வரலாற்றில் நமக்குள்ள மிகப் பெரிய சௌகரியம், அதை எங்கிருந்து வேண்டுமானாலும் நம் வசதிக்கேற்ப தொடங்கிக்கொள்ளலாம். அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ கிளை அளித்துள்ள தீர்ப்பின் மூலம் வரலாற்றை, வரலாற்றுக் காலத்துக்கெல்லாம் அப்பாலும் தொடங்கிக்கொள்ளும் வசதியை இந்திய நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்கின்றன.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கொன்றில் முன்னர் ஒரு முறை நம்முடைய உச்ச நீதிமன்றம் இப்படிக் கருத்து தெரிவித்தது: "நீதிமன்றங்களால் சர்ச்சைகளைத்தான் தீர்க்க முடியும்; பிரச்னைகளை அல்ல.''
பின்னர் ஒருமுறை மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக, "சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள கட்டுமானம் பாபரால் கட்டப்பட்ட மசூதியா?; ராமர் இந்த இடத்தில்தான் பிறந்தாரா?'' என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது இந்த விஷயத்தில் தலையிட மறுத்துவிட்டது. மேலும் அப்போது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது: "இந்த விஷயங்கள் நீதிமன்றங்களின் ஆய்வுக்கு உட்பட்டவை அல்ல.''
ஆனால், ஏறத்தாழ 60 ஆண்டுகள் பழைமையான இந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னௌ கிளை இப்போது அளித்திருக்கும் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் எந்த விஷயங்களை நீதிமன்றங்களின் ஆய்வுக்கு உட்பட்ட விஷயங்கள் அல்ல என்று கூறியதோ அவற்றில்தான் மூழ்கித் திளைத்திருக்கிறது. மேலும், நீதிமன்றங்களால் எல்லா பிரச்னைகளையும் சர்ச்சைகளையும் தீர்த்துவிட முடியாது என்பதோடு, தொலைநோக்கற்ற இந்திய ஆட்சியாளர்கள்களுக்கு நீதிபதிகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதையும் நிரூபித்திருக்கிறது.
சுருக்கமாக, அயோத்தி வழக்கு என்ன? ஓர் இடத்துக்காக பல தரப்பினர் மூல உரிமை கோரும் வழக்கு. சுருக்கமாக, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்ன? மூல உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில், இடத்தைப் பங்கிட்டு தீர்ப்பு அளித்திருக்கிறது நீதிமன்றம்! யாருக்கு? இடத்தின் மூல உரிமையையே நிரூபிக்க முடியாதவர்களுக்கு. தேவை என்ன? இந்தியர்களுக்கு வரலாற்றைவிடவும் சான்றுகளைவிடவும் உண்மைகளைவிடவும் நம்பிக்கைகள்தான் முக்கியம்!
நீதிபதிகள் தரம் வீர் சர்மா, சிப்கத் உல்லா கான், சுதிர் அகர்வால் ஆகியோர் 8,189 பக்கங்களில் அளித்துள்ள இந்தத் தீர்ப்பின் ஒவ்வோர் அம்சமும் ஹிந்து அமைப்புகளைத் திருப்திபடுத்த முயல்கிறது; முஸ்லிம் அமைப்புகளை சமாதானப்படுத்த முயல்கிறது. ஆனால், அயோத்தி விவகாரத்தில் ஆர்வமற்ற கோடிக்கணக்கான இந்தியர்களையும் இந்தியாவின் மதச்சார்பின்மையையும் ஒட்டுமொத்தமாகக் கைகழுவியிருக்கிறது. நவீன இந்தியாவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளியிருக்கிறது.
எவ்வளவு மோசமான தீர்ப்பு இது? இந்தத் தீர்ப்புதான் இறுதியானது; மேல்முறையீடு கிடையாது என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: தீர்ப்பு அப்படியே செயல்படுத்தப்படுவதை, ஒரு ரத்த பூமியில் அருகருகே வெறித்தனமான இரு கூட்டங்களின் வழிபாட்டிடங்கள் நிறுவப்படுவதை, அந்த வழிபாட்டிடங்களில் நடைபெறும் வெறித்தனமான கொண்டாட்டங்களை!
எதற்காக இந்த வழிபாட்டிடங்கள்? எதற்காக இந்தக் கொண்டாட்டங்கள்? எதற்காக இந்த வெறித்தனம்? நாளைய நம் குழந்தைகளுக்காகவா?
நாம் எவருமே அங்கு ராமர் பிறந்ததைப் பார்க்கவில்லை. பாபர் சொல்லி மிர் பாகி மூலம் அந்த மசூதி கட்டப்பட்டதையும் பார்க்கவில்லை. ஆனால், அந்தக் கட்டடத்தின் மீதான உரிமையின் பெயரால் தொடரும் வன்முறைகளையும் கலவரங்களையும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் காலங்காலமாக வழிவழியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு சராசரி இந்தியனின் அன்றாட வாழ்வில் அயோத்தி ஒரு பைசாவுக்குப் பயன்படாது என்பதையும் அறிந்திருக்கிறோம். ஆனாலும் நாம் ஏன் வரலாற்றைத் துரத்துகிறோம்? ஏன் வரலாற்றின் மீது நின்று சூதாடுகிறோம்? வரலாற்றுக்குப் பாடம் கற்பிக்கவா? வரலாற்றைப் பழித் தீர்க்கவா?
நம் எல்லோருக்குமே வரலாற்றின் மீது மிகப் பெரிய மதிப்பீடு இருக்கிறது. ஆனால், வரலாறு என்பது வேறல்ல; கடந்துகொண்டிருக்கும் இந்தக் கணமும்தான். ஒரு நிமிஷம், இந்தத் தீர்ப்பு வெளியான நாளை நினைத்துப்பாருங்கள். உங்கள் குழந்தைகளை அன்றைய தினம் எத்தகைய மனநிலையில் பள்ளிக்கு அனுப்பினீர்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். நீங்கள் எத்தகைய மனநிலையில் வேலைக்குப் புறப்பட்டீர்கள் என்று நினைத்துப்பாருங்கள். காவலர்களும் காவலர்களின் வாகனங்களும் நிறைந்த - பயம் உறைந்துகிடந்த வீதிகளை நினைத்துப்பாருங்கள். சந்தேகக் கண்களுடன் நம்மைக் கடந்த மாற்று மதத்தினரின் முகங்களை நினைத்துப்பாருங்கள். தீர்ப்பு வெளியாகும் நேரத்துக்குள் அவசர அவசரமாக நாம் முடித்துக்கொள்ள முயன்ற பணிகளை நினைத்துப்பாருங்கள். இந்த விவகாரத்தில் நாம் இதுவரை இழந்திருக்கும் ஆயிரக்கணக்கான உயிர்களை நினைத்துப்பாருங்கள். கடைசியாக, உங்கள் குழந்தைகளின் முகங்களை நினைத்துப்பாருங்கள்.
நாம் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்க நினைக்கிறோம்?
2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக