்கும் ஈடுபாடு. அது நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு எவ்வளவோ சிறப்புகள் உண்டு. அதில் முக்கியமான ஒரு சிறப்பு இந்தக் கோயிலைப் பற்றிய ஆவணங்கள்.
பொதுவாக, தமிழர்கள் ஆவணப்படுத்துவதில் அசட்டையர்கள் என்பது வரலாற்று காலம் தொட்டு தொடரும் கதை. இங்குள்ள பல கோயில்களுக்கு நம்மிடத்தில் சரியான வரலாறு கிடையாது. தலப் புராணங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புனைக்கதைகளே பெரும்பாலான கோயில்களின் வரலாறு. ஆனால், பெருவுடையார் கோயில் ஒரு விதிவிலக்கு. இந்தக் கோயிலின் உருவாக்கத்தில் தொடங்கி நிர்வாகம் வரை தொடர்புடைய நிறைய தகவல்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. சோழர்களுக்குப் பிந்தைய பல்வேறு ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் கோயில் நிர்வகிப்பட்ட விவரம், கோயில் எதிர்கொண்டிருக்கக் கூடிய தாக்குதல்கள் ஆகிய விவரங்கள் எல்லாம்கூட பல்வேறு ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. ஆனால், சாதாரணர்களை எட்டக்கூடிய வரலாறாக இது இல்லை. இவற்றையெல்லாம் தொகுத்து சாமானியர்களும் அறிந்துகொள்வதற்கேற்ப வரலாற்றைச் சொல்ல வேண்டிய தேவை இந்தக் கோயிலுக்கு இருந்தது. பாலசுப்ரமண்யன் அதைப்பூர்த்திசெய்திருக்கிறார்.
தன் வாழ்வில் பெரும் பகுதியை ஆராய்ச்சிக்காகச் செலவிட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 518 பக்கங்களில் அவர் கொண்டுவந்திருக்கும் 'இராஜராஜேச்சரம்' புத்தகம், தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய அற்புதமான பெட்டகம். ஒரு கோயிலை அணுகுவது எவ்வளவு பெரிய கலை என்று வியக்கச் செய்கிறது. கோயில் நிர்மாணம், அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், அவைச் சொல்லும் சேதிகள், தத்துவ விசாரங்கள், வழிபாட்டு முறைகள், வழக்கொழிந்த அம்சங்கள், கோயிலைப் பற்றிய புனைக் கதைகள் என்று ஒரு கோயிலைப் பற்றிப் பேசவும் கேட்கவும் நமக்கு எத்தனை எத்தனை வாய்ப்புகள் இருக்குமோ அத்தனை வாய்ப்புகளிலும் புகுந்து வெளியே வருகிறது 'இராஜராஜேச்சரம்'.
இது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புத்தகமில்லை. ஏராளமான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. ஆனால், இந்தப் புத்தகத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட இப்படியொரு புத்தகம் ஒவ்வொரு கோயிலுக்கும் தேவை என்கிறார்கள்.
குடவாயில் பாலசுப்ரமண்யன் இதுவரை 25-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கல்வெட்டுகள், செப்பேடுகள், அரிய வகை நாணயங்கள், சிற்பங்கள் என்று அவருடைய ஆர்வங்கள் பெரிய தளங்களில் விரிகின்றன. ஏராளமான கோயில்கள் அவருடைய பணிப் பட்டியலில் வருகின்றன. ஆனால், பெருவுடையார் தன்னை ஆக்கிரமித்துக்கொண்டார் என்கிறார் பாலசுப்ரமண்யன். தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதி இந்தக் கோயில் மீதான கவனத்திலேயே கழிந்திருக்கிறது என்கிறார். புரிகிறது, பாலசுப்ரமண்யன். அப்படிபட்ட ஒருவரால்தான் இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைத் தர முடியும்!
2010 தினமணி கொண்டாட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக